திருச்சி  சுயமரியாதை  மகாநாடு

 

இம்மாதம்  19ந்  தேதி  திருச்சியில்  கூடிய  திருச்சி  ஜில்லா  சுயமரியாதை  மகாநாடானது,  சுயமரியாதை இயக்கத்தின்  கொள்கைகளைப்பற்றி,  கண்டபடி  தெரிந்தோ  தெரியாமலோ  வேண்டுமென்றே  விஷமத்தன மாகவே  குறை  கூறிக்கொண்டு  திரிந்தவர்களுக்கு  வாயடைக்கும்படியான  அளவுக்கு  காரியம்  செய்திருக்கிறது.

சிறப்பாக மகாநாட்டுத் தலைவர் தோழர் சௌந்திரபாண்டியன்  அவர்களது  தலைமைப்  பிரசாங்கமானது, ஜஸ்டிஸ்  கட்சியை சுயமரியாதை  இயக்கம்  ஏன்  ஆதரிக்க  வேண்டும்  என்பதற்கு  தகுந்த  காரணங்களை  நன்றாய்  விளக்கி  இருக்கிறதோடு  சுயமரியாதை  இயக்கம்  நாளுக்கு  நாள்  அதனுடைய  கொள்கைகளில்  விசால  நோக்கத்துடனும்  தீவிரமான  மேல்  நோக்கத்துடனும்  முன்னேறி  இருந்தாலும்,  அவற்றிலிருந்து  ஒரு  சிறிதும்  பின்  வாங்காமல்  இருக்க வேண்டும் என்பது ஒருபுறமிருந்தாலும் அதன் ஆரம்ப நோக்கத்தையே அலட்சியப்படுத்துவது சுயமரியாதை ஆகாது  என்பதை அறியும்படி செய்திருக்கிறது.

அன்றியும்  திருச்சி  மகாநாட்டில்  நிறைவேற்றப்பட்ட  விருதுநகர்  மகாநாட்டுத்  தீர்மானத்தையும்,  ஈரோடு  வேலைத்திட்டக்  கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட  சமதர்மத்  திட்டத்  தீர்மானத்தையும்  படித்துப்  பார்ப்பவர்களுக்கு  எலக்ஷனில்  சம்மந்தம்  வைத்துக்  கொள்ளலாமா  வேண்டாமா  என்பதையும்  ஜஸ்டிஸ்  கட்சியை  ஆதரிக்க  வேண்டுமா  வேண்டாமா  என்கின்ற  விஷயத்தைப்  பற்றியும்  ஒரு  தெளிவான  அபிப்பிராயம்  ஏற்பட்டிருக்குமென்றே  நினைக்கிறோம்.

மேலும்  சுயமரியாதை  இயக்கம்  சட்டத்துக்கு  முரண்பாடு  இல்லாமல்  சட்டத்துக்கு  கட்டுப்பட்டு  நடக்க  வேண்டியது  என்றும்  விளங்கும்.

மற்றும்  தலைவர்  அவர்கள்  இயக்கத்துக்கு  கட்டுப்பாடும்  ஒழுங்கு  முறையும்  ஸ்தாபன பலமும்  இருக்க  வேண்டும்  என்று  முடிவாகக்  கூறி  இருப்பதும்  மிகவும்  கவனிக்க  வேண்டிய காரியமாகும்.

இதுவரை  எப்படி  இருந்து  வந்திருந்தாலும்  இனி  இயக்கம்  ஒவ்வொருவருக்கும்  தனிப்பட்ட  முறையில்  சுயேச்சை  இருக்கும்படியாக  இருக்கக்கூடாது  என்பதை  நாமும்  வலியுறுத்துகிறோம்.

விருதுநகர்  ஜஸ்டிஸ்  தொண்டர் மகாநாட்டில்  தோழர்  ஈ.வெ. ரா.  தெரிவித்தது  போல்  கட்டுப்பாடு  என்பது  விளம்பரப்படுத்திவிடக்  கூடிய  காரியமல்ல.

அநேகர்களின் நிஷ்டூரத்துக்கும், அநேகர் இயக்கத்தை விட்டு  வெளியே போவதற்குச்  சம்மதிக்கக்கூடிய  நிலையிலும்  தைரியமாகப்  பலரை  இழக்கத்  துணிவதிலும்  தான்  கட்டுப்பாடு  ஏற்படக்கூடுமே  தவிர  தாக்ஷண்ணியத்தாலும், பயத்தாலும், போலி ஒற்றுமையினாலும்  கட்டுப்பாடு  ஏற்படுவது  சுலபமான  காரியம்  அல்ல.

அதோடு கூடவே பொருளாதார நிலையிலும்  ஒரு  அளவுக்கு  சௌகரியம்  இருக்க  வேண்டும்.

இவ்வளவோடும்கூட  சர்வாதிகாரத்  தன்மைக்கும்  சிறிதாவது  இடமளித்தாக  வேண்டும்.

இவ்வளவு  காரியமும்  இல்லாமல்  வெறும்  கட்டுப்பாடு  கட்டுப்பாடு  என்று  பேசுவதால்  மாத்திரம்  கட்டுப்பாடு  ஏற்பட்டுவிடாது.  ஆகையால்  அந்த  விஷயத்தையும்  தலைவர்  போன்றவர்கள்  கவனிக்க  வேண்டுகிறோம்.

இனி  வருங்காலத்தில்  காங்கிரஸ்  கூப்பாட்டுக்கு  யோக்கியதையற்றுப்  போகுமாகையால்  சுயமரியாதை  இயக்கம்  காங்கிரசை  எதிர்ப்பதற்காக  செலவழித்து  வந்த  நேரத்தையும்,  பிரசாரத்தையும்,  ஊக்கத்தையும்  இனி  சுயமரியாதை  இயக்க  சமுதாயத்  துறைப்  பிரசாரத்துக்குத்  தாராளமாகச்  செலவிடலாம்.

ஆகையால்  சீக்கிரத்தில்  கட்டுப்பாடும்,  ஸ்தாபன  பலமும்  ஏற்பாடு  செய்து கொண்டு தக்கதொரு வேலைக்கமிட்டி அமைத்துக் கொண்டு  முன்னிலும்  அதிகமான  பிரசாரத்துக்கு  சுயமரியாதை  இயக்கத்  தோழர்கள்  தயாராய்  இருக்க  வேண்டும்  என்று  ஆசைப்படுகிறோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  27.10.1935

 

You may also like...