யார் திட்டத்தை யார் திருடியது?

 

ஜஸ்டிஸ் கட்சியார் தோழர் ஈ.வெ.ராமசாமியின் திட்டங்களைத் தங்களது வேலைத் திட்டங்களுடன் சேர்த்துக் கொண்ட நிமிடம் முதல் சென்னைப் பார்ப்பனர்கள் ஆண்பெண் அடங்கலுக்கும் பேதியும், வயிற்றுக் கடுப்பும் எடுத்து ஜன்னி கண்டவர்கள் போல் வாய்க்கு வந்தபடி உளரிக் கொட்டிய வண்ணமாய் இருந்து வருகிறார்கள். உதாரணமாய் அத் திட்டங்கள் கொஞ்ச நாளைக்கு முன் விருதுநகர் மகாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட வுடனேயே தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அதைப் பற்றி ஒரு ஸ்ரீமுகம் விடுத்தார். அதில் அவர் அத் தீர்மானங்களைப் பற்றி,

“”ஜஸ்டிஸ் கட்சியாரால் ஜீரணிக்க முடியாத மருந்தை சாப்பிட்டு விட்டார்கள்” என்றும் “”அது அபேதவாத திட்டம்” என்றும்,

“”பொதுவுடமைத் திட்டம்” என்றும், “”ராமசாமியை சுவாதீனப்படுத்திக் கொள்வதற்கு ஆக விலை கொடுக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது” என்றும்,

“”அது ராஜபக்தி பொதுவுடமைத் தீர்மானம்” என்றும் இப்படியாகப் பலவிதமாய் ஒன்றுக்கொன்று முரணாய் உளரிக் கொட்டினார்.

காங்கிரஸ் பத்திரிகைகள் என்பவைகளும், மற்ற காங்கிரஸ்காரர்களும் ஈ.வெ.ரா. தீர்மானங்கள் கராச்சி தீர்மானங்களில் இருந்து திருடியவை என்றும், சாரமற்றவைகள் என்றும், வெறும் ஏட்டுத் தீர்மானங்கள் என்றும், தண்ணீரின் மேல் எழுதி வைக்க வேண்டியதுதான் பாக்கி என்றும், இன்னும் பலவிதமாக எத்தனை விதங்களில் அத் தீர்மானங்களைப் பற்றிப் பொது ஜனங்களை ஏமாற்றவும் சர்க்காரை உசுப்படுத்தி விடவும் கூடுமோ அத்தனை வகைகளில் எழுதியும் பேசியும் வந்தார்கள் வருகிறார்கள்.

ஆனால் இத் திட்டங்களை ஜஸ்டிஸ் கட்சியார் மகாநாட்டிலும் நிர்வாக சபைக் கூட்டத்திலும் ஒப்புக் கொள்ளும் வரையிலும், “”அவர்களாவது இத் திட்டங்களை ஒப்புக் கொள்ளுவதாவது தோழர் ஈ.வெ.ரா. கனாக் காண்கிறார்” என்றும், ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்றும், ஒப்புக் கொண்டால் அவர்களது மந்திரி வேலை போய்விடும் என்றும் கூறினார்கள்  அதோடு பந்தயமும் கட்டினார்கள். இப்போது ஒப்புகொண்ட பிறகு சர்க்காருக்கு ஜஸ்டிஸ் கட்சியார் மீது ஆத்திரம் வரும்படியாக மேல்காட்டியபடி அத்தீர்மானங்கள் பொது உடமைத் தீர்மானங்களாகும் என்று சொல்லிவிட்டு பிறகு எங்கு ஜனங்கள் இதை நம்பி இவர்களை ஆதரித்து விடுவார்களோ என்று பயந்து “”அது ராஜபக்தி பொது உடமைத் தீர்மானம்” என்றும் சொன்னார்கள்.

ஒரு கட்சியார் தங்கள் வேலைத் திட்டமாக ஏதோ ஒரு தீர்மானத்தை செய்து கொண்டால் அதற்கு ஆக இந்தப் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனப் பத்திரிகைகளுக்கும் இவ்வளவு ஆத்திரம் வருவானேன் என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.

