காங்கிரஸ்  கட்சியினரும்

 

ஸ்தல  ஸ்தாபன  பரிசுத்தமும்

ஸ்தல  ஸ்தாபனங்களில் பல  ஊழல்களிருப்பதாகவும்,  காங்கிரஸ்காரர்கள்  தேர்தலில்  வெற்றிபெற்று  நகர  பரிபாலன  சபைகளிலும்,  ஜில்லா  “போர்டு’களிலும்  அங்கத்தினர்களானால்,  அவ்வூழல்கள்  சூரியனைக்  கண்ட  பனிபோல  மறைந்து விடும்  என்று  காங்கிரஸ்  தலைவர்கள்  சிலர்  பிரசாரம்  செய்துவருவதை  நமது  வாசகர்கள்  அறிவார்கள்.  நேற்றை  “”இந்து”  பத்திரிக்கையில்  திருநெல்வேலி  ஜில்லா  “போர்டு’  தேர்தல்களைக்  குறித்து  தோழர்  சத்தியமூர்த்தி  ஒரு  அறிக்கை  வெளியிட்டிருக்கிறார்.  அந்த  அறிக்கையில்  ஸ்தல  ஸ்தாபனங்களைப்  பரிசுத்தப்படுத்தும்  வேலையை  காங்கிரஸ்காரர்கள்  கைக்கொண்டிருக் கிறார்கள்  என்றும்  ஆகையால்  அவர்களுக்கு  “ஓட்’டுக்  கொடுக்க வேண்டும்  என்றும்  கூறியிருக்கிறார்.  காங்கிரஸ்காரர்கள்  இவ்வேலையைச்  செய்வதற்குச் சிறிதேனும்  யோக்கியதையுடையவர்களல்லர்  என்ற  விஷயம்  அவர்களுடைய  பொது  வாழ்க்கையைக்  கவனித்து  வருபவர்களுக்கு  நன்கு  தெரியும்.  டாக்டர்  சுப்பராயனின்  மந்திரி  சபையை  ஆதரித்த  காலத்தில்  சென்னைக்  காங்கிரஸ்  கட்சியினர்  எவ்வளவு  பரிசுத்தமாயிருந்தார்கள்  என்பது  நாடறிந்து,  நாடு  நகைத்த  விஷயம்.  இன்றைக்கும்  காங்கிரஸ்காரர்  பலருடைய  யோக்கியதையும்,  பரிசுத்தமும்  எவ்வளவிலிருக்கிறதென்பது  ஒரு  சிலருக்கே  தெரியும்.  சென்னை  நகர  பரிபாலன  சபையில்  நடந்த  ஒரு  உருசிகரமான  விஷயம்  இதற்கு  உதாரணமாகும்.  சென்ற  வாரம்  நடந்த  சபைக்கூட்டத்தில்,  தோழர்.  சி.பி.  சுப்பிரமணியம்,  சபையின்  அங்கத்தினரான  ஒருவர்  தன்னுடைய  “ஏஜண்ட்’  மூலமாக,  நகர  பரிபாலன  சபையின்  சிமிட்டி  “கண்ட்ராக்ட்’டைப்  பெற்றிருக்கிறார்  என்றும்  அதை  ருஜுப்படுத்த  முடியு மென்றும்  கூறினார்.  இதன்  சம்பந்தமாக,  “மெட்ராஸ் மெயில்’  பத்திரிகையின்  நிருபர்,  வெள்ளைக்காரர்களுடைய  சிமிட்டி  “ஏஜண்ட்’டான  பிரபல  காங்கிரஸ்  தலைவர்,  தோழர்  சாமி  வெங்கடாஜலம்  செட்டியாரைப்  பேட்டி  கண்டார்.  அப்பேட்டியின்  விவரம்  நேற்றைய  “”மெயில்”  பத்திரிகையில்  பிரசுரிக்கப் பட்டிருக்கிறது.  அதைக்  குறிக்கு  முன்,  வாசகர்கள்  சில  விஷயங்கள்  அறிய வேண்டும்.  தோழர்  சாமி  வெங்கடாசலம்  செட்டியார்  சென்னை  நகர  பரிபாலன  சபையின்  அங்கத்தினர்.  நகர  சபையின்  அங்கத்தினர்கள்  “கண்ட்ராக்ட்’  எடுத்தல்  கூடாதென்பது  சட்டமாகும்.  ஆனால்,  சபையால்  ஒப்புக்கொள்ளப்பட்ட  “டெண்டர்’  தோழர்  கூரத்தாழ்வார்  செட்டியாரால்  கொடுக்கப்பட்டது.  தோழர்  கூரத்தாழ்வார்  செட்டியார்  தோழர்  சாமி  வெங்கடாசலம்  செட்டியாரின்  “ஏஜண்ட்’  என்பதை  ருசுப்படுத்தக்கூடும்  என்று  தோழர்  சுப்பிரமணியம்  நகர  சபையில்  கூறியிருக்கிறார்.  இதைப்பற்றி,  “”மெயில்”  நிருபரிடம்  தோழர்  சாமி  வெங்கடாசலம்  செட்டியார்  கூறியதாவது:

