யார் மாறிவிட்டார்கள்?
யார் இழி மக்கள்?
சுயராஜ்யம் சூட்சியேயாகும்
சென்ற வாரம் குடியரசில் “”காங்கிரஸ் ஒரு வியாதி” என்பதாகப் பெயர் கொடுத்து ஒரு தலையங்கம் எழுதி காங்கிரசானது ஆரம்ப கால முதல் இது வரையிலும் சிறப்பாக காந்தி அயனத்திலும் மக்களை எப்படி ஏமாற்றமடையச் செய்து வந்திருக்கிறது என்பதையும் அதனால் இதுவரையில் யாதொரு நன்மையும் நாட்டுக்கோ, மனித சமூகத்துக்கோ ஏற்படவில்லை என்பதையும் அவ்வளவோடு அல்லாமல் கிரமமாகவும், இயற்கையாகவும் ஏற்பட வேண்டிய முற்போக்குகளுக்கெல்லாம்கூட முட்டுக்கட்டையாய் இருந்து வந்திருப்பதுடன் உலக நாகரீகத்தில் நாட்டை ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின் தள்ளி விட்டது என்பதும் விளங்க எழுதி இருந்தோம்.
மற்றும் அதே தலையங்கத்திலேயே காங்கிரஸ் பாமர மக்களை வஞ்சித்ததைப் பற்றியும், அது பணக்காரர்களுக்கும், படித்துவிட்டுப் பட்டம் பதவி பெற ஆசைப்படும் அரசியல் வேஷக்காரருக்கும், சோம்பேறியாய் இருந்து கொண்டே ஊரார் உழைப்பில் வயிறு வளர்த்து வாழ்க்கை நடத்த இருக்கும் பார்ப்பனர்களுக்கும் எவ்வளவு தூரம் கையாளாக இருந்து துணை புரிந்து வந்திருக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் இந்த 10 வருஷ காலமாகவே சொல்லி வந்தவைகளையெல்லாம் ஆமோதிக்கும் மாதிரியில் சிறந்த தேசபக்தர்கள், தேசீய வீரர்கள் என காங்கிரஸ்காரர்களாலேயே அபிப்பிராய பேதமில்லாமல் கருதும் தோழர்கள் சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, கோவிந்தானந்தர், சக்லத்வாலா, ஜமனாதாஸ் மேத்தா முதலிய ஆசாமிகளின் அபிப்பிராயத்தை அவர்களது வாக்கியப்படியே பார்ப்பனர்கள் பத்திரிகையில் அவ்வப்போது வெளியானதையே எடுத்துப் போட்டு விளக்கியும் இருந்தோம்.
இப்போது இதை விளக்க நேர்ந்த அவசியமெல்லாம் சில பார்ப்பன கூலிகளும், கூலிப் பத்திரிகைகளும்
“”காங்கிரசின் அரிய வேலையை அறிய முடியாத அறிவீனர்களும், தேசத் துரோகிகளும் லெனின் என்றும், மார்டின் என்றும் புகழ் பெற ஆசைப்பட்ட ஈ.வெ. ராமசாமியும் மற்றும் சமதர்ம வேஷக்காரர்களான சுயமரியாதைக்காரர்களும் காங்கிரசை குற்றம் சொல்லுகிறார்கள்”
என்பதாக இழிமுறையில் தாக்கியதால் அவர்களது யோக்கியதையும், காங்கிரசின் வண்டவாளமும் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றே எழுதினோம். ஆனால் இப்படி எழுதியவையெல்லாம் இன்று நேற்று அல்லாமல் இந்த பத்து வருஷ காலமாகவே எடுத்துக் காட்டி எழுதியும் பேசியும் வந்திருக்கின்றோம் என்பதைப் பற்றி இப்போது நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
