மதமின்றி மக்கள் வாழமுடியாதா?

 

(ஜோசப் மெக்காப் எழுதியதை அனுசரித்து எழுதப்பட்டது)

மக்கள் வாழ்க்கை நாகரீகமாய் நடத்தப்பட மதம் வேண்டுமென்பது மதக்காரர்களுடைய வாதமாகும். இப்படிப்பட்ட வாதமும் தங்கள் தங்கள் மதம்தான் மனித சமூக நாகரீக வாழ்க்கைக்கு ஏற்றது என்பது ஒவ்வொரு மதக்காரர்களின் பிடிவாதமுமாகும்.

மதமில்லாமல் உலகில் எவ்வளவோ ஜீவகோடிகளும், பல மக்களும் வாழ்க்கை நடத்தவில்லையா என்று கேட்போமேயானால் அதற்கு பதில் சாதாரண அசேதன வாழ்க்கை வாழலாமே ஒழிய நாகரீகமான வாழ்க்கை நடத்தமுடியாது என்றும், அதற்காகத்தான் மதமில்லாவிட்டால் மக்கள் நாகரீக வாழ்க்கை நடத்தமுடியாதென்று சொல்லப்படுவதாகவும் சொல்லுவார்கள்.

அதற்காகவேண்டியே மதவாதிகள் மதத்தைப் பற்றி பிரசாரங்களும், விளம்பரங்களும் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட விளம்பரங்களும், பிரசாரங்களும், புராணங்களாலும், படங்களாலும், கதைகளாலும், நடிப்பு களாலும், கோவில்களாலும் மற்றும் பல சாதனங்களாலும் செய்து வருகிறார்கள்.

இவ்வளோவோடு நிற்காமல், கடவுளற்ற, மதமற்ற உலகத்தில் மக்கள் பல கொடுமைகளையும், தீமைகளையும், ஹிம்சைகளையும் அடைவது போலவும், அசுர ஆட்சியே நடைபெருவதாகவும் கட்டுகள் கட்டி மக்களைப் பயமுறுத்துகிறார்கள்.

மேலும்,  கொள்ளை நோய்களும், விஷ நோய்களும் துஷ்ட தேவதை களின் கோபத்தின் பலன் என்றும், வால் நட்சத்திரத்தின் வாயிலிருந்து கக்கப்படும் தீப்பொரியின் விளைவென்றும் பேசி மக்களை ஒருவித பயத்துக்குள்ளாக்குகிறார்கள்.

காந்தியாரும் இப்படித்தான். அதாவது, பூகம்பத்தால் விளையும் கேடுகளும், வெள்ளத்தாலும் நெருப்பாலும் ஏற்படும் கொடுமைகளும் கடவுள் கோபத்தால் ஏற்பட்ட விளைவின் பயனென்றும் சொல்லி மக்களை மிரட்டுகிறார்.

மனிதர்கள் நடந்துகொள்ளவேண்டிய ஒழுக்கச் சட்டம் என்பதெல்லாம் அந்தந்த சமூக நிலை அனுசரித்து ஏற்படுத்தப்பட வேண்டியதேயல்லாமல், மனிதர்கள் மேல் உலகத்துக்குப்  போவதற்குத் தகுந்தபடியும், அங்கு சென்றபின் நடக்கவேண்டிய காரியங்களுக்குத் தக்கபடியும் அமைக்கப்பட வேண்டியதேயில்லை.

மதமில்லாவிட்டால், மக்கள் கோவிலுக்குப் போகமாட்டார்களே என்றோ, மக்கள் கோவிலுக்குப் போகாவிட்டால் மக்கள் ஒழுக்கமாக நடந்துகொள்ளமாட்டார்களே என்றோ யாரும் பயப்படவேண்டியதில்லை.

உதாரணம் வேண்டுமானால், கோவிலுக்குப் போவதை நிருத்திவிட்டவர் களிடமிருந்தே அவர்களது விகிதாச்சாரத்துக்குக்  குறைவில்லாத அளவு குற்றங்கள குறைந்துகொண்டு வந்திருப்பதற்கு அநேக ஆதாரங்கள் புள்ளி விபரத்தோடு காட்டலாம்.

மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்று நாம் சொல்ல ஆரம்பித்த தாலேயே ஏன் சொல்லுகின்றோம்? அதற்காக என்ன அவசியத்தைக் காட்டுகின்றோம் என்பதைச் சிந்திக்காமலேயே, சிந்திக்காவிட்டாலும் நமக்குக் காது கூட கொடுக்காமலேயே ஏதோ ஒரு பெரிய அபாயம் வந்து விட்டது போல் மிகக் கவலையாக சிந்தனைச் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

இதற்குக் காரணமெல்லாம் அவர்கள் ஒழுக்கம் கெட்டுவிடுமே என்பது கூட அல்லாமல் நரகம் சித்தித்துவிடுமே என்பதும், மேல் லோக வாழ்க்கை பெருத்த மோசமானதாகிவிடுமே என்பதுமேயாகும். ஏனெனில், குருக்கள்மார் மதத்தை மக்களுக்குள் புகுத்துவதற்காகவும், மக்கள் மனதில் என்றென்றும் மதம் நிலைத்திருப்பதற்காகவும் நரகத்தைப்பற்றி அவ்வளவு அதிகமாக வருணித்து அவ்வளவு அதிகமான பயத்துக்கு ஆளாக்கி வைத்திருக்கிறார்கள்.

பொதுவாகவே, கடவுள் உதவி வேண்டுமானால், மதம் வேண்டும் என்பதும், மதம் வேண்டுமானால் குருக்கள் வேண்டுமென்பதுமே மதத்தின் அவசியத்துக்குக் காரணமாக்கி அதன் மூலம் குருக்கள்மார் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். சாதாரணமாகப்பார்த்தாலும், மனித சுபாவமானதும், மனித சக்தியானதும் மதத்தைக்கொண்டேதான் வெளிப்படக் கூடியதென்றோ, நிலை நிற்கக்கூடியதென்றோ சொல்லுவது சுத்தத் தப்பான அபிப்பிராயமாகும்.

கோவிலையும், மதத்தையும் மிகப்பிரமாதமாய் கருதாதவர்களும் அதில் கவலையில்லாதவர்களும் அவற்றில் அனுதாபமோ, நம்பிக்கையோ இல்லாதவர்களுமான மக்களுக்குள்ளாகவே எத்தனையோ பேர்கள் தங்கள் தங்கள் சுபாவங்களையும், சக்திகளையும் உணர்ந்துகொண்டு எவ்வளவோ மேலான நல்ல தன்மையுடனும், அதி மேதாவித் தனமான அறிவுடனும் உடல் பொருள் ஆவி யாகியவற்றை மக்கள் நல் வாழ்க்கைக்குப் பயன் படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள்.

மதத்தினாலும், பக்தியினாலுந்தான் மக்கள் தங்கள் சக்தியை உணரலாம் என்பதும், நன்மையான காரியங்களைச் செய்யலாம் என்பதும், மேலான அறிவைப் பெறலாம் என்பதும் மெத்த பலமற்ற வாதமேயாகும். ஒழுக்கத்துக்காகவும், சமுதாய ஒழுக்கத்துக்காகவும் மனிதனுக்கு மதம் வேண்டுமென்பது மிக மிக பலமற்ற வாதமாகும். வரப்போகின்ற காலத்தில் மதக்கோட்பாடுகளைப்பற்றி பிரமாதப்படுத்துவதும், அதற்காக பல காரணங்களைக் கட்டுக்கட்டி மக்களுக்குள் புகுத்துவதும், அவற்றை யெல்லாம் நம்பும்படி செய்வதும் இனி முடியாது என்று தைரியமாய்ச் சொல்லுவேன்.

எப்படித்தான் பாடுபட்டு புகுத்தினாலும், உண்மையான நம்பிக்கை ஏற்படுவதற்கு இடமில்லாமல் போனால் அவை எப்படி மதிப்புப் பெறமுடியும்? ஜனங்களைக் கோவிலுக்குப் போகும்படி செய்தல் ஒரு விஷயம். அவர்களை நரகத்திலோ, அல்லது மற்ற புராதன கொள்கைகளிலோ நம்பிக்கை கொள்ளச் செய்வது வேறு விஷயம்.

