தர்மராஜ்ய விளம்பரம்

 

யார் எழுதினால் என்ன?

“”சுயராஜ்யம்” “”சுயராஜ்யம்” என்று இதுவரை சொல்லிக் கொண்டு வந்த காங்கிரஸ்காரர்கள், கொஞ்சகாலமாக, “ராமராஜ்யம்’ “தர்ம ராஜ்யம்’ என்று  மாற்றி  மாற்றிச்  சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். கேட்கப் போனால், “”வெறும் பெயரில் என்ன இருக்கிறது. சுயராஜ்யம் என்றும் சொல்லலாம், ராம ராஜ்யம் என்று நாங்கள் சொல்லுவதும் அதுதான். குடி அரசு என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள். பெயரைப் பற்றி நமக்குள் சண்டை வேண்டாம். பின்னால் பார்த்துக் கொள்வோம்” என்று எல்லாம் ஒன்றுதான் என்று பொருள்படும்படி பதில் சொல்லுகிறார்கள்.

பெயரில் என்ன இருக்கிறது என்பது நாணயமான பேச்சாகாது. சீவக் கட்டைக்கு விளக்குமாறு என்றும் சொல்லலாம். திருவலகு என்றும் சொல்லலாம்! கோவிலில் கூட்டுவதும் குப்பைதான் என்றாலும் திருவலகு என்று எளிதில் அர்த்தம் விளங்காத பெயரைச் சொல்லி, சீவக்கட்டையின் தகுதிக்கு அதிகப்படியான மதிப்பை அதன் தலையில் ஏற்றி ஏமாற்றுவது சுலபமாயிருந்து வருகிறது. இதைப் போலவே, பார்ப்பான் ஐயனாகிப், பூசுரனாகி, மனிதத் தன்மையில் இழி நிலையிலிருந்து கடவுட் தன்மையை எட்டிப் பூலோகக் கடவுள் என்று எல்லாராலும் போற்றி வணங்கப்படுவதற்கு உரியவனாகி விட்டதாகச் சொல்லப்படும்போது, அவன் அடையும் மரியாதை உயர்வு எல்லாம் பெரும்பாலும் பெயர் மாறாட்டத்தால் செய்யப்படும் பித்தலாட்டத்தால் ஏற்படுகிறதே தவிர, வேறு உண்மையுள்ள காரணம் ஒன்றினாலும் அன்று. ‘எடிதிஞு tடஞு ஞீணிஞ் ச் ஞச்ஞீ ணச்ட்ஞு ச்ணஞீ டச்ணஞ் டிt’ என்பது இங்கிலிஷ் பழமொழி. நாயைக் கொல்ல நினைத்தால் அதற்கு பைத்தியம் பிடித்துவிட்டது. எல்லாரையும் கடிக்கிறது என்று பெயர் கொடுத்துச் சுட்டுக்கொல் என்பது இதன் பொருள். அவர்களுக்குப் பிடிக்காத ஒருவனை இழிவுபடுத்த வேண்டுமானால், அவனுக்கு நாஸ்திகன், தேசத் துரோகி, சர்க்கார் தாசன் என்ற பட்டங்களை சூட்டுகிறார்கள். சதா காலமும் இப்படியே தூற்றி, ஜனங்கள் நம்பும்படி செய்கிறார்கள். அதைப் போலவே தங்களுக்கு வேண்டிய ஒருவனைப் பெருமைப்படுத்த வேண்டுமானால், அவனுக்கு மகாத்மா, தேசப்பந்து, தீனபந்து, தேச உத்தாரகன், தேசோத்தாரணன் என்ற பெரிய பட்டங்களைக் கொடுத்து, எங்கும், எப்போதும், ஓயாது, கூசாது கூறி வருகிறார்கள். இந்தப் பதங்களில் கடுகளவு உண்மைகூட இல்லையென்று அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும், அவர்களுக்கு அந்தரங்க எண்ணத்தின்படி ஒருவனைத் தூற்றவோ, போற்றவோ, வசதியான காரணம் கற்பித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தினால், மனமறியப் பொய் சொல்லி நம்மை ஏமாற்றி  விடுகிறார்கள். தற்காலம் தமிழ்நாட்டிலே, தேச பக்தர்கள் என்று புகழப்படும் ஒரு சில ஆசாமிகளையும் தேசத் துரோகிகள் என்று இகழப்படும் ஒரு சில ஆசாமிகளையும், தினந்தோறும் அவர்கள் தலைமையில் ஏற்படும் புகழ்ச்சிக்கும் அவர்கள் எவ்வளவு தூரம் தகுதியுடையவர்கள் என்பதையும், நாம் மேலேகூறிய மனோதத்துவ நியதிப்படி ஆராய்ந்தால் தான் உண்மை புலப்படும்.

