தோழர் சத்தியமூர்த்தியின் தற்பெருமை

 

குட்டு வெளிப்பட்டது

இந்தியா சட்டசபை அங்கத்தினர்களின் அந்தஸ்து அரசியல் வேலைகள் சம்பந்தமான விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று மாகாண அரசாங்கங்கள் கொடுத்த தகவல்களைக் கொண்டு இந்திய அரசாங்கத்தாரால் தயாரிக்கப்பட்டு அச்சிட்டு சர்க்கார் அங்கத்தினர் களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்புத்தகத்தில் தன்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு இந்திய அரசாங்க ஹோம் மெம்பர் கொடுத்த பதிலும் வருமாறு@

சத்தியமூர்த்தி@  என்னைப் பற்றி அந்தப் புத்தகத்தில் என்ன தகவல் கொடுத்திருக்கிறார்கள்?

சர் ஹென்றி கிரெயிக்@  நான் நினைத்திருப்பதைக் காட்டிலும் கனம் மெம்பர் தன்னைப் பற்றி பிரமாதமாக நினைத்துக் கொண்டிருக் கிறார் போலிருக்கிறது. உண்மையாகவே, நான் கனம் மெம்பரைப் பற்றிய தகவல்களை வாசிக்கவில்லை. (சபையில் பலத்த சிரிப்பு)

சத்தியமூர்த்தி@  அத்தகவல்களை வாசிக்காத பட்சத்தில், வரி செலுத்து வோரின் பணத்தை வீணாகச் செலவழித்து அதை அச்சடிப்பானேன்?

சர். ஹென்றி கிரெயிக்@  அப்புத்தகத்தில் சில அம்சங்களை நான் வாசித்தேன். ஆனால் கனம் மெம்பரைப் பற்றிய (சத்தியமூர்த்தி) தகவல் களை மாத்திரம் வாசிக்கவில்லை. (மீண்டும் சபையில் பெருஞ் சிரிப்பு)

நமது குறிப்பு@  ஐயோ! பரிதாபம். தோழர் சத்தியமூர்த்தி தன்னைப் பற்றி எவ்வளவு பெரிய மனுஷராக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதும், ஆனால் அவரை சர்க்கார் மெம்பர்களும், மற்றவர்களும் கொஞ்சங்கூட லட்சியம் பண்ணுவதில்லையென்பதும் விளங்கிவிட்டதே. இதிலிருந்து சத்தியமூர்த்திக்கும், அவர் பேச்சுக்கும் எவ்வளவு மதிப்பு இருக்கிறதென்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

குடி அரசு  பத்திராதிபர் குறிப்பு  31.03.1935

You may also like...