அத்தீர்மானங்களில் பலாத்காரம் உண்டாக்கும்படியான பொதுஉடமைத் தத்துவம் எதில் இருக்கின்றது? அல்லது ராஜ பக்தியை காட்டக்கூடிய ராஜவிஸ்வாசப் பிரமாணத் தன்மை எந்தத் தீர்மானத்தில் இருக்கிறது என்பவைகளை எடுத்துக்காட்டியிருந்தால் இவர்களை யோக்கியர்கள் என்றோ நாணயஸ்தர்கள் என்றோ சொல்லிக் கொள்ளலாம். அப்படிக்கு இல்லாமல் பொது உடமை என்றும், ராஜபக்தி என்றும் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாமல் எழுதுவதால் பொது ஜனங்களும் சர்க்காரும் இவர்களது யோக்கியதையையும் அரசியல் ஞானத்தையும் அறிந்து கொள்ள மாட்டார்களா என்று கேட்கின்றோம்.

தவிர அத் தீர்மானங்கள் என்ன காரணத்தால் ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஜீரணமாகாத ஆகாரம் என்பதையாவது விளக்கினார்களா என்று கேட்கின்றோம். அதில் எவ்வளவு செய்யக் கூடுமோ எவ்வளவுக்கு பொது ஜனங்களும் அரசாங்கமும் தயாராக இருக்கக் கூடுமோ அவ்வளவு அளவுக்கு வெகு ஜாக்கிரதையாகவே பொறுப்புடன் தான் தயாரிக்கப் பட்டதே தவிர பார்ப்பனர்களைப் போல் பொது ஜனங்களை ஏமாற்றவோ, அவர்களிடம் பணம் பறிக்கவோ ஓட்டு வாங்கவோ மோசக் கருத்துடன் ஒரே மூச்சில் சமுத்திரத்தை உறிஞ்சி விடுகிறேன் என்று ஞான சூனியமாய் பேச்சுக்கு மாத்திரம் தயாரிக்கப்பட்டதல்ல.

தவிர, ஈ.வெ.ரா. தீர்மானங்கள் காங்கிரஸ் தீர்மானங்களில் இருந்து திருடியது என்று சொல்லுவது மனதறிந்து, வேண்டுமென்றே சொல்லும், போக்கிரித்தனமான விஷமக் கூற்றாகும். எப்படி எனில் ஈ.வெ.ராமசாமி தீர்மானங்களில் உள்ள முக்கியத் தீர்மானங்கள் கராச்சி தீர்மானத்தில் இல்லவே இல்லை. கராச்சி தீர்மானத்தில் உள்ள முக்கிய தீர்மானங்கள் ஈ.வெ.ரா. தீர்மானத்தில் இல்லவே இல்லை. இது இரண்டு கண்ணும் அற்ற குருடனுக்கும் விளங்கும்.

அதாவது சகல வகுப்பாருக்கும் அவர்களது எண்ணிக்கைக்கு தகுந்தபடி பிரதிநிதித்துவம் உத்தியோகம் அரசியலில் அளிக்க வேண்டும் என்கின்ற தீர்மானம் கராச்சித் தீர்மானத்தில் எங்கு இருக்கிறது? என்று கேட்கின்றோம்.

அதுபோலவே கராச்சித் தீர்மானத்தில் உள்ள “”ஜாதி மதங்களையும் பழக்க வழக்கங்களையும் அவரவர் வருணாச்சிரம தொழில்களையும் காப்பாற்றிக் கொடுக்க உத்திரவாதம் கூறுகிறது” என்ற பார்ப்பன பாதுகாப்புத் தீர்மானம் ஈ.வெ.ரா. திட்டத்தில் எங்கு இருக்கின்றது? என்று கேட்பதுடன் பார்ப்பனக் காங்கிரசுக்கும் பார்ப்பனரல்லாத ஜஸ்டிஸ் கட்சிக்கும் இதைத் தவிர வேறு என்ன வித்தியாசம் இன்று கொள்கையிலும் திட்டத்திலும் இருக்கிறது என்றும் கேட்கின்றோம்.

