ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் கமிட்டி
ஈ.வெ.ராமசாமி திட்டம் ஒப்புக்கொள்ளப்பட்டது
14.11.35 தேதி மாலை 3 மணிக்கு சென்னை தியாகராயர் மண்டபத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் (ஜஸ்டிஸ் கட்சியின்) நிர்வாக சபைக் கூட்டம் கூடிற்று.
இக்கூட்டத்திற்குத் தோழர்கள் பொப்பிலி ராஜா, சர். மகமது உஸ்மான், பி.டி. ராஜன், திவான் பகதூர் குமாரசாமி ரெட்டியார், பி.டி. குமாரசாமி செட்டியார், சர். எ.பி.பாத்ரோ, வெங்கிட்ட கிரி ராஜா, மீர்சாபூர் ராஜா, கள்ளிக்கோட்டா ராஜா, டாக்டர் சி. நடேச முதலியார், ஈ.வெ. ராமசாமி, சி.வி. ராமன், திவான்பகதூர் அப்பாதுரை பிள்ளை, சி. ஜயராம் நாயுடு, சி.டி. நாயகம், வி.வி. ராமசாமி, ஜம்புலிங்க முதலியார், பொன்னம்பலனார், கே.வி. அழகர்சாமி, ஏ.எஸ். அருணாசலம், கே.எம். பாலசுப்பிரமணியம், டி.எ.வி. நாதன், கி.ஆ.பெ. விஸ்வநாதம், டி.வி. சுப்பிரமணியம், வாசுதேவ், ஆரணி சுகந்த முதலியார், என்.ஆர். சாமியப்பா, சி.எல். நரசிம்ம ரெட்டி, சுந்தரராவ் நாயுடு, ஆர். மதனகோபால் நாயுடு, ரங்கராமானுஜன், டப்பள்யூ.எஸ். கிருஷ்ணசாமி நாயுடு, முத்துக்குமாரசாமி முதலியார், கிருஷ்ணா ரெட்டியார், அப்துல்ரஜாக் சாயபு, தளவாய் ரங்கநாத முதலியார் முதலிய சுமார் 35 அங்கத்தினர்கள் விஜயம் செய்திருந்தார்கள்.
கூட்டத்திற்குத் தோழர் திவான் பகதூர் அப்பாதுரை பிள்ளை அவர்கள் தலைமை வகித்து கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துச் சொன்னார்.
பிறகு தோழர் பொப்பிலி ராஜா எழுந்து தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களால் ஜஸ்டிஸ் கட்சிக்கு அனுப்பி இருக்கும் வேலைத் திட்டத்தைப் பிரரேபிக்கும்படி தோழர் ராமசாமியைக் கேட்டுக் கொண்டார்.
தோழர் ராமசாமி எழுந்து தான் அனுப்பிய தீர்மானம்* ஒரு வருஷத்துக்கு முன் கூடிய மாகாண மகாநாட்டிலேயே ஒப்புக் கொள்ளப்பட்டதென்றும், அது இரண்டு மூன்று தடவை பரிசீலனை செய்து திருத்தப்பட்டதென்றும், விருதுநகர் மகாநாட்டில் எல்லாப் பிரமுகர்களும் இருந்து நன்றாய் விவகரித்து ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறதென்றும், கட்சியின் நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் ஒப்புக் கொண்டு இதை வேலைத் திட்டத்தில் சேர்த்து அவைகளை அமுலுக்கு கொண்டு வரவேண்டு மென்றும், பொது ஜனங்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டுமென்றும் முக்கியமாய் நம் எதிரிகளும் நம் இயக்கத்திலேயே உள்ள சில வம்பர்களும் இதை ஒரு காரணமாய் வைத்து இன்னும் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்று சொல்லி விஷமப் பிரசாரம் செய்கிறார்கள் என்றும், ஆதலால் அதை ஒப்புக் கொண்டு அமுலுக்கு வரக் கூடுமான காரியங்களைச் செய்ய வேண்டும் என்றும் சொல்லி தீர்மானங்களைப் பிரரேபித்தார். தோழர் பாசுதேவ் எம்.எல்.சி. அவர்கள் ஆதரித்தார்.
உடனே சர்.எ.பி.பாத்ரோ அவர்கள் எழுந்து தீர்மானங்கள் மிகவும் யோசித்து ஒப்புக் கொள்ளக்கூடியதாயிருக்கின்றன. அவசரப் படக் கூடாது என்று சொல்லி அதற்கு ஒரு சப் கமிட்டி நியமிக்க வேண்டும் என்று சொன்னார். இதை சர். மகமது உஸ்மான் அவர்களும் வெங்கிட்ட கிரி ராஜா அவர்களும் கனம் பி.டி.ராஜன் அவர்களும் ஆதரித்து சப் கமிட்டி நியமிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
தோழர்கள் மதனகோபால் நாயுடு, கள்ளிக்கோட்டா ராஜா, நரசிம்மரெட்டி, அழகர்சாமி, டாக்டர் சி. நடேச முதலியார், பாலகிருஷ்ணநாயுடு, பாலசுப்பிரமணியம் முதலியவர்கள் தீர்மானத்தை ஒப்புக் கொள்ளலாம் என்றும், இது மிகவும் சரியான திட்டம் என்றும், இவற்றில் பல ஏற்கனவே ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கையாய் இருந்து வருகின்றனவென்றும் பாக்கியும் முன்னமேயே இருந்திருக்க வேண்டியவை என்றும் சொன்னார்கள்.