“”எனக்கும்  தோழர்  கூரத்தாழ்வாருக்கும்  ஒருவித  சம்பந்தமு மில்லை.  மற்றவர்களுக்கு  சிமிட்டி  விற்பதைப்  போல்  அவருக்கும்  நான்  விற்றிருக்கிறேன்.  நானும்  தோழர்  கூரத்தாழ்வாரும்  தனித்தனியாக  வர்த்தகம்  செய்துகொண்டு  வருகிறோம்.  நாங்கள்  ஒரே  கட்டிடத்தில்  (அதாவது  61,  கோவிந்தப்ப  நாய்க்கன்  தெரு,  ஜார்ஜ்டௌன்)  வெவ்வேறு  பாகத்தில்  இருக்கிறோம்.  தோழர்  கூரத்தாழ்வார்  நகர  சபைக்கு சாதாரண வர்த்தக முறையில், சிமிட்டி வருவித்துக்  கொடுப்பவராயிருக்கலாம்.  என்னுடைய  “டெலிபோனை’  ஒவ்வொரு  சமயத்தில்  தோழர்  கூரத்தாழ்வார்  உபயோகித்திருக்கலாம்.”

இந்த  விவரத்திலிருந்து  தோழர்  கூரத்தாழ்வார்,  தோழர்  சாமி  வெங்கடாஜலம்  செட்டியாரின்  “ஏஜண்ட்’  தான்  என்று  கூறமுடியாது.  எனினும்  தமிழ்நாட்டுக்  காங்கிரஸ்  “கமிட்டி’யார்  இவ்விஷயத்தை  நன்றாக ஆராய்ச்சி  செய்ய  வேண்டியது  அவசியம்.  மற்றும்,  இந்திய  சட்டசபையில்,  நேற்றையதினம்  காங்கிரஸ்  கட்சியைச்  சேர்ந்த  ஒரு  அங்கத்தினரைப்  பற்றி,  உள்நாட்டு  மந்திரியான  சர். ஹென்றிக்ரெயிக்  சில  விஷயங்களைச்  சொன்னார்.  அக்காங்கிரஸ்  அங்கத்தினர்  ஒரு  நியாய  விசாரணை  நடத்துவதற்கு  அரை  இலட்சம்  ரூபாய்  பெற்றாரென்றும்,  சில  சாட்சிகள்  சரியான  சாட்சி  சொல்லுவதைத் தடை செய்ய முயன்றாரென்றும், வக்கீல்களுடைய  நாணயத்திற்கு மீறி  ஒழுங்கற்ற  காரியத்தைச்  செய்தாரென்றும்  சர். ஹென்றி  கூறினார்.  இம்மாதிரியான  குணங்களையுடைய  காங்கிரஸ்  கட்சியினரா  ஸ்தல  ஸ்தாபனங்களைப்  பரிசுத்தப்படுத்தப்  போகிறார்கள்?  முதன்  முதலில்  பரிசுத்தப்பட  வேண்டியவர்கள்  காங்கிரஸ்காரர்களாவர்  என்பதை  எடுத்துக்  காட்ட  விரும்புகிறோம்.

“”விடுதலை”

குடி அரசு  மறு பிரசுரம்  29.09.1935

You may also like...