திருவள்ளுவர் நாஸ்திகர் கடவுள் ஒழிய வேண்டும்

 

பிச்சை எடுத்து வாழும்படியாக மக்களை கடவுள் சிருஷ்டித்து இருந்தால் கடவுள் ஒழிய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.   அதாவது,

“”இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து

கெடுக உலகியற்றி யான்”

என்று 1062 வது குறளாகச் சொல்லி இருக்கிறார்.

இன்று இவ்வுலகில் பிச்சை எடுத்து வாழும் மக்கள் எந்த மதத்தினராயினும் எந்தக் கடவுளை வணங்குபவராயினும் அவரவர்கள் அந்தக் கடவுளால் பிரப்பு விக்கப்பட்டவர்களாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய அவனவன் தாய் தகப்பன் முயற்சியால் பிறந்து அவனவன் புத்திக் கேட்டால் சோம்பலால் குறும்புத்தனத்தால் பிச்சை எடுக்கிறார்கள் என்று எந்த ஆஸ்திகனும் சொல்லமாட்டான்.

அப்படிச் சொல்வாராயின் எந்த ஆஸ்திகனும் பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்ய முன் வரவுமாட்டான்.  அது மட்டுமா, எந்த வேதமும் சாஸ்திரமும் பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்யும்படி சொல்வும் முன்வராது.  அவ்வளவோடு மாத்திரமா!

எந்தக் கடவுளும், பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்தவர்களுக்கு, மோக்ஷமோ, சன்மானமோ கொடுக்கவும் முன்வராது.

ஆகவே, பிச்சைக்காரர்களும் அவர்களது தொழில்களும் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது என்பதுதான் அவர்கள் முடிவு.

அதனால்தான், திருவள்ளுவர் பொய்யா மொழிப் புலவர் “”பரந்து கெடுக உலகம் இயற்றியான்” என்று துணிவாய்ச் சொல்லிவிட்டார்.

தரித்திரத்தையும், ஏழ்மையையும்,  பிச்சை எடுக்கும் தன்மையையும் ஒழிக்க வேண்டுமானால் கண்டிப்பாகக் கடவுள் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று சமதர்மவாதிகளும் சொல்லுகிறார்கள்.  இப்படிச் சொல்லுவதால் திருவள்ளுவர் நாஸ்திகராகும் போது சமதர்மவாதிகள் நாஸ்திகர்களாவதில் எந்த உலகமும் முழுகிப் போய்விடாது.

ஆதலால்தான், ஏழ்மையையே ஒழிக்கப் பாடுபடுகின்ற தேசமெல்லாம் முதலில் கடவுளை ஒழிக்கப் பாடுபடும் வேலையையே மேற்போட்டுக் கொண்டு வருகின்றன போலும்.

பகுத்தறிவு (மா.இ.)  கட்டுரை  செப்டம்பர் 1935

 

You may also like...