காங்கிரசின் இலட்சியம்

தர்ம ராஜ்யம் என்று சொல்லப்படுவதுடன், இப்போது ஒரு புதிய கட்சியும் “”தார்மீக தேசீயக் கட்சி” என்ற திருப்பெயருடன் (ஈடச்ணூட்டிஞி Nச்tடிணிணச்டூடிண்t கச்ணூtதூ) சென்னையில் ஸ்தாபிக்கப்பட்டு, பிரசாரம் செய்து வருகிறது. இந்தப் புதிய கட்சி, காங்கிரசுக்குட்பட்டதென்றும் இதன் அங்கத்தினர் எல்லோரும் காங்கிரஸ்காரர் என்றும் தேசத்தில் உள்ள சனாதனிகள் எல்லோரையும் காங்கிரசில் சேர்ப்பதே இதன் நோக்கமென்றும், இக்கட்சி ஸ்தாபகர்கள் சொல்லி வருகின்றனர். சனாதனிகளைக் காங்கிரசில் சேர்ப்பதன் உட்கருத்து, காங்கிரஸை முற்றிலும் சனாதன சபையாகச் செய்து, பார்ப்பன ஆதிக்கத்திற் குட்படுத்தவும், அதில் தற்போது கிளர்ச்சி செய்து வலுப்பெற்று வரும் சோஷலிஸ்ட் (அபேதவாதக்) கட்சியை அடக்கி ஒழிக்கவுமேயாகும். தீண்டாமை விலக்கு முதலிய போலிக் கிளர்ச்சியைக் கண்டு விலகிப் பயந்திருக்கும், சில வைதீகர்களுக்கு, “”நீங்கள் எங்கள் ஹரிஜனப் பிரசாரத்தைக் கண்டு மயங்க வேண்டாம். அது வெறும் வாய்ப் பேச்சு வேஷம். சன்னாசியின் விஷயத்தில் நாங்கள் நடந்து கொண்டதை இது சம்பந்தமாக காந்தியாரின் பேச்சை பாருங்கள். வர்ணாஸ்ரம தர்மத்தை எப்படியும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஆகையால் நீங்கள் எல்லோரும் காங்கிரஸில் சேர்ந்து எங்களுக்குப் பக்கபலமாயிருக்க வேண்டும்” என்று தைரியஞ் சொல்லி வைதீகர்களைச் சேர்த்துக் கொள்வதற்கென்றே இந்தப் புதிய கட்சி ஏற்பட்டிருக்கிறது.

சுயராஜ்யம், ராமராஜ்யம், தர்மராஜ்யம் ஆக மாறியதன் ரகசியத்தையும் இந்த மாறுதலால் விளையப் போகும் நன்மை தீமைகளையும் பற்றிச் சிறிது ஆராய்வது அவசியமாகும்.

