நாஸ்திகம்

 

நாஸ்திகம் என்றால் கடவுள் இல்லை என்று சொல்வது என்பதாக இங்கு ஜனங்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். எல்லா ஜனங்களுக்கும் நாஸ்திகம் என்று சொன்ன உடனேயே அந்த அருத்தம் தான் முதலில் தோன்றுகின்றது.

ஆனால் நாஸ்திகம் என்பதற்குப் பல அருத்தங்கள் சொல்லப்படுகின்றன.

ஒரு மதக்காரனை மற்ற மதக்காரன் நாஸ்திகன் என்று சொல்லுவதும் வழக்கத்தில் இருக்கிறது.

ஒரு மதக்காரனின் ஆதாரத்தை மற்ற மதக்காரனோ அல்லது அதே மதக்காரனோ தர்க்கிப்பதும்,  விவகரிப்பதும், சந்தேகப்படுவதும், சந்தேகம் தெளிய முயற்சிப்பதும் எல்லாம் நாஸ்திகம் என்று சொல்லப்பட்டு விடுகின்றது.

ஆதாரங்களைப்பற்றி தர்க்கிப்பது முதலியவைகளே நாஸ்திகமாய் விட்டால் கடவுளைப்பற்றிய தர்க்கம் விவகாரம் முதலியவை நாஸ்திகம் என்கின்ற தலைப்பின் கீழ் வருவது பெரிய காரியமாகி விடுமா?

ஆகவே நாஸ்திகம் என்பதும் ஒரு கடிவாளமில்லாத குதிரை என்றே சொல்லிவிடலாம்.

நாம் இங்கு நாஸ்திகம் என்பதை ஒரு சர்வ சக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுள் என்கின்ற ஒருவர் இருந்துகொண்டு, சிருஷ்டி ஸ்திதி சம்மார, அதாவது ஆக்கல் காத்தல் அழித்தல் என்கின்ற முத்தொழில்களையும் செய்து கொண்டும், உலக இயங்குதலுக்குக் காரண பூதராகவும் கர்த்தராகவும் இருந்து வருகிறார் என்பதை மறுப்பதையே நாஸ்திகம் என்று வைத்துக் கொண்டு பேசுவோம்.

இப்படிப்பட்ட இந்த நாஸ்திகம் என்பது கடவுள் என்கின்ற வார்த்தை என்று உண்டாயிற்றோ அன்று முதலே கடவுள் இல்லை என்கின்ற வாதமான நாஸ்திகம் என்பது இருந்துகொண்டே வந்திருக்கிறது.

இந்த நாஸ்திகமானது இன்ன ஊர், இன்ன தேசம்,  இன்ன கண்டம் என்று இல்லாமல், உலகில் கடவுள் உண்டு என்று சொல்லக்கூடிய இடங்களில் எல்லாம் இருந்தே வருகின்றது.  அது மாத்திரமல்லாமல் கடவுள் கற்பிக்கப் படுவதற்கு முன் இருந்த நிலையைக்கூட நாஸ்திக நிலை என்றுதான் சொல்ல வேண்டும்.  அன்றியும் மனித ஜீவனைப்பொறுத்த வரையில் கூட கடவுள் ஒருவர் உண்டு என்பதை ஊட்டுவிப்பதற்கு முன் நாஸ்திகத்தன்மையில் தான் இருந்து வருகின்றது என்று சொல்லவேண்டும்.

அப்படிப்பட்ட கடவுளைப்பற்றிய நம்பிக்கை இல்லை என்னும் நாஸ்திகம் இந்தியாவில் வெகுகாலமாகவே இருந்து வருகிறது.  அதாவது உலகாயுதம், சாருவாகம், சூனியவாதம், மாயாவாதம், பௌத்தம் முதலாகிய பல பிரிவுகள் மத ரூபமாகவே நாஸ்திகமாய் இருந்து வந்திருக்கின்றன.

இப்படிப்பட்ட பிரிவுகள் இந்தியாவில் ஏற்பட்டது பற்றியும், இருந்து வருவது பற்றியும் நமக்கு ஆச்சரியமில்லை.

ஏனெனில் இந்துக்கள் கடவுள் தன்மை அவ்வளவு மோசமானதாக கற்பிக்கப்பட்டிருக்கிறது.

எப்படி எனில் பல கடவுள்கள்;  அதிலும் ஒரு கடவுளாவது முழுவதும் தெய்வீகத்தன்மையுடன் இருந்ததாகச் சொல்ல முடியாமல் மானுஷீகத்தில் இருந்து சிறிது முதிர்ச்சியடைந்து கடவுளாக ஆக்கப்பட்டதாகவும், கடவுளுக்கும் மனிதனுக்கும் முத்தொழில்களில், அதாவது ஆகாரம் நித்திரை புணர்ச்சி ஆகியவைகளில் வித்தியாசமில்லாமலும், சுக துக்கங்களுக்கு அதீதப்பட்டதாக இல்லாமலும், பிறப்பு இறப்புகள் கூட உடையனவாகவும், காமக்குரோதாதி குணங்களுக்கு ஆட்பட்டதாகவும், விருப்பு வெறுப்புக்கு அடிமைப்பட்டதாகவும், பிரார்த்தனை புகழ்ச்சி மன்னிப்பு ஆகியவைகளுக்கு இணங்கியதாகவும்,  மற்றும் பல மனிதகுணங்களோடு இருக்கும்படியான தாகவும் கற்பிக்கப்பட்ட கடவுள் உள்ள தேசத்தில் நாஸ்திகவாதம் ஏற்படுவது என்பது ஒரு அதிசயமான காரியம் அல்ல.

