காங்கிரசின் யோக்கியதை

 

இந்திய தேசிய காங்கிரஸ் ஏற்பட்டு சுமார் 50 வருஷமாகிறது. அது ஆரம்பமானது முதல் சுமார் 35 வருஷ காலம் வரையில்,

அரசாங்கத்தினிடமிருந்து பல உத்தியோகங்கள் பெறுவதும்,

உத்தியோகங்களுக்குச் சம்பளங்கள் உயர்த்தப்படுவதும்,

புதிய உத்தியோகங்கள் கற்பிக்கப்படுவதும்,

புதிய கோர்ட்டுகள், புதிய அரசாங்க ஆபீசுகள், புதிய இலாக்காக்கள், அவற்றிற்கு புதிய புதிய உத்தியோகஸ்தர்கள் முதலியவைகளை ஏற்படுத்த வேண்டுமென்று கோரி அந்தப்படி அதிகப்படுத்துவதும்,

இதற்கு வேண்டிய செலவிற்காக அரசாங்கத்தைக் கொண்டு பொது ஜனங்களின் மீது புதிய புதிய வரிகள் போடச் செய்து வசூலிப்பதும்,

இந்தப்படி புதிதாக போடப்படும் வரிகள் பணக்காரர்களையோ, பெரிய உத்தியோகம் பார்த்து அதிக சம்பளம் வாங்கும் பணக்கார உத்தியோகஸ்தர்களையோ பாதிக்காமல் பெரிதும் ஏழை மக்கள் சாதாரண மக்கள், தொழிலாளிகள், கூலிகள் ஆகியவர்களையே பாதிக்கும்படியான மாதிரியில் வரி விதிக்கப்படுவதுமான காரியங்களையே செய்து வந்திருக்கிறது.

இவ்வளவு மாத்திரமல்லாமல் காங்கிரஸ் ஏற்பட்டு 35 வருஷ காலம் வரை இந்திய தேசீய காங்கிரஸ் மகாநாடு என்பவைகள் கூட்டப்பட்டவுடன் முதல் தீர்மானமாக அரசாங்கத்தையும், சக்கரவர்த்தி பெருமானையும், புகழ்ந்து கூறி, “”அரசர், அல்லது சக்கரவர்த்தி, விஷ்ணுவின் அவதாரம்” என்றும் பேசி “”அரசருக்கும், அரச சந்ததிகளுக்கும், அரசாங்க சட்டதிட்ட நீதி நிர்வாகங்களுக்கும், தாங்களும் தங்கள் சந்ததிகளும் பக்தி விஸ்வாசத்துடன் கட்டுப்பட்டு நடப்போமாகவும்” என்று முதல் தீர்மானம்.

தோழர்கள் சுரேந்தரநாத் பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி, பாலகங்காதர திலக், கோகலே, பெசண்ட், கரம்சந்தர மோகன்தாஸ் காந்தி முதலாகியவர்கள் மற்றும் தேசியவாதிகள், தேசாபிமானிகள் என்பவர் களாலேயே பிரரேபித்தும், ஆமோதித்தும், ஆதரித்தும், ஓட்டுக் கொடுத்தும் நிறைவேற்றுவதும், இத் தீர்மானங்கள் பிரரேபிக்கப்படும்போது ஒழுங்காகவும் உண்மையான பக்தியுடனும் நடைபெறுகின்றதா என்பதை நேரிலிருந்து பார்த்துப் போகும்படி அந்தந்த மாகாண கவர்னர் முதலிய அதிகாரிகளையே அழைத்து வந்து நேரிலிருந்து பார்க்கும்படி செய்ய இத்தலைவர்கள் முயற்சிப்பதும் ஆகிய காரியங்களே பெரிதும் காங்கிரஸ் வேலையாகவும் அதையே செய்து வந்ததாகவும் இருந்து வந்தது.