சுதந்தரப் போர்

1857 ஆம் வருஷத்தில் இந்த நாட்டின் விடுதலைக்காக ஒரு துணிகரமான முயற்சி செய்யப்பட்டது. சில சிற்றரசர்களும் சேனைத் தலைவர்களும் சேர்ந்து, இந்தியாவிலிருந்து இங்கிலீஷ்காரரை ஓட்டி விடுவதென்று தீர்மானித்து தைரியமாகச் சண்டை ஆரம்பித்தனர். சண்டை ஆரம்பத்திலேயே, இந்தியாவின் பழய தலைநகராகிய டெல்லி, கலகக்காரர்கள் கைவசமாயிற்று. ஆறு மாதம் வரை டெல்லி கலகக்காரர் ஆட்சியில் இருந்தது. முடிவில் முயற்சி வெற்றியடையவில்லை. கலகக்காரர் தோற்றனர். இங்கீலிஷ் ஆட்சி முன்னிலும் பலமாக ஸ்தாபிக்கப்பட்டுப் போய்விட்டது. தேச சரித்திரத்தில் இந்நிகழ்ச்சி “இந்திய சிப்பாய் கலகம்’ என்று எழுதப்பட்டது தான் மிச்சம். அப்போது செய்யப்பட்ட சிப்பாய் கலகம் அல்லது சுதந்தரப் போர் எதற்காகச் செய்யப்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தால், சுயராஜ்யமோ, தர்மராஜ்யமோ ஸ்தாபிப்பதற்கல்ல என்பது விளங்கும். புதிதாய் வந்த இங்கிலீஷ் கம்பெனி ஆட்சிக்குப் பலம் பொருந்திய விரோதிகள் பலர் ஏற்பட்டனர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து எல்லோருக்கும் எதிரியான வெள்ளைக்காரரைத் துரத்திவிட முடிவு கட்டினர். வெள்ளைக்காரனைத் துரத்திய பின் என்ன செய்வது என்று தீர்மானிக்கவில்லை. ஆகையால் தான், டெல்லியைக் கைப்பற்றியவுடன் எந்த ராஜ்யத்தை ஸ்தாபிப்பது என்று தோன்றாமல், அங்கிருந்த மொகலாய வம்சத்தைச் சேர்ந்த ஒருவனைப் பாதுஷாவாக்கிப் பழய மொகலாய ராஜ்யம் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தினர். அதிலிருந்து ஆறுமாதம் வரை டெல்லிக் கோட்டையின் மேல் பறந்த கொடி சுயராஜ்ய, தர்மராஜ்ய, ராமராஜ்யக் கொடியல்ல; பழய மொகலாய சக்ரவர்த்திகளின் கொடி.

காங்கிரசின் தோற்றம்

இதற்கப்புறம் 30 வருஷங் கழித்து ஒரு ஆங்கிலக் கனவானின் (அ.O. ஏதட்ஞு) பெரு முயற்சியால் ஏற்பட்ட காங்கிரஸின் நோக்கமும் சுயராஜ்யம் அல்ல. இங்கிலிஷ் ஆட்சியில் சில சீர்திருத்தங்கள் பெறுவது குடியேற்ற நாட்டு அந்தஸ்து பெறுவது என்று தான் இருந்து வந்தது. சுயராஜ்யம் என்ற பதம் 1906ல் தான் முதலில் உச்சரிக்கப்பட்டது. இந்த 30 வருஷங்களில் அதன் பொருள் இன்னதென்று தெளிவாக நாளது வரை சொல்லி விளக்கப்பட வில்லை. சுயராஜ்யம் பூரண சுயராஜ்யமென்று விரிந்ததே ஒழிய, சுயராஜ்யத்தின் அடிப்படையான தத்துவங்கள்கூட எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடிய வகையில், இன்னும் விளங்கப்படவில்லை. இவ்வாறு மூடு மந்திரமாக விருந்த சுயராஜ்யம் என்பது, இப்போது ராமராஜ்யம் தர்மராஜ்யம் என்று பேசப்பட்டு வருவதிலிருந்து, காங்கிரஸ்காரர் கோரும் சுயராஜ்யத்தின் யோக்கியதை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடப்பட்டு வருகிறது.

சுயராஜ்யம் என்ற வார்த்தைக்குச் “சொந்த அரசன் ஆளும் இடம் அல்லது நாடு’ என்றுதான் அர்த்தம். அதாவது நமக்குள் ஒரு அரசனை (இந்துவோ, மஹம்மதியனோ, 1857ல் மொகலாய வார்சு முன் நின்றது) ஏற்படுத்தி நம்முடைய நாட்டை, நம்முடைய அரசனைக் கொண்டு ஆள்வது என்றுதான் தாராளமாய் பொருள் கொள்ளலாம். எப்படியாயினும், சுயராஜ்யம் என்ற சொல்லில் கோலாட்சி தான் குறிக்கப்படுகிறதேயல்லாமல், குடியாட்சி குறிக்கப்படுவதாகக் கொள்வதற்கில்லை. சுயாட்சி என்று சொன்னால், நம்முடைய குடிகள் ஆட்சி, அரசர் ஆட்சி என்ற இரண்டிற்கும் பொருந்தும் ராஜ்யமும் ஆட்சியும் ஒன்று என்றே வழக்கத்தில் பேசப்பட்டு வருவதிலிருந்து சுயராஜ்யம் என்ற லக்ஷியத்தின் முழு விவரத்தையும் பெரும்பாலார் உணரவில்லை யென்று தான் சொல்ல வேண்டும்.