ஆனால் மேல்நாடுகளில் – கடவுளை மிக ஜாக்கிரதையாக கற்பனை செய்து மிக சுனாயுதமாக அநுபவித்து வரும் நாடுகளில்செல்வத் தன்மையையும் மேல் கீழ்த்தன்மையையும் காப்பதற்கென்றே கடவுளைக் காப்பாற்றி வரும் நாடுகளான மேல்நாடுகளில்எங்கும் இன்று நாஸ்திகவாதம், நாஸ்திகப்பிரசாரம் என்பவைகள் மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன  என்பதோடு அவை நாளுக்கு நாள் செல்வாக்கும் பெற்று மக்களின் ஆதரவும் ஆமோதிப்பும் பெற்று வருகின்றன.  நாஸ்திகவாதத்தைத் தொழிலாளி மக்களோ ஏழை மக்களோ தான் செய்து வருகிறார்கள் என்பதற்கில்லாமல் செல்வவான்கள் கூட்டத்திலேயே மிகவும் மலிந்துகிடக்கின்றன.  இங்கிலாந்து தேசத்தில் உள்ள பகுத்தறிவுச் சங்கமானது மதங்களை அழிக்க முயற்சிப்பதோடு நாஸ்திகத்தையே பெரிதும் பிரசாரம் செய்கின்ற சங்கமாகும்.  இச்சங்கம் பெரிதும் செல்வவான்களாலும் பெரிய பண்டிதர்களாலும் விஞ்ஞானிகளாலும் நடத்தப்பட்டு வருகின்றது.  இதில் உள்ளவர்களை சமதர்மத்துக்கும் பொது உடமைக்கும் விரோதிகள் என்று கூடச் சொல்லலாம்.

மற்றும் உலகத்திலேயே செல்வம் கொழிக்கும் தேசமாகிய அமெரிக்கா தேசத்தில் நாஸ்திகப் பிரசாரமானது வெகுகாலமாகவே பிரக்கியாதியாகவும் ஊக்கமாகவும் செய்யப்பட்டு வருகின்றது.

அவர்கள் தாங்கள் ஏன் நாஸ்திகரானார்கள் என்பதையும், நாஸ்திகத்தை ஏன் பரப்புகின்றோம்  என்பதையும், அவர்களது சங்கத்திற்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொள்கைகளையும் பற்றித் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு உலகமெங்கும் இலவசமாய் அனுப்பி வருகிறார்கள்.

நேயர்கள் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அத்துண்டுப் பிரசுரத்தைக் கீழே குறிக்கின்றோம்.

“”நாங்கள் நாஸ்திகர்கள் தான் ஏன் என்றால்” என்று ஆரம்பித்து 10காரணங்கள் காட்டி இருக்கிறார்கள். அவையாவன.

  1. “”கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்குப் போதிய ருஜு இல்லை.
  2. அ: உலகுக்கு ஒரு கடவுள் இருக்க வேண்டும் என்பதற்கு எவ்வித அவசியமும் காணப்படவில்லை.

ஆ:  கடவுளால் எவ்வித பிரயோஜனமாவது இருப்பதாக நாங்கள் கருதுவதில்லை.

இ:  கடவுள் இல்லாவிட்டால் இன்றுள்ள நிலையில் என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கும் என்பதும் விளங்கவில்லை.

