தோழர்  சிவராஜ்  தீர்மானமும்

 

சுவாமி  சகஜானந்தம்  வேஷமும்

தாழ்த்தப்பட்டோன்

பூனா  ஒப்பந்தமானது,  தாழ்த்தப்பட்டவர்களுக்குப்  பாதகத்தை  உண்டாக்கி  விட்டதென்பதையும்,  அதைத்  தாழ்த்தப்பட்டவர்கள்  ஆதரிக்க வில்லை  என்பதையும்  தெரிவிப்பதற்காகச்  சென்னை  சட்டசபையில்  தோழர்  சிவராஜ்  அவர்களால்  கொண்டு  வரப்பட்ட  பூனா  ஒப்பந்தக்  கண்டனத்  தீர்மானம்  பெரும்பான்மையோரின்  ஆதரவு  பெற்று  நிறைவேறிவிட்டது.  அத்  தீர்மானத்திற்கு,  ஜாதி  இந்துக்களின்  வால்  பிடித்துத்  திரியும்  நமது  வைதீகத்  தோழர்  சுவாமி  சகஜானந்தம்  அவர்களும்  சாதகமாகவே  ஓட்டுக்  கொடுத்ததாகப்  பத்திரிகைகள்  கூறுகின்றன.  ஆனால்,  தீர்மானம்  முடிந்து  வெளியில்  வந்தவுடன்  அவர்  மனதில்  என்ன  தோன்றியதோ  என்னமோ  பூனா  ஒப்பந்தத்தைக்  கண்டித்த  தோழர்கள்  சிவராஜ்,  ஜகநாதன்  முதலியவர்கள்  செய்கையைக்  கண்டித்து  ஒரு  அறிக்கையை  வெளியிட்டிருக்கிறார்.  உள்ளொன்று  செய்துவிட்டுப்  புறமொன்று  வெளியிடும்  செய்கையை  நமது  சுவாமிகள்  எதற்காகச்  செய்தார்  என்று  கேட்கின்றோம்.

பிரிட்டிஷ்  முதன்மந்திரி  தாழ்த்தப்பட்டவர்களுக்குச்  சென்னை  சட்டசபையில்  18  ஸ்தானங்களே  அளித்திருந்தார்.  ஆனால்  “”மகாத்மா”  காந்தியின்  முயற்சியால்  30  ஸ்தானங்கள்  கிடைத்தன  என்று  கூறுகின்றார்.  ஜாதி  இந்துக்களின்  தயவில்லாமல்  தாழ்த்தப்பட்டவர்களாலேயே  தேர்ந்தெடுக்கப்பட்டு  சட்டசபைக்குச்  செல்லும்  பிரதிநிதிகள்  உண்மையாகச்  சமூக  நன்மைக்குப்  பாடுபட  முடியுமா?  அல்லது  ஜாதி  இந்துக்களின்  தயவினால்  தேர்ந்தெடுக்கப்பட்டு,  சட்டசபைக்குச்  செல்லும்  பிரதிநிதிகள்  உண்மையாகத்  தமது  சமூகத்திற்குப்  பாடுபட  முடியுமா?  என்னும்  விஷயத்தை  நமது  சுவாமிகள்  யோசித்துப்  பார்த்தாரா?

தோழர்  காந்திதான்  தாழ்த்தப்பட்டவர்களின்  உண்மையான  நண்பர்   என்று  சுவாமி  சகஜானந்தம்  கூறுகிறார்.  காந்தியாராலும்,  அவருடைய  சகாக்களாலும்,  தாழ்த்தப்பட்டவர்களுக்கு  இது  வரையிலும்  எதைச்  சாதிக்க முடிந்தது என்று யோசித்துப் பார்த்தாரா? பொது ஜன  அபிப்பிராயத்திற்கு  இணங்கித்தான்  எல்லாக்  காரியங்களையும்  செய்ய  வேண்டும்  என்று  ஆலய  பிரவேச  விஷயத்திற்கு  மாத்திரம்  நொண்டிச்  சாக்குக்  கூறுகின்ற  காந்தி  கூட்டத்தாரால்  தமது  சமூகத்திற்கு  என்ன  நன்மை  கிடைக்குமென்று  எதிர்பார்க்கிறார்?  ஆலயப்  பிரவேச  விஷயம்  கைவிடப் பட்டது  இவருக்குத்  தெரியாதா?  சுவாமி  சகஜானந்தம்  அவர்களே  காங்கிரசின்  சார்பாகப்  பொதுத்  தொகுதியில்  நின்று  வெற்றி பெற்றுச்  சட்டசபைக்குச்  சென்றாலும்  என்ன  செய்ய  முடியும்?  காங்கிரஸ்காரர்கள்  சொல்கிறபடி  உட்காரவும்,  எழுந்திருக்கவும்  செய்ய  வேண்டுமேயன்றி  வேறு  என்ன  செய்ய  முடியும்?

