தேசபக்தி
தேசபக்தி என்னும் பேரால் இத்தாலியும் அபிசீனியாவும் போர் தொடங்கி இத்தாலி மக்களும் அபிசீனிய மக்களும் குளுமாயி கோயிலில் ஆட்டுக்குட்டி பலியிடப்படுவதுபோல் பதினாயிரக்கணக்காய்ப் பலியிடப்பட்டு வருகிறார்கள். அதை (அந்த யுத்தத்தை) நீதியும் சமாதானமும் என்னும் வல்லரசுகள் பத்திரமாய் காப்பாற்றி வருகிறார்கள்.
இன்னும் தேசபக்தி வலுக்க வலுக்க 1000ம் 10000 மாகி, 10000ம் 1000000ம் கணக்கான மக்கள் பலியிடப்படப்போகிறார்கள்.
நீதியும் சமாதானமும் வலுக்க ஆரம்பித்தால் 1000000 கணக்கான மக்கள் கோடிக்கணக்காக பலியிடப்படப் போகிறார்கள்.
ஆகவே தேசபக்தியின் பெருமைதான் என்ன! கடவுள் பெருமைதான் என்ன!
அபிசீனிய மன்னன் தனது பலி ஆடுகளைத் தேசபக்தி என்ற சங்கை ஊதித்தான் கூப்பிடுகிறான்.
இட்டாலி சர்வாதிகாரி தன்னுடைய பலி ஆடுகளையும் தேசபக்தி என்கின்ற சங்கை ஊதித்தான் அழைக்கிறான்.
ஆகவே தேசபக்தி என்பது மக்களை மக்கள் பலிகொடுப்பதும் மக்களை மக்கள் பலி வாங்குவதும் தவிர வேறு ஒன்றையும் காணோம். அப்படி வேறு ஏதாவது இருக்கக் கூடுமானால் அது ஜான்சன் என்னும் தத்துவஞானி சொன்னதுபோல் “”தேசபக்தி என்பது காலிகளின் கடசி ஜீவனோபாயம்” என்பதாகத்தான் இருக்க வேண்டும்.
குடி அரசு துணைத் தலையங்கம் 13.10.1935