இந்த யோக்கியதையில் உள்ள காங்கிரஸானது அக்காலத்தில் மற்ற மாகாணங்களில் பார்ப்பனர், படித்தவர்கள், பணக்காரர் ஆகியவர் ஆதிக்கத்தில் இருந்திருந்தாலும், சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை அடியோடு பார்ப்பனர்கள் கையிலேயே இருந்திருந்தாலும் அது பெரிதும் அவர்களிலுள்ள இரு பிரிவுகளில் ஒன்றாகிய விபூதி பூசும் பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்து கொண்டு அய்யங்கார் பார்ப்பனர்களைப் புறக்கணித்து விட்டதால் காங்கிரசின் பயனாய் ஏற்பட்ட  கிடைக்கப்பட்ட பெரும் உத்தியோகங்களும், சிறு உத்தியோகங்களும் விபூதி பூசும் அய்யர் பார்ப்பனர்களே அனுபவித்துக் கொண்டு அய்யங்கார் பார்ப்பனர்களை உத்தியோகப் பட்டினி போட்டு வந்தார்கள். அதாவது காங்கிரஸ் தலைவர், காரியதரிசி, ஹைக்கோர்ட் ஜட்ஜிகள், அட்வோகேட் ஜனரல், கவுன்சில் மெம்பர் ஆகியவர்கள் பெரிதும் முத்துசாமி அய்யர், மணி அய்யர், சதாசிவ அய்யர், பி.ஆர். சுந்திரமய்யர், வி. கிருஷ்ணசாமி அய்யர், சிவசாமி அய்யர், சி.பி. ராமசாமி அய்யர், எம். ராமச்சந்திரராவ், எல்.ஏ. கோவிந்தராகவய்யர், பி.என்.சர்மா, ஜி.ஏ.நடேசய்யர், சீனிவாச சாஸ்திரி முதலான அய்யர் சாஸ்திரி சர்மா பார்ப்பனர்களே இருந்து அனுபவித்து வந்தார்கள். இந்தப்படி இருந்ததால் அய்யங்கார் பார்ப்பனர்கள் காங்கிரசில் புகுந்து பங்கு பெற்று இவ்வுத்தியோகங்களைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டியவர்களானார்கள்.

காங்கிரசில் இந்த அய்யர், அய்யங்கார் யுத்தம் பெசண்டம்மையார் காலத்து வலுத்து வெளிப்படையாய் நடக்க ஆரம்பித்தது.

இதற்கு மற்றுமொரு காரணம் சென்னை மாகாண அய்யர் பார்ப்பனர் களின் ஆதிக்கமானது, பிரபல  முக்கியமான அரசியல்வாதியென்று சொல்லும்படியான தோழர் சி.விஜயராகவாச்சாரியாரை அவர் அய்யங்கார் என்கிற காரணத்துக்காக வெகுகாலமாய் அவர் எந்தக் காங்கிரசுக்கும் தலைமை வகிப்பதற்கில்லாமலே செய்து அவர் பேர் வரும்போதெல்லாம் சென்னை மாகாணத்தில் அவருக்கு விரோதமாய் ஒரு அய்யங்கார் அல்லாதவரை போட்டு தோற்கடித்தே வந்திருக்கிறார்கள்.

உதாரணமாக சர். சங்கர நாயருக்கு கிடைத்த சான்சுகூட ஆச்சாரியாருக்கு கிடைக்கவில்லை.

ஆதலால் அய்யங்கார்கள் ஒன்று கூடி வெளிநாட்டுப் பிரபல அரசியல்வாதியான திலகரை சுவாதீனப்படுத்திக்கொண்டு இம்மாகாண அய்யர் பார்ப்பனர்களை எதிர்க்க இம்மாகாணத்தில் அக்காலத்தில் அரசியலில் கலந்திருந்த தோழர்கள் சிதம்பரம்பிள்ளை, சக்கரைச் செட்டியார் போன்றவர்களை அமர்த்திக் கொண்டு பெசண்டம்மையார், அய்யர் பார்ப்பனர் ஆகியவர்களை வையும்படி ஏவிவிட்டு ஒரு அளவுக்கு அய்யர்கள் ஆட்சியை ஆட்டத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

இந்த நிலையில் அய்யர் அய்யங்கார் சண்டையையும் அதன் உள் எண்ணத்தையும் அறிந்த தென்னாட்டுப் பார்ப்பனரல்லாத பிரபல அரசியல்வாதிகளான தோழர்கள் டாக்டர் நாயர், தியாகராயர் மற்றும் 2ந்தர, 3ந்தர அரசியல்வாதிகள் சேர்ந்து தங்கள் சமூகம் அடியோடு கவனிப்பாரற்றுக் கிடப்பதை உணர்ந்து அவ்வுத்தியோகங்களில் தங்கள் வகுப்புகளுக்கும் கொஞ்சம் பங்கு கிடைக்க வேண்டுமென்று முயற்சிக்க வேண்டியவர்களானார்கள்.

