விதண்டாவாதம்

 

குறும்புச் சந்தேகி

மதத்துக்கு அரசாங்கம் பாதுகாப்பாயிருக்கிறதா? அல்லது அரசாங்கத்துக்கு மதம் பாதுகாப்பாயிருக்கிறதா?

*  *  *

கடவுளுக்கு பணக்காரன் பாதுகாப்பா?  அல்லது பணக்காரனுக்கு கடவுள் பாதுகாப்பாயிருக்கிறதா?

*  *  *

மதத்தைப் பணக்காரன் காக்கின்றானா அல்லது பணக்காரனை மதம் காக்கின்றதா?

*  *  *

கடவுள் இல்லாமல் பணக்காரன் வாழமுடியுமா? அல்லது பணக்காரன் இல்லாமல் கடவுள் வாழ முடியுமா?

*  *  *

பார்ப்பானை கடவுள் உண்டாக்கினாரா?  அல்லது கடவுளை பார்ப்பான் உண்டாக்கினானா?

*  *  *

கடவுள் இல்லாமல் மனிதன் வாழ முடியாதா?  அல்லது மனிதன் இல்லாமல் கடவுள் வாழமுடியாதா?

*  *  *

மனிதனுக்காக மதம் இருக்கிறதா? அல்லது மதத்துக்காக மனிதன் இருக்கிறானா?

*  *  *

மதம் மக்களை மாற்றிக்கொள்ளுகிறதா?  அல்லது மக்கள் மதத்தை மாற்றிக்கொள்ளுகிறார்களா?

*  *  *

மனிதனுக்கு மதம் “”ஜாதியைப் போல்” பிரவியில் ஏற்பட்டதா? அல்லது மனிதன் பிறந்தபின் மதம் வந்து புகுந்து கொள்ளுகிறதா?

*  *  *

இப்பொழுது, காந்தியார் மனிதனுக்கு மதம் பிறப்போடு வருகிறது என்கிறார்.  அன்றியும் அது சட்டையைக் கழட்டுவதுபோல் கழட்டக்கூடியது அல்ல என்கிறார்.

*  *  *

அப்படியானால், மதமற்ற நாஸ்திகனுக்குப் பிறக்கிற குழந்தை எந்த மதத்தைச் சேர்ந்தது?

*  *  *

தகப்பன் கிறிஸ்தவனாகவும், தாய் இந்துவாகவும் இருந்தால் இவர்களது குழந்தை எந்த மதத்தோடு பிறக்கிறது?

*  *  *

எல்லா மதக்காரர்களுடனும் சம்பந்தம் வைத்துக்கொள்ளும் தேவதாசிகளின் குழந்தைகளுக்கு எந்தமதம் பிறவி மதம்?

*  *  *

இந்து பிரசிடெண்ட்டுகளுக்கும் கிறிஸ்துவ உபாத்தினிகளுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த மதம் பிறவி மதம்.

*  *  *

முஸ்லீம் சேர்மென்களுக்கும் இந்து உபாத்தினிகளுக்கும் பிறக்கும் குழந்தை எந்த மதத்தைச் சேர்ந்தது?

*  *  *

ஐரோப்பிய ஆபீசர்களுக்கும், இந்திய உத்தியோகஸ்தர் பெண்களுக்கும் பிறக்கும் குழந்தை எந்த மதத்தைச் சேர்ந்தது?

*  *  *

முதலில் ஒரு இந்துவையும், பிறகு ஒரு முஸ்லீமையும் மணந்து கொண்ட கிறிஸ்துவ பெண்ணுக்கு பிறந்த குழந்தைகள் எந்த மதத்தோடு பிறக்கின்றன?

*  *  *

ஆரிய சமாஜிகளால் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் முதலியவர் களிலிருந்து மதம் மாற்றம் செய்யப்பட்டவர்களும், கிறிஸ்தவர்களால் இந்துக்களில் இருந்து மதம் மாற்றம் செய்யப்பட்டவர்களும், முஸ்லீம்களால் இந்துக்களிலும், கிறிஸ்தவர்களிலும் இருந்து மத மாற்றம் செய்யப்பட்டவர்களும் எந்த மதத்தோடு பிறந்தவர்களாகிறார்கள்.

*  *  *

அது எப்படி கண்டுபிடிக்கமுடியும்?

*  *  *

இந்தப்படி மதம் மாறியவர்களும், மதம் மாற்றப்பட்டவர்களும் செத்தால் மதம் மாறியதற்காக நரக மோக்ஷமடைவார்களா?

*  *  *

எந்த மத சம்பந்தமான மோக்ஷ நரகங்களை அடைவார்கள்?

*  *  *

இன்று இந்தியாவில் உள்ள 8கோடி முஸ்லீம்களும் ஒரு கோடி கிறிஸ்தவர்களும் ஆதாம் ஏவாள் காலம் தொட்டே முஸ்லீமாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்களா? அல்லது சட்டையைக் கழட்டுவது போல், பழய மதங்களைக் கழட்டிவிட்டு, வேறு மதத்தை மாட்டிக் கொண்டவர்களா?

*  *  *

மதங்களுக்கு இருக்கும் சட்டம்தான் ஜாதிப்பிரிவுகளுக்கும், வருணாச்சிரம தர்மங்களுக்கும் இருந்து வருகிறதா அல்லது இவைகளுக்கு வேறு சட்டமா?

*  *  *

ராமானுஜர் காலத்தில் வைணவர்களாக ஆக்கப்பட்ட, ஆசாரிகள், மண் உடையார்கள், நாடார்கள்,  தேவாங்கர்கள், பல “”தாழ்ந்த” வகுப்பார்கள் எல்லோரையும் அவர்கள் சந்ததியார்களையும் இன்று எப்படி மதிக்கிறது?

*  *  *

கீதைப்படியும், மனுதர்ம சாஸ்திரப்படியும் சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை எந்த வருணத்தைச் சேர்ந்தது?

பகுத்தறிவு (மா.இ.)  துணுக்குகள்  நவம்பர் 1935

 

You may also like...