  1. ஒரு நல்ல கடவுள் என்பவர் சர்வ சக்தி, சர்வ வியாபகம் என்பதின் உண்மைப் பொருள் கொண்ட குணங்களையுடையவராக இல்லாவிட்டால் அவர் பிரயோஜனமில்லாதவரும், லக்ஷியம் செய்யப்படவேண்டியவர் அல்லாதவருமேயாவார்.
  2. சர்வ சக்தி, சர்வ வியாபகமுள்ள கடவுள் நல்லவராகநன்மையையே செய்பவராக இல்லாவிட்டால் அவர் வணக்கத்திற்கு உரிய வராகமாட்டார்.
  3. சர்வ சக்திவாய்ந்த ஒரு நல்ல கடவுள் இல்லவே இல்லை. அப்படி ஒரு கடவுள் இருக்குமானால், எல்லாம் தோஷமற்றதாகவும், நன்மையையே தரத்தக்கதாகவும், இனிச் செய்யவேண்டிய காரியங்கள் பாக்கியிருக்கின்றன என்று இல்லாமல் சகலமும் பூரணத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். அந்தப்படி இல்லை; ஆதலால் அப்படிப்பட்ட கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ளுவதில்லை.
  4. கடவுளால் உண்டாக்கப்பட்ட உலகங்களில் இந்த உலகமே மேலான தென்பதனால் மோக்ஷ உலகக் கதைகள் மெய்யாயிருக்க முடியாது.
  5. மனிதனின் உணர்ச்சியும், முயற்சியும், விஞ்ஞான ஆராய்ச்சியிலும், விடுதலையிலும், முற்போக்கிலும் தூண்டப்பட்டுக்கொண்டே இருப்பதால் கடவுளின் சர்வ சக்திக் கொள்கை விவகாரத்துக்கு உட்பட்டுவிடுவதுடன், அப்படிப்பட்ட கடவுள் உணர்ச்சியும் குறைந்து கொண்டு வருகின்றது.
  6. மனிதர்கள் ஆதியில் சிறிதும் அறிவு விளக்கம் பெறாமல் மௌடீகத்தில் ஆழ்ந்திருந்த காலத்தில், தனக்குத் தெரியாத விஷயங்களை எல்லாம் கடவுள் சக்தி, கடவுள் செயல் என்று கூறித் திருப்தியடைய ஒரு கடவுளைக் கற்பித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஆதிகால மனிதர்களுடைய அபிப்பிராயங்களும், வாழ்க்கை அனுபவங்களும் ஒவ்வொன்றும் தவறுதலானவை என்றும் கூறிவிட்டுக் கடவுளைப்பற்றியும்,  ஜீவனைப்பற்றியும் மாத்திரம் அவர்கள் அறிந்திருந்தார்கள்  என்று சொல்லுவது பொருத்தமானதல்ல.

  1. கடவுள் சக்தி என்று கருதப்பட்டு வந்தவைகள் பெரிதும் இன்று விஞ்ஞான சக்தி மூலம் ஆக்கப்பட்டு அவை மனித சக்திக்கு அடக்கப் பட்டு விட்டன. இதனால் அநேக விஷயங்களில் கடவுள் சக்திக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது.
  2. குற்றம், கொடுமை, பொறாமை, பகைமை, அசூயை, காமம், வன்னெஞ்சம், முரண்பாடு, முதலாகிய அநேக கெட்ட குணங்கள் என்று சொல்லப்படுபவைகள் கடவுள் தன்மையாக இருந்து வருகின்றன.

ஆகவே கடவுளை நாங்கள் நம்புவதோ போற்றுவதோ பிரார்த்திப்பதோ இல்லை.

கைலாசத்திலோ அல்லது வைகுண்டத்திலோ அல்லது பரலோகத்திலோ ஒரு வித கடவுளும் இல்லை.

தாய், தந்தையற்ற குழந்தைகளையும், திக்கற்றவர்களையும் மனிதர்கள் தான் காப்பாற்ற வேண்டும்.  இல்லாவிட்டால் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்.  கடவுள் காப்பாற்றுவார் என்பது வீண் வார்த்தை.

நமது பிரார்த்தனைகளுக்கு செவிசாய்க்கக்கூடிய ஒரு கடவுள் இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!

மனிதர்களே மனிதர்களின் அபயக் குரலோசைகளுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு உதவிபுரிய வேண்டும்.

நரகமென்பது  கிடையாது.

நாம் பயப்படக்கூடிய அல்லது பின்பற்றக்கூடிய, பழிக்குப்பழி வாங்கவேண்டுமென்கிற துர் எண்ணங்கொண்ட கடவுளாவது, அல்லது பூதமாவது எங்குமில்லை.

நம்பிக்கையினால் மன்னிப்பாவது அல்லது மோட்சமாவது ஏற்படமாட்டாது.

நம்முடைய செய்கைகளுக்கேற்ற பலாபலன்களை நாம் தைரியமாக எதிர்நோக்கி இருக்க வேண்டும்.

இயற்கையில் ஏக திருஷ்டியுள்ள உபகாரத்தன்மையாவது அல்லது துவேஷமாவது கிடையாது.

தடுக்கக் கூடியதும், தடுக்கக்கூடாததுமான துன்பங்களிலிருந்து தங்களைத் தாங்களே காப்பற்றிக்கொள்ளப் போராடுவதுதான் ஜீவிய வாழ்க்கையின் தன்மையா யிருக்கின்றது. உலகம் விருத்தியடைய வேண்டியதவசியமானால் மனிதர்களின் ஒத்துழைப்பு மிக்க அவசியமாக வேண்டியிருக்கின்றது.

நாம் இறந்தபிறகு “”நமது பாக்கி வேலையை”ப் புரிவதற்குச் சந்தர்ப்பம் வாய்க்காது.

செய்தால் இப்பொழுதே நாம் செய்ய வேண்டும்; இல்லையானால் எப்பொழுதுமே செய்யமாட்டோம்.

உண்மை, தயை, அழகு,  சுதந்தரம் ஆகியவைகளுக்கும் தெய்வீகத் தன்மை யென்பதற்கும் சம்பந்தம் கிடையாது.