ஜாதி  இந்துக்களையும்,  காங்கிரசையும்,  காந்தியையும்  லட்சியம்  செய்யாத,  சர்க்காரால்  நியமனம்  செய்யப்பட்ட,  தாழ்த்தப்பட்டவர்களின்  பிரதிநிதியான  சட்டசபை  உறுப்பினர்களைவிட  காந்தியையும்,  காங்கிரசையும்,  வைதீகத்தையும்  கொண்டாடும்  சர்க்காரால்  நியமனம்  பெற்ற  உறுப்பினராகிய  நமது  சாமிகள்,  தாழ்த்தப்பட்ட  சமூகத்திற்கு  எதை  அதிகமாகச்  சாதித்துவிட்டார்  என்று  கேட்கின்றோம்.

வைதீகப்  பித்தை  ஒழித்த  தன்மையும்,  ஜாதி  இந்துக்களை  லட்சியம்  பண்ணாத  தன்மையுமுள்ளவர்களே  தாழ்த்தப்பட்ட  சமூகத்தின்  விடுதலைக்கு  உண்மையாகப்  பாடுபட  முடியும்  என்பதை  நமது  சுவாமிகள்  மறந்துவிட்டு  அடிக்கடி  வைதீகத்திற்கும்,  ஜாதி  இந்துக்களுக்கும்,  காங்கிரசுக்கும்,  காந்திக்கும்  வக்காலத்து  வாங்கப்  புறப்பட்டு  விடுகிறார்.  தோழர்  சிவராஜின்  தீர்மானத்தை  வெளியில்  வந்து  கண்டிக்கும்  இவரை  வருணாச்சிரம  தருமத்திற்கு  வக்காலத்து  வாங்கும்  பார்ப்பனப்  பத்திரிகைகள்  “”பலே  பேஷ்”  என்று  தட்டிக்  கொடுத்துப்  புகழ்கின்றன.  இவர்  செய்கை,  தன்னைப்  பொருத்தவரையும்,  பத்திரிகை  விளம்பரமும்,  தேசாபிமானப்  பட்டமும்,  பார்ப்பனர்களின்  தயவும்  கிடைப்பதாயிருந்தாலும்,  உண்மையில்  தாழ்த்தப்பட்டவர்  சமூகத்தைக்  காட்டிக்  கொடுப்பதே  யாகுமென்றே  சொல்லுவோம்.  பல  வகையிலும்  விடுதலை  பெற  வேண்டிய  தாழ்த்தப்பட்ட  சமூக  இளங்  குழந்தைகளின்  மண்டையில்  மூட  நம்பிக்கைகளையும்,  அடிமைத்  தன்மையைப்  போதிக்கும்  மதப்பித்தையும்  நுழைத்துக்  கொண்டிருக்கும்  வேலையோடு  இவர்  நின்று  விட்டால்  போதும்.  சாம்பலைப்  பட்டையடித்துக்  கொண்டு  “”அரகரா,  சிவசிவா”வென்று  சொல்லிக்  கொண்டு  ஜாதி  இந்துக்களின்  தயவுக்கு  எதிர்பார்த்துக்  கொண்டிருக்கட்டும்,  அதைப்  பற்றி  நாம்  கவலைப் படவில்லை.  வீணாக  அரசியல்  விஷயத்திலும்  புகுந்து  ஜாதி  இந்துக்கள்  மெச்சுவதற்காகக்  குளற  வேண்டாம்  என்று  தெரிவித்துக்  கொள்ளுகிறோம்.

குடி அரசு  கட்டுரை  03.02.1935

You may also like...