காங்கிரசின் குலைவு

 

நெல்லூர் ஜில்லாவைச் சேர்ந்த தோழர்கள் பனகா கனகம்மா,  வென்னலகண்டி ராகவய்யா இருவரும் ஆந்திர மாகாண காங்கிரஸ் கமிட்டியிலிருந்து விலகிவிட்டார்கள். தோழர் ராகவய்யா உள்ளூர் ஜில்லாக் காங்கிரஸ் கமிட்டியிலிருந்தும் விலகி விட்டார்.

வெ.முரு. லெக்ஷ்மய்யா ஜில்லா காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி பதவியில் இருந்து விலகினார். எம். கோபால் ராவ்  நகர காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி பதவியிலிருந்து விலகினார்.

தோழர்கள் ராகவய்யா, லெட்சுமய்யா, கோபால்ராவ் ஆகியவர்கள் தங்களுடைய ராஜினாமாக் கடிதத்தில் காங்கிரசானது பணக்காரர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பாடுபடுகிறது என்றும்,  தொழிலாளர்களின் முன்னேற்றத்தைக் கவனிக்காமல் அலட்சியம் செய்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைப் போன்ற காரணத்தாலேயே வடநாட்டி லிருந்தும் பலர் காங்கிரசிலிருந்து விலகியிருக்கிறார்கள் என்பதையும் ஞாபகப்படுத்துகிறோம். இதிலிருந்து காங்கிரசின் உண்மையான போக்கு இன்னதென்று நன்றாகப் பொது ஜனங்களுக்கு விளங்குமென்று நம்புகிறோம். காங்கிரஸ் ஒன்றே ஏழை மக்களுடைய நன்மைக்கும், தொழிலாளிகளின் உரிமைகளுக்கும் பாடுபடுகிறது என்று சொல்வது பெரும் புரட்டென்று தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே காங்கிரஸ் ஏழை மக்களுடைய பிரதிநிதி அல்லவென்பதை வெளிப்படுத்துவதற்காக, காங்கிரசிற்குள்ளேயே சமதர்மக் கட்சி என்று ஏற்பட்டிருப்பதும் காங்கிரசின் வண்டவாளத்தை வெளிப்படுத்துவதாகும். புதுச் சீர்திருத்தம் அமுலுக்கு வருவதற்கு முன்னேயே, காங்கிரசின் கட்டுப்பாடு எப்படி குலைந்து சிதறுகின்றதென்பதைக் கவனித்துக்கொள்ளும்படி  பொதுஜனங்களுக்கு  எச்சரிக்கை  செய்கிறோம்.

குடி அரசு  செய்தி விளக்கம்  03.02.1935

 

You may also like...