இவைகள் யாவும் மனிதத்தன்மையின் இலக்ஷணங்களாகையால் மனிதர்கள் இவைகளைப் பாதுகாத்துக் காப்பாற்றிக் கொண்டேதான் வரவேண்டும். இல்லாவிட்டால் மனிதர்கள் பூமியில் இல்லாமலே நாசமாய்ப் போய்விடுவார்கள்”

என்று லக்ஷக்கணக்காகத் துண்டுப்பிரசுரங்கள் அச்சிட்டு வினியோகித் திருக்கிறார்கள்.  இதுபோல் இன்னும் பல எழுதிப் பிரசுரித்து வருகிறார்கள்.

பகுத்தறிவு (மா.இ.)  கட்டுரை  ஜுன் 1935

 

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

ஸ்தல ஸ்தாபன மந்திரி உத்திரவு

விருதுநகர் மகாநாட்டில் ஸ்தல ஸ்தாபன மந்திரி வாக்களித்த பிரகாரம் அதாவது ஸ்தல ஸ்தாபனங்களில் கீழ் இருந்து வரும் உத்தியோகங்கள் விஷயத்திலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை கையாளப்படும்படியாக ஏற்பாடு செய்வதாய் வாக்களித்த பிரகாரம் இப்போது ஒரு உத்திரவு எல்லா ஜில்லா போர்டுகளுக்கும் அமுலில் கொண்டு வரும்படியாக வெளி யிட்டிருக்கிறார். இது கூடிய சீக்கிரத்தில் அமுலுக்கு வந்துவிடுமென்றே எதிர்பார்க்கிறோம். ஆனால் இவ் வுத்திரவு டிஸ்டிரிக் போர்டுகளைப் பொருத்தவரை தான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றதே ஒழிய முனிசிபாலிட்டி, யூனியன், பஞ்சாயத்து முதலியவைகளைப் பற்றி குறிப்பிடவில்லை.

இந்த மாகாணத்தில் ஜில்லா போர்டுகள் சுமார் 25 இருக்குமானால், முனிசிபாலிட்டிகள் சுமார் 100க்குக் குறையாமலிருக்கலாம்.

இவைகளிலும் ஆயிரக்கணக்காக உத்தியோகஸ்தர்களும், உபாத்திமார் களும் இருந்து வருகிறார்கள்.

ஆதலால் மந்திரியார் கூடிய சீக்கிரம் அதாவது உடனே முனிசிபாலிட்டி களுக்கும் இந்த ஏற்பாடு செய்வார் என்று எதிர்பார்க்கின்றோம்.

நிற்க இந்த உத்திரவைப் பார்த்தவுடன் பார்ப்பனப் பத்திரிகைகள் ஒப்பாரி வைத்து ஓலமிட ஆரம்பித்துவிட்டன. இப்படிப்பட்ட ஒவ்வொரு சமயத்திலும் இந்தப் பத்திரிகைகள் ஓலமிடுவது என்பது தலைமுறை தலைமுறையான வழக்கமாகவே இருந்து வருகின்றது.

இப்படிப்பட்ட ஓலங்களை பார்ப்பனரல்லாத மூடங்களும் நம்பிக் கொண்டு பார்ப்பனப் பத்திரிகைகளுக்குக் கூலிகளாய் இருப்பதுதான் நமக்கு மிகுதியும் வருத்தத்தைக் கொடுக்கக் கூடிய காரியமாய் இருக் கின்றனவே ஒழிய மற்றப்படி பார்ப்பனப் பத்திரிகைகளுடைய ஓலங்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்திரவானது இன்னும் அனேக இலாக்காக்களுக்குப் போட வேண்டியது அவசரமும், அவசியமுமான காரியம் என்பது ஒருபுறமிருக்க இப்போது இருந்து வரும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ விகிதம்கூட மாற்றப்பட வேண்டியது எல்லாவற்றையும்விட மிகவும் அவசியமான காரியமாகும்.

இன்றுள்ள வகுப்புவாரி பிரதிநிதித்துவ விகிதம் ஜன சமூகத்தில் 100க்கு 3 வீதம் உள்ள பார்ப்பனர்களுக்கு உத்தியோகத்தில் 100க்கு 16லீ வீதம் விகிதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

பார்ப்பனரல்லாத ஹிந்து என்பவர்களுக்கு 100க்கு 40 வீதமே விகிதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களுக்கு 100க்கு 8 வீதமே விகிதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு சமூகத்தாருக்கும் அதாவது பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கும், தாழ்த்தப் பட்ட மக்களுக்கும் அவர்கள் ஜன சமூக எண்ணிக்கைப்படி கிடைக்க வேண்டிய விகிதாச்சாரங்களை மோசம் செய்து அவற்றை பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் பயனாய் இந்த இரண்டு சமூகமும் தாழ்ந்த நிலையிலேயே இருப்பதோடு பார்ப்பன ஆதிக்கம் வளர்ந்து கொண்டே போகின்றது. இதை இன்றைய மந்திரிகள் சிறிதுகூட கவனியாமல் தங்கள் வாழ்க்கையும் தங்கள் சம்பளங்களையுமே பிரதானமாய்க் கருதிவருவது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயமாகும்.

