காங்கிரஸ் தலைவருக்கு

 

தமிழ் நாடெங்கும் பகிஷ்காரம்

காங்கிரஸ் தலைவர் தோழர் ராஜேந்திர பிரசாத் நல்லவர், மனிதர்களின் சராசரி குணங்களுக்கு ராஜேந்திர பிரசாத் மேலானவர் என்றே நாம் கருதியிருக்கிறோம். ஆனால் அவர் தப்பான வழியில் செல்லும்படியான நிலைமையை எப்படியோ அடைந்துவிட்டார்.

பொதுவாக தென்னாட்டில் சுமார் 20 வருஷ காலமாக வெளிப்படை யாகவே பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சியும் பிரிவும் அரசியலிலும் சமூக இயலிலும் இருந்து வருவதை எவரும் மறுக்க முடியாது.

இந்த விஷயம் குறிப்பாகத் தோழர்கள் காந்தியார், மாளவியா, வல்லபாய் பட்டேல், சரோஜினியம்மாள், ஜமன்லால் பஜாஜ், சங்கர்லால் பாங்கர், ராஜேந்திரபிரசாத், ஜவர்லால் நேரு முதலிய காந்தி கோஷ்டியார்  காங்கிரஸ் பிரமுகர்கள் என்பவர்கள் அறியாததல்ல.

மற்றும் சென்னை மாகாணத்தில் பார்ப்பனர்களுக்கு மதிப்பற்றுப் போன விஷயமும், சென்னை மாகாணப் பாமர மக்களை ஏமாற்றுவதற்காக அடிக்கடி வட நாட்டிலிருந்து யாரையாவது விளம்பரப்படுத்தி அவர்களைக் கூட்டி வந்து பிரசாரம் செய்வித்து பாமர மக்களை ஏமாற்றி வருவதும் பணம் சம்பாதிப்பதும் மேல்கண்ட காங்கிரஸ் பிரமுகர்கள் அறியாததல்ல.

காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களில் எவராவது இதுவரை சென்னை மாகாணத்தில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் அபிப்பிராயபேதம் ஏன் இருக்கிறது என்றாவது, இதை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்றாவது ஒரு நாளாவது கடுகத்தனை கவலை எடுத்து இதில் பிரவேசித்து ஏதாவது ஒரு ஒழுங்கு செய்ய முயற்சித்தவர்களேயல்ல.

இதை அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்று சிறிதும் சொல்லிவிட முடியாது.

ஏனெனில் “ஜஸ்டிஸ்’ “திராவிடன்’ “குடி அரசு’ முதலிய பத்திரிகைகள் உண்மை நிலையை எடுத்து இந்தப் பிரமுகர்களுக்கு விவரித்திருப்பது மாத்திரமல்லாமல், தோழர் காந்தி, சரோஜினியம்மாள் முதலியவர்களுக்கு நேரில் தூது போவதுபோல் சென்று விளக்கிக் காட்டி இருக்கிறார்கள்.

அன்றியும் காங்கிரசில் முக்கியமாகக் கலந்து உழைத்துப் பல கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்துப் பல தடவை ஜெயிலுக்கும் சென்ற தோழர்கள் ஈ.வெ. ராமசாமி, பி. வரதராஜுலு, ஆரியா முதலியவர்கள் காந்தியார் இடம் நேரில் சொல்லியிருப்பதுடன், காங்கிரசை விட்டுப் பிரிந்தும், சிலர் காங்கிரசுக்கு எதிராய் பிரசாரம் செய்தும் வருகிறார்கள் என்பதும் இரகசியமான காரியமல்ல.

இவ்வளவையும் அலட்சியம் செய்துவிட்டு தங்களை அழைக்கிறார்கள், ஊர்வலம் செய்கிறார்கள், நூற்றுக்கணக்கான வரவேற்பு வாசிக்கிறார்கள், மகாத்மா என்றும், சர்தார் என்றும், ராஜா என்றும், முனிவர் என்றும், அவதாரம் என்றும் கூறி நன்றாய் விளம்பரம் செய்கிறார்கள் என்கின்ற முட்டாள்தனமான பேராசைக்கு அடிமைப்பட்டு தமிழ்நாட்டுக்கு வந்து மானங்கெட்டுத் திரும்ப ஏற்பட்டால் அதற்கு யார் ஜவாப்தாரியாவார்கள் என்று கேட்கின்றோம்.