ராஜ விஸ்வாசம் என்பது ஜஸ்டிஸ் கட்சியாரிடம் இருக்கும் அளவுக்கு எத்தனை டிக்ரி காங்கிரஸ்காரரிடம் குறைவாய் இருக்கிறது?

காங்கிரஸ் கட்சி ஆனாலும் அவங்கப்பன் காந்தி கட்சியானாலும், மற்றும் பொது உடமைக் கட்சியானாலும், அல்லது பலாத்காரப் புரக்ஷிப் பொது உடமைக் கட்சியானாலும், சட்டசபைக்கோ மற்றும் எந்த கிராம சபைக்கோ போனாலும் ராஜவிஸ்வாசம் என்று சும்மா சொன்னால் மாத்திரம் போதாமல் அவர்கள் குல தெய்வத்தை வேண்டி சத்தியம் செய்து ஆக வேண்டும் என்பதை யார் மறுக்க முடியும்?

மந்திரி வேலை பார்ப்பதும், சம்பளம் வாங்குவதும் எழுந்து தலைவணங்கி நிற்பதும் ஆகியவைகள் கூட எந்தக் கட்சி சட்டசபைக்குப் போனாலும் அடைந்தும் செய்தும்தான் தீர வேண்டும்.

வேண்டுமானால் பொதுஜனங்களை ஏமாற்ற அயோக்கியத்தனமான எண்ணத்துடனும் வஞ்சகப் புத்தியுடனும் “”இப்பொழுது அதைப் பற்றி பேச வேண்டியதில்லை” என்று காங்கிரஸ்காரர்கள் என்னும் காந்தி சிஷ்யர்கள் சொல்லலாம். ஆனால் காரியத்தில் இப்பொழுதிருந்தே நாக்கில் தண்ணீர் சொட்டவிட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். இதை யார் மறுக்கிறவர்கள்?

கிராமாந்திரங்களில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

“”இழவு வீட்டில் சிறிய தாயாரைப் பெண்டாளக் கையைப் பிடித்து இழுத்தவன், கல்யாண வீட்டில் அத்தை மகளை சும்மா விடுவானா?” என்று சொல்லுவார்கள். அது போல் ஒத்துழையாமை, சட்டமறுப்பு, உத்தியோக மறுப்பு, முட்டுக்கட்டை, பட்டம் துறப்பு, மந்திரிகள் அழிப்பு ஆகிய தீர்மானங்கள் வண்டிவண்டியாய் அமுலிலேயே இருந்த காலத்தில் சட்டசபைக்குப் போய் ராஜவிஸ்வாசப் பிரமாணம் செய்து தலைவர், கமிட்டி அங்கத்தினர் முதலிய பதவிகள் அடைந்து ரூ. 3000, 4000 மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு மந்திரிகளை ஏற்படுத்தி அவர்களை ஆதரித்து அரசாங்கத்தை நடத்திக் கொடுத்தவர்கள்  அவர்களிடம் தனிப்பட்ட முறையில் மாத வருமானம்  வாங்கிக் கொண்டு வந்தவர்கள் இப்போது சகல கட்டுகளும் அறுத்துவிட்டு “”நான் கண்ணை மூடிக் கொள்ளுகிறேன். அவரவர்கள் இஷ்டம் போல் ஜமாய்க்கலாம்” என்று அவர்களது குல தெய்வமே (காந்தியே) உத்திரவு கொடுத்துவிட்ட பிறகு இனி எவ்விஷயத்துக்கு ஆனாலும் எதற்காக ஏன் பயப்படுவார்கள்? எந்தக் காரியத்தை செய்யப் பயப்படுவார்கள்? என்று கேட்கின்றோம்.

ஆகவே இப்படிப்பட்ட இவர்கள் இன்று ஜஸ்டிஸ் கட்சியாரைவிட எந்த விதத்தில் உயர்ந்த கொள்கைகளை உடையவர்கள் என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.