இந்த மந்திரி சபையானது (பார்ப்பனரல்லாத ஜஸ்டிஸ் மந்திரிசபை என்பதானது) எதற்காக இருக்க வேண்டும் என்றும்  இன்னம் வெகு காலத்துக்கு இருந்து வர வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றோம் என்றால் இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை யோக்கியமாய் நிறைவேற்றி நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறொரு காரணமும் இல்லை.

இன்று இந்தக் காரியம் செய்ய ஜஸ்டிஸ் மந்திரி சபை தவிர வேறு எந்தக் கட்சியும் தகுதி இல்லை என்பதோடு வேறு எந்தக் கட்சி பதவிக்கு வந்தாலும் உள்ளதையும் கெடுத்து விட்டுப் போய்விடுவார்கள் என்பதில் சிறிதும் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

இந்த மந்திரிசபை என்ன சாதித்தது என்று யாராவது கேட்பார்களே யானால் பதினைந்து வருஷ காலமாய் பார்ப்பனர்களுடைய தொல்லையை சமாளித்து நின்ற பெருமை ஒன்று.

பார்ப்பனர்களின் ஒற்றர்களாகவும் கூலிகளாகவும் அமர்ந்து போன பார்ப்பனரல்லாத இனத் துரோகிகளின் உபத்திரவத்தை சமாளித்துக் கொண்டிருந்தது இரண்டு.

இந்த இரண்டு கூட்டத்தாராலும் ஏமாற்றி வஞ்சிக்கப்பட்ட பார்ப்பன ரல்லாத பாமர மக்களின் முட்டாள்தனமான பழிகளை தாங்கி நின்றது மூன்று.

இம் மூன்று கூட்டத்தாரின் இவ்வித தொல்லைகளுக்கும், உபத்திரவங் களுக்கும், பழிகளுக்கும் இடையில் இருந்து கொண்டு இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை பார்லிமெண்டு வரை கவனித்து சிறிது அளவாவது அமுலில் இருக்கும்படி செய்தது நான்கு.

இந்தக் காரியங்களே அது இருந்தாக வேண்டியது என்பதற்கு ஆதாரங்களாகும். நம்மைப் பொறுத்தவரை காங்கிரசை விட்டு விலகி தனியாக நின்றும் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தும் அதன் ஆதரவு பெற்றும் இந்த 10 வருஷ காலமாக உழைத்து வந்ததின் காரணமே இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கைக்கு ஆகத்தான் என்பது எவரும் அறியாத விஷயமல்ல.

இதற்கு ஆகவேதான் ஜஸ்டிஸ் கட்சியையும் மந்திரி சபையையும் யார் எந்தக் காரணத்துக்காகப் பழித்தாலும், இழித்தாலும், அதை மறுத்து ஆதரித்து வருவதுமாகும்.

பொது ஜனங்களில் பலரும் பார்ப்பனரல்லாத சில பிரமுகர்களும்கூட ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி குறை கூறி வருகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்கள் காங்கிரசிலிருப்பவர்களானாலும் சரி வேறு எந்தக் கட்சியில் இயக்கத்தில் இருப்பவர்களானாலும் சரி, தனிப்பட்டவர் களாய் இருப்பவர்களானாலும் சரி அவர்கள் தங்களுடைய பழய “”ஜாதகத்தை” அதாவது ஜஸ்டிஸ் ஏற்படுவதற்கும் அல்லது தாங்கள் அதில் கலந்து கொள்வதற்கும் முன் தங்களுடைய நிலை எப்படி இருந்தது? இப்போதும் என்ன லட்சியம் வைத்து அக்கட்சியை பழித்து இழித்துக் கூறி வருகிறார்கள்? என்பதை சிந்தித்துப் பார்த்தால் அக்கட்சி சாதித்தது கண்ணாடியில் தெரிவதுபோல் தெரியும்.

அதோடு அக்கட்சி செய்திருக்க வேண்டிய அனேக வேலைகளை செய்ய முடியாதபடி இவர்கள் போன்ற பச்சை சுயநலவாதிகளும், அறியாத மக்களும் முட்டுக்கட்டையாய் இருந்திருப்பதும் விளங்கும்.

இவை ஒரு புறமிருக்க இந்த பிரஸ்தாப வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவைப் பற்றி ஒரு பார்ப்பன பத்திரிகையானது “”அக்கிரமம்” என்கின்ற தலைப்புக் கொடுத்து எழுதிய உபதலையங்கத்தில் “”பிறப்பினால் ஏற்பட்ட ஜாதி பாகுபாடுகளின்படி உத்தியோகம் வழங்க வேண்டும் என்ற முறையை ஜஸ்டிஸ் கட்சியார் விஸ்தாரமாக்கி இருப்பது அவர்கள் எவ்வளவு தூரம் மதி கெட்டவர்கள் என்பதை ருசுப்படுத்துகிறது” என்று எழுதி இருக்கிறது.

