சனாதனப்  பார்ப்பனர்  மகாநாடு

 

சென்ற வாரம் தஞ்சையில் சனாதனப் பார்ப்பனர்கள் மகாநாடு  ஒன்று கூட்டப்பட்டு அதில் அடியில் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.

“”சனாதன  தர்மத்தை  நிலைபெறச்  செய்யத்தக்க  சுதேசி  கைத்தொழில்களை  ஆதரிக்க  வேண்டும்.  சனாதன  தர்மத்தை  பாதுகாக்க  ஒரு  நிதி  திரட்ட  வேண்டும்.

குருகுலங்கள்  ஆரம்பித்து  புராணங்களை  போதிக்க  வேண்டும்.  பார்ப்பனர்கள்  சமுதாயப்  பழக்க  வழக்கங்களுக்கும்,  சாஸ்திரங்களுக்கும்  விரோதமில்லாமல்  நடக்க  வேண்டும்.

பிராமணர்களுக்கு  சாகுபடிக்காக  சர்க்காரார்  நிலங்கள்  வழங்க  வேண்டும். பிராமணர்களிடையே ஏற்பட்டுள்ள வேலையில்லாத்  திண்டாட்டத்தைப்  போக்க  வேண்டும்.

பிராமணர்களுக்கு  வேலையில்லாத்  திண்டாட்டத்தைப்  போக்க  மற்ற  ஜாதியார்கள்  அடியில்  கண்ட  முறைகளால் ஏற்பாடு  செய்ய  வேண்டும்.

(அ)       திண்ணைப்  பள்ளிக்  கூடங்கள்  வைக்க  வேண்டும்.

(ஆ)      அறுவடையின்போது  பிராமணர்களுக்கு  தானியங்கள்  கொடுக்க  வேண்டும்.

(இ)       விசேஷ  தினங்களில்  பிராமணர்களுக்குச்  சன்மானங்கள்  வழங்க  வேண்டும்.

(ஈ)        கிராமங்களில்  பிராமணர்களைக்  கொண்டு  புராணக்  காலச்÷க்ஷபங்கள்  செய்விக்கச்  செய்ய  வேண்டும்.

(உ)       பிராமணர்களை  ஆயுர்வேத  வைத்தியர்களாக  தர்ப்பித்து  செய்து  அவர்களிடம்  வைத்தியம்  பார்த்துக்  கொள்ள  வேண்டும்.

(ஊ)      பிராமணர்கள்  லேவாதேவி  தொழிலில்  ஈடுபடவேண்டும்.

கூட்டுக்  கமிட்டி  அறிக்கை

(அ)       கூட்டுக்  கமிட்டி  அறிக்கையில்  இந்தியர்களில்  ஒவ்வொரு  வகுப்பாருக்கு  மத  சுதந்திரமளிக்க  வேண்டும்.

(ஆ)      மத  சம்பந்தமான  சட்டம்  செய்வதில்  வைசிராயுக்கும்  கவர்னர்களுக்கும்  பாதுகாப்புகள் இருக்க வேண்டும்.

(இ)       அவர்கள்  சம்மந்தமில்லாமல்  மத  சம்பந்தமாக  எந்தவித  சட்டமும்  கொண்டு  வரக்  கூடாது.

(ஈ)        மத  குருக்களின்  அபிப்பிராயப்படி  சர்க்கார்  மத  விஷயத்தில்  நடக்க  வேண்டும்.

(உ)       இந்து  மதக்  கொள்கைகளைப்  பிரசாரம்  செய்ய  வேண்டும்.

(ஊ)      இந்துக்களை  வேறு  மதத்துக்கு  விடக்  கூடாது.

சாரதா  சட்டம்

இந்து மதப் பெற்றோர்களுக்கு விவாக விஷயத்தில் பூரண  அதிகாரமிருப்பதால்  சராதா  சட்டம்  செல்லாது.  ஆதலால்  அதை  ரத்து  செய்து  விட  வேண்டும்.