சர். பாத்ரோ அவர்கள் மறுபடியும் எழுந்து இவற்றில் பல தீர்மானங்கள் மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த வேலைகள் என்றும் இந்த அரசாங்கத்தின் மூலம் செய்ய முடியாதவைகள் என்றும் பொதுவாக கான்பரன்ஸ்தான் இதைப்பற்றி யோசிக்க வேண்டும் என்று சொல்லி மறுபடியும் எதிர்த்தார்.
ஏதோ ஒரு விதமாய் தலைவர் தீர்மானம் எழுதப் போகும் சமயத்தில் “”இதை ஓட்டுக்கு விடு முன் தோழர் ராமசாமி அபிப்பிராயம் என்ன என்பது தெரிய வேண்டு”மென்று தோழர் டி.வி.சுப்பிரமணியம் அவர்கள் சொன்னார். தோழர் இராமசாமி தனக்கு கடைசியில் பதில் சொல்ல சந்தர்ப்பம் அளிக்கப்படுமென்றும் அப்போது சொல்வதாகவும் சொன்னார்.
பிறகு பொப்பிலி ராஜா அவர்கள் எழுந்து இத் தீர்மானம் ஒரு வருஷத்துக்கு முன் மகாநாட்டின்போதே கொள்கைகளில் ஒப்புக் கொள்ளப்பட்டது என்றும், வாசக திருத்தங்களுக்காக 2, 3 கூட்டங்கள் கூடி சர். ஷண்முகம், சர். பாத்ரோ, வெங்கிட்ட கிரி ராஜா, சர். உஸ்மான் உள்பட பல பிரமுகர்கள் இருந்து பரிசீலனை செய்யப்பட்டிருக் கிறதென்றும், நமது இயக்கம் எல்லா இந்திய இயக்கமானதால் இங்கு செய்யக்கூடியதை இங்கும் மத்திய அரசாங்கத்தில் செய்யக் கூடியதை அங்கும் செய்யலாம் என்றும், இத்தீர்மானங்களில் பலவற்றை நாம் அமுலில் கொண்டுவர ஏற்கனவே முயன்று வேலை செய்து வருகிறோம் என்றும், இனி இதை ஒத்தி வைக்கக் கூடாதென்றும் இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்றும் சொன்னார். உடனே தோழர் சர். மகமத் உஸ்மான் எழுந்து,
“”தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் வேலைத் திட்டத்தை இக்கமிட்டி ஒப்புக் கொள்ளுகிறது. அதை ஜஸ்டிஸ் கட்சி வேலைத் திட்டமாக ஏற்று தங்கள் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியது” என்று தீர்மான ரூபமாக பிரேரேபித்தார், அதை பொப்பிலி ராஜா ஆமோதித்துவிட்டு ஓட்டுக்குவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தலைவர் தீர்மானத்தை வாசித்துவிட்டு ஓட்டுக் கேட்டார். எல்லோருமே ஓட்டுக் கொடுத்தார்கள். எதிராக சர்.ஏ.பி.பாத்ரோ அவர்கள் மாத்திரம் கை தூக்கினார். தீர்மானம் நிறைவேறியதாக தலைவர் சொன்னார்.
பிறகு பிரசார விஷயமாய் யோசிக்கப்பட்டது.
தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் எழுந்து, “”வேறு ஜனங்கள் நம்மிடம் வந்து புதிதாக சேராவிட்டாலும் நம் கட்சியில் இருக்கிறவர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறார்கள்” என்றும், இதற்கு காரணம் பிரசாரமின்மைதான் என்றும், கிராம ஜனங்களுக்கு காங்கிரஸ் விளம்பரம் தான் போய் எட்டுகிறதே தவிர நம் கட்சி பிரசாரம் தெரிவதில்லை என்றும், நாம் பொது மக்களுக்குச் செய்த நன்மைகளை காங்கிரஸ்காரர்கள் செய்ததாக கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், காங்கிரசினால் ஏற்பட்ட கெடுதிகள் நம்மால் ஏற்பட்டதாக கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இதற்கு காரணம் காங்கிரசின் விஷமப் பிரசாரத்துக்கும் பார்ப்பனப் பத்திரிகைகளின் அயோக்கியத்தனத்துக்கும் எல்லை கடந்து போய்விட்டது தான் என்றும் சொல்லி தன் பாக்கெட்டிலிருந்த ஒரு பத்திரிகையை எடுத்துக் காட்டி அதில் பொப்பிலி ராஜாவைப் பற்றி எழுதி இருக்கும் சில பொய்யும், போக்கிரித்தனமானதுமான வாசகங்களை படித்துக் காட்டி இதற்குத் தகுந்தபடி ஏற்பாடு செய்யவில்லையானால் காலிகளுக்கும் பார்ப்பன விஷமப் பிரசாரத்துக்கும் பயந்து பொப்பிலி ராஜாகூட காங்கிரசில் சேர வேண்டி வந்தாலும் வரும் என்றும் (பெரிய சிரிப்பு) ஏனென்றால் காங்கிரஸ் பத்திரிகைகளும் அவர்கள் கூலிகளும் எவ்வளவு காலித்தனமாக எழுதவும், பேசவும் செய்கின்றன என்றும், அதைக் கண்டு இப்போது பல பிரமுகர்கள் பயந்து போய் காங்கிரசில் சேர்ந்தால் வசவு இருக்காது செலவு இருக்காது என்று கருதுகிறார்கள் என்றும், இதை இப்படியே வளரவிடுவது மிகவும் கோழைத்தனம் என்றும், இன்று மீனாம்பள்ளி ஜமீன்தார் ஒரு சாதாரண மனுஷரின் போட்டியில் வெகு கஷ்டப்படுகிறார் என்றும், பல ஜமீன்தாரர் களுக்கு தங்கள் எல்லையிலேயே சாயம் போய்க் கொண்டிருக்கிறது என்றும், அது எப்படிப் போனாலும் முதலில் பார்ப்பனீயத்தை ஒழிக்க ஒரு ஏற்பாடு செய்து தகுந்த கொள்கைகளுடன் தகுந்த பிரசாரம் செய்து எதிரிகளின் தொல்லையை சமாளிக்க வேண்டும் என்றும் விடுதலை தினசரி ஆக வேண்டும் என்றும் சொன்னார்.
தோழர் கனம் பி.டி.ராஜன் அவர்கள் எழுந்து தோழர் ராமசாமி சொன்னது அவ்வளவும் சரி என்றும், தோழர் ராமசாமி அவர்கள் தனது தோழர்களுடன் தன்னுடைய சொந்த செலவிலேயே பிரசாரம் செய்து கொண்டு வருகிறார் என்றும், அதை பாராட்டுவதோடு நின்று விடாமல் பலமான பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் விடுதலை தினசரி ஆவதற்கு தக்க ஏற்பாடுகள் நடக்கின்றன என்றும் சொன்னார்.
பொப்பிலி ராஜா அவர்கள் எழுந்து அந்த அந்த ஜில்லாகாரர்கள் அந்த அந்த எல்லையைக் கவனித்துக் கொண்டால் நலமாய் இருக்கும் என்றும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் சொன்னார்.
பிரசார கஷ்டத்தைப் பற்றி தோழர்கள் கே.எம். பாலசுப்பிரமணியம், கே.வி.அழகிரிசாமி, மதுரை அருணாசலம் ஆகியவர்கள் பேசுகையில் பிரசாரத்தின்போது பார்ப்பன போலீஸ் அதிகாரிகள் செய்யும் அக்கிரமங்களையும், பார்ப்பன நிர்வாக அதிகாரிகள் செய்யும் அக்கிரமங்களையும், லால்குடி முதலிய சம்பவங்களையும் எடுத்துச் சொல்லி அரசாங்கத்தார் கவனிக்காமல் இருப்பதை தாக்கிப் பேசினார்கள்.
தோழர் அருணாசலம் பேசுகையில் காங்கிரஸ் சட்டசபை மெம்பர்கள் தங்கள் கட்சி சம்மந்தமாயும், தங்கள் கட்சி நபர்கள் சம்மந்தமாகவும் சட்டசபையில் அனேக கேள்விகள் கேட்கின்றார்கள் என்றும், ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர்களை பிரசாரகர்களை போலீசார் செய்யும் கொடுமையைப் பற்றியும் ஜெயிலில் நடத்தும் கொடுமையைப் பற்றியும் உபாத்தியாயர்கள் செய்யும் அயோக்கியத்தனங்களைப் பற்றியும் சிறிதும் கவனிப்பதில்லை என்றும், ஒரு கேள்விகூட கேட்பதில்லை என்றும் சொல்லி சட்டசபை மெம்பர்களையும் இலாக்கா மந்திரிகளையும் தாக்கி பேசினார். பிறகு கட்சி திட்ட விஷயமாய் மற்றும் என்ன என்ன திட்டங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க கீழ்க்கண்டவர்கள் அடங்கிய ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது.
தோழர்கள் பொப்பிலி ராஜா, சர். மகமது உஸ்மான், கனம் பி.டி. ராஜன், கனம் எஸ். குமாரசாமி ரெட்டியார், ஈ.வெ. ராமசாமி, டாக்டர் நடேச முதலியார், கே.எம். பாலசுப்பிரமணியம், வெங்கிடகிரி ராஜா மற்றும் 3 பேர்களை சேர்த்துக் கொள்ள அதிகாரம் கொடுக்கப் பட்டது. பிறகு ஒரு டீ பார்ட்டி நடந்தது.
குடி அரசு சொற்பொழிவு 17.11.1935