தேவகோட்டையில் பார்ப்பனீய தாண்டவம்

 

தேவகோட்டை நியாயஸ்தலத்தில் வக்கீல் சங்கத்தில் தாகத்துக்குத் தண்ணீர் சாப்பிடுவதற்காக வைத்திருக்கும் பாத்திரத்தையும், சிற்றுண்டி சாப்பிடுவதற்காக ஒதுக்கி வைத்திருக்கும் இடத்தையும் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று வக்கீல் சங்கத்தில் பார்ப்பனர்கள் தங்கள் மெஜாரிட்டியைக் கொண்டு தீர்மானித்துக் கொண்டார்கள். பார்ப்பனரல்லாத வக்கீல்கள் மைனாரிட்டியார் மூன்றே பேர் ஆனதால் அதை ஆட்சேபித்து பலன்படாமல் தங்களுக்குள்ளாக செய்து கொண்ட ஒரு கண்டனத் தீர்மானத்தை நிர்வாக கமிட்டிக்கு அனுப்பி இருக்கிறார்களாம். இதை பார்ப்பன வக்கீல்கள் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார்கள் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.

தேவகோட்டையிலுள்ள பார்ப்பனரல்லாத வக்கீல்களில் ஒருவர் தோழர் எஸ்.லட்சுமிரதன் பாரதியார், எம்.ஏ., பி.எல்., நமது நண்பர் ஆவார். இவர் காங்கிரஸ் தீண்டாமை விலக்கு கமிட்டி பிரசிடெண்டும் சுயமரியாதை இயக்கத்துக்கும் உற்ற நண்பரும் ஆவார். தேவகோட்டை வக்கீல் பார்ப்பனர்கள் பெரிதும் காங்கிரசுக்காரர்கள். இந்த நிலையில் இவருடைய கதியே இப்படி இருக்குமானால் காங்கிரசின் தீண்டாமை விலக்கு விஷயத்தின் யோக்கியதையைப் பற்றி நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.

ஆகவே இதனால் தான் “”நம் மீதுள்ள தீண்டாமையை விலக்கிக் கொள்ள நாம் முதலில் முயற்சிக்க வேண்டும்” என்று சுயமரியாதை இயக்கம் சொல்லுகிறது.

தீண்டாமை விலக்குக்கு பத்து லட்சக்கணக்காக பணம் வசூலித்தார்கள். அந்த பணச் செல்வாக்கை பயன்படுத்தி அசம்பளி எலக்ஷனில் வெற்றி பெற்றார்கள்.

அந்தப் பணச் செலவில் கூலிகளையும் காலிகளையும் நியமனம் செய்து ஜஸ்டிஸ் கட்சியை வைய்யச் செய்தார்கள்.

அந்தப் பணத்தை துஷ்பிரயோகம் செய்து எச்சிலைப் பத்திரிகை களையும் எச்சிலை நக்கும் பத்திரிகைகளையும் வசப்படுத்தி ஈனத்தனமாய் இழி தன்மையாய் பார்ப்பனரல்லாதார்களையும், உண்மையாய் பாடுபடுகின்றவர்களையும் பார்த்து குரைக்கச் செய்தார்கள்.

இவைகள் ஒருபுறமிருந்தாலும் இன்று பச்சையாய் வெள்ளையாய் பொது இடத்தில் பார்ப்பானுக்குத்தான் உரிமை, பார்ப்பனரல்லாதாருக்கு அவ்விடத்தில் உரிமை இல்லை. பார்ப்பான் சாப்பிடுகிற பாத்திரத்தில் பார்ப்பனரல்லாதார் தண்ணீர் சாப்பிடக்கூடாது என்று தங்கள் மெஜாரிட்டி பலத்தைக் கொண்டு தீர்மானம் செய்து ஒதுக்கித் தள்ளி விட்டார்கள்.

இனி வெள்ளைக்கார ஆக்ஷி போய் சத்தியமூர்த்தி ஆக்ஷியோ ராமராஜ்ஜிய ஆக்ஷியோ ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதைப் பற்றி நாம் எடுத்துக்காட்ட வேண்டுமா என்று கேட்கின்றோம்.

பார்ப்பனர்கள் இப்படி நம்மைக் கொடுமை செய்கிறார்களே இழிவு படுத்துகிறார்களே என்பது வரவர நமக்கு அவ்வளவு வேதனையாகவோ ஆச்சரியமாகவோ காணப்படுவதில்லை. ஏனெனில் அவை அவர்களது பரம்பரை வழக்கம். இன்றும் அவர்களது ஜீவன் போன்ற லக்ஷியம் ஆதலால் அதில் அதிசயமில்லை.

ஆனால் பார்ப்பனரல்லாதார் அப்படிப்பட்ட பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டும், அவர்களை ஆதரித்துக் கொண்டும், அவர்களது பூட்சுகளை நாக்கினால் சுத்தப்படுத்திக் கொண்டும் வாழுகின்றார்களே என்பதைப் பற்றி யோசிக்கும்போது, பார்ப்பனரல்லாதாரில் சிலராவது உண்மையிலேயே பிறவியிலேயே இழி மக்களாய் மானமற்றவர்களாய் இருக்கிறார்கள் என்று காந்தியார் சொல்லும் வருணாச்சிரம தர்மம் இவர்களைப் பற்றி தானா என்ற பிரச்சினையைக் கிளப்பி விடுகின்றது.

ஆகவே தோழர் பாரதியாரை பார்ப்பனர் பாத்திரத்தை தொடக் கூடாது என்று சொன்ன கொடுமையைவிட, பாரதியாருக்கு ராணுவத்தில் சுதந்திரமோ கஜானாவில் சுதந்திரமோ கொடுக்க மாட்டேன் என்று வெள்ளைக்காரன் சொல்லுவதை அதிகக் கொடுமையானதென்றோ சமமான கொடுமையானதென்றோ ஆயிரத்தில் ஒரு பங்கான கொடுமை யானதென்றோ நமக்கு தோன்றவில்லை.

ஆகவே காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார்  சத்தியமூர்த்தியை தலைவராகக் கொண்ட காங்கிரஸ் தேசபக்தர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்?

இந்தக் கொடுமை தேவகோட்டைப் பார்ப்பனர் கொடுமை மாத்திரமல்லவென்றும், சக்கெண்ட் லைன் பீச்சில் உள்ள ஒண்ணறை அணா (பாப்பன) அம்மங்கார் முதல் டம்பாச்சாரி நாடகத்தில் வரும் கும்பகோண அய்யர் சந்ததியார் வரையில் உள்ள “”பிராமணீய” சமூகத்தின் ஜீவாதாரத் திட்டம் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டு பதில் இறுப்பார்களாக.

குடி அரசு  கட்டுரை  08.12.1935

 

You may also like...