சிறுவர்  சிறுமிகளை  15  வயது  வரை  அயல்  மதங்களைப்  போதிக்கும்  பள்ளிக்  கூடங்களுக்கு  அனுப்பக்  கூடாது”  என்பதாக  பல  தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இந்த  மகாநாட்டுக்குத்  தலைமை  வகித்தவர்  ஒரு  வக்கீலாயிருந்தவரும்,  ஜில்லா  முனிசீப்பு,  ஜில்லா  ஜட்ஜி  ஆகிய  உத்தியோகங்களில்  இருந்து  பென்ஷன்  பெற்று  விலகினவரும்,  சனாதன  பார்ப்பனர்  என்று  தன்னை  சொல்லிக்  கொள்ளும்  ஒரு  பார்ப்பனராகும்.  இவரது  அக்கிராசனப்  பிரசங்கத்தில்,

பிராமணர்களுக்கு  ஆங்காங்கு  சங்கங்கள்  இருக்க  வேண்டுமென்றும்,

அடிக்கடி  பிராமணர்கள்  மகாநாடுகள்  கூட்டி  ஒற்றுமையுடன்  இருந்து  வேலை  செய்ய  வேண்டும்  என்றும்,

பிராமணர்களுடைய  ஆசாரங்களை  விட்டுக்  கொடுக்கக்  கூடாது  என்றும்,

சமஸ்கிருதத்தை  விருத்தி  செய்ய  வேண்டும்  என்றும்,

இப்போது பிராமணர்களுக்கு ஏற்பட்ட வேலையில்லாத்  திண்டாட்டத்தை  ஒழிக்க  எப்படியாவது  முயல  வேண்டுமென்றும்,

இதர  சமூக  நன்மையை  கவனிப்பதில்  பிராமண  தர்மத்தை  கைவிட்டு  விடக்  கூடாதென்றும்,

நீண்ட  காலமாக  பிராமணர்கள்  முயற்சி  கைகூடாமல்  போய்விட்டது  என்றும்,

பிராமணர்களுக்கு  ராஜீய  விஷயத்தில்  தோல்வி  ஏற்பட்டதற்குக்  காரணம்  தக்க  முறைகளை  அனுஷ்டிக்காதது  என்றும்,

அரசியல்  சீர்திருத்தத்தில்  மதம்,  சமூகம்  ஆகியவைகளைப்  பற்றி  கவர்னர்களுக்கும்,  வைசிராய்களுக்கும்  (எதேச்சாதிகாரம்)  பாதுகாப்புகள்  இருக்க  வேண்டும்  என்றும்,  எந்த  சமயத்திலும்  சனாதன  ஆச்சாரம்  கைவிடக்  கூடாது என்றும்  பேசியிருக்கிறார். இதிலிருந்து இந்த மாகாணத்தின்  பார்ப்பனர்கள்  நிலை  என்ன  என்பது  ஒருவாறாகப்  புலப்படலாம்.

அதாவது  பார்ப்பனர்களுக்கு  தனியாக  ஒரு  ஸ்தாபனம்  இருக்க  வேண்டியது  என்பதும்,  அந்த  ஸ்தாபனத்தின்  மூலம்  பார்ப்பனர்களின்  சனாதன  தர்மம்  என்பதாகிய  வருணாச்சிரம  தர்மம்  நிலை  நிறுத்தப்பட  வேண்டும்  என்பதும்,  அதன்  பயனாக  பார்ப்பனர்கள்  சமூக  வாழ்வில்  உயர்வானவர்களாகவும்,  மற்றவர்கள்  தாழ்ந்தவர்களாகவும்,  தீண்டப்படாதவர் களாகவும்  (4வது,  5வது  ஜாதியார்களாய்)  இருந்து  வரும்படி  செய்ய  வேண்டியது  என்பதும்  முக்கிய  தாற்பரியமாகும்.

இது  மாத்திரமல்லாமல்  அரசியலிலும்  பார்ப்பனர்களின்  உயர்வை  பாதிக்கக்கூடிய  எவ்வித  சட்டமும்  திட்டமும்  ஏற்படாமல்  வருணாச்சிரமப் படியே  அரசியல்  நடந்து  வர  வேண்டும்  என்றும்  ஆசைப்படுகிறார்கள்.