ஆகவே பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி ஆதிக்கத்தை காப்பாற்றிக் கொள்ளத்தக்க மாதிரி செய்யப்பட்ட கராச்சித் தீர்மானத்தில் இருந்து ஈ.வெ.ரா. எதைத் திருடி யிருக்கிறார் என்பதும், பார்ப்பனரல்லாதார் தங்கள் குறைகளையும் இழிவுகளையும் போக்கிக் கொள்ளு மார்க்கமாக செய்யப் பட்ட தீர்மானங்கள் பார்ப்பனர்கள் ஒப்புக் கொள்ளக் கூடியதா என்றும், அது கராச்சித் திட்டத்தில் இருக்கிறதா என்றும் மறுபடியும் அழுத்தமாய்க் கேட்கின்றோம்.

கராச்சி தீர்மானங்கள் செய்யப்பட்ட ரகசியத்தின் வண்டவாளம் கராச்சி தீர்மானம் ஆன உடனேயே நாம் எழுதி யிருக்கிறோம்.

கராச்சி தீர்மானங்கள் சில சுயமரியாதைக்காரர்கள் தீர்மானத்திலிருந்து திருடியதாகும். மற்றும் அவை பார்ப்பன ஆதிக்கத்திற்கு உத்திரவாதம் கொடுத்த தீர்மானங்களின் புரட்டுகளைப் பார்ப்பனரல்லாதார் தெரிந்து கொள்ளாமல் இருக்கும்படி சில தீர்மானங்கள் வேஷத்துக்கு ஆகவே காப்பி அடித்ததாகும்.

அதாவது காங்கிரஸ் காரியதரிசி ஜவகர்லால் அவர்கள் கராச்சி காங்கிரசில் அறிக்கை வாசிக்கும்போது “”தமிழ்நாட்டில் ஒரு வேலையும் நடக்கவில்லை” என்றும், “”காங்கிரஸ் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்பவைகள் யோக்கியமாக நடந்து கொள்ளவில்லை” என்றும் குறிப்பிட்டு வாசித்துவிட்டார். அதற்கு ஆக ஆத்திரப்பட்டு சமாதானம் சொல்லப்புகுந்த சென்னைப் பார்ப்பனர்கள் தங்கள் நாட்டில் “”சுயமரியாதை இயக்கம் ஒன்று அலாசுகிறது” என்றும், “”அவர்கள் தீர்மானங்கள் காங்கிரசை ஒன்றும் செய்யவொட்டாமல் அடக்கிவிட்டன” என்றும் சொல்லி தங்களுக்கு வேண்டிய பந்தோபஸ்தை மேலே கூறியபடி ஜாதி மத தொழில் பழக்கவழக்கம், சமஸ்கிருத பாஷை, சாஸ்திரம் ஆகிய வருணாச்சிரம தர்மங்களைக் காப்பாற்றும் ஒரு உத்திரவாத தீர்மானத்தை செய்து கொண்டு மற்றபடி பொது மக்களை ஏமாற்றும் பொருட்டு சுயமரியாதைக் காரர்களைவிட மிக்க தீவிரவாதிகள் போல் அரசியலில் சில தீர்மானங்கள் செய்து கொண்டார்கள். அவை அன்றே மறைந்துபோய் இன்றுதான் அதாவது ஈ.வெ.ரா. திட்டம் போட்ட பிறகுதான் அதுவும் உண்மையான கராச்சித் தீர்மானங்களை மாற்றி ஈ.வெ.ரா. தீர்மானத்தைப் போல் புதிதாக உருக்கி வார்த்து காட்டப்படுகின்றது. இது 1931 ஆம் M பத்திரிகைகளில் பார்த்தால் விளங்கும்.

இதைப் பற்றி அன்றே 1931லேயே திராவிடனிலும் குடிஅரசிலும் எழுதியதே ஒழிய இன்று புதிதாய் எழுதுவதல்ல என்பதையும் ஞாபக மூட்டுகிறோம்.