ஆயினும் இந்த “சுயராஜ்யம்’ என்று அர்த்தமில்லாத ஒரு வார்த்தையானது, காந்தியின் காங்கிரஸ் நிர்வாகத்தின்போது, பெரியதோர் மந்திர வார்த்தையாகிக் கேட்ட மாத்திரத்தில், சாமான்ய ஜனங்கள் என்னென்னவோ பகற்கனவுகள் காணும்படி செய்து வந்தது. “”சுயராஜ்யம் வந்ததும், நாட்டில் பொன்னும் பொருளும் மலிந்து விடப்போகிறது. பாலும் தேனும் பாய்ந்தோடப் போகிறது. அணாவிற்கு ஆறு படி அரிசி விற்கப் போகிறது; ஒருவரும் கஷ்டப்பட வேண்டியதில்லை, வரியில்லை, வழக்கில்லை, சட்டமில்லை, தண்டனையில்லை, கட்டுப்பாடில்லை” யென்று தேசபக்தர்கள் கூறி வந்தார்கள். அதற்கு ஏற்றாப்போல் காந்தியும், “”ராட்டையை எடு, ரட்டைக் கட்டு; வீட்டை மெழுகு, விளக்கெண்ணை விளக்கையேற்று, லக்ஷிமி வரப் போகிறாள்” என்று நம்பிக்கையோடு உபதேசம் செய்து வந்தார். இதையெல்லாம் கவனிக்கும்போது, சுயராஜ்யம் என்று உரு ஜபித்தவர்களில் ஒரு சிலராவது அதன் உண்மைத் தன்மையென்ன, அதனால் என்ன மாறுதல் எவ்வளவு தூரம் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்து பேசினார்கள் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறோம்.

ராமராஜ்யம்

ஒத்துழையாமை இயக்கம் மும்முரமாய் நடத்தப்பட்ட போதெல்லாம் சுயராஜ்யமே குறிக்கோளாக இருந்து. இரண்டு முறை சட்ட மறுப்பு  இயக்கம் தோல்வியுற்று, ஒத்துழையாமையே செத்தொழிந்த பிறகு, ராமராஜ்யம் தர்மராஜ்யம் என்று பகிரங்கமாக இப்போது சொல்லப்பட்டு வருவதைக் கவனிக்க வேண்டும். முதன்முதலில் காந்தியார் ஒத்துழையாமை ஆரம்பித்த போது மகம்மதியரும் பெரும்பாலும் அவ்வியக்கத்தை ஆதரித்து வந்தனர். (அப்போது அவர்களுக்குக் கிலாபத்துப் பித்தும் அதிகமாயிருந்தது. இந்து மகாசபையும் இப்போதிருப்பதைப்போல அவ்வளவு பிரபலமாயில்லை) ஆகையால், அப்போது ராமராஜ்யம் தர்மராஜ்யம் என்ற பேச்சு வெளியில் வரவில்லை. வந்திருந்தால் மகமதியர்கள் அதன் தலையில் அடித்திருப்பார்கள். பிற்பாடு மகமதியர் காங்கிரசிலிருந்து பிரிந்து நின்றனர். இரண்டாவது, மூன்றாவது சத்தியாக்கிரஹத்தில் மகமதியர் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ், பெரும்பாலும் இந்துக்கள் சபையாக மாறிய பிறகுதான், ராமராஜ்யம் என்ற பேச்சும் கிளம்பியது. இனிமேல் மகமதியரைப் பற்றிக் கவனிப்பதில் பயனில்லை. அவர்கள் (3ந் தரம், 4ந் தரம் ஆளுகளைத் தவிற மற்றவர்கள்) காங்கிரசில் சேர மாட்டார்கள் என்று தெரிந்துவிட்டதாலும், இனிமேல் ஏமாற்றப்பட வேண்டியவர்கள் இந்து சமுதாயத்தின் பாமர மக்களேயென்று தீர்மானமாகத் தெரிந்து விட்டதாலும் இந்து சமூகப் பாமரர்களை, அவர்களது கடவுள் பெயராலும், கடவுள் அவதாரங்களான இராமன், கிருஷ்ணன் பெயராலும் ஏமாற்றுவது எளிதெனக் கண்டதாலுமே, காந்தியும் அவரது சீடர்களும் பகிரங்கமாக “”நாம் கோருவது ராமராஜ்யம், தர்மராஜ்யம்” என்று சொல்லத் துணிந்தார்கள்.