பாவம் ராஜேந்திர பிரசாத் அவர்கள் “”என்னைத் திரும்பிப் போ என்று ஆரவாரம் செய்கிறீர்களே நான் எங்கே போவது” என்று சொல்லி போவதற்கு வழி தெரியாமல் திகைத்தாராம்.

அவருக்கு இந்தக் கதி வந்திருக்கக் கூடாதுதான். என் செய்வது; பனை மரத்தடியில் இருந்து பாலைக் குடித்தாலும் கள்ளைக் குடித்ததாகத்தான் பார்க்கிறவர்கள் சொல்லுவார்கள்.

ஆனால் ராஜேந்திர பிரசாத் பார்ப்பனர்கள் கூடத் திரிந்து, அவர்கள் சொல்லிக் கொடுத்ததைச் சொல்லிக் கொண்டு அவர்கள் பின் திரிந்து கொண்டு அவர்களுக்கு கவி பாடிக் கொண்டு இருந்தால் யார்தான் மதிப்பார்கள்?

நான் எங்கே போவது என்று ராஜேந்திர பிரசாத் கேட்டவுடன் ஒரு சிறுவன் “”பார்ப்பன சூழ்ச்சிக்கு தொண்டு புரிவதை விட்டு நாணயமான காரியத்துக்குத் தொண்டு புரியப் போ” என்று சொன்னானாம். ராஜேந்திரப் பிரசாத் சிரித்தாராம்.

பொதுநல வாழ்வில் அபிப்பிராய பேதம் இருந்தால் மக்களை வெறுப்பதும், பகிஷ்கரிப்பதும் கூடாது என்று சிலர் சோம்பேறி வேதாந்தம் பேசுவதுண்டு.

சிலர் தோல்வி ஏற்பட்ட பின் இந்த முடிவுக்கு வருவதும் உண்டு.

சிலரின் கோழைத்தனம் இந்த முடிவுக்குக் கொண்டு வந்து விடுவது உண்டு.

சிலர் உண்மையாகவும் நினைப்பதும் உண்டு.

எப்படி இருந்தாலும் பகிஷ்கரிப்பதுதான் அபிப்பிராய பேதத்தைக் காட்டுவதற்கு ஏற்ற சின்னம் என்பதை அரசியலில் தோழர் காந்தியார்தான் முதல்முதலாக எடுத்துச் சொன்னவர் என்று பார்ப்பனர்களே ஒப்புக் கொள்ளுகிறார்கள். அது மாத்திரமல்லாமல் பார்ப்பனர்களைப் பார்த்துத்தான் இப்போது மற்றவர்களும் காப்பி அடிக்கிறார்கள் என்று அவர்களே வெட்கமில்லாமல் பத்திரிக்கையில் எழுதி பெருமை அடைந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் பகிஷ்கரிப்பதானது எந்த முறைப்படி இப்பார்ப்பனர் களுக்கும், அவர்களது கூலிகளுக்கும் குற்றம் என்றோ, ஒழுங்கற்றது என்றோ படுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை.

இன்று பகிஷ்காரத்தைக் குறை கூறி கண்டபடி ஊளையிடும் பார்ப்பனப் பத்திரிக்கைகளுக்கு சென்ற வாரத்தில் “”பார்ப்பனரல்லாதார் இயக்கத்  தலைவர் பொப்பிலி ராஜா போலீஸ் பந்தோபஸ்தில் 144 தடை உத்திரவில் பகிஷ்காரத்தைத் தடுத்துப் பிரசாரம் செய்து விட்டு வந்தார்” என்று எழுதி மகிழ்ந்த காலத்தில் இந்தப் புத்தி எங்கு போயிற்று?

