காங்கிரஸ் வெற்றியின் வண்டவாளம்
காங்கிரஸ்காரர்கள் சிதம்பரம், மதுரை முதலிய முனிசிபல் தேர்தல்களில் தாங்களே வெற்றியடைந்ததாகத் தப்பட்டை அடித்து மக்களை ஏமாற்றி வந்தார்கள்.
இந்த ஏமாற்றம் ஒரு 15 நாட்களுக்குக்கூட நிலைக்க முடியாத தன்மையில் வெற்றியின் வண்டவாளம் வெட்டவெளிச்சமாகிவிட்டது.
சிதம்பரம் முனிசிபாலிட்டியில் ஒரு பார்ப்பனர் அக்கிராசனராய் வர முடிந்தது என்பது ஒருபுறமிருந்தாலும் மற்ற காரியங்களில் ஜஸ்டிஸ் கட்சியே வெற்றி பெற்று வருகிறது.
உதாரணமாக சிதம்பரம் முனிசிபாலிட்டியில் இருந்து செனட்டுக்குத் தெரிந்தெடுக்கப்படும் ஸ்தானத்துக்கு ஒரு ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் தோழர் வேணுகோபால் பிள்ளை அவர்களே ஒரு காங்கிரஸ் பார்ப்பனருக்கு விரோதமாய் நின்று பெருமித ஓட்டுகளால் வெற்றி பெற்று விட்டார்.
மற்றும் மதுரை முனிசிபல் கவுன்சிலில் “”காங்கிரஸ்காரர்களே வெற்றி பெற்று விட்டார்கள்” என்றும், “”மதுரை காங்கிரஸ் கோட்டையாக ஆகிவிட்டது என்றும், மதுரையில் ஜஸ்டிஸ் கட்சி மாண்டுவிட்டதால் சென்னை மாகாணம் முழுவதிலும் ஜஸ்டிஸ் கட்சி புதைக்கப்பட்டு விட்டது” என்றும் பார்ப்பனக் கூலிகளும் தோழர் சத்தியமூர்த்தி முதலிய பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும் பறையடித்தன. அதன் யோக்கியதையும் 10.10.35ல் நடந்த ராஜேந்திரபாபு வரவேற்புத் தீர்மானத்தில் தார் அபிஷேகம் செய்யப்பட்டு விட்டது.
அதாவது “”ராஜேந்திர பிரசாத் அவர்கள் காங்கிரஸ் பிரசாரம் செய்ய இந்த ஊருக்கு வருகிறார். ஆதலால் அவரை வரவேற்பது காங்கிரசை ஆதரிப்பதாகும். ஆகையால் மதுரை முனிசிபாலிட்டியின் பேரால் அவரை வரவேற்கக் கூடாது”
என்பதாகச் சொல்லி மதுரை கவுன்சிலர்கள் மறுத்து விட்டார்கள். 15 மெம்பர்கள் எதிர்த்தும் 3 பேர் நடுநிலை வகிப்பதன் மூலம் மறுத்தும் வரவேற்புத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு விட்டது.
காங்கிரஸ் தலைவருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதற்கு 6 பேர்கள் தான் அனுகூலமாய் இருந்திருக்கிறார்கள்.
ஆகவே ஆஜரான 24 மெம்பர்களில் 18 பேர்கள் காங்கிரஸ் மெம்பர்கள் அல்ல என்பதோடு, காங்கிரசுக் கொள்கையை எதிர்ப்பவர்கள் என்பதும் இதனால் விளங்குகிறதல்லவா?
எனவே காங்கிரஸ் வெற்றியின் வண்டவாளம் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். திருநெல்வேலி, திருச்சி ஆகிய தேர்தல்களும் “”உருண்டைக்கு நீளம் புளிப்புக்கு அவளப்பன்” (அதன் தகப்பன்) என்று ஆகப் போகிறது.
குடி அரசு துணைத் தலையங்கம் 13.10.1935