பகிஷ்கரியுங்கள்!

 

இராஜேந்திரப் பிரசாத்தைப் பகிஷ்கரியுங்கள்!!

தென்னாட்டில் பார்ப்பனச் செல்வாக்கு ஒழிந்ததும், பார்ப்பனச் சூட்சியைத் தென்னாட்டு மக்கள் அறிந்து கொண்டார்களென்றும், தெரிந்த தென்னாட்டுப் பார்ப்பனர்கள் வடநாட்டிலிருந்து தோழர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களைக் கொண்டு வந்து, தாங்கள் இழந்த செல்வாக்கையும், சூட்சியையும் மீண்டும் தென்னாட்டில் நிலைநிறுத்த, தோழர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களுக்குப் பார்ப்பனீய மந்திரோச்சாடனம் செய்வித்து, ஊர் ஊராக அழைத்து வந்து, பார்ப்பனரல்லாத கட்சியையும், இயக்கத்தையும், தலைவர்களையும் தூற்றித் தங்கள் சூழ்ச்சியை நிலைநிறுத்தவும் பணந் திரட்டவும் வருகிறார்கள்.

தென்னாட்டுப் பார்ப்பனரல்லாத தமிழ் மக்களே! சுயமரியாதைத் தோழர்களே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுக்கு உண்மையுள்ள பார்ப்பனரல்லாத இரத்தமும், சுயமரியாதை இரத்தமும் ஓடுமானால், தோழர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களைப் பகிஷ்கரித்து நமது வெறுப்பைத் தோழர் பிரசாத் அவர்கள் அறியும்படி செய்ய வேண்டும்.

சுயமரியாதைச் சங்கங்களும், பார்ப்பனரல்லாத சங்கங்களும் உடனே கூட்டங்கள் கூட்டி, பகிஷ்காரத் தீர்மானங்கள் நிறைவேற்றி வெளியிட்டுப் பகிஷ்காரஞ் செய்ய வேண்டுகிறோம்.

குடி அரசு  வேண்டுகோள்  06.10.1935

You may also like...