அதற்கு முந்திய வாரத்தில் மதுரையில் தோழர் குமாரசாமி ரெட்டியார் பிரசாரம் செய்யும்போது அவரது கூட்டத்தில் கலவரம் செய்து, கூட்டமே நடக்க முடியாமல் செய்த அயோக்கியத்தனங்களைப் பற்றி இந்த தர்ம நியாயம் பேசுகிறவர்கள் என்ன செய்தார்கள்.

அக்காலத்தில் இவர்களுடைய வாயும் கையும் வேறு என்ன வேலையில் ஈடுபட்டிருந்தது என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்?

ராஜேந்திரப் பிரசாத்தைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று நாம் முதலில் சொன்ன காலத்தில் சென்னை ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் பயந்து தங்களுக்கும் எங்கு இக்கதி நேர்ந்துவிடுமோவென திகில்பட்டு பகிஷ்காரம் வேண்டாம் என்று நமக்குத் தெரிவித்ததோடு நமது பகிஷ்கார சேதியைக்கூடத் தங்கள் பத்திரிக்கையில் போட மறுத்து விட்டார்கள்.

நாமும் ஒரு அளவுக்கு தொலைந்து போகட்டும் என்று விட்டுவிட்டோம். பிறகு சில எச்சிலைப் பத்திரிகைகள் பகிஷ்காரம் எங்கே என்று பரிகாசம் செய்ய ஆரம்பித்தன.

(ஏன் எச்சிலைப் பத்திரிகைகள் என்று எழுதுகிறோம் என்றால் பணம் வாங்கிக் கொண்டு பணத்துக்குத் தகுந்தபடி கூலிக்குத் தகுந்தபடி கூப்பாடு போடும் கொள்கையை கொண்டிருப்பதாய் தெரிய வருவதால் அப்படி எழுதுகிறோம்.)

பகிஷ்காரம் செய்வது என்பது கஷ்டமான காரியம் அல்லவே அல்ல. யாரையும் பஹிஷ்கரிக்கக் கூடும்.

இந்த முறை ஒருவருக்கு மாத்திரம் சொந்தமானதுமல்ல.

காந்திக் குல்லாயைப் போட்டுக் கொண்டு, பாரதமாதாவுக்கு ஜே காந்திக்கு ஜே என்று கூப்பாடு போட்டுக் கொண்டு, கொடிகளைப் பிடித்துக் கொண்டு உண்டியல் பெட்டியுடன் தெருவில் திரியும் முட்டாள்தனத்தைவிட, இழிவைவிட ஒருவரைப்பார்த்து அதுவும் தங்களுடைய நன்மைக்கு விரோதமானவர் என்று சரியாகவோ தப்பாகவோ கருதிய ஒருவரைப் பார்த்து திரும்பிப் போ என்று சொல்லுவது எந்த வகையிலும் முட்டாள் தனமானதென்றோ, இழிவானதென்றோ சொல்லிவிட முடியாது.

அன்றியும் இதை இன்று அரசியல் உலகில் சர்வசாதாரணமாக ஆக்கப்பட்டுவிட்டது. இனி இப்படிப்பட்ட காரியங்கள் ஒரு கூட்டத்தாருக் குத்தான் சொந்தமென்றோ மற்றவர்கள் செய்யக் கூடாது என்றோ சொல்லிவிட முடியாது என்பது உறுதி.

நாம் இரண்டு வாரத்துக்கு முன் எழுதியபடி காங்கிரசின் பேரால் பார்ப்பனர்கள் தேர்தல் சூட்சி செய்ய ஆரம்பித்த காலம் முதல் இம்மாதிரியான காரியங்கள் மாத்திரமல்லாமல் அடிதடி, கொலை, சண்டித்தனம் முதலிய காரியங்கள் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. திருச்செந்தூர் கூட்டத்திலும் தென்காசி கூட்டத்திலும் காங்கிரஸ் காலிகள் கல் எறிந்தார்கள். எப்படியானாலும் கொலையானாலும், அடிதடியானாலும் பார்ப்பனர்களுக்கு எந்த விதத்திலும் நஷ்டமும் இல்லை; கஷ்டமும் இல்லை.