அதோடு  மாத்திரமல்லாமல்  பொருளாதார விஷயத்திலும்,  சரீரப்  பாடுபடாமல்  வாத்தியார்,  வைத்தியர்,  மற்ற  ஜாதியார்  தங்களுக்கு  சன்மானம்  வழங்குதல்,  லேவாதேவியின்  மூலம்  பாடுபடுகின்றவர்கள்  செல்வத்தை  உருஞ்சுதல்  ஆகிய  காரியங்களை  மாத்திரம்  செய்ய  வேண்டும்  என்றும்,  தங்கள்  ஜாதி,  மத  உயர்வுக்கு  உதவியான  ஆசார  அனுஷ்டான  பழக்க  வழக்கங்களை  கைவிடக்  கூடாதென்றும்  தீர்மானித்திருப்பதும்  ஆகியவைகளையும்  சேர்த்து  பார்ப்போமேயானால்  பார்ப்பனர்கள்  அரசியல்,  சமூக  இயல்,  பொருளாதார  இயல்  ஆகியவைகளில்  தங்களுக்கு  சகல  விதத்திலும்  ஆதிக்கம்  இருக்க  வேண்டுமென்பதும்  சகலத்திலும்  தாங்களே  ஆதிக்கம்  செலுத்த  வேண்டியவர்களாய்  இருக்க  வேண்டும்  என்பதேதான் பார்ப்பனர்களுடைய சங்கத்தினுடையவும், மகாநாட்டினுடையவும்  லட்சியமாய்  இருந்திருக்கிறது.

சுருங்கச்  சொல்ல  வேண்டுமானால்  புராண  காலத்திய  ராமராஜியத் தையும்,  மநுதர்ம  ராஜியத்தையும்  விரும்புகிறார்கள்  என்றும்,  அதற்கு  ஏற்ற  சூட்சிகளையே  ஒரு  கூட்டம்  அரசியல்  மூலமும்,  ஒரு  கூட்டம்  சமுதாய  இயல்  மூலமும், ஒரு  கூட்டம்  கல்வி  இயல்  மூலமும்,  ஒரு  கூட்டம்  காந்தீயம்  மூலமும்  செய்து  கொண்டு  வருகிறார்கள்  என்பதையும்  யாரும்  மறுக்க முடியாது.

பார்ப்பனரல்லாத  மக்கள்  சிலரும்  இதற்கு  அடிமைகளாய்  இருந்து  ஆதரவு  அளித்து  வருகின்றார்கள்  என்பது  மாத்திரமல்லாமல்  தாங்கள்  ஏன்  பார்ப்பனர்களாக  பிறக்கவில்லை  என்று  விசனப்பட்டுக்  கொண்டு  இருக்கிறார்கள்  என்றும்  தெரிய  வருகின்றது.

இவ்வளவு  அக்கிரமங்களில்  இருந்தும்,  கொடுமைகளில்  இருந்தும்,  சூட்சிகளில் இருந்தும்  இன்னாட்டுப்  பழங்குடி  மக்கள்  தப்புவித்து  விடுதலை  பெறுவதற்கு  ஒரே  ஒரு  ஸ்தாபனம்  தான்  இன்று  தென்  இந்தியாவில்  இருந்து  வந்தது.

அதுதான்  தென்னிந்தியப்  பார்ப்பனரல்லாதார்  சங்கமாக  இருந்து  வந்தது.  அதையும்  சிலர்  தங்கள்  சுயநலத்துக்காக  என்று  பெருத்ததொரு  துரோகம்  செய்து  அதில்  பார்ப்பனர்களையும்  கொண்டு  வந்து  புகுத்திக்  கொள்ள  சம்மதித்துவிட்டார்கள்.

எனவே  இப்போது  முன்  கூறப்பட்ட  கொடுமைகளையும்,  சூட்சி களையும்  விளக்கிக்  காட்டவோ,  மக்களை  அதிலிருந்து  தப்புவிக்கச்  செய்யவோ  இன்று  இந்திய  பார்ப்பனரல்லாத  மக்களுக்கு  எவ்வித  மார்க்கமும்,  சங்கமும்  இல்லாமல்  இருந்து  வருகின்றது.  அடிமை  வாழ்க்கையில்  ஆர்வம்  கொண்ட  மக்கள்  அனேகருக்கு  பார்ப்பனரல்லாதார்  சங்கம்  என்பதாக  ஒரு  சங்கம்  இருப்பதே  மிக்க  கஷ்டமாகத்  தோன்றுகின்றதாம்.  இவர்கள்  உடலில்  சுயமரியாதை  ரத்தம்  இருக்கின்றது  என்று  எப்படி  சொல்ல  முடியும்.

அன்றியும்  இவ்வளவோடு  அல்லாமல்  மற்றொரு  பார்ப்பனரல்லாத  கூட்டத்தார்  வர்ணாச்சிரமத்தை  ஆதரித்து  அதைக்  காப்பாற்றவும்  பாடுபடுகின்றார்கள்  என்றால்  இவர்கள்  சரீரத்தில்  எந்த  விதத்தில்  இரத்தம்  ஓடிக்  கொண்டிருக்கிறது  என்பது  நமக்கு  விளங்கவில்லை.

