தென்னாற்காடு  ஜில்லா 

 

படையாட்சிகள்

சமீபத்தில்  நடக்கப்போகும்  தென்னாற்காடு  ஜில்லா  போர்டு  தேர்தல்களில்  காங்கிரஸ்  கட்சியைச்  சேர்ந்த  பெரியார்கள்,  மற்ற இடங்களில்  உண்மையை  மறைத்தும்,  உள்ளதைக்  குறைத்தும்  கூறிப்  பொய்ப்பிரசாரம்  செய்த  மாதிரி,  தங்களுடைய  ஒழுங்கீனமான  சுயநலப்  பிரசாரம்  செய்ய  முற்பட்டிருக்கிறார்கள்  என்று  தெரிகிறது.  அவர்கள்  செய்த  சூழ்ச்சிகளைக்  குறித்து  நமது  நிருபர்  எழுதிய  விவரங்களை  வேறொரு  பக்கத்தில்  பிரசுரித்திருக்கிறோம்.  அவற்றால்,  சுயநலக்  கூட்டத்தார்  ஜஸ்டிஸ்  கட்சியினரைத்  தோற்கடிக்க  எவ்வளவு  தூரம்  முயற்சி  செய்கிறார்களென்பது  விளங்கும்.  தம்முடைய  பிரசாரத்திற்காக,  எவ்வளவு  கேவலமான  முறைகளையும்  அனுசரிப்பார்களென்பது,  அவர்களுடைய  முழுப்  பொய்ப்பிரசாரத்தினால்  புலப்படுகின்றது.  சில  வாரங்களுக்கு  முன்,  படையாட்சி  வகுப்பினரைச்  சேர்ந்தவர்கள்  அனைவரையும்  குற்ற  பரம்பரைச்  சட்டத்தின்  கீழ்  கொண்டு  வரப்பட்ட  அரசாங்க  உத்தரவு  ரத்து  செய்யப்பட்டது.  க்ஷத்திரிய  வகுப்பைச்  சேர்ந்த  பழங்குடி  மக்களான  படையாட்சிகள்  ஏன்  குற்றஞ்  செய்யும்  வகுப்பினரோடு  சேர்க்கப்பட்டார்கள்?  அதற்குக்  காரணமென்ன?  காரணம்  சில பார்ப்பன  போலீஸ்  உத்தியோகஸ்தர்கள்.  அவர்களுடைய  “ரிப்போர்ட்டு’களில்  அவ்வகுப்பினரை  குற்ற  வகுப்பினர்  சட்டத்தின்  கீழ்  கொண்டு  வருதல்  மிக  அவசியம்  என்று  எழுதியதனால்,  அரசாங்கத்தார்,  தவறாக  அப்படிப்பட்ட  உத்தரவை  வெளியிட்டார்கள்.  அந்த  உத்தரவு  படையாட்சி  வகுப்பினரிடையே  பெருத்த  பரபரப்பை  உண்டுபண்ணியது.  அவர்களுடைய  சுயமரியாதைக்கும்,  கௌரவத்திற்கும்,  அரசாங்க  உத்தரவு  இடையூறு செய்ததைக்  கூட்டங்களிலும்,  பத்திரிகைகளிலும்  கண்டிக்கப்பட்டது.  அந்த  அவமரியாதையான  உத்தரவை  ரத்து  செய்வதற்குத்  தென்னாற்காடு  ஜில்லா  போர்டு  தலைவர்,  ராவ்பகதூர்  ஜம்புலிங்க  முதலியார்  அவர்கள்  பிரயாசைப்பட்டு  வெற்றிபெற்ற  விஷயம்  அந்த  ஜில்லாவாசிகளான  படையாட்சிகளுக்குத்  தெரிந்திருக்குமென்று  நம்புகின்றோம்.  சென்னை  சட்டசபையில்  ஜஸ்டிஸ்  கட்சியினர்  ஒருவரால்  அவசரத்  தீர்மானம்  கொண்டுவரப்பட்டது.  