காங்கிரஸ்  தியாகம்

 

ஒரு  பழைய  கைதி

காங்கிரஸ்  பிரசாரராகிய  தோழர்  தெய்வநாயகய்யா  தண்டிக்கப்பட்டு சிறைக்கு  அனுப்பப்பட்டார்.

அவர்  சிறை  சென்ற  நிமிட  முதல்,  இதுவரை  ஒவ்வொரு  நாளும்  தெய்வநாயகய்யாவுக்கு ஆகிளாஸ் படி கொடுக்கவேண்டுமென்று  காங்கிரஸ்காரர்கள்  கூப்பாடு  போட்ட  வண்ணமாய்  இருக்கிறார்கள்.

என்ன  மானங்கெட்ட  தனம்  இது?

வீம்புக்கு ஜெயிலுக்குப்போக மக்களை  காங்கிரஸ்காரர்  தூண்டுவானேன்?

இப்போது  ஆகிளாஸ்  ஆகிளாஸ்  என்று  கெஞ்சுவானேன்.

ஜெயிலில்  ஆகிளாஸ்  படி  கொடுக்கப்படுமானால்  இன்று  தமிழ்  நாட்டில்  மாத்திரம்  ஒரு  கோடி  பேர்கள்  ஜெயிலுக்குப்  போக  தாங்களாகவே  விண்ணப்பம்  போடத்  தயாராய்  இருப்பார்கள்.  ஆகிளாஸ்  என்றால்  சாதம்,  பருப்பு,  நெய்,  மாம்சம்,  ரொட்டி,  வெண்ணை,  காப்பி,  தயிர்,  பால்  ஆகியவைகள்  கிடைக்கும்.  இது  கிடைப்பதாய்  இருந்தால்  யார்  ஜெயிலுக்குப்  போகப்  பயப்படுவார்கள்.

இதில்  என்ன  பெரிய  தியாகம்  இருக்கிறது.  இது  கிடையாத  ஜனங்கள்  நமது  நாட்டில்  100க்கு  50  பேர்களுக்கு  மேலாகவே  இருக்கிறார்கள்  என்பது  யாருக்கும்  தெரியாதா?

இந்த  நிலையில்  ஜெயிலுக்குப்  போன  காங்கிரஸ்காரர்களுக்கு  சட்டசபை  ஸ்தானமும்,  ஜில்லா  போர்டு  பிரசிடெண்டு  ஸ்தானமும்  பிரதி  பிரயோஜனமாகக்  கிடைக்கவேண்டுமாம்.  இதற்கு  பெயர்தான்  தியாகமும்  தேசபக்தியுமாம்.

குடி அரசு  கட்டுரை  03.11.1935

You may also like...