ஆன போதிலும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் காங்கிரசிலிருந்து வெளிவந்து “”சர்க்கார் தாசர்”, “”வகுப்புவாதி”, “”பணக்காரர் அடிமை” என்ற நிலைக்குப் போய்விட்ட பின்பு தான் இந்த அபிப்பிராயம் கொண்டவரா? அல்லது நேற்று, இன்று ஏதோ “”சுயநலம் கொண்டு” திடீரென்று மாறிவிட்டாரா? அல்லது காங்கிரஸ் ஸ்தாபனத்துக்கு தலைவராக இருந்த காலத்திலேயே இதே அபிப்பிராயம் கொண்டிருந்தாரா? என்பதை விளக்க சென்னை மாகாண காங்கிரஸ் ஸ்தாபன பிரதான காரியதரிசியாய் இருக்கும் போதும் அதன் தலைவராய் இருக்கும் போதும் சென்னை மாகாண காங்கிரசின் மாகாண கான்பரன்சில் தலைமை வகித்து நிகழ்த்திய தலைமைப் பேருரையிலும் 1924ம் வருஷத்திலேயே காங்கிரசைப் பற்றியும், தேசீயத்தைப் பற்றியும், சுயராஜ்யத்தைப் பற்றியும் என்ன பேசியிருக்கிறார் என்பதையும் அப்படியே எடுத்துப் பிரசுரிக்கிறோம். அதாவது,
1924ம் வருஷம் நவம்பர் மாதம் 15, 16 தேதிகளில் திருவண்ணா மலையில் கூடிய தமிழ்நாடு மாகாண மகாநாட்டில் தலைமை வகித்து நிகழ்த்திய தலைமைப் பேருரையில் குறிப்பிட்டிருப்பதாவது@
சுயராஜ்யம்
“”சுயராஜ்யம் என்பதின் உண்மைப் பொருளை உள்ளம் கொண்டு நோக்குவோமாயின் உலகில் இன்று எந்த தேசமும் சுயராஜ்யம் பெற்றிருப்பதாய் தெரியவில்லை”.
“”ஒரு தேசம் அன்னியர்களால் ஆளப்படாமல் தன்னைத் தானே ஆண்டு கொள்வது தான் சுயராஜ்யம் என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.”
“”ரஷியாவில் சார் காலத்தில் நடைபெற்ற ஆட்சி அன்னிய ஆட்சியா?”
“”பிரான்ஸில் நடைபெறும் ஆட்சியைக்கூட குடி ஆட்சி என்று தானே சொல்லப்படுகின்றது. அப்படியிருக்க அவ்வாட்சி ரூர் பிரதேசத்தில் பொது உடமைக்காரர்களை சிறைப்படுத்துவானேன்? ஒவ்வொரு சுயாட்சி என்பதிலும் ஒவ்வொரு கூட்டத்தார்தான் ஆக்கம் பெருவார்கள். மற்ற கூட்டத்தார் விருப்பம் நிறைவேறுவது அறிதாகவே முடியும்.”
“”சில தேசங்களில் பணக்காரர்கள் சுயராஜ்யம் அனுபவிக்கிறாõகள். சில தேசங்களில் படித்த கூட்டத்தார் அனுபவிக்கிறார்கள்.
சில தேசங்களில் உயர்ந்த ஜாதியார் அனுபவிக்கிறார்கள். சில விடங்களில் தந்திரக்காரர்கள் அனுபவிக்கிறார்கள்.”
“”எல்லோரும் சுயராஜ்ய இன்பம் அனுபவிக்கும் தேசம் எங்கே இருக்கிறது? அன்னிய ஆட்சியை அகற்றுவது என்பதே சுயராஜ்யமாகாது.”
“”எல்லோரும் சுயராஜ்யம் அனுபவிப்பதற்கு ஏற்ற இயல்புகள் தேசத்தில் செப்பம் செய்யாமல் நடைமுறையில் இருக்கும் ஆட்சியை தகர்ப்பதால் தேசத்தில் கொலை, கொள்ளை, கொடுமைகள் ஆகியவைகள்தான் ஆட்சி புரியும்.”
“”இந்து முஸ்லீம் ஒற்றுமை என்ற ஒன்றை செயலில் கொண்டு வர நம்மால் முடியவில்லை. அதற்குப் பதிலாக மாறுபட்ட காரியங்களே நம்மவரால் செய்யப்பட்டன.”
“”தலைவர்கள் மேடையில் பேசுவதும், பத்திரிக்கைகளில் எழுதுவதும் ஒருபுறம் கிடக்கட்டும்.
மக்கள் சுயராஜ்ஜியத்தைப் பற்றி என்ன பேசுகிறார்கள்?