தவிர ஜஸ்டிஸ் கட்சியார் இதை ஒப்புக் கொண்டது வேஷத்துக்கு நாம் என்றும், பொது ஜனங்களை ஏமாற்ற என்றும் இவற்றைத் தண்ணீரில் தான் எழுதவேண்டும் என்றும் சொல்லி வருவதைப் பற்றி ஆராய்வோம்.

ஜஸ்டிஸ் கக்ஷி தீர்மானங்களில் எவை இதுவரை ஏமாற்றப்பட்டது என்பது முதலில் விளக்கப்பட வேண்டும்.

மதுபான ஒழிப்பு விஷயத்தில் ஜஸ்டிஸ் கக்ஷியார் சட்டசபையில் ஒரு கேள்விக்கு பதில் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என்று குறை கூறப்படுகிறது. அதுவும் ஓட்டர்களுக்கு கொடுத்த வாக்குறுதி அல்ல. இதற்கும் ஜஸ்டிஸ் கக்ஷியார் சொன்ன வாய்தா இன்னமும் முடிந்து விடவில்லை. அதாவது 20 வருஷ காலத்தில் மதுபானத்தை ஒழித்துவிடக் கூடும் என்று 1925, 26 இல் சொன்னார்களாம். அந்த கணக்குப்படி இன்னும் பகுதி வருஷம்கூட ஆகவில்லை. இன்னமும் 10க்கு மேல் பாக்கி இருக்கிறது. அவர்கள் அது விஷயமாய் முயற்சி எடுத்துத்தான் வருகிறார்கள். காங்கிரஸ்காரர்கள் பொது ஜனங்களை ஏமாற்றவும் சர்க்காருக்கு தொந்திரவு கொடுக்கவும், ஏமாற்று மது விலக்குப் பிரசார நாடகமாகிய மறியல், சட்டமறுப்பு ஆகிய காரியங்களை மது விஷயத்தில் பயன்படுத்தி குழப்பம், சமாதான பங்கம், பலாத்காரம் முதலியவைகள் ஏற்படும்படி செய்து கொண்டே வந்ததால் சர்க்காரார் மந்திரிகளின் முயற்சிக்கு இடம் கொடுக்கவில்லை. இப்போது காங்கிரசுக்காரர்களுக்கு சர்க்கார் புத்தி கற்பித்தது பயன்பட்டு அவர்கள் இந்த விஷமம் இனி செய்யமுடியாமல் செய்யப்பட்டு விட்டதால், இனி  சுலபத்தில் மதுவிலக்கு முயற்சி பலிக்கக் கூடிய காலம் வந்துவிட்டது. இனியும் 10 வருஷ காலம் வாய்தாவும் இருக்கிறது. ஆதலால் அதைப்பற்றி குறை கூறுவது ஒப்புக் கொள்ளத்தக்கதாகாது.

மதுபானம் பெரிதும் இந்தியர்களுக்கு சிறப்பாக இந்துக்களுக்கு மதத்தோடு, மதக் கடவுள்களோடு கீழ்த்தர ஜாதியார் என்பவர்களுக்கும், கீழ்த்தர கடவுள்கள் என்பவர்களுக்கும் குல தெய்வ வழிபாடாக அமைக்கப்பட்டிருக்கிறது.

மத விஷயத்தில் பிரவேசிக்கக் கூடாது என்பது ராணியாரிடம் பார்ப்பனர் வாங்கி இருக்கும் ஒரு மோசடி ஒப்பந்தமாகும்.

அன்றியும் “”மதுபானத்தை நிறுத்திவிடுகிறோம் அதற்கு ஆக பணம் கொடுங்கள்” என்று சொல்லி ஜஸ்டிஸ் கக்ஷியார் யாரிடம் எவ்வளவு லக்ஷ ரூபாய்கள் வசூலித்து “சுவாஹா’ செய்து கொண்டார்கள் என்றாவது யாராவது சொல்ல முடியுமா? அல்லது அந்த பிரச்சினையின் மீது ஓட்டு பெற்றார்களா? எனவே இந்த நிலையில் ஜஸ்டிஸ் கக்ஷியார் சொன்ன வாய்தாவைக்கூட பொறுக்காமல் அவர்கள் மீது குற்றம் சாட்டுவதை நல்ல எண்ணம் என்று யாரால் சொல்ல முடியும்? காங்கிரஸ் கலால் மந்திரி மதுபானம் நல்லதா கெட்டதா என்று பரிசோதித்துப் பார்ப்பதாகச் சொல்லி ஏமாற்றினார்  ஜஸ்டிஸ் மந்திரி அப்படி செய்யவில்லை. மது கெட்டது என்பதில் அவர்களுக்கு சந்தேகமில்லை. மற்றபடி ஜஸ்டிஸ் கக்ஷியாருடைய தீர்மானங்கள் இதுவரையில் எது ஏமாற்றப்பட்டுவிட்டது என்று யாராவது சொல்ல முடியுமா என்றும் கேட்கின்றோம்.