சிறிது யோசித்தாலும் நரகத்தின் அடிப்படை முழுவதும் பொய்யாகி விடும்.  கோவிலுக்குப் போகாததாலேயே நாம் கெட்டுப்போய் விடமாட்டோம்.  நாம் கோவிலுக்குப்போவது குறைந்து போயிருந்தாலும் நாம் நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்தே வருகிறோம். நான் வாசாகைங்கரியம் செய்வதாக யாரும் நினைக்க வேண்டாம். நான் ஒருவருக்கு விரோதமாக வீண் வார்த்தைகளைச் சொல்லவில்லை. நமது காலத்தைப்பற்றி உரிய காலத்தில் சரித்திர சம்பந்தமாகவும் சமுதாய சம்பந்தமாகவும் ஆராய்ச்சி செய்வோமானால் ஏராளமான உண்மைகளும் புள்ளி விபரங்களுமே நாம் முன்னேற்றமடைய வில்லையா என்ற சந்தேகங்களை அறவே ஒழித்துவிடும்.  தற்காலத்தைவிட முற்காலத்தில் குற்றங்களும், பலாத்காரங்களும் அக்கிரமங்களும் உலகத்தில் அதிகமாகவே இருந்தன.  முற்காலத்தவர் நம்மைவிட அதிக சுகஜீவிகளாயிருந்ததில்லை.  அவைகளைப்பற்றி நாம் நிச்சயமான புள்ளி விபரங்களை காட்டலாம்.

மதக்காரர்கள் நாம் மடுவில் மூழ்கி இறக்கிறோம் என்று கருதுகிறார்கள்.  அதாவது நாம் அநீதியை வளர்க்கிறோம் என்பதாகும்.  இதற்கு ஆதாரமான புள்ளி விபரங்கள் ஒன்றுமில்லை. ஆகவே இந்த அபிப்பிராயம் அர்த்தமற்றது.  பத்திரிகைகளில் தோன்றும் விபசார விஷயங்களையும் குற்ற விபரங்களையும் பார்த்து அத்தகைய அபிப்பிராயம் கொள்ளுகிறார்கள்.  ஆதிகாலத்தில் இத்தகைய பத்திரிகை விளம்பர முறைகள் இருந்ததில்லை யென்பதை மக்கள் மறந்துவிடுகிறார்கள்.  ஆயினும் அக்காலத்திலும் விபசாரங்களும் குற்றங்களும் இருந்தே வந்திருக்கின்றன.  ஆதிப்யூரிட்டன்ஸ் என்பவர்களிடம் விபசாரம் மிகுந்திருந்ததாக ருசுப்படுத்தும் சரித்திரம் சாட்சியங்களைப்பற்றி தோழர் ரூப்பர்ட்ஹக்ஸ், “”ஹால்டிபன் ஜீலியஸ் மாதப் பத்திரிகை” யில் சமீபத்தில் எழுதியிருக்கிறார். பக்குள் என்னும் பேர்போன சரித்திர ஆசிரியர் ஸ்காத்லந்துப் யூரிட்டன்ஸ் என்பவர்களிடம் பயங்கரமான துர்கிருத்தியங்கள் இருந்தனவென்று எழுதியிருக்கிறார்.  அப்படியே மத்திய காலங்களிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் இருந்து வந்திருக்கிறது. இவ்விஷயங்களிலும் நாம் நமது முன்னோர்களைவிட அதிகமாகக் கெட்டுப்போகவில்லை.

இனி ஒழுக்க முறைகளின் பலன்களைப்பற்றிப் பேசுவோம்.  இது மகா முக்கியமான விஷயம்.  இதனால் உலகம் பாதிக்கப்படவில்லையென இலேசாய்க் கருதப்படுகிறது. பென் லிண்டுஸி என்னும் நீதிபதி “”நவீன வாலிபர்களின் புரட்சி” என்னும் நூல் எழுதியிருக்கிறார்.  அவர் அமரிக்க வாலிபர்களின் எண்ணங்கள், நடத்தைகள் முதலியவைகளைப்பற்றி மிக நன்றாய் அறிந்தவர். அவரைப்போல இளைஞர்களை அறிந்தவர் வேறு யாரும் கிடையாது. அவர் வாலிபர்களுக்குள் காதல் சுதந்தரம் வெகு அதிகமாக இருக்கிறதென்று தமது நூலில் விளக்குகிறார்.  அது வழக்கத்திற்கு அதிகமாக இருக்கிறதாவென்பது அவருக்குத் தெரியாது.  அவ்விஷயத்தில் புகுந்து சரியான ஆராய்ச்சி செய்தாலொழிய யாருக்கும் உண்மை விளங்காது.