அவ்வுத்தரவை  ரத்து  செய்யும்  விஷயமாக  அரசாங்கத்தார்  கவனிப்பதாக  வாக்குறுதியளித்ததின்  பேரில்,  தீர்மானம்  “வாப்பீஸ்’  வாங்கிக்கொள்ளப்பட்டது.  பின்னர்,  ஜஸ்டிஸ்  கட்சிப்  பிரமுகர்களின்  முயற்சியால்,  அரசாங்கத்தார் பார்ப்பன  போலீஸ்  உத்தி யோகஸ்தர்களுடைய  “ரிப்போர்ட்’டுகளின்  மேல்  தாங்கள்  அம்மாதிரி  உத்தரவிட்டது  தவறென்று  உணர்ந்து,  படையாட்சிகளின்  கிளர்ச்சியின்  உண்மையை  அறிந்து,  உத்தரவை  ரத்து  செய்தார்கள்.  இவ்வுத்தரவு  ஜஸ்டிஸ்  கட்சியாரால்  ஏற்படுத்தப்பட்டது;  காங்கிரஸ்  காரர்கள்தான்  சட்டசபையில்  இதை  விவாதித்து  ரத்து  செய்வதற்கு  உதவி  செய்தார்கள்  என்று  சுயநலக்கூட்டப்  பத்திரிகைகள்  சில  கூறுவது  எவ்வளவு  பொய்யான  விஷயம்  என்பதை  படையாட்சிகள்  அறிவார்கள்  என்று  நம்புகிறோம்.  படையாட்சிகள்  பார்ப்பனரல்லாத  பெருங்குடி  மக்களில்  மிகப்  பழங்குடி  மக்கள்.  அவர்களைப்  பற்றிப்  பார்ப்பனர்கள்  பரிந்து  பேசுவதும்,  அவர்களுடைய  நன்மைக்காகப்  பாடுபடுவது  போலப்  பாசாங்கு  செய்வதும்,  மக்களை ஏமாற்றி  “ஓட்’டுப்  பறிப்பதற்கேயாகும்.  காங்கிரஸ்  என்ற  போர்வையை  மேல்  போர்த்திக்கொண்டால்,  படையாட்சிகளை  ஏமாற்றி  விடலாம்  என்று  அவர்கள்  நினைத்துக்  கொண்டிருக்கிறார்கள்  போலும்.  சதாகாலமும்  பொய்,  ஏமாற்றுதல்,  மானக்கேடான  செயல்களைச்  செய்து  வேலை  சம்பாதித்தல்,  புல்லிய  செய்கைகளின்  மூலம்  வயிறு  வளர்த்தல்  முதலிய  குற்றங்களை  இரவு  பகலாகச்  செய்து  வரும்  பார்ப்பனர்களை,  குற்ற  வகுப்பினர்  சட்டத்தின்  கீழ்  கொண்டுவர  வேண்டியிருக்க,  தமிழ் நாட்டின்  விவசாய  விருத்திக்குத்  கற்×ண்  போல்  விளங்கி,  பழமையும்  பெருமையும்  பொருந்திய  க்ஷத்திரிய  வீரத்தையும்,  தேக பலத்தையும்  நாட்டின்  செழுமைக்கு  உபயோகிக்கும்  படையாட்சிகளைக்  குற்ற  பரம்பரை  வகுப்பினராகச்  சேர்த்தது  எவ்வளவு  தவறான  விஷயம்!  இத்தவறுதலுக்குக்  காரணம்  பார்ப்பனர்கள்  என்பதை  யுணர்ந்து,  அவ்வுத்தரவு  ரத்து  செய்ததற்குக்  காரணம்  ஜஸ்டிஸ்  கட்சி  என்பதறிந்து,  சமீபத்தில்  நடைபெறப்போகும்  தேர்தலில்  சுயநலக்  காங்கிரஸ்  கூட்டத்தை  முறியடிப்பார்கள்  என்று  நம்புகிறோம்.

“விடுதலை’

குடி அரசு  மறு பிரசுரம்  08.12.1935

You may also like...