காங்கிரஸ்காரர் தீர்மானங்களின் வண்டவாளங்களை சற்று கவனிப்போம்.

காங்கிரஸ்காரர்களின் ஒரு வருஷத்தில் சுயராஜ்ஜியம் சம்பாதித்துக் கொடுக்கும் திட்டமும் அதற்கு ஆக வாங்கிய ஒரு கோடி ரூபாயும் என்ன ஆயிற்று?

தீண்டாமை விலக்கப்படாமல் சுயராஜ்ஜிய முயற்சி செய்வது முட்டாள்தனம் என்றும், சுயராஜ்ஜியம் வராது என்றும், வந்தாலும் நிலைக்காது என்றும் சொன்ன திட்டங்களும் அதற்கு ஆக வசூலித்த கோடிக்கணக்கான ரூபாயும் என்ன ஆயிற்று?

இந்து முஸ்லீம் ஒற்றுமைத் திட்டம் என்ன ஆயிற்று?

காங்கிரசின் மதுவிலக்குத் திட்டம், மறியல் திட்டம், இவற்றிற்காகச் சட்டம் மீறும் திட்டம் ஆகியவைகள் என்ன ஆயிற்று?

இந்தியா பூராவும் வீடுகள் தோறும் ராட்டினம் சுற்றுவதும், எல்லோரும் கதர் கட்டுவதும், அதற்காக வசூலித்த ரூபாயும் என்ன ஆயிற்று?

“”நாய், கழுதை, பன்றிகள் தான் சட்டசபைக்குப் போகுமே ஒழிய மனிதன் போக மாட்டான் என்றும் சட்டசபை கள்ளுக்கடை” என்றும் சொன்ன திட்டம் என்ன ஆயிற்று?

இவர்கள் கல்லில் எழுதி வைக்கப்பட்டனவா தண்ணீரில் எழுதி வைக்கப்பட்டாய் விட்டனவா?

இவைகளுக்காக வசூல் செய்த கோடிக்கணக்கான ரூபாய் என்ன ஆயிற்று? இந்தப் பணம் எந்த பாங்கியில் போட்டு வைக்கப்பட்டிருக்கிறது?

ரிசர்வ் பாங்கியிலா பார்ப்பனர் வயிற்றுப் பாங்கியிலா?

இந்த சர்க்காரோடு ஒத்துழைப்பது பாவம், மத விரோதம் என்ற திட்டம் கல்லில் எழுதப்பட்டிருக்கிறதா? தண்ணீரில் எழுதப்பட்டிருக்கிறதா?

இன்று ராஜ விஸ்வாசம் அரசாங்க விஸ்வாசம் செய்ய யார் மூலம் கடவுள் வாக்கு இறக்கி இருக்கிறார்?

இந்த அரசாங்கத்தை திருத்துவது அல்லது உடைப்பது என்ற திட்டம் தண்ணீரில் எழுதி  வைக்கப்பட்டதா கல்லில் எழுதி வைக்கப் பட்டிருக்கிறதா?

குடியேற்ற நாட்டந்தஸ்து திட்டமும், பூரண சுயேச்சைத் திட்டமும் இன்று கல்லில் எழுதி வைக்கப்பட்டதா தண்ணீரில் எழுதி வைக்கப்பட்டதா?

