குல்லூக பட்டரின் குயுக்தி வாதம்

 

தோழர் ராஜகோபாலாச்சாரியார் வக்கீல் தொழிலை விட்டுவிட்டாலும், அவருடைய அரசியல் வாதங்களில் எல்லாம், வக்கீல் போலவே நடந்து வருகிறார் என்பது வெளிப்படை. அவருடைய வாதங்கள் எல்லாம் குயுக்தி வாதங்களும், குதர்க்க வாதங்களுமாகவே இருப்பது வழக்கம். பொது ஜனங்களை ஏமாற்றும் விதத்தில் பொருத்தமான புளுகுகளுடன் கூடிய வரட்டு வாதஞ் செய்வதில் அசகாய சூரர் என்பது புதிதல்ல.

உதாரணமாக ஆலயப் பிரவேச மசோதா விஷயமாக அவர் கூறும் வாதத்தைக் கவனித்தால் உண்மை விளங்கும்.

பொப்பிலி ராஜா அவர்கள், தமது தேர்தல் பிரசங்கத்தில் ஆலயப் பிரவேச மசோதா பாழானதற்குக் காங்கிரசே காரணம் என்று உண்மையை உரைத்தார். அதற்கு தோழர் சி.ஆர்.சொல்லியிருக்கும் பதில் மிகமிக விசித்திரமானது. “”ஆலயப் பிரவேசம் சம்பந்தமான ஒரு வழக்கத்தை மாற்றுவதற்கு ஒரு அகில இந்திய சட்டந்தான் தேவை என்ற கஷ்டமான நிலைமையை ஏற்படுத்தியதற்குப் பிரதம மந்திரியும் அவர் கட்சியும் தான் பொறுப்பாளி” என்று குற்றஞ்சாட்டுகிறார்.

இதன் உண்மையை ஆராய்வோம். ஆலயப் பிரவேச மசோதாவுக்கு அனுமதி கொடுக்க வேண்டுமென்று டாக்டர் சுப்பராயன் சென்னைச் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். கவர்னர் ஜெனரல் இது எல்லா இந்தியா விஷயம் என்று சொல்லி தீர்மானத்தை அனுமதிக்க மறுத்து விட்டார்.

பிறகு இந்திய சட்டசபையில் காங்கிரஸ்காரர்களின் முயற்சியினாலும், தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் அதி தீவிர பிரயாசையினாலும், தோழர் சி.எஸ். ரங்கய்யர் அவர்களால் ஆலயப் பிரவேசம் சம்பந்தமாக ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. கடைசியில் அத்தீர்மானம், காங்கிரஸ் காரரின் எதிர்ப்பினாலேயே அதுவும் தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் அறிக்கை காரணமாகவே வாப்பீஸ் வாங்கிக் கொள்ளப்பட்டது. இவ்விஷயத்தை தோழர் சி.எஸ். ரங்கய்யர் அவர்களே தமது பிரசங்கத்தில் சட்டசபையில் எடுத்துக் காட்டியிருக்கிறார். காங்கிரசின் துரோகத்தி னாலேயே தான் வாப்பீஸ் வாங்கிக் கொள்ளுவதாகக் கூறியிருக்கிறார். ஆகவே யார் ஆலயப் பிரவேச மசோதா குட்டிச்சுவர் ஆனதற்குக் காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

அன்றியும், இவ்விஷயம் அகில இந்தியாவைப் பொறுத்ததென்பதில் என்ன சந்தேகம்? சென்னையில் மாத்திரம் கோயிலுக்குள் தீண்டாதார் போகலாம் என்று தீர்மானம் செய்துவிட்டால் இந்தியா முழுவதிலும் உள்ள தீண்டாதார்க்கு எப்படி விமோசனம் ஏற்பட முடியுமா? சென்னையிலிருந்து வெளி மாகாணத்திற்குச் செல்லும் ஒரு தீண்டாதார் அங்குள்ள ஆலயங்களில் நுழைய முடியாதல்லவா? ஆதலால் இது அகில இந்தியாவையும் பொறுத்த விஷயம் என்று கவர்னர் ஜெனரல் கூறிய பதிலில் என்ன தவறு? அந்த முடிவின் பிறகு ஜஸ்டிஸ் கட்சியினர் பேசாமல் இருந்ததில் என்ன குற்றம்?

இக்கொள்கை சரியென்று ஒப்புக் கொண்டுதானே அப்பொழுது நமது ஆச்சாரியார் இந்தியச் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப் பகீரதப் பிரயத்தனம் பண்ணினார்?

அப்பொழுது செய்ததற்கும், இப்பொழுது பேசுவதற்கும் என்ன சம்பந்தம்? இதிலிருந்தே அவரது வாதங்களும், அரசியல் போக்கும், எப்படிப்பட்டது என்பது விளங்குகிறதல்லவா?

குடி அரசு  கட்டுரை  07.04.1935

You may also like...