கிழவர்களின் அபிப்பிராயங்கள் உபயோகமற்றவை. இங்கிலாந்திலே கிழவர்கள் வாலிபர்களாயிருந்தபோது பருவகாலம் வித்தியாசமுள்ளதாக இருந்ததென்று சாதாரணமாய் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படியில்லை யென்பதை ருசுப்படுத்த சாக்ஷியங்கள் இருக்கின்றன.  நீதிபதி லிண்டுஸி அறிந்து சொல்வது என்னவென்றால், கோவிலுக்குப்போய் உபதேசங்கள் கேட்கும் வாலிபர்களுக்குள்ளும் இளம் பெண்களுக்குள்ளும் தான் காதல் சுதந்தரம் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான்.

நவீன உலகம் தனக்கென்று சொந்தமாகச் சட்டங்கள் செய்துகொள்ள வேண்டும். குற்றத்தைப்பற்றியும் பலவந்தத்தைப் பற்றியும் பயப்பட வேண்டாம். ஜனங்கள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் மணவாழ்க்கை விஷயமாக ஜனசமூகம் தன் சமுதாய நன்மைகளை பாதுகாத்துக்கொள்ளும் சமுதாயத்தைப பாதித்து யாருக்கும் தீங்கு செய்யாத தனிப்பட்ட நபர்களின் காரியங்களைக் கோவில்கள் அடக்கியாள முடியாது.   இனி வருங்காலத்தில் அதைப் பற்றிய உண்மையை நாம் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.  அது ஒரு பெரிய விஷயம்.  அதைப்பிறகு எடுத்துக்கொண்டு நன்றாக ஆராய வேண்டும்.

இனி மதத்தை எப்படித் திருத்தினாலும், அதை எப்படிக் கலைத் தமைத்தாலும், அதை ஒழிந்து போவதினின்றும் தடுக்க முடியாது. அதன் கொள்கைகளில் ஒன்றாவது கண்டனத்திற்குட்படாமல் இருக்க முடியாது.  எல்லா மக்களையும் ஒப்புக்கொள்ளும்படி இனிச்செய்ய முடியாது.

சிலர் எல்லா மதக் கோட்பாடுகளையும் விட்டு ஒழிக்க அபிவிருத்தி சங்கங்களை மட்டும் வைத்துக் கொள்ளலாமென்கின்றார்கள்.  இது எப்படி ஒரு பெரிய மதமாகிவிடும் என்பதைப் பற்றிச் சுலபமாய்ப் பரீக்ஷித்து விடலாம்.  சென்ற நூறு வருஷங்களாக உலகில் பல இடங்களில், சிறப்பாக அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கூட மதாபிமான வைதீகச் சங்கங்களும் கோவில்களுமிருந்தன. அவைகளில் அநேகம் மதக்கோட்பாடுகள் இல்லாமலே இருந்து வருகின்றன. சமீப காலத்திலிருந்து ஒழுக்காபிவிருத்திச் சங்கங்களும் இருந்து வருகின்றன. அவைகள் நீதி விஷயங்களின் சம்பந்தம் மட்டும் பெற்றிருக்கின்றன. மேலே கூறப்பட்டவைகளில் ஒன்றும் பொது மனிதர்களால் போற்றப்டுவதில்லை.  கோவிலுக்குப் போகாத ஆறுகோடி அமெரிக்கர்களும், மூன்று கோடி பிரிட்டிஷ்காரர்களும் அத்தகைய சபைகளின் கூட்டங்களுக்குப் போவதே கிடையாது. அப்படிப்பட்ட சபைகள் நூறுக்குக் குறைந்தேயிருக்கும்.  சபை ஒன்றில் சில நூறு அங்கத்தவர்கள் தான் இருப்பார்கள்.  அவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகவும் கிடையாது.