வட்டமேஜை மகாநாட்டுக்குப் போய் சுயராஜ்ஜியத்தின் நிழல் தெரிந்தால் போதும் என்று சொல்லும்படி எந்தக் கடவுள் மந்திரம் இறக்கினார்?

வட்டமேஜை பகிஷ்காரத் தீர்மானம் கல்லில் எழுதி வைக்கப்பட்டதா தண்ணீரில் எழுதி வைக்கப்பட்டதா? அங்கு போய் கெடுதி செய்துவிட்டு திரும்பி வரும்படி எந்தக் கடவுள் கனவில் சொன்னார்?

அரசாங்க சீர்திருத்தத்தை உடைக்கும் தீர்மானம் இன்று இந்திய சட்டசபையில் கல்லில் எழுதி வைக்கப்பட்டதா தண்ணீரில் எழுதி வைக்கப்பட்டதா? இன்று அங்கு ராஜ விஸ்வாசம் பிரமாணம் செய்யும்படி எந்த அசரீரி சொல்லிற்று?

தீண்டாமை விலக்கு வேலை செய்யாவிட்டால் பட்டினி கிடந்து சாவேன் என்று சொல்லி சர்க்காரை ஏமாற்றி ஜெயிலில் இருந்து வெளியில் வந்த “”மகாத்மா” சித்தம் இன்று கல்லில் எழுதி வைக்கப்பட்டதா தண்ணீரில் எழுதி வைக்கப்பட்டதா?

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு ஆகப் பட்டினி கிடந்து சாவேன் என்ற தீர்மானம் தண்ணீரில் எழுதி வைக்கப்பட்டதா? கல்லில் எழுதி வைக்கப்பட்டதா?

அப்பொழுது வட்டமேஜையில் சுயராஜ்ஜியம் கொடுத்துவிட்டால் பிறகு முஸ்லீம்களை ஒரு கை பார்க்கிறேன் என்று சொன்னது எந்த வேத வாக்கு?

இன்று காந்தியாருடைய அல்லது காங்கிரஸ்காரருடைய எந்தத் தீர்மானம்  எந்தத் திட்டம்  ஓட்டர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதி தண்ணீரில் எழுதி வைக்காமல் கல்லில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம்.

சென்ற வருஷத்தில் நடந்த இந்திய சட்டசபைத் தேர்தலின்போது “”காங்கிரசுக்கும் சர்க்காருக்கும் சண்டையே ஒழிய ஜஸ்டிசுக்கும், காங்கிரசுக்கும் யாதொரு சண்டையும்” இல்லை என்று சொல்லி வாக்குக் கொடுத்து ஓட்டு வாங்கிய வாக்குறுதிகள் தண்ணீரில் எழுதி வைக்கப் பட்டதா கல்லில் எழுதி வைக்கப்பட்டதா? என்று கேட்பதோடு மற்றும் இதுவரை காங்கிரசுக்காரர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட ஏதாவது ஒரு நன்மையையாவது எடுத்துக்காட்ட முடியுமா என்று காங்கிரஸ்காரர்களை அறைகூவி அழைக்கின்றோம்.

மற்றும் சமூக சீர்திருத்தத்தில் தேவஸ்தான பில்லை காங்கிரஸ் ஆதரித்ததா? சாரதா பில்லை காங்கிரஸ் ஆதரித்ததா?

விவசாரிகள் ஒழிப்பு பில்லை காங்கிரஸ் ஆதரித்ததா?

பொட்டுக்கட்டுவதை ஒழிக்கும் பில்லை காங்கிரஸ் ஆதரித்ததா?

இனாம்தார் பில்லை காங்கிரஸ் ஆதரித்ததா?

காங்கிரஸ் கமிட்டி தலைவரான தோழர் சத்தியமூர்த்தியாவது ஆதரித்தாரா? சாரதா பில்லை ஒழிக்க அவர் தன் மகளுக்கு சிறு வயதில் கல்யாணம் செய்து ஜெயிலுக்கு போகிறேன் என்று சொல்ல வில்லையா?

