காங்கிரஸ் பொது ஸ்தாபனமா?
தங்களுடைய சொந்த யோக்கியதையினால் பாமர மக்களிடம் செல்வாக்குப் பெற யோக்கியதை இல்லாதவர்களும், மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாவதற்கு தங்கள் சொந்தப் பொறுப்பில் எவ்விதத் தகுதியும் இல்லாதவர்களும் பாமர மக்களை ஏமாற்றுவதற்கு ஆக காங்கிரஸ் என்றும், காந்தியென்றும் சொல்லுவதோடு அவர்களுக்குப் புரியாத விஷயங் களையும், கொள்கைகளையும் சொல்லி மோசம் செய்கிறார்கள். காங்கிரசின் யோக்கியதை என்ன காந்தியாரின் நிலைமைதான் என்ன என்பவைகளை பாமர மக்களுக்கு எடுத்துச்சொல்ல ஆசைப்படுகிறோம்.
காங்கிரசு என்பது இந்திய 35 கோடி மக்களுக்கும், இந்து முஸ்லீம் கிறிஸ்தவ புத்த முதலிய எல்லா மதக்காரர்களுக்கும், பார்ப்பனர் முதல் பறையன் என்பவர் வரை சகல ஜாதியாருக்கும் பொதுவானதென்றும், பிரதிநிதித்துவம் பொருந்தியதென்றும் சொல்லுகிறார்கள்.
எடுத்ததற்கெல்லாம் காங்கிரஸ்தான் பெரிய ஸ்தாபனம் என்றும், காங்கிரஸ்தான் அகில இந்திய ஸ்தாபனம் என்றும், அதற்குத்தான் பிரதிநிதித்துவத் தன்மை உண்டென்றும், மற்றவர்கள் எல்லாம் பொறுப்பற்றவர்கள் என்றும் சொல்லுகிறார்கள். அப்படியானால் இந்திய நாட்டில் உள்ள பல்வேறு மதக்காரர்களிலும் பல்வேறு ஜாதி வகுப்புக் காரர்களிலும் காங்கிரசை யார் ஒப்புக்கொள்ளுகிறார்கள்? யார் மதிக்கிறார்கள்? என்று யாராவது எந்த காங்கிரஸ் வாதியாவது எடுத்துச்சொல்லக் கூடுமா என்று கேட்கின்றோம்.
இந்தியாவில் உள்ள 8 கோடி முஸ்லீம்களுக்கு ஆக ஏற்பட்டிருக்கும் அதுவும் 1907 முதல் ஏற்பட்டிருக்கும் முஸ்லீம் லீக் காங்கிரஸை ஒப்புக் கொள்கிறதா? என்று கேட்கின்றோம்.
6 கோடி தீண்டப்படாதார் என்பவர்களுக்கு ஆக ஏற்பட்ட தீண்டாதார் சபை ஒத்துக்கொள்ளுகிறதா? என்று கேட்கின்றோம்.
22 கோடி இந்துக்களுக்கு ஆக ஏற்பட்ட இந்து மகாசபை ஒப்புக் கொள்ளுகிறதா?
இந்து மதத்தையும், வேதத்தையும், சாஸ்திரத்தையும் ஆதாரமாய் வைத்து ஆரம்பிக்கப்பட்ட சனாதன தர்ம சபையாராவது வருணாச்சிரம தர்ம சபையாராவது ஒப்புக் கொள்ளுகிறார்களா?
ஒரு கோடி கிறிஸ்தவர்களுக்கு ஆக ஏற்பட்ட அகில இந்திய கிறிஸ்தவ சங்கத்தார் ஒப்புக் கொள்ளுகிறார்களா?
சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் முதலிய மாகாணங்களில் பார்ப்பனரல்லாதார்களுக்கு ஆக ஏற்பட்ட பார்ப்பனரல்லாதார் சங்கத்தார் ஏற்றுக் கொள்ளுகிறார்களா?
பார்ப்பனர்களுக்கு ஆக என்று தனியாக ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் ஆரிய மகாஜன சபையார் ஒப்புக் கொள்ளுகிறார்களா? என்றும் கேட்கின்றோம்.