ஏனெனில் இரண்டு கட்சியிலும் அடிக்கிறவனும் அடிபடுகிறவனும் பார்ப்பனர் அல்ல. பார்ப்பனரல்லாதவர்களே தான். ஆகையால், இச் செய்கையை நிறுத்தப் பார்ப்பனர்கள் ஒரு நாளும் உடன்பட மாட்டார்கள். ஏதாவது ஒரு வழியில் பதிலுக்கு பதில் செய்யாமல் இருக்கப் பார்ப்பனர்கள் ஒருநாளும் அடங்கவுமாட்டார்கள்.

அரசாங்கத்தார் இதில் பிரவேசித்து இம்மாதிரியான காரியத்தை நிறுத்தினால் தான் கலவரம், குழப்பம், பகிஷ்காரம் ஆகியவை நிற்க முடியுமேயல்லாமல் இனி “”நியாயத்தை” உணர்ந்து பொது ஜனங்கள் நிறுத்திவிடப் போவதில்லை.

மதுரையில் தோழர் குமாரசாமி ரெட்டியார் பேசும்போது குழப்பஞ் செய்த காலிகளையும், கூலிகளையும் ஒரு பார்ப்பனப் பத்திரிகையும் கண்டிக்கவில்லை. போலீசாரும் ஜாடைமாடைமாய் இருந்தார்கள். “”பொது ஜனங்களுக்கு ஆத்திரம் வந்து அப்படிச் செய்தார்கள்” என்று சிறிதுகூட வெட்கமில்லாமல் பார்ப்பனக் கூலிகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும் சொல்லின, எழுதின.

கடைசியாகத் தோழர் சௌந்திரபாண்டியன் இரண்டொரு பொது ஜனங்களைக் காங்கிரஸ் கூட்டத்துக்கு அனுப்ப காங்கிரஸ்காரர்களுக்குப் புத்தி வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.

இப்போதும் ராஜேந்திர பிரசாத் சுற்றுப் பிரயாணத்திலும் திருச்சியில் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் வந்த வண்டியில் இருந்தே மணல் முடிச்சுகளும், கல்லுகளும் பறந்தன என்றால்  கருப்புக்கொடி பிடித்திருந்த வாலிபனுடைய கண்ணில் அடிபட்டதென்றால்  காந்திக் குல்லாவும், காங்கிரஸ் கொடியும் பிடித்துக் கொண்டிருந்த வாலிபர்கள் விறகு வண்டியில் இருந்த விறகுக் கட்டைகளைப் பிடுங்கி அடித்தார்கள் என்றால், காலித்தனம், பலாத்காரம் காந்தி தொண்டர்களுக்கும், காங்கிரஸ் காரர்களுக்கும் மாத்திரமே சொந்தமாக இனி எவ்வளவு நாளைக்கு இருந்துவிட முடியும்.

அதுவும் சதா சர்வகாலம் “”அஹிம்சா தர்மமூர்த்தி மகாத்மாகாந்தியாரின் அருமைச் சிஷ்யன்” என்று தன்னை சொல்லிக் கொள்ளும் ஈணூ. ராஜன் அவர்கள் கூட இருந்து நடத்தும் கூட்டத்தில் காங்கிரஸ்காரர் காலித்தனம் ஆரம்பிப்பதென்றால் சுயமரியாதைக்காரருக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்காரருக்கும் காங்கிரஸ் அல்லாதவர்களுக்கும் காலித்தனம் தெரியும் என்று காட்டிக் கொள்ள நேர்ந்தால் என்ன தப்பு என்றுதான் கேட்கின்றோம்.

நிற்க, முக்கிய இடங்களில் உணர்ச்சிகளைக் கிளப்பக் கூடியதான எலக்ஷன்கள் இருக்கிற காலத்தில் வடநாட்டிலிருந்து ஒரு ஆசாமியைப் பிடித்து வந்து ஊர்கோலம் செய்து பணம் வசூல் செய்ய வேண்டிய காரணமென்ன என்று கேட்கிறோம்.

