சபாஷ் திவான்பகதூர்

சென்னைக்குச் சமீபத்தில் காங்கிரஸ் பிரசாரத்துக்காக வரப்போகும் காங்கிரஸ் தலைவர் தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு சென்னை கார்ப்பரேஷன் சபையில் உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்தை தோழர் திவான் பகதூர் ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் எதிர்த்துத் தோற்கடித்தார் என்கின்ற சேதியைக் கேட்டு மிகுதியும் மகிழ்ச்சியடைந்ததோடு திவான் பகதூர் அவர்களின் தீரத்துக்காக மெச்சி அவரை மிகுதியும் பாராட்டுகின்றோம்.

தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் நாமறிந்த வரை ஒரு துணிந்த தியாகியேயாவார். தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களைப் போலவே காங்கிரசில் சேர்ந்ததின் பயனாய் உண்மையான கஷ்டமும் நஷ்டமும் அடைந்தவர்.

தோழர் ராஜகோபாலாச்சாரியாரிடம் அவர் அதிபுத்திசாலியாய் இருக்கும் காரணத்துக்காகவும், அதிக யுத்திசாலியாய் இருக்கும் காரணத்துக்காவும் காங்கிரஸ்காரர்கள் பலருக்கே அதிருப்தியும், வெறுப்பும் உண்டாகி யிருக்கலாம். ஆனால் ராஜேந்திரரிடம் அப்படி இருக்காது. எப்படியோ இவ்விருவர்களது வாழ்வானது அவர்களுக்கும் பிரயோஜனப்படாமல், பொது மக்களுக்கும் பிரயோஜனப்படாமல் பெரும் ஏமாற்றமாய் போய்விட்டதே ஒழிய மற்றப்படி பெரியார்களிலேயே சேர்க்கப்பட வேண்டியவராவார்கள் என்று சொல்லலாம்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவரான தோழர் ராஜேந்திரருக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுப்பதில் பெருந்தவறு ஒன்றும் ஏற்பட்டு விடாது என்பது நமக்குத் தெரிந்தது போலவே திவான் பகதூர் ராமசாமி முதலியார் அவர்களுக்கும் தெரிந்திருக்கும் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை.

ஆனால், இந்நாட்டுப் பார்ப்பனரல்லாதார் சமூக ஸ்தாபனத்துக்கு விரோதமாகவும், அந்த ஸ்தாபனத்தின் மீதும், அந்த ஸ்தாபன பிரமுகர்களாய் இருப்பவர்கள் மீதும் பாமர மக்களுக்கு வெறுப்பும், துவேஷமும் உண்டாகும்படியான விஷத்தை இந்நாட்டுப் பார்ப்பனர் ராஜேந்திரருக்கு ஊட்டி அதை இங்கு வந்து கக்கி விட்டுப் போகும்படி செய்வதற்காகவுமே அவரை இங்கு கூட்டி வருகிறார்கள்.

இது போலவே நமது பார்ப்பனர்கள் அனேக தடவைகளில் வெளிநாட்டுக்காரர் யாராவது ஒருவரைப் பிரமாதமாக விளம்பரப்படுத்தி இங்கு அழைத்து வந்து இந்நாட்டுப் பெரும்பான்மையான மக்களுக்குக் கேடுண்டாகும்படியான காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.

ஆனதினால் அதைக் கண்டிக்கும் முறையில் அல்லது வெறுக்கும் முறையிலேயே சென்னை மாகாண வாசிகள் பேராலோ சென்னை நகர எல்லா மக்களின் பேராலோ அவருக்கு வரவேற்பு அளித்து அவரது வரவின் காரணத்தை எல்லா மக்களும் ஒப்புக் கொண்டதாகச் செய்யப்படும் சூட்சியைத் தகர்க்கவே தோழர் ராமசாமி முதலியார் வரவேற்பை எதிர்த்திருக்கிறார் என்பதும் இது மிகவும் சரியான காரியம் என்பதும் நமதபிப்பிராயமாகும்.

தோழர் ராமசாமி முதலியாரைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்ய இதை ஒரு காரியமாக பார்ப்பனர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளக் கூடும்.

ஆனால் தோழர் ராமசாமி முதலியார் எப்படி நடந்து கொண்டாலும் ஒரு நாளும் பார்ப்பனர்கள் அவரை நல்ல பிள்ளை என்று சொல்லப் போவதில்லை.

தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு தோழர் சர்.ஆர்.கே.ஷண்முகம் ஒன்று தோழர் திவான் பகதூர் இராமசாமி முதலியார் ஒன்று ஆகிய இருவர்களும் “”தேவர்”களுக்கு எப்படி “”இரணியன்” “”ராவணன்” ஆகியவர்கள் கடும் பகையாளிகளாகிய “”ராக்ஷதர்களோ” அது போன்ற கடும் பகையாளர்களாகிய ராக்ஷதர்களாவர்கள்.

ஆனால் இவர்கள் இருவர்களும் பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் எப்படி சாகாமல் பாஷாணத்தையே தின்று ஜீரணித்துவிடுமோ அதுபோல் இந்த பார்ப்பனர்களின் விஷக் கடலில் இருந்து நீந்தித் தப்பித்துத்தான் வருகிறார்கள்.

ஆனால் தோழர் சர். ஷண்முகம் போல் திவான் பகதூர் ராமசாமிக்கு சில சமயங்களில் தைரியம் இருப்பதில்லை. என்னவெனில் மதங்கள் புராணங்கள் ஆகியவற்றிற்கு நல்ல பிள்ளையாக  நடக்காவிட்டால் எதாவது ஆபத்து வருமோ எனப் பயப்பட்டு வருவதுண்டு. என்றாலும் துணிந்து காங்கிரஸ் தலைவருக்கு சென்னைக் கார்ப்பரேசனில் வரவேற்பு கொடுக்க முடியாது என்று சொன்னதை மிகுதியும் பாராட்டுவதோடு இதை மற்ற ஸ்தல ஸ்தாபனங்களும் பின்பற்ற தைரியமடைய வேண்டும் என்று விரும்புகிறோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  18.08.1935

You may also like...