இந்தச் சமயத்தில் பிரிவுபட்டிருந்த அய்யர், அய்யங்கார், பார்ப்பனர்கள் தங்கள் விரோதத்தை மறந்து பார்ப்பனரல்லாதாரின் இம்முயற்சியின் பயனாய் ஒன்று சேர்ந்து பார்ப்பனரல்லாதார் முயற்சியை எதிர்த்து அழிக்க வேண்டியவர்களானார்கள்.

இந்த நிலையில் பார்ப்பனர்களுக்கு ஒரு பார்ப்பனரல்லாத தலைவரும், பார்ப்பனரல்லாத தேசபக்தர்களும் வேண்டியிருந்தது என்பதோடு சற்று அதிக புத்திசாலித்தனமான சூக்ஷிகளும் தந்திரங்களும் வேண்டி இருந்தது. இப்படிப்பட்ட ஒரு அவசியமானதும் இன்றியமையாததுமான சந்தர்ப்பம் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டுவிட்டதால்தான் காந்தியார் தலைவராகவும், தோழர்கள் ஈ.வெ.ராமசாமி, பி. வரதராஜுலு, திரு. வி. கல்யாணசுந்திரம், சிங்காரவேலு, ஆரியா, டி.வி. கோபாலசாமி முதலியார், முத்துரங்க முதலியார், சுப்பிரமணிய நயினார், ராமச்சந்திர செட்டியார் போன்றவர்கள் திடீரென்று தேசபக்தர்களாகவும், தேசாபிமானிகளாகவும், தேசீயவாதிகளாகவும் ஆக்கப்பட்டார்கள்.

அதன் பிறகுதான் அய்யர்கள் ராஜ்ஜியம் ஒரு அளவுக்கு ஒழிந்து அய்யங்கார் ராஜ்ஜியமாகி வெகுநாளாகத் தள்ளப்பட்டுக் கிடந்த விஜயராகவாச்சாரியார் கல்லறையில் ஒரு காலும் காங்கிரஸ் தலைமையில் ஒரு காலும் இருக்கும்படியாக கிழ வயதில் காங்கிரஸ் தலைவராக்கப் பட்டார். அதன் பின்பே தோழர் ராஜகோபாலாச்சாரியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் காரியதரிசியாகவும், சீனிவாச அய்யங்கார், பாஷியம் அய்யங்கார், சந்தானம் அய்யங்கார், வரதாச்சாரி ஆகியவர்கள் காங்கிரசில் பிரதானப்பட்டவர்களானார்கள். அதன் பிறகே இந்த அய்யங்கார் கூட்டத்திற்கு நிபந்தனை இல்லாத அடிமைகள் யாரோ அவர்களே அய்யர் பார்ப்பனர்களிலும் பார்ப்பனர் அல்லாதாரிலும், முகம்மதியர்களிலும், கிறிஸ்தவர்களிலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களிலும், தேசபக்தர்கள், தேசீயவாதிகள், தேசீய பிரசாரகர்கள் ஆகியவர்கள் ஏற்பட இடமேற்பட்டது.

இதற்குச் சம்மதிக்காத தேசபக்தர்கள் திடீரென்று தேசத் துரோகிகள், சர்க்கார் குலாம்கள் என்று ஆக்கப்பட்டார்கள். இதுதான் இந்திய தேசீய காங்கிரசின் தென்னாட்டுச் சரித்திரமாகும்.

இந்த நிலையில் உள்ள காங்கிரஸானது சமீபகாலமாய் தென்னாட்டில் வெளிப்படையாக, பட்டாங்கமாக பார்ப்பனர்கள் ஒரு புறமும், பார்ப்பனரல்லாதார்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், தீண்டப்படாதவர்கள் உள்பட எல்லோரும் மற்றொரு புறமாகவும் தங்கள் சமூக ஸ்தாபனங் களோடு இருந்து போர் புரிந்து வருகிறார்கள்.

இப்போரில் காங்கிரஸ் ஸ்தாபனம் தேசத்துக்காக போர் புரிகின்ற தெனவும் பார்ப்பனரல்லாதார் ஸ்தாபனம் வகுப்புவாதத்துக்கு ஆக அதாவது உத்தியோகத்துக்கு ஆகப் போர்புரிகின்றது என்றும் உத்தியோகம் என்றால் மந்திரி பதவிகள் என்றும் பார்ப்பனர்கள் பறையடித்து பிரசாரம் செய்கிறார்கள்.