இந்துக்களை முஸ்லீம்கள் நம்புவதில்லை. முஸ்லீம்களை இந்துக்கள் நம்புவதில்லை.
ஆதி திராவிடர்களுக்குள்ள அச்சமும், ஐயமும் அளவிடக் கூடியதில்லை.
ராஜ தந்திரிகள் இதற்கு அன்னிய ஆட்சி காரணம் என்கிறார்கள்.
அன்னிய ஆட்சிக்கு இந்தியா இடந்தந்த காரணங்களும், அன்னிய ஆட்சியை இந்தியா கூவி அழைத்த காரணங்களும் இன்றும் இந்தியாவில் இருக்கின்றனவா இல்லையா?”
“”அவைகளை ஒழிக்க முயற்சிக்காமல் சுயராஜ்யப் பேச்சு பேசுவதும், எழுதுவதும் சிலருடைய சுயநல சூழ்ச்சியேயாகும்.”
“”காங்கிரசில் சுயராஜ்யமிருக்கிறதா என்றால் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரை எனக்குற்ற அனுபவத்தைக் கொண்டே சொல்லுகின்றேன்.”
“”சுயராஜ்யம் வேண்டுமென்றால் செல்வர் இறுமாப்பும், ஏழைகள் இழிவும், இந்து முஸ்லீம் அச்சமும், ஐயமும், உயர்ந்த வகுப்பாரின் ஆதிக்கமும், தாழ்ந்த வகுப்பார் கஷ்டங்களும் ஒழியுமாறு முயல வேண்டும். அதுவே சுயராஜ்யப் போராகும்”. அதே சமயம்
பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்பது பற்றி பேசியதாவது@
“”காங்கிரஸ்வாதியாய் இருந்த டாக்டர் நாயர் திடீரென வேறு ஒரு கட்சியை தோற்றுவிக்க காரணங்களாக நின்றவை எவையோ அவை இன்றும் இருக்கின்றனவா இல்லையா? அவை அழிந்துபட்டால் ஒழிய வடநாட்டில் இந்து முஸ்லீம்கள் நிலை போலவே தென்னாட்டில் பிராமணர், பிராமணரல்லாதார் நிலை ஏற்பட்டு விடும்.”
“”தேச சேவையில் ஈடுபட்டு தமிழ்நாட்டுக் காங்கிரஸ் காரியதரிசி யாகவும், தலைவனாகவும் இருந்த அனுபவத்தைக் கொண்டே நான் இங்கு பேசுகிறேன்.”
“”தமிழ்நாட்டிலுள்ள காங்கிரஸ் பிராமணரல்லாத தலைவர்கள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு தொண்டு செய்து வருகிறார் களாதலால் எக் குறை முறையீடும் வெளிக் கிளம்பாது கிடக்கிறது.”
“”மகாத்மா காந்திக்கு தமிழ்நாட்டின் உண்மை நிலை தெரிந்தால் எத்தனை நாள் உண்ணாவிரதம் கொள்வாரோ தெரியாது. வெள்ளம் வரும் முன்னரே அணை கோலுவது நலம்.”
“”தமிழ்நாட்டில் சாதிச் சமய சண்டைக்கு காரணமாய் நிற்கும் எவ்வியக்கத்தையும் ஒழிக்க வேண்டுமென்பது எனது விரதம். ஆனால், பிராமணர் மனம் மாற பிராமணரல்லாதாரை நேசிக்க வேண்டும். உதட்டு நேசம் உள் நேசமாகாது.”
தீண்டாமை விஷயத்தில் பேசியிருப்பதாவது@ “”தீண்டாமை சுயராஜ்ஜியத்துக்கு முட்டுக் கட்டையாய் இருக்கிறது. ஆனால் ஒரு கூட்டத்தார் தேசமழிந்தாலும் சரி, மதம் அழிந்தாலும் சரி தீண்டாமையை விடமாட்டோம் என்று சொல்லுகிறார்கள்.”
“”இவர்கள் தங்கள் ஆதிக்கம் குன்றிவிடுமே என்று அஞ்சுகிறார்கள்.”