தோழர் ராஜேந்திரப் பிரசாத் அவர்கள் இங்கு எலக்ஷன் நடப்பது தனக்குத் தெரியாது என்றும், எலக்ஷன் பிரசாரத்துக்காகத் தான் இங்கு வரவில்லை என்றும் சென்னையில் கூட்டத்தில் முதல் நாளே சொல்லிக் கொண்டார். பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விஷயத்தையே தனது பிரசாரத்துக்கு பல்லவியாகவும் வைத்துக் கொண்டார்.

அப்படியானால் அது உண்மையானால், ராஜேந்திரப் பிரசாத் அவர்கள் சென்னை மாகாணத்தில் எலக்ஷன் நடப்பது தெரிந்தும் காங்கிரசின் பேரால் எலக்ஷனில் பார்ப்பனர்கள்  பார்ப்பனரல்லாதார் கட்சிகள் போட்டி போடுகிறார்கள் என்பது தெரிந்தும் இவர் நல்லவரானால் என்ன செய்திருக்க வேண்டும்?

மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியைக் கண்டித்து விட்டு “”மற்றொரு சமயம் நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அடுத்த ரயிலில் மரியாதையாக வேறு மாகாணத்துக்குப் போய்விட்டு எலக்ஷன் முடிந்த பிறகு வந்திருக்க வேண்டும். அல்லது தகரார் என்ன என்பதை உணர ஆசைப்பட்டு அதற்குப் பரிகாரம் செய்திருக்க வேண்டும்.

அப்படிக்கில்லாமல், “”எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்கின்ற மாதிரியில் ஊர் ஊராய்ச் சென்று காங்கிரசை ஆதரியுங்கள், காங்கிரசை ஆதரியுங்கள் என்று சொல்லிக் கொண்டே வந்தார். இதை ஒன்றுக்குப் பத்தாகப் பெரிதாக்கிப் பத்திரிகைகள் எலக்ஷன் பிரதேசங்களுக்கு சேதிகள் அனுப்பிக் கொண்டே வந்தன.

இதன் பயனாய் ஒரு பார்ப்பனர், 2 பார்ப்பனருக்குக்கூட இடமில்லாத  ஸ்தாபனங்களில் 5, 10 ஸ்தானங்களை பார்ப்பனர்கள் பெண்டு பிள்ளை களுடன் அடித்துக் கொண்டார்கள். இவர்களை இராஜேந்திர பிரசாத் பாராட்டி ஆசீர்வதித்தும் விட்டார். இதற்கு பெயர் என்ன என்று கேட்கின்றோம்.

ஆகவே ராஜேந்திர பிரசாத் எலக்ஷன் பிரசாரம் செய்ய வரவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

ஆதலால் இம் மாதிரியான பார்ப்பன சூட்சிக்கு பதில் சூட்சி செய்வது பாவமானால் அதற்கு ஏற்பட்ட நரகத்தில் வாசம் செய்துதான் ஆக வேண்டுமே ஒழிய எப்படி அந்த சூழ்ச்சிகளை அனுமதிக்க முடியும்?

தோழர் ராஜேந்திர பிரசாத்தை எந்த ஊரில் பகிஷ்கரிக்கவில்லை? சென்னையில் முனிசிபல் சபை பகிஷ்கரித்தது. சென்னை ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் ஒரு விதத்தில் கறுப்புக்கொடி காட்டி பகிஷ்கரிக்க பயந்திருந் தாலும் மற்றொரு விதத்தில் இதுவரை சென்னை சரித்திரத்தில் இல்லாததும், என்றும் சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்று இருக்கும்படியாகவும் சென்னை கார்ப்பரேஷன் பகிஷ்கரித்து, சென்னை மாகாணத்துக்கு வழிகாட்டினார்கள். பயங்காளிகளான கவுன்சிலர்களும், செட்டியார் தன்மையுள்ள மெம்பர்களும் உள்ள முனிசிபாலிட்டியும், ஜில்லா போர்டும் சிலது வரவேற்புப் பத்திரம் கொடுத்திருந்தாலும் முக்கிய நகரங்கள் மறுத்துவிட்டிருக்கின்றன.