அடுத்த வாக்கியத்தில்,

“”பிராமணர்கள் உத்தியோகங்களையெல்லாம் தங்களுடைய ஏகபோக மாக்கிக் கொண்டு விடுவார்களோ என்று பயப்பட ஆதாரமிருக்கலாம்” என்றும் எழுதி ஒரு அளவுக்கு அப்படிச் செய்ய வேண்டியதின் அவசியத்தை ஒப்புக் கொள்கிறது. ஆதலால் இதற்கு அதிக சமாதானம் சொல்லத் தேவையில்லை.

மற்றொரு பார்ப்பன பத்திரிகை (சுதேசமித்திரன்)

“”வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஏற்பாடானது பல சமூகத்தினரும் தங்களை அபிவிர்த்தி செய்து கொள்ளுவதற்கு ஊக்கத்தை அளிப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு இருந்து வரக் கூடிய சிரத்தையையும் குறைத்து விடுமென்பதே நமது அபிப்பிராயம்” என்று பரிதாபப்படுகின்றது.

இது பகையாளி வீடு வேகிறதே என்று அவசரப்பட்டு தண்ணீர் இறைக்கப் போவதுபோல் போய் தோண்டியையும், கயிற்றையும் கிணற்றில் போட்டுவிட்டு மாரடித்துக் கொண்டு அழுகின்றதை ஒத்து இருக்கின்றது. ஆனால் அதே பத்திரிகை தெரிந்தோ தெரியாமலோ உண்மையைக் கக்கி இருக்கிறது.

“”எல்லா சமூகங்களுக்கும் கவர்மெண்டு உத்தியோகங்களில் போதிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டியது நியாயமும் அவசியமும் ஆகும்.”

“”உத்தியோக விஷயங்களில் இந்த ஏற்பாடு இருந்து வருகிறதால் வரிசைக் கிரமப்படி பல சமூகத்தினரும் நியமிக்கப்பட்டதன் மூலம் அதிக பிரதிநிதித்துவத்தை உத்தியோகங்களில் பெற்று இருக்கலாம்”

என்பதாக எழுதி அந்த உண்மையையும் ஒப்புக் கொண்டு விட்டதால் அதற்கும் நாம் பதில் எழுத வேண்டியதில்லை. ஆனால் ஒரு விஷயத்திற்கு பதில் சொல்ல ஆசைப்படுகிறோம்.

இந்தியர்களுக்கு இன்ன இன்ன உத்தியோகம் கொடுப்பது என்றும் அதற்கு ஒரு எண்ணிக்கை விகிதமும் வைத்ததால் இன்று இந்தியர்களின் சிரத்தை குறைந்து விட்டதா? அல்லது நிர்வாகத்தின் திறமை குறைந்து விட்டதா? ஐ.சி.எஸ். உத்தியோகம் இன்று ஐரோப்பியர் இந்து என்கின்ற வகுப்புப்படி கொடுப்பதில் என்ன யோக்கியதை குறைந்து விட்டது? இத்தனை விகிதம் இந்தியருக்கு கொடுக்க வேண்டும் என்று நாமாக கேட்கவில்லையா?

தவிர உத்தியோகங்களுக்கு ஒரு அளவு யோக்கியதையை நிர்ணயம் செய்து கொண்டு தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி உத்தியோகங்கள் கொடுக்கப்படுகிறதே தவிர வெறும் ஜாதியை மாத்திரம் கவனித்து அல்ல என்பதை இப்பத்திரிகைகள் தெரிந்திருந்தும் “”திறமை கெட்டுவிடும்” என்று சொல்லுவது போக்கிரித்தனமும், அசம்பாவமுமான கருத்தேயாகும். ஏனெனில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்குத் திறமை இல்லை என்பதாக நினைத்துக் கொண்டுதான் இவைகள் இப்படி எழுதுகின்றனவே ஒழிய மற்றபடி யோக்கியமான எண்ணத்துடன் இவை எழுதப்பட்டதல்ல. இல்லாவிட்டால் திறமை குறைந்து போகும் என்பதற்கு காரணம் காட்டி இருக்க வேண்டும்.

நிற்க, பிறவியின் காரணத்தை வைத்து உத்தியோகம் பிரிப்பது மதி கெட்டதனம் என்றால் பிறவியின் காரணம் வைத்து மனித சமூக பொது உரிமையில் பிரிவினை செய்து இருப்பது மதியீனம் மாத்திரம் அல்லாமல் அது எவ்வளவு அயோக்கியத்தனமாய் இருந்திருக்க வேண்டும். பிறவியின் காரணமாய் ஜாதி பிரித்து கோவிலுக்குள் போவதைக்கூட தடுப்பதும் ஒப்புக் கொள்ளாததுமான ஒரு ஜாதி  ஒரு சமூகம்  ஒரு ஸ்தாபனம் பிறவி காரணமாகவே பிரிக்கப்பட்டிருக்கிற பிரிவுகளுக்கு உத்தியோகத்தில் சம உரிமை கொடுப்பதை எப்படி குற்றமாகச் சொல்லலாம்.