பொட்டுக் கட்டுவதை ஒழித்தால் கடவுள்கள் சக்தி ஒழிந்து போகும் என்று விவசாரித்தனத்துக்கு வக்காலத்து பேசவில்லையா?

பாதுகாப்பு விஷயத்தில்

மற்றும் “”இந்திய சீர்திருத்த சட்டத்தில் பாதுகாப்புகள் வண்டி வண்டியாய் ஏற்பட்டதற்கு நாங்கள் தான் காரணம் எங்கள் நடவடிக்கையைப் பார்த்து பயந்து தான் சர்க்கார் இவ்வளவு பாதுகாப்புகள் ஏற்படுத்திக் கொண்டார்கள்” என்று காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொள்ள வில்லையா? இவைகளைத் தவிர காங்கிரஸ்காரர்கள் ஏதாவது ஒரு நன்மையான காரியம் செய்தார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா என்று மறுபடியும் கேட்கின்றோம்.

“”பொது ஜனங்களுக்கு ஒரு உணர்ச்சியை ஊட்டினோம்” என்று சொல்லுவதில் ஏதாவது யோக்கியப் பொறுப்போ அர்த்தமோ இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

மக்களுக்கு என்ன உணர்ச்சி ஏற்பட்டது என்று சொல்ல வேண்டாமா? அந்த உணர்ச்சியால் என்ன ஏற்பட்டது? நன்மை ஏற்பட்டதா? தீமை ஏற்பட்டதா? இரண்டு கோடி ரூபாய்க்கும் இத்தனை பேரை ஏமாற்றி சிறைக்கு அனுப்பினதற்கும், அடிபடச் செய்ததற்கும் இந்த உணர்ச்சியும் மன்னிப்பு கேட்டுக் கொண்டதும் பழய திட்டங்கள் பூராவும் தப்பு என்று உணர்ந்து சட்டசபைக்குள் புக மக்களை ஏமாற்றுவதும் தான் பிரதி பிரயோஜனமா? என்பவைகளை யோசித்தால் காங்கிரஸ்காரர்களுக்கு இதில் புத்திசாலித்தனமோ பொறுப்போ நாணயமோ இருக்கிறதா என்று கேட்கின்றோம்.

ஜஸ்டிஸ் கக்ஷி ஏற்பட்ட பிறகு உண்மையில் தீண்டாமை ஒழிந்து வருகிறது.

தீண்டாமை விலக்குக்கு ஒரு அளவு சட்டம் செய்யப்பட்டிருக்கிறது.

பள்ளிக்கூடங்கள் பெருகி வருகின்றன  ரோட்டுகள் ஆஸ்பத்திரிகள் அதிகமாகி வருகின்றன.

ஜஸ்டிஸ் கக்ஷி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னிட்ட 15 வருஷ காலங்களில் இவ்விஷயங்களில் எவ்வளவு முற்போக்கு ஏற்பட்டிருக்கிறதோ அதைப் போன்று இரட்டிப்பாகவும் சில விஷயங்களில் மூன்று பங்காகவும் இந்த 15 வருஷ காலங்களில் விருத்தி அடைந்து இருக்கிறது. இவை வெறும் உணர்ச்சி அல்ல, காரியத்தில் பெருகி இருக்கிறது என்பதற்கு புள்ளி விபரங்கள் இருக்கின்றன.

இப்படியெல்லாம் இருக்க ஜஸ்டிஸ் கக்ஷியார் தீர்மானம் அம்பக் என்றும், வேஷம் என்றும், தண்ணீரில் எழுத வேண்டும் என்றும் ஜீரணமாகாத தீர்மானமென்றும், எலக்ஷன் தீர்மானமென்றும், சொல்லுவதானது அவர்கள் சொல்லுவதைக் கேட்பவர்களும் எழுதுவதை படிப்பவர்களும் நன்றாக கடைந்தெடுத்த முட்டாள்கள், மடையர்கள், களிமண்ணுத் தலையர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அயோக்கியத்தனம் தவிர வேறு என்ன என்று சொல்ல முடியும்?

குடி அரசு  துணைத் தலையங்கம்  01.12.1935

You may also like...