இந்த  20  நூற்றாண்டில்  உலகத்தில்  மக்கள்  ஒருவருக்கொருவர்  தொழிலில்,  செல்வத்தில்,  வாழ்க்கையில்  சிறிதுகூட  உயர்வோ,  தாழ்வோ  அல்லது  கூடக்  குறைவான  அனுபவமோ.  தனி  உடமைப்  பாத்தியமோ  ஏதுவும்  கொண்டாடக்  கூடாது  என்கின்ற  தனிக்  கொள்கைகள்  ஆகியவைகளை  கோடிக்கணக்கான  மக்கள்  அனுபவித்து  வந்து  கொண்டும்,  பிரசாரங்கள்  செய்து  கொண்டும்  அதற்குத்  தகுந்தபடி  அரசியல்,  சமூக  இயல்களை  அமைக்க  முயற்சித்துக்  கொண்டு  இருந்து  வரும்  இந்தக்  காலத்தில்  பார்ப்பனர்கள்  வருணாச்சிரமம்  பேசுவதும், சில  பார்ப்பனரல்லாதார்  தங்களை  பார்ப்பனர்களின்  வைப்பாட்டி  மக்கள்,  4வது  ஜாதியார்,  5வது  ஜாதியார்  என்று  சொல்லிக்  கொண்டு  அவர்களது  அடிமைகளாய்  இருந்து  வருவதோடு  பார்ப்பனரல்லாத  சங்கம்  என்பதாக  ஒன்று  இருக்கக்  கூடாது  என்றும்  சொல்லுவதும்  என்றால்,  இந்த  நாட்டை  என்ன  நாடு  என்று  சொல்லுவது  என்பது  நமக்கு  விளங்கவில்லை.

இந்த  நாட்டில்  இன்று  இந்த  வெள்ளைக்கார  பிரிட்டிஷ்  அரசாங்கம்  என்பது  இல்லாமல்  வேறு  ஏதாவது  ஒரு  இந்திய  அரசாங்கம்  இருந்திருக்குமானால்  இந்தக்  கூட்டத்தார்கள்  பார்ப்பனரல்லாத  மக்களை  என்ன  கதிக்கு  ஆளாக்கி  எப்படிப்பட்ட  நிலைமையில்  வைத்திருப்பார்கள்  என்பதை  யோசித்துப்  பார்த்தால்  இந்தக்  கூட்டத்தார்  சொல்லும்  சுயராஜ்யத்தின்  யோக்கியதை  என்ன  என்பது  நன்றாய்  விளங்கும்.

சில  பார்ப்பனர்கள்  அரசியலின்  பேரால்  “”சீர்திருத்தத்தில்  கவர்னர்,  வைசிராய்  ஆகியவர்களின்  அதிகாரத்துக்கு  பாதுகாப்புகள்  கூடாது”  என்பதும்,  அதே  பார்ப்பனர்கள்  சமூக இயலின்  பேரால்  தங்கள்  தங்கள்  நன்மைக்கு  கெடுதி  வராத  அளவுக்கு  கவர்னர்  வைசிராய்  ஆகியவர்களுக்கு  பாதுகாப்புகள்  வேண்டும்  என்பதும்,  அதே  பார்ப்பனர்கள்  கல்வி  இயலின்  பேரால்  சமஸ்கிருதம்,  ஹிந்தி,  புராணங்க“ள்,  இந்து  வேதங்கள்  ஆகியவைகள்  கற்பிப்பதன்  மூலம்  மக்களை  மடையர்களாக்கி  பார்ப்பனர்களுக்கு  பிறவி  அடிமைகளாக  ஆக்கி  வைக்க  வேண்டும்  என்பதுமான  காரியங்களே  இன்று  இந்நாட்டில்  தேசீயம்,  தேசாபிமானம்,  மத  அபிமானம்,  பொது  நலசேவை  ஆகியவைகளாய்  திகழ்ந்து  வருகின்றன.

இவற்றை  நமது  பார்ப்பனரல்லாத  மக்கள்  அறிந்து  பார்ப்பன  சூட்சியில்  இருந்து  விடுதலை  பெற்று  சுயமரியாதை  அடைவது  எப்படி  எப்போது  என்று  கேட்கின்றோம்.

பகுத்தறிவு  துணைத் தலையங்கம்  06.01.1935

You may also like...