பிறவி காரணமான சலுகையும் வஞ்சனையும், சூதும் சூழ்ச்சியும் இதுவரை நடந்து வந்திராவிட்டால் இன்று எப்படி ஜன சங்கை 100க்கு 3 வீதமுள்ள, பிச்சை எடுத்துக் கொண்டு பாடுபடாமல் ஊரை ஏமாற்றிப் பிழைத்து வந்தக் கூட்டம் இன்று 100க்கு 60, 70, 80, 90, 100 வீதம் உத்தியோகங்களையும், பதவிகளையும் கொள்ளையிட முடிந்தது என்று நாம் கேட்கின்றோம்.

அவனவன் புத்தியால் வரமுடிந்தது என்றால் வகுப்புவாரி பிரதி நிதித்துவம் ஏற்பட்ட பிறகு இந்தக் கொள்ளையும், சூதும், வஞ்சனையும், சூழ்ச்சியும் எப்படி மாறி எல்லா வகுப்பிலும் புத்திசாலிகள் இருக்கிறார்கள் என்பது வெளியாக முடிந்தது?

இன்றைய தினம் ஆங்காங்கு இருந்து வரும் சர்க்கார் உத்தியோக லிஸ்டைப் பார்த்தால் எல்லாம் பார்ப்பன மயமாய் இருப்பதானது புள்ளி விவரங்களுடன் விளங்குவது தெரிந்தும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மதியீனம் என்றும் திறமைக் குறைவு என்றும் சொல்லுவதை அறியாமல் சொல்லுவதாக நம்மால் கருத முடியவில்லை. மற்றபடி இதை அயோக்கியத் தனம் அல்லது மற்றவர்கள் பிழைக்கக்கூடாது என்கிற அற்பத்தனம் கொண்டு அந்தப்படி சொல்லுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

பார்ப்பனர்கள் தாங்கள் கையில் கிடைக்கும் அதிகாரத்தை பயன் படுத்துவதில் சிறிதுகூட ஈவு இரக்கமில்லாமல் நியாயம் அநியாயம் இல்லாமல் உபயோகப்படுத்தி விடுகிறார்கள். அதைப் பற்றி கேள்வி கேட்பாடே கிடையாது. ஆனால் பார்ப்பனரல்லாதார் ஒரு சிறு காரியம் செய்யும் போதும் இவ்விதமான விஷமப் பிரசாரம் செய்கிறார்கள் என்றால் இத் தொல்லைகளை எப்படி சகித்துக் கொண்டிருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.

பள்ளிக்கூட விஷயமாக ஆங்காங்கு இருந்து நமக்கு வந்து இருக்கும் புள்ளி விவரங்களைப் பார்த்தால் இவ்வளவு கூச்சல் போடுகின்ற காலத்தில் இந்தப் பார்ப்பனர்கள் எப்படி தைரியமாய் வெளிப்படையாய் ஆணவமாய் இந்தப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது.

சாதாரணமாக சாகப் போகும் தருவாயிலிருக்கும் திருநெல்வேலி இந்து காலேஜுக்கு ஒரு லக்ஷம் ரூ. கொடுத்து அதை நிலை நிறுத்த முன் வந்த ஒரு பார்ப்பனரல்லாத பெரியார் உபாத்தியாயர்களில் 100க்கு 50 வீதம் பார்ப்பனரல்லாதாராய் இருக்க வேண்டுமென்கிற நிபந்தனை கேட்டதற்கு அதை தேசீய பார்ப்பனப் பத்திரிகைகள் என்பவைகள் குறை கூறுகின்றன. ஆனால் பள்ளிக்கூட விஷயங்களில் அநேகப் பள்ளிக் கூடங்கள், பியூன்கள் தவிர மற்றவர்கள் நிர்வாகிகள் உள்பட பார்ப்பனர்களாகவே இருப்பதும் மைலாப்பூரில் சில பள்ளிக்கூடங்களில் உபாத்தியாயர்களும் பியூன்களும் கூட எல்லாம் பார்ப்பனர்களாய் இருப்பதும் இன்றும் உணரலாம். ஆகவே இவர்களுக்கு திறமைசாலியான பார்ப்பனரல்லாதார் கிடைக்க வில்லையா அல்லது பார்ர்ப்பனரல்லாத பூண்டுகளுக்கு உத்தியோகம் அளிக்கப்படாது என்கின்ற கெட்ட எண்ணமா? என்று கேட்கின்றோம்.

மதுரை

மதுரை காலேஜ் ஹைஸ்கூலை எடுத்துக் கொள்வோம். அந்தப் பள்ளிக்கூடம் வெகுகாலமாக இருந்து வருகிறது.

அதற்கு சட்டசபை மெம்பரும் பொது வாழ்வில் வெகுகாலம் ஈடுபட்டிருக்கிறவரும் இன்று மதுரை சேர்மென்னாய் இருப்பவரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ கொள்கையை அடியோடு எதிர்ப்பவருமான தோழர் கே.ஆர். வெங்கட்டராமய்யர் செக்ரட்டரியாவார்.