எச்சரிக்கை
“”தேச முன்னேற்றத்துக்கு இந்துமதம் தடையாய் இருக்கிறது என்ற பெயரை இந்துக்கள் சம்பாதித்துக் கொள்ளாதிருக்குமாறு அவர்களை எச்சரிக்கை செய்கிறேன்.”
இந்தப்படி பேசி இருக்கிறார்.
குறிப்பு@
இந்த உபன்யாசம் சென்னையில் தோழர் திரு.வி. கலியாணசுந்திர முதலியாரவர்களது சாது அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டதாகும். இன்றும் அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம்.
ஆகவே அந்தக் காலத்தில் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் “”பார்ப்பனத் துவேஷியாகவோ”, “”தேசத் துரோகியாகவோ”, “”சர்க்கார் தாசராகவோ” இருந்து கொண்டு இப்படிப் பேசினார் என்று எந்த மூடனும் கருத முடியாது அல்லவா? ஏனெனில் அப்படி இருந்திருந்தால் அவர் இரண்டு தடவை மாகாண காங்கிரஸ் கமிட்டிக்குக் காரியதரிசியாகவும், 2 தடவை மாகாண காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகவும் மற்றும் 100க் கணக்கான ஜில்லா, தாலூக்கா, கிராம மகாநாட்டுக்குத் தலைவராகவும் பார்ப்பனர்களாலேயே தெரிந்தெடுக்கப்பட்டிருக்க மாட்டார். அப்பொழுது அவருக்குக் காங்கிரசைப் பற்றி ஏற்பட்ட அபிப்பிராயம் காரணமாகவே காங்கிரஸ் திருத்தப்பட முடியாதது என முடிவுசெய்து கொண்டு காங்கிரசில் இருந்து விலகி காங்கிரசின் யோக்கியதையை அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரி வெளிப்படுத்தி வருகிறார். அவரைப் பின்பற்றியது போலவே தென்னாட்டுத் திலகர் என்று பார்ப்பனர்களாலேயே கூறப்பட்டவரும், பல தரம் சிறை சென்றவருமான டாக்டர் வரதராஜுலு நாயுடுவும், காந்தியடிகளின் உண்மை சிஷ்யர் என்று பார்ப்பனர்களாலேயே அழைக்கப்பட்ட தோழர் திரு.வி.கலியாணசுந்திர முதலியாரும், திலகரின் நண்பரும், உண்மை சிஷ்யருமாகிய ங.O. சிதம்பிர பிள்ளை அவர்களும், டாக்டர் சுரேந்திரநாத் ஆரியா, எம்.ஏ., அவர்களும் மற்றும் அந்தக் காலத்தில் காங்கிரசில் செல்வாக்காய், ஜில்லா தலைவர்களாய் இருந்த பார்ப்பனரல்லாதார்கள் தோழர்கள் சிங்காரவேலு செட்டியார், சக்கரை செட்டியார், ராமச்சந்திரஞ் செட்டியார், சுப்பிரமணிய நாயனார், திரிகூட சுந்திரம் பிள்ளை போன்ற முதிர்ந்த செல்வாக்கும், சுயமரியாதையும், சாப்பாட்டுக்கு மார்க்கமும் உடைய ஆசாமிகளும், காங்கிரசை விட்டு விலகி அதன் யோக்யதையையும், அதன் சூட்சியையும், அதை பார்ப்பனர்கள் தங்கள் ஆயுதமாகக் கொண்டு தங்கள் ஆதிக்கத்தை உயர்த்திக் கொண்டு வரும் வஞ்சகத்தையும் அவ்வப்போது நன்றாய், பச்சையாய், வெள்ளை பாஷையில் எடுத்துச் சொல்லி இருக்கும் விஷயங்களையே தான் இன்று சுயமரியாதைக் காரர்களும், சமதர்மக்காரர்களும் பேசியும், எழுதியும் வருகிறார்களே ஒழிய இன்று மாத்திரம் புதிதாக எடுத்துச் சொல்லும் விஷயம் எதுவும் சொல்லி விடவில்லை, எழுதி விடவும் இல்லை. முன் தெரிவித்திருக்கிறபடி ஏதோ பொது ஜனங்களின் முட்டாள்தனத்தினாலும் சில சமூகத் துரோகிகளின் இழி குணத்தாலும், வேறு வழியில் பிழைக்க முடியாத சில இழி மக்களின் அடிமைத் தன்மையாலும் சமீப தேர்தலில் சில வெற்றிகள் என்பது ஏற்பட்டு விட்டதாலேயே தலைகால் தெரியாமல் கிறுகிறுத்துப் போய் உளருவதென்றால் அது மதிக்கப்பட்டு விடும் என்று கருதுவது முட்டாள்தனமேயாகும்.