சில இடங்களில் தலைவர் இருந்து வரவேற்புப் படிக்காமல் இருப்பதன் மூலம் தங்கள் பகிஷ்காரத்தைக் காட்டிவிட்டார்கள்.

உதாரணமாகக் காரைக்குடியிலும் மாயவரத்திலும் வேறு இரண்டொரு இடத்திலும் முனிசிபல் வரவேற்பு இருந்தும் படித்துக் கொடுப்பதற்கு தலைவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. சில இடங்களில் உபதலைவரும் ஒப்புக்கொள்ளவில்லை. சில இடங்களுக்கு இரவில் போய் இரவில் புறப்பட்டு விட்டார்கள். சில இடங்களில் வெளியிட்டிருந்த வீதியை விட்டு வேறு வீதியில் போனார்கள். சில இடங்களில் ஊர்கோலமே நிறுத்திவிட்டார்கள். சில இடத்து நிகழ்ச்சி குறிப்புகளை வெளியிடாமலும் பொதுக் கூட்டத்தை நிறுத்தியும் வீட்டுக்குள் உபசாரப் பத்திரம் படிக்கப்பட்டு சவாரி விட்டார்கள்.

ஆகவே உபசாரப் பத்திர வரவேற்பின் யோக்கியதைகள் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

தவிர பொதுஜன வரவேற்பு “நடந்த’ சகல ஊர்களிலும் பகிஷ்காரம் என்பதும் பல விதத்தில் நடந்திருக்கிறது.

போலீசார் தலையிட்டு விரட்டிய ஊர்களில் பகிஷ்காரத் துண்டுப் பிரசுரங்கள் கையில் கொடுக்கப்பட்டும் சுவர்களில் ஒட்டப்பட்டும் நடந்திருக்கின்றன. போலீசார் அதிகமாய்த் தலைஇடாத ஊர்களில் நன்றாய் காந்தியார் பஹிஷ்காரத்தைவிட மேலாகவே நடந்திருக்கின்றன.

விருதுநகர், திருச்சி, தஞ்சை, மாயவரம், பட்டுக்கோட்டை, தேவகோட்டை, காரைக்குடி (இங்கு வரவேற்புப் பத்திரம் படிக்க சேர்மென் மறுத்துவிட்டார்) ஆண்டிப்பட்டி, திண்டுக்கல், திருத்துறைப்பூண்டி, லால்குடி, சீரங்கம், பொன்மலை, ஒரத்தநாடு, மன்னார்குடி, நாகப்பட்டினம், வாணியம்பாடி முதலிய இன்னும் அனேக ஊர்களில் கருப்புக்கொடியுடன் சில இடங்களில் 30 அடி உயரம் 10 # 10 அகலமுள்ள கருப்புக் கொடிகளும், சில இடங்களில் 100ம் சில இடங்களில் 500 மாக மக்கள் கையில் கருப்புக் கொடிகளை பிடித்துக் கொண்டு அணிவகுத்து பஹிஷ்கரித்து இருக்கிறார்கள்.

ஆனால் காங்கிரஸ்காரர்கள் பலாத்காரம் ஆரம்பித்த இடங்களில் சிறிது குழப்பம் ஏற்பட்டு இருந்தாலும் மற்ற ஊர்களில் குழப்பம் இல்லாமல், ஒழுங்கு தவறுதல் இல்லாமல் பஹிஷ்காரம் நடைபெற்றிருப்பதற்கு மகிழ்ச்சி அடைகின்றோம்.