ராமராஜ்யத்தின் யோக்கியதை

ராமாயணம் என்பதில் வெகு தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ராமனுடைய ராஜ்யத்தில் சூத்திரன் ஒருவன் தவம் செய்ததால் பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைந்ததாகவும், தங்களுக்கு உரிய தொழிலைச் சூத்திரன் செய்ததால் தான் தங்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்தது (சிறுவன் இறந்தான்) என்று இராமராஜ்யத்தில் உள்ள பிராமணர்கள் அரசனாகிய இராமனிடம் பிராது செய்ததாகவும், பிராது விசாரித்து நீதி செலுத்துகிற முறையில் இராமன் அந்தச் சூத்திரனைத் தவம் செய்த தப்பிதத்திற்காகத் தலையைக் கொய்து தர்மம் நிலை நிறுத்தினான் என்றும் ராமாயணத்தில் விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ராமன் பெரிய வர்ணாச்சிரமக்காரன் என்றும், அவனது ஆட்சி முறை வர்ணாச்சிரம பாதுகாப்பு என்றும் பிராமண பக்தனென்றும் யாரும் சந்தேகமறத் தெரியக் கூடும். இவ்வாறு நீதி புரிந்து ஆட்சி செய்த இராமனுடைய ஆட்சியைப் போல் ஆட்சி முறை ஏற்படுத்துவதுதான் காங்கிரசின் நோக்கம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று இப்போது பகிரங்கமாகவே சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கோரும் இந்த இராமராஜ்யத்தின் கீழ் நாட்டில் உள்ள மக்கள் எல்லோரும் சமத்துவமும், சமஉரிமையும், சுயமரியாதையும் பெற்று, ஜாதி வித்தியாசக் கொடுமைகளினின்றும் நீங்கிச் சமத்துவம் பெற்று சுகம் பெறக் கூடும் என்று இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும், பார்ப்பனரல்லாதாரின் நம்பிக்கை பெரிதா அல்லது அவர்களின் மூளை கெட்ட தன்மை பெரிதா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