நம்முடைய காலத்திற்கு ஞாயிற்றுக்கிழமைக் கூட்டம் தேவையில்லை.  அதற்குத் தெய்வ வணக்கமோ அதற்குப்பதிலாக வேறு எதுவுமோ தேவையில்லை. மனிதன் இயற்கையிலேயே சாஸ்வதமான மதப்பற்றுள்ளவ னல்லவா? மனிதனிடத்தில் நீங்காத மதப்பிரியம் உண்டு என்று அறிஞர்களான அநேக ஆசிரியர்கள் கூறவில்லையா? அதனால்தான் ஒரு மதம் மறைந்ததும் வேறு ஒன்று அதற்குப் பதிலாகக் கிளம்பி விடுகிறது என்று அவ்வறிஞர்கள் கூறவில்லையா? இனி வருங்காலத்தில் எது மதமாயிருக்கக் கூடும்? இவ்விஷங்களைப்பற்றி வேறு கட்டுரைகளில் பேசுவோம்.

நவீன நாகரீகத்தில் முன்னேற்றமடைந்திருக்கும் இடங்களின் நிலைமையென்ன? அங்குள்ள மக்களில் மூன்றில் இரண்டு பாகத்தவர் கோவிலுக்குப் போவதில்லை. அவர்கள் வீட்டில் கடவுளை வணங்கு கின்றார்கள் என்றும் யாரும் சொல்ல முடியாது. இந்த தேசங்களில் லட்சக்கணக்கான குருக்கள் ஜனங்களைக் கோவிலுக்குப் போகும்படி நியாயம் சொல்லிக் கொண்டு தானிருக்கிறார்கள்.  மனைவிமார்களும் குமாரத்தி களும் தங்கள் தங்கள் ஆடவர்களை அதற்குக் கட்டாயப் படுத்தும்படி தூண்டப் படுகிறார்கள். கோவில் பூஜாமுறைகளைக் கூடியவரையில் கவர்ச்சியுள்ளதாக்கு கிறார்கள். குறிப்பிட்ட கிழமைகளின் நீண்ட பூஜா காலத்திற்குப் பதிலாக இனிமையான மாலைப் பூஜைகளை கிழமைதோறும் நடத்துகிறார்கள்.  சங்கீதம் அதிகமாகவும், பிரசங்கம் கொஞ்சமாகவும் உள்ள கூட்டங்களை நடத்துகிறார்கள். உற்சாகத்தை உண்டாக்கத்தக்க மத கற்பனைகளைப் பற்றிய தலையங்கங்களைப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துகிறார்கள்.  சமுதாய ஊக்கம் உண்டாகிறது.  கோவில் சம்பந்தத்தோடு சமுதாய வாழ்வு அபிவிருத்தி செய்யப்படுகிறது.  ஆடல் பாடல் ஆடும் படக் காட்சிகள் நடத்தப் படுகின்றன.  புதிய மதங்களான கிறிஸ்துவ விஞ்ஞானம், ஒழுக்க அபிவிருத்தி, தியாசபி முதலியவை பழையவைகளோடு போட்டி போடுகின்றன.

முடிவு என்ன? உண்மை விஷயம் என்ன? நவீன நாகரீகத்தில் ஜனத்தொகையில் பாதி யல்லது முக்கால் பாகம் இவைகளையெல்லாம் அசட்டை செய்து கோவிலுக்குப் போக மறுக்கிறது.  மதக்கோட்பாடுகள் குறைந்ததற்கேற்ப குறைந்த ஜனங்களே போகிறார்கள். கோவிலுக்குப் போகும்படி ஜனங்களை நிர்பந்தம் செய்யவில்லையென்று வைத்துக் கொள்ளுவோம்.  பத்து வருஷங்களுக்குக் குருக்கள்மார்கள் எல்லோரும் உலகத்தில் தங்கள் வேலையை நிறுத்திவிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  முடிவென்னவாகும்? நீங்களே யதார்த்தமான பதில் கூறுங்கள். நான் என் அபிப்பிராயத்தை அங்கு வற்புருத்த விரும்பவில்லை.  ஆனால் அப்போது இன்னும் எத்தனை பேர் கோவிலுக்குப் போவதை நிறுத்தி விடுவார்களோ என்பதை நினைக்க ஆச்சரியமாயிருக்கின்றது.

