காங்கிரசுக்கு  எதிர்ப்பு அகில  இந்திய  முயற்சி பிரபலஸ்தர்கள்  ஆதரவு

 

வரப்போகும் சீர்திருத்தத்தைக் கவிழ்ப்போம்; பிரதிநிதி சபை  அமைப்போம்; எதிர்கால அரசியலை வகுப்போம் என்று  அசம்பிளித்  தேர்தலுக்கு  முன்  கூச்சல்  போட்டு  பொதுஜனங்களை  ஏமாற்றி  ஓட்டுப்பறித்த  காங்கிரஸ்  வாலாக்கள்  மந்திரி  பதவிகளைக்  கைப்பற்ற  முயர்ச்சி  செய்து  வருகிறார்கள்.  இதிலும்  காங்கிரஸ்காரர்களுக்குள்  ஒற்றுமையான அபிப்பிராயம்  இல்லை.  சில  மாகாணங்கள்  ஆதரிக்கின்றன.  காங்கிரஸ்  நிர்வாகிகளோ  திட்டமாக  எதுவும்  கூறவில்லை.  பதவி  ஏற்கும்  பிரச்சினையை  லக்ஷ்மணபுரி  காங்கிரசில்  முடிவுசெய்து  கொள்ளலாமென்று  ஒத்திப்போட்டிருக்கிறார்கள்.  காங்கிரஸ்  முடிவை  எதிர்பாராமலே  தேச  நலத்துக்கான  முயற்சிகள்  செய்ய  பொறுப்புடைய  தேசத்  தலைவர்களுக்கு  உரிமையுண்டு.

“”காங்கிரஸே  இந்தியா,  இந்தியாவே  காங்கிரஸ்”  என்று  காங்கிரஸ்  வாலாக்கள்  கூறிக்கொண்டாலும்  பொதுஜனங்கள்  அதை  ஆதரிக்கவில்லை.  வரப்போகும்  சீர்திருத்தம்  எவ்வளவு  குறைபாடுகள்  உடையதாயிருந்தாலும்  அதை  ஒப்புக்கொண்டு அதனால்  கிடைக்கக்கூடிய  சாத்தியமான  நன்மைகள்  எல்லாம்  தேச  மக்களுக்குக்  கிடைக்கும்படி  கடனாற்றுவதே  விவேகிகள்  கடமை.  அகில  இந்திய  மதிப்புப்  பெற்ற  பொறுப்புடைய  தலைவர்கள்  எல்லாம்  இவ்வாறே  அபிப்பிராயப்பட்டிருக்கிறார்கள்.  வரப்போகும்  சீர்திருத்தத்தை  ஏற்று  நடத்தும்  நோக்கத்துடன்  ஸ்வராஜ்யக்  கட்சியாரும்,  தேசீயக்  கட்சியாரும்  ஆந்திரம்,  வங்காளம்,  பீகார்,  பம்பாய்  மத்திய  மாகாணம்,  மகாராஷ்டிரம்  முதலிய  பிரதேசங்களில்  தனித்தனி  ஸ்தாபனங்கள்  ஏற்படுத்தி  தத்தம்  கட்சிகளுக்கு  ஆதரவு  தேடப்  பெரும்  முயற்சி செய்து வருகிறார்கள். அரசியல் அநுபவம் வாய்ந்த பல  பிரபலஸ்தர்கள்  இம்  முயற்சியில்  ஈடுபட்டிருக்கிறார்கள்.

எல்லா  மாகாணங்களிலுமுள்ள  ஸ்வராஜ்யக்  கட்சியாரையும்,  தேசீயக்  கட்சியாரையும்  வரவழைத்து  புனாவில்  ஒரு  மகாநாடு  கூட்டி  ஒரு அகில  இந்தியக்கட்சி  ஏற்படுத்த  ஆந்திர  மாகாண  ஸ்வராஜ்யக்  கட்சிக்  காரியதரிசி  தோழர்  ஜி.வி. சுப்பராவ்  முயற்சி  செய்வதாயும்  தெரிகிறது.  இந்தியா  முழுதும்  செல்வாக்கும்,  அரசியல்  அநுபவமும்  உடையவர்கள்  எல்லாம்  இம்  முயற்சியில்  கலந்துகொள்வார்களாகையால் வரப்போகும்  சீர்திருத்தச்  சட்டசபைகளில்  காங்கிரஸ்காரர்  ஆதிக்கம்  பெறவே  முடியாது.  ஸ்தாபனமாகப் போகும்  இந்த  அகில  இந்தியக்  கட்சிக்  கொள்கை களுக்கும்,  ஜஸ்டிஸ்  கட்சிக்  கொள்கைகளுக்கும்  பாராட்டத்தக்க  வேற்றுமை யில்லை. எல்லாக்  கட்சிகளும்  சட்ட  வரம்புக்குட்பட்டவைகளே.  தற்கால  ஜஸ்டிஸ்  கட்சி  வேலைத்  திட்டம்  ஏனைய  தேசீயக்  கட்சி  வேலைத்  திட்டங் களுக்குக்  குறைந்ததல்ல.

சட்ட  வரம்புக்குட்பட்ட  கட்சிகள்  எல்லாம்  ஊக்கமாக  உழைத்தால்  காங்கிரஸ்  தலை  தூக்கவே  முடியாது.  எனவே  காங்கிரஸ்காரர்  மிரட்டல்கள்  வீண்  மிரட்டல்கள்  என்பதை  தேச  மகாஜனங்கள்  உணர்வார்களாக!

குடி அரசு  கட்டுரை  22.12.1935

 

You may also like...