எப்படி இருந்துவந்த போதிலும் நாம் சொல்லியும், எழுதியும் வரும் விஷயங்கள் “”தீர்க்கதரிசனமாய் விளங்குகிறது” என்பதற்கு மேலும் மேலும் ஏற்பட்டு வரும் ஆதாரத்தை விளக்கும் முறையில் இவ்வாரத்தில் பம்பாய் பத்திரிகை ஒன்றிலும், தோழர் ஜவகர்லால் அவர்கள் கடிதம் ஒன்றிலும் காணப்படும் விஷயங்களை எடுத்துக் காட்டுவோம்.
அதாவது காங்கிரசிலிருந்து முன் பல தலைவர்கள் விலகி இருந்தாலும் இப்போது காந்தியார், டாக்டர் அன்சாரியார், தோழர் ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் விலகுவதன் காரணம் என்ன என்பதையும் பற்றி அப்பத்திரிகையானது (சென்டினல்)
“”மற்றும் பல தலைவர்கள் விலகலாம்” என்னும் தலைப்பின் கீழ் குறிப்பிட்டிருப்பதாவது@
“”டாக்டர் யம்.எ. அன்சாரி காங்கிரஸ் காரியக் கமிட்டியில் இருந்தும், பார்லிமெண்டரி போர்டிலிருந்தும் விலகுவதற்குக் காரணம் அவருடைய சரீர அசௌகரியம் காரணமல்ல.”
“”தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு கீதை பாராயணம் செய்யப் புறப்பட்டுவிட்டார்.”
“”இன்னும் சில தலைவர்கள் விலகிவிடுவார்கள் எனத் தெரிகின்றது.”
“”தலைவர்களிடம் செல்வாக்குள்ள இந்திய சட்டசபை அங்கத்தினர்கள் புதிய சீர்திருத்தத்தை அமுலுக்கு கொண்டு வந்து உத்தியோகத்தை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் எனத் தெரிகிறது.”
“”புதிய அரசியலை சீர்குலைத்து விடுவது என காங்கிரஸ் செய்த தீர்மானத்துக்கு இவர்கள் முரண்பாடாக நடக்கிறார்கள்.”
“”தோழர் காந்தியார் முன்னமே விலகிவிட்டார்.”
“”இப்படித் தலைவர்கள் ஒவ்வொருவராய் விலகி வருவது எதிர்பாராத விஷயமல்ல.”
“”இர்வின் பிரபுவின் ராஜதந்திரத்தின் பயனாக சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும்படி ஏற்பட்டதும், காந்தியார் லண்டன் மகாநாட்டுக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதும், அங்கிருந்து அவர் வெருங்கையுடன் புறப்பட்டு வந்ததும், அதன் பிறகும் சட்டமறுப்பு இயக்கத்தை ஆரம்பித்ததும் ஆகிய காரணங்களால் காங்கிரசின் செல்வாக்குக் குறைய தலைப்பட்டது.”
பண்டிதர் ஜவஹர்லால் சிறைபட்டார்.
காந்தியார் லார்ட் வில்லிங்டனைக் கண்டு பேசுவதற்கு ஆகச் செய்யப்பட்ட முயற்சியில் தோல்வியுற்றார். காங்கிரஸ் சமதர்மக்காரர்கள் காந்தியாரின் சட்ட மறுப்பை வீண் மெனக்கெடு என்றார்கள்.
கதர் திட்டத்தை எதிர்த்தார்கள். மற்றும் அவர்கள் பழய தலைவர்களுக்கு விரோதமாகவும், அத்தலைவர்கள் சர்க்காருடன் நடத்தும் காரியங்களுக்கு விரோதமாகவும் கிளம்பிவிட்டார்கள்.