மனிதனுக்கு இயற்கையிலேயே மதப்பற்றுக் கிடையாதென்பது வெளிப்படை. நாகரீக மக்களின் தொகையில் பாதிக்கும் குறைந்தவர்களை மதப்பற்றுள்ளவர்களாக வைத்துக்கொள்ள பத்து லட்சம் பாதிரிகளின் மிகுந்த முயற்சி தேவையாக இருக்கிறது. இயற்கை மதப்பற்றைப் பற்றிப் பேசும் ஆசிரியர்கள் ஒரு தவறு செய்தவர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் பழைய காலத்தையே கவனிக்கிறார்கள், தற்காலத்தைப் பற்றி அறியாதிருக் கிறார்கள்.  முன் காலத்தில் ஒரு மதம் போனால் வேறு மதம் உண்டாயிற்று.  ஆசியாவில் இருந்ததுபோல படித்தவர்கள் பல நூற்றாண்டுகளாக மதம் ஒன்றும் இல்லாமலே இருந்துவந்தார்கள்.  எப்படியிருந்தாலும் நமது காலம் ஒரு புதிய காலமேயாகும்.  உலக சந்தர்ப்பங்கள் முழுவதும் மாறிவிட்டன.  இருபதாவது நூற்றாண்டில் என்ன நேரிடுமென்று யாறும் கூறமுடியாது.  மதத்தைப் போற்ற நமது தலைமுறையில் அரசியல் நிர்பந்தத்தையும் உண்டாக்க முடியாது.  சென்ற பதினைந்து நூற்றாண்டுகளாக அப்படித்தான் நடந்துவருகிறது.  மதப் பற்று மனிதனுக்கு இயற்கையல்லவென்பதைக் கண்டுபிடித்தோம்.  அநேகர் மதத்தை விட்டு விட்டார்கள். மதப் புத்தகத்தை யாரும் படிப்பதில்லை. நமது மதப் புஸ்தகங்களிலும் பத்திரிகைகளிலும் மதக் குறிப்புகள் காணப்படுவதில்லை.  மேடைகளில் மதங்கள் கேவலமாய்ப் பேசப்படுகின்றன.  அதைக் கேட்டு வேடிக்கைப் பார்ப்பவர்கள் நகைக்கிறார்கள்.  ஆடும் படக் காட்சிகளில் மதத்தை ஒப்புக்குச் சேர்த்திருக்கிறார்கள்.  அது கண்டு ஜனங்கள் புன்சிரிப்புக் கொள்ளுகிறார்கள்.  மதம் மெதுவாக இறந்துகொண்டிருக்கிறது.

அதனால் வாழ்வும் மனமும் கெட்டுப்போகுமா? மதத்தை அலக்ஷியம் செய்த எண்பது லட்சம் லண்டன் வாசிகளுடைய மனமும் வாழ்வும் கெட்டுப்போகவில்லை. இவர்களைப்பற்றி நான் நன்கு அறிந்திருக்கிறேன்.  இவர்களுக்கு மதம் கிடையாது. இவர்கள் மதத்தைப் பற்றியும் நினைப்பதில்லை.  கெட்டுப்போகுமென்பதும், அவநம்பிக்கையால் அபாய மென்பதும் சாதுர்யமான கட்டுக் கதைகளேயாகும்.  வாழ்வு நல்லது.  அது ருசிகரமானது.  லட்சாதி லட்சம் பேர் அனுபவித்தானந்திக்க முடியும்.  பக்தி மிகுந்த முற்காலத்தில் அவர்கள் அடைபட்டுக்கிடந்தார்கள்.  மக்களின் விருப்பத்திற்கேற்ப கலைகளிருக்கின்றன.  அறிஞர்களுக்கு விஞ்ஞானம் இருக்கிறது; இலக்கியம் இருக்கிறது, பெருமை மிக்க தேசமும் கடலும் இருக்கின்றன.  நகரத்தில் 1001வேடிக்கை வினோதங்கள் இருக்கின்றன.  மக்கள் வாழ்வு வேகமாய் மாறுதலடைந்து வருகிறது.  சரித்திரத்தில் புதிய அத்தியாயம் ஆரம்பமாகிறது.  ஆகவே மதமின்றி மக்கள் வாழமுடியாது என்று மதப்பிரசாரகர்கள் பயப்படவேண்டியதில்லை.

பகுத்தறிவு (மா.இ.)  கட்டுரை  செப்டம்பர் 1935

 

You may also like...