பார்ப்பனர்களுக்குப் பத்திரிகை உலகம் அடிமைப்பட்டுவிட்டதாலும் பார்ப்பனர்களின் ஆதரவில்லாமல் தென்னாட்டில் எந்தப் பத்திரிகையும் வாழ முடியாத நிலைமையில் இருப்பதாலும் பார்ப்பனப் பத்திரிகையில் வெளியாக்கப்படும் அபிப்பிராயங்களே தேச மகாஜனங்களின் அபிப்பிராயங்கள் என்று எழுதி பின்பற்றாத பத்திரிகைகள் இந்நாட்டில் தலைகாட்ட முடியாத நிலையிலிருப்பதாலும் அரசியலின் பேராலோ, பொது வாழ்வின் பேராலோ தேசாபிமானம், தேசபக்தி, தேசியம் என்னும் பேராலோ வாழ வேண்டியவர்களோ பெருமையும், புகழும் பெற வேண்டியவர்களோ எப்படியாவது பார்ப்பனர்களுக்கும் அவர்களது பத்திரிகையின் ஸ்ரீ முகங்களுக்கும் கட்டுப்பட்டு தீர வேண்டியவர்களாகி விட்டார்கள்.

இதனால் பாமர மக்கள் உண்மையை உணர முடியாமல் போனதோடு சிறையில் அடைபட்ட மக்கள் போல் அரசியல் விஷயத்தில் சிறிதும் சுதந்திரமோ, சுயேச்சை புத்தியோ, அபிப்பிராயமோ அடைவதற்கு தகுதி யில்லாதவர்களாகவும், சவுகரியமில்லாதவர்களாகவும் ஆகிவிட்டார்கள்.

இம்மாதிரியான காரியங்களால் ஓரளவில் பார்ப்பன ஆட்சி தென்னாட்டில் நடைபெறுகின்றதென்பதாக வைத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் நிலையானது 1920 முதல் 1935 வரையில் பார்ப்போமானால் நாளுக்கு நாள் இறங்கு முகத்தில் வந்து கொண்டே இருக்கிறதே தவிர, சிறிதும் மேல் நோக்கினதாகவோ, கீழ் நோக்காமலாவது இருக்கிறதாகவோ சொல்ல முடியவில்லை.

அது மாத்திரமல்லாமல் இன்றைய நிலைமையானது பார்ப்பனர்களை இது காலம் வரை தாம் செய்து வந்த காரியம் தப்பு என்பதாக உணரும் படியாகவும், 1920ம் வருஷத்துக்கு முன் இருந்த நிலைமைக்குப் போக வேண்டியதே தங்கள் சமூகத்துக்கு நன்மை அளிக்கக் கூடியது என்பதாகவும், புத்தி கற்பித்துவிட்டதுடன், இப்பதினைந்து வருஷமாக இந்தப் போரை நடத்திக் கொண்டு வந்த தலைவரும், தளகர்த்தரும், அதாவது காந்தியாரும் ராஜகோபாலாச்சாரியாரும் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைமையை கொண்டு வந்து விட்டுவிட்டது. அந்த ஓய்வு தங்களுடைய நலனுக்கு என்று இல்லாமல் காங்கிரசின் நன்மைக்காக ஓய்வெடுத்துக் கொள்கிறோம் என்று சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டது.

இதன் கருத்து என்னவென்றால் இவர்கள் காங்கிரசில் இருப்பதால் காங்கிரசை நடத்தும் பொறுப்பை இவர்கள் ஏற்றுக் கொள்வதால் காங்கிரசுக்கு நன்மையில்லாமல் தீமையே என்றும் தாங்கள் ஒதுங்கி இருப்பதாலேயே காங்கிரசுக்கு நன்மை என்றும் கருதினார்கள் என்பது வெளிப்படையாய் விளங்குகிறது.