ஆகவே தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்களோ, காந்தியாரோ மற்றும் எந்த பிரமுகரோ ஆனாலும்கூட தமிழ்நாட்டில் உள்ள நிலையை உணராமலோ, உணர்ந்தும் தெரியாதவர்கள் போல் நடந்து கொண்டு விளம்பரத்துக்கு ஆசைப்பட்டோ இந்நாட்டுக்கு வந்து, பார்ப்பன சூட்சிக்குத் துணை புரிவார்களானால், அப்படிப்பட்டவர்களை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாகத் தமிழ் மக்கள் பஹிஷ்கரிக்காமல் இருக்க மாட்டாõகள். அல்லது தங்களுடைய அதிருப்தியையாவது காட்டாமல் இருக்க மாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.

வேண்டுமானால் பார்ப்பனர்களும், அவர்களது கூலிகளும் “”இந்தக் காரியமானது யாரோ சில காலிகள்  சர்க்கார் குலாம்கள் செய்யும் காரியமே தவிர பொதுஜனங்கள் செய்யும் காரியம் அல்ல” என்று சொல்லி அவர்களை ஏமாற்றலாம். அந்த ஏமாற்றலுக்கும் நாம் தலைகொடுத்து இது பொது ஜனங்கள் செய்யும் காரியம்தான் என்று அவர்கள் அறியும்படி செய்ய எவ்வளவு முயற்சி செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்யக் காத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

முடிவாக இந்தப் பஹிஷ்காரத்தால் ஏற்பட்ட லாபம் என்ன என்று சில சோம்பேறிகள் கேட்கலாம். சிலர் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்காது. ஆனால் அந்த வார்த்தைக்குக் காது கொடுக்கும் சிலருக்கு விளங்குவதற்காக இந்த பகிஷ்காரத்தால் ஏற்பட்ட பலன் என்ன என்பதை சுருக்கமாகக் காட்டுகிறோம்.

தேசீயப் பத்திரிகை என்பவைகளுக்கும், தேசீயத்தின் பேரால் வயிறு வளர்ப்பவர்களுக்கும் கூலி கொடுத்து சுயமரியாதைக்காரர்களையும், ஜஸ்டிஸ்காரர்களையும் வையச் செய்வதற்கு பண வசூல் செய்த சூக்ஷியை தகுந்த அளவுக்கு வெற்றி பெறாமல் செய்த பலன் ஏற்பட்டது.

இரண்டாவதாக காங்கிரஸ் அபிப்பிராயமே பொதுஜன அபிப்பிராயம் என்றும், அது சொல்வது தான் வேதவாக்கென்றும், அதற்கே ஓட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், அப்படிச் செய்யாவிட்டால் அது பாவம் தேசத் துரோகம் என்றும் பாமர மக்களை ஏமாற்றும் புராணத் தன்மையும், தேசீயத் தன்மையும் வெற்றி பெறாமல் இருக்கச் செய்ததோடு வெட்ட வெளிச்சமாக்கப்பட்டது.

கடைசியாக பகிஷ்காரம் காங்கிரசுக்கே சொந்தமென்பது மாத்திர மல்லாமல் எல்லோருக்கும் சொந்தம் என்றும் ஆயிற்று. இனியாவது காங்கிரசுக்காரர்கள் இம்மாதிரியான சூழ்ச்சிகளும், கலவரங்களும், கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படாமல் இருக்கும்படி நடந்து கொள்ள மாட்டார்களா என்று எச்சரிக்கை செய்யவும், சத்தியமூர்த்தியும் அவர் போன்ற சிலரும் கூட்டங்களில் மற்றவர்களை அவன், இவன், குடிகாரன், குலாம் என்றெல்லாம் இழிமொழிப் பிரயோகம் இல்லாமல் யோக்கியமாய் நடந்து கொள்ளத் தூண்டாதா என்றும் பரீட்சை பார்க்கவும் பயன்பட்டது. அந்தக் காரியங்கள் சிலருக்கு வேண்டாததாய் இருக்கலாம். ஆனால் நமக்கு வேண்டியதாய் இருந்தது.

குடி அரசு  தலையங்கம்  10.11.1935

You may also like...