தர்மராஜ்யத்தின் யோக்கியதை

தர்ம சாஸ்திரங்கள் என்பனவற்றில் மிகத் தெளிவாகவே சொல்லப் பட்டிருக்கிறது. புண்ணிய பூமியாகிய இப்பரத கண்டத்திலே, அநாதி வேதங்களால் சொல்லப்பட்டதும், தர்மம் குலைந்து அதர்மம் தலையெடுத்த காலங்களிலெல்லாம் அவதாரஞ் செய்து துஷ்ட நிக்கிரகமும் சிஷ்ட பரிபாலனமும் செய்து தர்மத்தை நிலைநாட்டிய கடவுளாலேயே ஏற்படுத்தப் பட்டதுமாகிய வர்ணாச்சிரம தர்மம் என்றும் நிலை பெற்று அமுல் நடத்தவும், தர்ம தேவதை நான்கு பாதங்களிலும் நடமாடவும், மனுமுறைப்படி மன்னன் கோலோச்சவும், மக்கள் தங்கள் குலாசார சாதியாசாரப்படி தங்கள் கடமைகளைச் செய்யவும், சூத்திரன் மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் ஊழியஞ் செய்து மறு ஜன்மத்தில் வைசியனாகப் பிறக்கலாம் என்ற நம்பிக்கையில் களித்திருக்கவும், வைசியன் தனக்கு விதிக்கப்பட்ட தொழிலை நடத்தி அரசனுக்கு வேண்டும் போது தன தானியாதிகளைக் கொடுத்து உதவுவதும், பிராமணர்களுக்குத்தான தர்மங்களை விசேஷமாக செய்து அவர்களோடு சிற்சில சமயங்களில் “மனவாள்லு’ என்று சொந்தம் பாராட்டிக் கொள்ள உரிமை பெறுவதுமே தன் கடமை யென்று கருதி, அவ்வாறு நடப்பதன் மூலம் அடுத்த ஜன்மத்தில் க்ஷத்திரியனாகப் பிறக்கலாம் என்று நம்பிக்கை கொண்டு சந்தோஷப்படவும், க்ஷத்திரியன் பிராமணருக்கு வேண்டிய சௌகரியங்களைத் தேடிக் கொடுத்து, சிஷ்டபரிபாலனஞ் செய்வதும், வேத வித்தகர்க்கு ஏற்படும் விபத்துகளைத் தடுத்து அவர்களின் விரோதிகளான துஷ்டர்களை நிக்கிரஹஞ் செய்வதுமே தன் குலதர்மம் என்று எண்ணி நடக்கவும், அவ்வாறு நடப்பதின் நிமித்தம் மறு ஜன்மத்தில் புனிதமான பிராமண ஜன்மம் பெறலாமென்று எண்ணி மனங் களித்திருக்கவும், அரசன், தினம் லக்ஷம் பிராமண போஜனம் செய்விப்பதாலும், அநேக யாகங்கள் செய்து வைப்பதாலும் 100 அஸ்வமேத யாகம் செய்து முடிப்பதாலும், இந்திரப் பதவி பெற்று, மேனகை ஊர்வசி முதலிய தேவமாதர்களைக் கூடிச் சதாகாலம் இன்புற்றிருக்கலாமென ஆசை கொண்டு நடக்கவும், பிராமணனோ, அரசனுக்கு துணையாக அறிவுப் பொக்கிஷமென்று இருந்து கொண்டு, புதிது புதிதாகப் புராணங்களையும், ஸ்மிருதி சுருதிகளையும், தர்மசாஸ்திரங் களையும் ஏற்படுத்திக் கொண்டு, நாடு முழுவதும் தங்களது ஏகபோக மான்யமாக அனுபவிக்கவும், அரசனைப் பார்த்து நாட்டைக் கொடு என்றால் நாட்டைக் கொடுக்கவும், மகனை கொடு என்றால் மறுக்காமல் கொடுக்கவும், பெண்டாட்டியை கொடு என்றால் பேசாது கொடுக்கவும் அப்படி நடப்பதுதான் அரச தர்மம் என்றும், அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்று குடிகளும் அவ்வாறே நடக்க வேண்டுமென்றும் தர்ம சாஸ்திரங்களை நாடெங்கும் அனுசரிக்கும்படி பிரசாரம் செய்து தங்கள் இனவிருத்திக்கு உழைப்பது தங்கள் கடமை, குலாசாரம் என்று பிராமணன் நடந்து கொண்டு வரவும், இவ்வாறு நான்கு ஜாதியாரும் வர்ணாச்சிரமத்தைக் கடைப்பிடித்து நடப்பதற்குச் சாதகமான ஆட்சி முறையே தர்மராஜ்யம் ஆகும். அப்போது பசுவும் புலியும் ஒரு துறையில் நீர் குடிக்கும் என்பதில் என்ன சந்தேகம்? இவ்விதமான தர்மராஜ்யத்தை ஏற்படுத்துவதே காங்கிரஸின் குறிக்கோள் என்று இப்போது காங்கிரஸ்காரர் தெள்ளத் தெளியச் சொல்லுகிறார்கள்.

இங்கிலீஷ் அரசாங்கம் இன்று அசைக்க முடியாதபடி பலமாய் இருக்கிற இந்தக் காலத்திலேயே, வாய் கூசாமல் ராமராஜ்யம் தர்மராஜ்யம் ஏற்படுத்தப் போகிறோம் என்று ஒரு கூட்டத்தார் பகிரங்கமாகச் சொல்லத் துணிந்திருக்கிறார்கள் என்றால், இவர்களின் நெஞ்சுத் துணிவை மெச்சுவதா? அல்லது இதைக் கேட்டுக் கொண்டு, இவர்களுக்கு ஆதரவாயிருந்து கூடச் சேர்ந்து கோவிந்தா போடுகிற “”வானர சைன்யம்” என்று பட்டம் பெற்று வருகிற பாமர மக்களின் முட்டாள்தனத்திற்கு வருந்துவதா என்று தெரியவில்லை.

குடி அரசு  கட்டுரை  01.09.1935

You may also like...