இனி, தனித்தனியாய்ப் பார்த்தால் படையாச்சி மகாஜன சபை, நாடார் மகாஜன சபை, வேளாளர் மகாஜன சபை, தேவேந்திர வேளாளர் சபை, அருந்ததியர் சபை, குறவர் சபை, மறவர் சபை, நாயுடு சபை, ரெட்டி மகாஜன சபை, யாதவர் மகாஜன சபை, செங்குந்தர் மகாஜன சபை, விஸ்வப் பிராமண மகாஜன சபை, சௌராஷ்டிர பிராமண மகாஜன சபை, தேவாங்கப் பிராமண மகாஜன சபை, சாலியப் பிராமண மகாஜன சபை, குலாலப் பிராமண மகா சபையார் ஒப்புக் கொள்ளுகிறார்களா?
ஆகவே காங்கிரஸ் இந்திய மக்களுக்கு பொது என்றால் இந்தியாவில் காங்கிரசை ஒப்புக் கொள்ளுகின்றவர்களோ ஆதரிக்கின்றவர்களோ யார் இருக்கிறார்கள்?
பணக்காரர்கள் விளம்பரத்துக்கும், பதவி ஆசைக்கும் ஆசைப்படும் காலிகளின் வசவுக்கு பயந்தும் காங்கிரசுக்குப் பணம் கொடுக்கிறார்கள். சிலர் நாலணாவும் கொடுத்து விடுகிறார்கள். பசிக்கு பயந்த ஆட்கள் அந்த பணத்துக்கு ஆசைப்பட்டு காலித்தனமாய் கூப்பாடு போடுகிறார்கள். எந்த விதத்திலும் பொறுப்பும், கவலையும் இல்லாதவன் தன்னை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ள இடம் கொடுத்து விடுகிறது. இதனால் காங்கிரசு, காங்கிரசு என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் கூப்பாடு போடவும், மற்றொரு கூட்டம் அதை ஆதரிக்கவும் இடம் ஏற்பட்டதே அல்லாமல், உண்மையாய் காங்கிரசுக்கு இருக்கும் மதிப்பு என்ன? கொள்கை என்ன? என்பதை அறிவாளிகள் சிந்திப்பார்களாக.
சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரைப் பற்றி பார்ப்பனர்கள் செய்த விஷமங்களுக்கு ஏதாவது எல்லை இருந்ததா? முதலாவது அவரது ஜாதித் தொழிலைப் பற்றி படம் போட்டு பரிகாசம் செய்வது முதல் கொண்டு எந்த துறையில் பார்ப்பனர்கள் அவரை சும்மா விட்டார்கள்.
பனக்கால் ராஜா உயிரோடு இருந்த வரையில் அவரைப் பற்றி செய்த அயோக்கியப் பிரசாரத்துக்கு அளவே இல்லை.
அதற்கப்புறம் இப்போது பொப்பிலி ராஜாவைப் பற்றி இன்ன மாதிரிதான் என்பதாக இல்லாமல் பத்திரிகைகளில் ஆரிய பாஷையில் உள்ள வார்த்தைகள் எல்லாம் கொட்டிக் கலந்தாய்விட்டது. மேடைகளில் “”ஹரிஜன” பாஷையில் உள்ள வார்த்தைகள் எல்லாம் கொட்டிக் கலந்தாய் விட்டது. மற்றும் தோழர் ராமசாமியைத்தான் விட்டார்களா? தோழர் வரதராஜுலுவைத்தான் விட்டார்களா?
இவ்வளவு கேவலமான காரியங்கள் செய்வதோடல்லாமல் நாட்டின் அரசியல் நலத்துக்கும், மக்களின் சமூக நலத்துக்கும், எவ்வளவு தடையாகவும், முட்டுக்கட்டையாகவும் இருக்க வேண்டுமோ அவ்வளவு முட்டுக் கட்டையாய் இருந்து மனித சமூகத்தை முன்னேற வொட்டாமல் தடுத்து பாழ்படுத்தி வருகின்றார்கள்.