அதோடு மாத்திரமல்லாமல் “”காந்தியார், ஒரு புறமும் வைசிராய்  ராஜப்பிரதிநிதி ஒரு புறமும் இருந்து ராஜி பேசி ஒரு பத்திரத்தில் இருவரும் கையொப்பமிடும்படியான நிலைமை பெற்றிருந்த ஒரு தலைவர்” அதே அரசாங்க ராஜப் பிரதிநிதியை பார்க்க, தன்னுடைய குறைகளை தெரிவித்துக் கொள்ள  எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அதாவது பேட்டியில் தன்னை எப்படி வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என்று ஒரு தடவைக்கு மூன்று தடவை விண்ணப்பித்துக் கொண்டும் அதை லட்சியம் செய்யாமல் பேட்டி மறுத்தும், அதே தலைவர் தானே சர்வாதிகாரி என்றும் தன்னை மனிதத் தன்மைக்கு மேம்பட்டவர் என்றும் கருதிக் கொண்டும், பிறத்தியாரை அம்மாதிரி கருதவும், அழைக்கவும் செய்து கொண்டும் இருந்தவர் இந்நிலை அடைந்து இவரது வேண்டுகோளெல்லாம் மறுக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்பட்ட காலத்தில் இன்றும் 1920ம் வருஷத்துக்கு முந்திய காங்கிரசின் ராஜ விஸ்வாசப் பிரமாணமும், உத்தியோகம் ஏற்கும் முயற்சியும் செய்யப்படுகிறதென்றால் பேட்டி மறுத்து அலட்சியப்படுத்தப்பட்ட வைசிராய் சட்டசபையில் போய் தலைகுனிந்து அதற்கு மேற்பட்ட ராஜபக்தி விஸ்வாசப் பிரமாணம் செய்து அமரத்துவம் செய்வதென்றால் இதுவரை காங்கிரஸ் செய்து வந்த காரியம் முட்டாள்தனமா? அல்லது சூட்சியா? அல்லது ஏதாவது ஒரு உண்மைக் கொள்கைக்கோ மனிதத் தன்மையான சுயமரியாதைக்கோ செய்யப்பட்ட காரியமா? என்பதைப் பொது ஜனங்கள் உணர வேண்டும் என்பதற்கு ஆகவே இந்த “”பாட்டி கதை” என்பதை எழுதினோம்.

இந்த நிலைமையிலுள்ள காங்கிரசானது இப்போது தேசம், தேசாபிமானம், சுயராஜ்யம், பூரண சுயேச்சை, அரசாங்கத்தைப் பணிய வைத்தல் ஆகிய பெயர்களை சொல்லிக் கொண்டு சத்தியமாகவும், நீதியாகவும், யோக்கியமாகவும் நடப்பதாகவும் கூறிக் கொண்டு கிறிஸ்தவர் களையும், மகமதியர்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும், பார்ப்பனரல்லாதார் களையும் இவர்களுடைய ஸ்தாபனங்களையும் வகுப்பு வாதம் என்றும், வகுப்புவாதிகள் என்றும், தேசத் துரோகமென்றும், சர்க்காரின் அடிமைகள் என்றும் சொல்லிப் பிரசாரம் செய்து வந்தவர்கள் இன்று சத்தியம், யோக்கியம் முதலிய குணங்களை அடியோடு ஒதுக்கி வைத்துவிட்டு சுயராஜ்யம், விடுதலை, பூரண சுயேச்சை என்ற வார்த்தைகளையெல்லாம் மறந்துவிட்டு எப்படி மெம்பராவது, எப்படி பிரசிடெண்டாவது என்பதற்கு ஏற்ற சூக்ஷி, தந்திரம், பொய், ஏமாற்று ஆகியவைகளையே முக்கிய திட்டமாக வைத்து பார்ப்பன வகுப்பு நலனையே கொள்கையாய்க் கொண்டு கிளர்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடக்கப் போகும் ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ்காரர்கள் ஜெயம் பெற வேண்டுமென்று சொல்லிக் கொண்டு அந்த ஸ்தானங்களுக்கு காங்கிரஸ்காரர்களையே நிறுத்தப் போவதாய் சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சிக்குள் புகுந்து கலகத்தையும், மித்திர பேதத்தையும் உண்டாக்கி அந்த மெம்பர்களின் பலவீனத்துக்குத் தகுந்தபடி ஆசை காட்டி காரியங்கள் செய்து பொய்வாக்குகள் கொடுத்து அவர்களை ஏமாற்றி சுவாதீனம் செய்து அவர்களையே காங்கிரஸ் மெம்பர்கள் என்று பெயர் சொல்லி நிறுத்துகிறார்கள்.

சிதம்பரத்தில் காங்கிரஸ் மெம்பர்கள் ஜெயித்தார்கள் என்று சொல்லி பொது மக்களுக்குத் தப்பபிப்பிராயம் ஏற்படும்படி செய்து, அக்கவுன்சிலில் ஏற்பட்ட ஒரு செனட்டு மெம்பர் தேர்தலில் தோழர் வேணுகோபால் பிள்ளை (ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்) பெருவாரி ஓட்டுகளால் தெரிந்தெடுக்கப்பட்டார்.