மற்றும் ஒரு சாரார் தங்கள் ஜீவனத்துக்கு தங்கள் வயிற்றுப் பிழைப்பைப் பிரமாதமாய்க் கருதி இருந்தவர்கள் தங்கள் கீர்த்திக்கும், புகழுக்கும், சுயநலத்துக்குமே காங்கிரசை வந்து அடைந்தார்கள்.
இதன் பயனாய் சட்டமறுப்பு நிறுத்தப்பட வேண்டும்; சட்ட வரம்பிற்கு கட்டுப்பட வேண்டும் என்கின்ற உணர்ச்சி நாட்டு மக்களுக்கு ஏற்பட்டு அந்தப்படியே காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்தது.
டாக்டர் அன்சாரியும், சட்டவரம்பிற்கு கட்டுப்பட்டு நடக்கும் முறையை கையாள ஒரு கூட்டம் கூட்டினார். உத்தியோகம் முதலியனவைகளில் நுழைய ஆசைப்பட்டவர்கள் இதில் கலந்தார்கள்.
பண்டிதர் ஜவஹர்லால் நேருக்கும், காந்தியாருக்கும், காரிய கமிட்டிக்கும் சமதர்மக் கொள்கை விஷயமாய் அபிப்பிராய பேதம் ஏற்பட்டது.
“”இவற்றையெல்லாம் பார்த்தும் காங்கிரஸ் ஸ்தாபனத்தில் யோக்கியப் பொறுப்பற்ற தன்மை ஏற்பட்டு நிலவி வருவதையும், தமது கொள்கைகள் எதிர்க்கப்படுவதையும் தம்முடைய செல்வாக்கு குறைந்து வருவதையும் கண்டு காந்தியார் காங்கிரசிலிருந்து விலக வேண்டியவரானார்”.
காங்கிரஸ் பிரபலஸ்தர்களின் தந்திரம்
“”தேசீயப் பத்திரிகைக்காரர்களுடன் காங்கிரஸ்காரர்கள் ரகசிய ஒப்பந்தம் அதாவது தாங்கள் காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாகவும், ஓட்டர்களுக்கு அளித்த தங்களுடைய வாக்குறுதிகளுக்கு விரோதமாகவும், புதிய அரசியலை நடத்திக் கொடுக்க சர்க்காருடன் ஒத்துழைத்து உத்தியோகங்கள் ஏற்றுக் கொள்வதை ஆதரிக்க வேண்டுமென்றும், ஆதரிக்காவிட்டால் எதிர்க்கவாவது கூடாது என்றும் ஒப்பந்தம் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரசானது 1886 ம் வருஷத்திய நிலைக்கு தேசம் பின் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது.
ஹதம் செய்து விடுவது என வீர கர்ஜனை செய்தவர்கள் இப்போது அதை (அரசியலை) நடத்திக் கொடுக்கவும், உத்தியோகம் சம்பாதிக்கவும் அடிமையாகிவிட்டார்கள். இதுதான் இன்று திரைமறைவில் நடக்கும் காங்கிரஸ் நாடகமாகும். இதற்கு தாங்களும் சம்மதித்தவர்கள் என்று பொதுஜனங்கள் நினைத்து தங்களையும் கேவலமாய் மதிக்காமல் இருக்க வேண்டுமென்பதற்காக சில தலைவர்கள் விலகியதோடு அல்லாமல் இன்னும் சில தலைவர்களும் விலகப் போவதில் ஆச்சரியமில்லை” என்பதாக எழுதியிருக்கிறது.
ஆகவே இப்போது காங்கிரசின் அரிய வேலையை தெரிய முடியாத மூடர்கள் யார்? அல்லது அதன் சூட்சிகளையும், தந்திரங்களையும் அறிய முடியாத மடையர்கள் யார்? தேசத் துரோகிகள் யார்? பித்தலாட்டக்காரர்கள் யார்? சர்க்காரை சரணாகதி அடைந்த மானங்கெட்டவர்கள் யார்? அயோக்கியர்கள் யார்? இழி மக்கள் யார்? கூலிகள் யார்? கோடாரிக்காம்புகள் யார்? என்பதை வாசகர்களே தயவுசெய்து யோக்கியமாய் உணர்ந்து கொள்ளுங்கள்.
குடி அரசு தலையங்கம் 28.04.1935