இவைகளை காங்கிரஸ்காரர்கள் என்னும் பார்ப்பனர்களும், அவர்களது அடிமைகளும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஆனால் ஒன்று கேட்கின்றோம்.
காங்கிரஸ்காரர்கள் சிறப்பாக தென் இந்திய பார்ப்பனர்கள் பொறுப்பற்று மேடைகளில் பேசிக் கத்தி கூப்பாடு போட்டது தவிர இந்த 20, 30 வருஷ காலமாக ஏதாவது ஒரு சட்டசபையில் சமூக சம்மந்தமான ஏதாவது ஒரு மசோதா கொண்டு வந்திருக்கிறார்களா? என்று கேட்பதோடு சமூக சம்பந்தமாக கொண்டு வரப்பட்ட மசோதா எதையாவது ஆ÷க்ஷபிக் காமல் விட்டிருக்கிறார்களா என்றும் கேட்கின்றோம்.
மிக மிகச் சாதாரணமான மசோதா அதாவது விபசாரித்தனத்துக்கு ஆகப் பெண்களை கடவுள் பேரால் லைசென்சு கொடுப்பதாகிய முத்திரை போடுவது அல்லது பாஸ் (பொட்டுக்) கட்டுவது என்கின்ற இழிவான காரியத்தை நிறுத்துவதற்கு ஆக கொண்டு வரப்பட்ட ஒரு மசோதாவை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரே இன்று தலைவராய் இருப்பவரே எதிர்த்தார் என்றால், காங்கிரசின் யோக்கியதைக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? என்று கேட்கின்றோம்.
காங்கிரசின் கவலை எல்லாம் மந்திரி பதவியைக் கைப்பற்றி, சம்பளம் வாங்க வேண்டும். அரசியலை அக்கிரகாரமாக்க வேண்டும் என்பதேயல்லாமல் வேறு அரசியலிலோ சமுதாய இயலிலோ அவர்களுக்கு உள்ள கொள்கை என்ன என்று கேட்கின்றோம்.
காங்கிரஸ்காரர்கள் டாக்டர் சுப்பராயனை மந்திரியாக்கினார்கள்; அவர் சமுதாயத் துறையில் சற்றுத் தீவிர கொள்கையைக் காட்டினார்; அவரை ஒழிக்கச் சூழ்ச்சி செய்தார்கள். பிறகு முனிசாமி நாயுடுவை மந்திரியாக்கப் பிரயத்தனப்பட்டார்கள். அவர் மந்திரி ஆகி பார்ப்பனர் களுக்கு உள் ஆளாயிருந்தார். ஜஸ்டிஸ் கட்சியாரால் ஒழிக்கப்பட வேண்டியவரானார். எப்படி இருந்தாலும் இரு மந்திரிக்கும் காங்கரஸ் காலாடிகளுக்கு பயந்து கப்பம் கட்டாமல் மாத்திரம் இருக்க முடியவில்லை.
இப்போது பொப்பிலி ராஜா மந்திரியானார்; அவர் காங்கிரஸ் வாயாடிகளுக்கு கப்பம் கட்டுவதில்லை. பார்ப்பனர்களுக்கு உள் ஆளாகவும் இருப்பதில்லை. அவரை பார்ப்பனர்கள் ஒழிக்க வேண்டும் என்பதில் முனைந்து இருக்கிறார்கள்.
ஆகவே அரசியல் விஷயமாய் காங்கிரஸ்காரர்களுக்கு இதைத் தவிர வேறு என்ன கொள்கையோ, வேலையோ இருந்து வருகிறது என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். வேறு வேலை இருக்குமானால் அதை சென்னை சட்டசபையில் காட்ட முடியாவிட்டாலும், இந்திய சட்டசபையில் காட்டுவதற்கு எவ்வளவோ சந்தர்ப்பமும் பலமும் இருந்து வருகிறதே, அதைக்கொண்டு என்ன செய்தார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.