மதுரை முனிசிபல் கவுன்சிலில் காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற்றார்கள் என்று பார்ப்பனப் பத்திரிகைகள் முழங்குகின்றன. ஆனால் பெரும்பாலும் ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்கள் பணச் செலவுக்கும், கூலிகள் வசவுக்கும் பயந்து கொண்டு புரட்டுக்குப் புரட்டாக கட்சிப் பெயர் மாற்றி பணம் மாத்திரம் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்களே தவிர, அவர்களையெல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கைகளை விட்டுக் கொடுத்த காங்கிரஸ் மெம்பர்கள் என்று சொல்லி விட முடியாது.

அதற்கு உதாரணம் சென்ற 10 ந் தேதி மதுரை முனிசிபல் கவுன்சில் மீட்டிங்கில் 24பேர் ஆஜரிருந்தும் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும் என்கிற தீர்மானத்துக்கு 6 பேர் தான் ஓட்டுக் கொடுத்தார்கள். 18 பேர் மறுத்து விட்டார்கள்.

அதுபோலவே திருநெல்வேலி, திருச்சி ஆகிய ஜில்லா போர்டு களுக்கும், காங்கிரஸ் மெம்பர் என்று பெரும்பாகம் ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களையே நிறுத்துகிறார்கள்.

அவர்கள் அத்தனை பேரும் காங்கிரஸ்காரர்களை ஏய்க்கவே 4 அணா கொடுத்து காங்கிரஸ்  பேரால் நிற்க சம்மதித்து இருக்கிறார்கள். இவர்களைத் தவிர காங்கிரஸ்காரர்களுக்கு தேர்தல்களுக்கு நிறுத்த ஆள்களும் கிடைப்பதில்லை.

காங்கிரஸ்காரர்களே சில ஜஸ்டிஸ் மெம்பர்களுக்கு அவரவர்கள் இஷ்டம் போல் நடக்க உரிமை கொடுத்து தேர்தலின் முடிவு வரை தங்களை காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் கிடைத்தால் போதும் என்று சொல்லுகிறார்கள்.

பாமர மக்களை ஏமாற்றவும், வெளி மாகாணக்காரர்களுக்கு எண்ணிக்கை அதிகமாகத் தெரியவும் பாடுபடுகிறார்களே ஒழிய மற்றபடி ஆள்களை தெரிந்தெடுப்பதில் எவ்வித நாணயமும் கவனிக்கப்படுவதில்லை.

மற்றும் காங்கிரஸ் கொள்கைப்படி ஒரு காங்கிரஸ் அங்கத்தினருக்கு இருக்க வேண்டிய யோக்கியதையும், அவர் நடந்து கொள்ள வேண்டிய முறையும் கொண்ட மெம்பர் இந்த கூட்டத்தால் யாராவது இருப்பதாய்ச் சொல்ல முடிவதுமில்லை.

கதர் ரூ.க்கு எத்தனை படி என்று இன்னமும் கேட்கும் ஆட்கள் திருநெல்வேலி, திருச்சி, மதுரை முதலியவிடங்களில் காங்கிரஸ் தெரிந்தெடுப்பில் 100க்கு 75 பேர் இருப்பார்கள் என்றால் மற்றதைப் பற்றி கேட்க வேண்டுமா?

ஆகவே காங்கிரஸ்காரர்கள் என்று ஒரு கூட்டம் ஏற்பட்ட பிறகு பொது வாழ்க்கையில் நாணயம், ஒழுக்கம், கற்பு என்று என்ன என்ன குணம் இன்று நல்லது என்னும் பேரால் இருந்து வந்ததோ அவைகளெல்லாம் அடியோடு மறைந்து போய்விட்டதுடன் பொது ஸ்தாபனங்களின் தன்மையும், நிர்வாகத்தின் யோக்கியதையும் பாழாகிக் கொண்டு வருகின்றது.

மனிதத் தன்மைக்கு ஜீவநாடி மானமேயாகும். காங்கிரசுக்கு அது சிறிது கூட இல்லாமல் போனதுடன் எவ்வளவுக்கு எவ்வளவு மானங்கெட வாழ முடிகின்றதோ அதுவே காங்கிரசின் மேலான வாழ்க்கையாக இருந்து வருகின்றது.

ஆகையால் இக்கொடிய நோயை அழிக்க வேண்டியது சுயமரியாதையும், சமதர்மமும் கோரும் மக்களின் இன்றியமையாக் கடமையாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு  தலையங்கம்  13.10.1935

You may also like...