இவர் ஆதிக்கத்தில் உள்ள அப்பள்ளிக்கூடத்தின் போர்ட்மெம்பர்கள் 40 பேர்களில் ராஜா சர். அண்ணாமலை, சேத்தூர் ஜமீன்தார் இருவர் தவிர மற்ற 37 மெம்பர்களும் அய்யர், அய்யங்கார், ஆச்சாரி, சாஸ்திரி ஆகியவர்களே ஆவார்கள்.

நிர்வாக சபை மெம்பர்களோ 10 பேர்களில் 10 பேரும் அய்யர், அய்யங்கார், ஆச்சாரி ஆகியவர்களே ஆவார்கள்.

உபாத்தியாயர்களோ 46 பேர்களில், தமிழ்ப் பண்டிதர் திருமலைசாமி முதலியார், உருது பண்டிதர் சையத்குலாம் ரசூல் சாயபு ஆகிய இருவர்கள் போக பாக்கி 44 பேர்களும் அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, ஆச்சாரியார், ராவ்ஜீ ஆகிய பார்ப்பனர்களேயாகும். மூன்று எட்மாஸ்டர்களும் பார்ப்பனர்கள்.

குமாஸ்தாக்கள் லைப்ரேரியன் ஆகிய மூன்று உத்தியோகஸ்தர்களும் பார்ப்பனர்களே.

பார்ப்பனரல்லாத ஆர்டினரி போர்ட்டு மெம்பர்கள் 2, 3 பேர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் இந்தப் பார்ப்பனர்கள் எவ்வளவு பணம் கவர்ந்து கொண்டு இந்த ஜாப்தாவில் பெயரளவுக்கு மாத்திரம் ஊமை மெம்பராய் சேர்த்திருப்பார்கள் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

ஆகவே பார்ப்பனர்கள் நிர்வாகத்தில் உள்ள ஸ்தாபனங்களும் அதிகாரங்களும் கடுகளவாவது பார்ப்பனரல்லாதார் என்கின்ற ஒரு சமூகம் இருக்கிறதாகவாவது அல்லது அவர்களும் நம்ம சமூகம் போல படித்து விட்டு காத்திருக்கிறார்களே என்றாவது பார்ப்பனரல்லாதார் பிள்ளைகளாலும் பெற்றோர்களாலும் சர்க்காராலும் கொடுக்கப்படுகின்ற பணத்தைக் கொண்டு தானே இந்தப் பள்ளிக்கூடம் நடந்து வருகின்றது என்றாவது உள்ள எண்ணம் கடுகளவாவது இந்தப் பார்ப்பனக் கூட்டத்தில் யாராவது ஒருவருக்கு இருந்து வருகிறதா என்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.

சமீப காலத்தில் அதாவது சென்ற மாதம் எஸ்.ஐ.ஆர். ரயில்வே உத்தியோகங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன்போர்ட் என்று ஒன்று வைத்து அதன் மூலம் ரயில்வே உத்தியோகங்களுக்கு ஆள்களை தெரிந்தெடுத்ததில் மொத்த எண்ணிக்கையில் பார்ப்பனர்களைவிட பார்ப்பனரல்லாதார் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால் இப்போது அந்த போர்டையே கலைத்துவிட வேண்டும் என்று சூழ்ச்சிகள் நடப்பதாகத் தெரிகின்றது.

சமீபத்தில் தோழர் கலிபுல்லா சாகிப் அவர்கள் தலைமையில் திருச்சியில் ஒரு கூட்டம் கூடி இச் சூழ்ச்சியை கண்டித்து இருப்பதாகவும் தெரிகிறது.

இந்தப்படி பல துறைகளிலும் பார்ப்பனர்கள் முட்டுக்கட்டையாய் இருந்து கொண்டு பல ஆயிரம் வருஷங்களாக தாழ்த்தப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு கிடந்த சமூகம் ஒரு சிறிதாவது தலை எடுப்பதை அழுத்திக் கொண்டே வந்தால் வேறு என்னதான் கதி மோக்ஷம் என்பது நமக்கு விளங்கவில்லை.

ஆகையால் ஸ்தல ஸ்தாபன மந்திரியார் டிஸ்ட்ரிக் போர்டுக்கு போட்ட உத்திரவுமல்லாமல் முனிசிபாலிட்டிக்கும் இந்த உத்திரவு போடுவதோடு பிரைவேட் மேனேஜ்மெண்டில் உள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிக் கூடங்களிலும் எதற்கு சர்க்கார் கிராண்டு கொடுக்கப்பட்டிருக் கிறதோ அவற்றிற்கும் வகுப்புவாரி உத்திரவுப்படி உபாத்தியாயர்கள் நியமிக்கும்படி உத்திரவு போட வேண்டுமாய் வலியுறுத்துகிறோம்.

குடி அரசு  தலையங்கம்  02.06.1935

You may also like...