அரசியல் சீர்திருத்தத்தை நிராகரிப்பதற்கு பதிலாக அதை ஆதரித்தார்கள். பண்டிட் மாளவியாவையும், பங்காளிகளையும் பலி கொடுத்து முஸ்லீம்கள் தனித்தொகுதி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொண்டு முஸ்லீம் தயவை சம்பாதித்தார்கள்?
அப்படியாவது முஸ்லீம் தயவை சம்பாதித்தவர்கள் அசம்பளியில் என்ன செய்ய சக்தி உடையவர்களானார்கள்.
அடக்கு முறைச் சட்டங்கள் அவசரச் சட்டங்கள் ஆகிய மனிதத் தன்மைக்கு மாறான சட்டங்கள் எல்லாம் புனருத்தாரணம் செய்து புதுப்பிக்கத்தானே முடிந்தது.
அடக்குமுறைச் சட்டங்கள், அவசரச் சட்டங்கள் ஆகியவை ஒழிப்பதும் சீர்திருத்த சட்டத்தை ஒழிப்பதும் ஆன காரியத்துக்கு ஆகவே இந்திய சட்டசபைக்குப் போனவர்கள் கதி இதுவானால் இவ்வளவு அவமானமும், கெடுதியும் காங்கிரஸ்காரர்கள் மெஜாரிடியாய் இருக்கும்போதே ஏற்பட்டும், இவைகளைத் தவிர வேறு ஒரு காரியத்தையும் செய்ய முடியாத நிலையில் இருக்கும்படியான அப்பாவப்பட்ட அசம்பளியை விட்டுவிட்டு வரவோ, ராஜினாமா கொடுக்கவோ முடியவில்லையானால், சில காரியங்கள் நம்மிஷ்டப்படி செய்ய முடியாவிட்டாலும், பல காரியங்கள் செய்ய சவுகரியமுள்ளதும், எதிரிகள் உட்கார்ந்து விஷமத்தனம் செய்ய முடியாமல் இருப்பதற்கு சவுகரியம் உள்ளதுமான ஸ்தாபனங்களான மந்திரி பதவிகளை ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று இவர்கள் கேட்பதில் ஏதாவது புத்திசாலித்தனமிருக்கிறதா? என்று கேட்கின்றோம்.
சொந்த முறையில் 3 வது வகுப்பில் பிரயாணம் செய்த அனுபவமும் தகுதியும் உள்ளவர்களே தேசாபிமானத்தின் பேரால் முதல் வகுப்பில், தன் பெண் ஜாதி பிள்ளையுடன் போக ஆசைப்படும் போது, சதா சர்வகாலம் முதல் 2ம் வகுப்பிலேயே பாரம்பரியமாக போய் வந்தவர்கள் முதல் வகுப்பில் பிரயாணம் செய்வதைப் பார்த்து ஏன் பொறாமைப்பட வேண்டும் என்று கேட்கின்றோம்.
காங்கிரசின் பேரால் தேசாபிமானத்தின் பேரால் அசம்பளிக்குப் போய் காங்கிரஸ் தீர்மானத்துக்கு விரோதமாய் உத்தியோகம் பெற்ற ஒரு வக்கீல் பட்டேல் அவர்கள் வருஷத்தில் 3, 4 மாத வேலைக்கு N 4000 ரூ. வீதம் 12 மாதமும் சம்பளம் வாங்கியிருக்கும் போது, 12 N நாள் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் ராஜாக்கள் பிரபுக்கள் என்பவர்கள் 4000 ரூ. சம்பளம் வாங்கினால் எப்படி அதைவிட மோசமான தேசத் துரோகமாகும் என்று கேட்கின்றோம்.
இப்படியாக பல விதத்திலும் காங்கிரஸ்காரர்களின் நடத்தை இருக்கும்போது காங்கிரசின் யோக்கியதை இருக்கும்போது மற்றவர்களைக் குற்றம் சொல்லுவது எப்படி யோக்கியமான காரியமோ நாணயமான காரியமோ ஆகும் என்று கேட்கின்றோம்.
குடி அரசு தலையங்கம் 15.12.1935