காந்தியும்  காங்கிரசும்

 

காங்கிரசு  ஜெயித்தது  என்று  மகிழ்ந்த  தோழர்களே!

காங்கிரசுக்கு  வேலை  செய்த  தேசாபிமானத்  தோழர்களே!

இதற்கு  என்ன  சொல்லுகிறீர்கள்?

தோழர்  காந்தி  அவர்கள்  காங்கிரசை  விட்டு  விலகி  விட்டதாகப்  பொது  ஜனங்கள்  கருதும்படியாய்  எவ்வளவு சடங்குகளும்,  விளம்பரங்களும்  செய்து  மக்களை  நம்பும்படியாக  நமது  “”தேசபக்த”  கூட்டத்தார்கள்  செய்து  வந்தார்கள்  என்பது  யாவரும்  அறிந்ததேயாகும்.

ஆனால்,  அவற்றைப்  பற்றி  நாம்  அது  உண்மை  அல்லவென்றும்,  ஒரு  நாளும்  காந்தி  விலக  முடியாது  என்றும்,  நமது  பார்ப்பனர்களும்  அவரை  ஒரு  நிமிடமும்  விட்டு  பிரிய  மாட்டார்கள்  என்றும்,  ஆனால்  தற்சமயம்  நாட்டில்  ஏற்பட்ட  நிலைமையானது  அதாவது  காந்தியாரின்  கொள்கைகள்  பெரும்பாலும்  தோல்வி  அடைந்துவிட்டதாலும்  காங்கிரசின்  பேராலேயே  அக்கொள்கைகள்  தோற்றுப்  போய்  விட்டது  என்றும்,  அவற்றைக்  கைவிட்டுவிட  வேண்டுமானாலும்  முடிவு  செய்து  விட்டதாலும்,  “”குப்புற  விழுந்தாலும்  மீசையில்  மண்  ஒட்டவில்லை”  என்கின்ற  பழமொழிப்படி  “”காங்கிரஸ்  தோற்றுவிட்டதே  ஒழிய  காந்தியார்  தோல்வி  அடையவில்லை”  என்று  சொல்லி  பாமர  மக்களை  ஏய்த்து  காந்தியாரின்  பொய்  மரியாதையைக்  காப்பாற்றி  அவரை  உபயோகித்துக்  கொள்வதற்காகவே  “”காந்தியார்  காங்கிரசிலிருந்து  விலகிவிட்டார்”  என்று  ஒரு  பொய்ப்  பிரசாரம்  செய்ய  வேண்டியிருந்தது  என்பது  விளங்கும்படி  எழுதி  இருந்தோம்.

அதுபோலவே  இப்போது  சிறிது  காலத்துக்குள்ளாகவே  இலை  மறைவு,  தலை  மறைவு  என்பதுகூட  இல்லாமல்  பட்டவர்த்தனமாய்  காந்தியார்  வெட்டவெளிக்கு  வந்து  காங்கிரசில்  சர்வாதிகாரத்  தலைவர்  காரியத்தை  மறுபடியும்  தைரியமாய்  நடத்தி  வருகிறார்.

அந்தப்படி  நடத்துவதிலும்  சிறிதுகூட  முன்பின்  யோசிக்காமலும்  தனது  வாக்குத்  தத்தங்களை  லட்சியம்  செய்யாமலும்  சர்வாதிகாரத்தை  நடத்துகிறார்  என்றுதான்  சொல்ல  வேண்டியிருக்கிறது.

ஏனெனில்  ஜனவரி  மாதம்  27ந்  தேதி  டெல்லியில்  இந்திய  சட்டசபை  அங்கத்தினர்களுக்கு  அளித்த  கட்டளையில்  “”இந்திய  சட்டசபையில்  ஆலயப்  பிரவேசத்துக்காக  சட்டம்  கொண்டு  வரக்  கூடாது” என்றும்  “”சட்டம்  செய்வதற்கு  சட்டசபையில்  நல்லதொரு  மெஜாரிட்டி  இருந்தாலும்  கூட  நீங்கள் சட்டம் செய்யாதீர்கள்” என்றும் அடக்குமுறை போட்டு  அறிவுறுத்தி  இருக்கிறார்.

காங்கிரசை  விட்டு  வெளியேறிய  காந்தியார்  காங்கிரசின்  பேரால்  சட்டசபைக்குச்  சென்ற  சட்டசபை  அங்கத்தினர்களை  நீங்கள்  அதைச்  செய்யாதீர்கள்,  இதைச்  செய்யுங்களென்று  சொல்லி  அவர்கள்  செய்யக்கூடிய  வேலைகளையும்  செய்ய  வேண்டிய  வேலைகளையும்  செய்ய  வேண்டா மென்று  எதற்காக  சொல்லுகிறார்  எந்த  உரிமையில்  சொல்லுகிறார்  என்பது  நமக்கு  விளங்கவில்லை.

இந்திய  சட்டசபையில்  இந்திய  மக்களுக்காக  செய்யக்  கூடிய வேலை  ஏதாவது  இருக்குமானால்  அது  முக்கியமாய்  மக்களுக்கு  சமுதாய  சம்மந்தமாய்  இருக்கும்  இழிவுகளையும்  கொடுமைகளையும்,  உரிமையற்ற  தன்மையையும்  ஒழிப்பதற்காக  எந்தெந்த  வகையில்  சட்ட  மூலம்  தடைகள்  இருக்கின்றனவோ  அத்தடைகளை  நீக்குவதும் எந்தெந்த  மாதிரி  சட்டங்கள்  வேண்டுமோ  அம்மாதிரி  சட்டங்கள்  செய்யப்பட  வேண்டியதும்  அவசியமான  கடமை யாகும்.  அதை  விட்டு  விட்டு  செய்பவர்களையும்  செய்ய  வேண்டாமென்று  சொல்லுவதானால்  நமக்கு  சட்டசபைகள்  எதற்கு  என்று  கேட்கின்றோம்.

சட்டசபையின்  மூலம்  சட்டசபைக்காக  இந்திய  ஏழை  மக்களின்  வரி  எவ்வளவு  செலவாகின்றது  என்று  பார்த்தால்  மக்களின்  ரத்தம்  கொதிக்கும்படியாக  இருக்கும்.  இவ்வளவு  பெரிய  செலவுகள்  செய்யப்பட்டும்  மற்றும்  எவ்வளவோ  கஷ்டப்பட்டு  சட்டம்  செய்து  கொள்ளும்  அதிகாரமாகிய  சீர்திருத்தங்கள்  பெற்றும்,  அதற்கேற்ற  சமயம்  கிடைத்தும்  கடைசியில்  சமயம்  வரும்போது  அதுவும்  “”நாங்கள்  தான்  இந்திய  ஏழை  மக்கள்  தாழ்த்தப்பட்ட  மக்கள்  ஆகிய  ஜனங்களின்  பிரதிநிதிகள்,  மற்றவர்கள்  எல்லோரும்  சர்க்கார்  கூலிகள்”  என்று  பேசிய  தேச  பக்தர்கள்  சட்டசபைக்குப்  போயிருக்கிற  காலத்தில்  தாழ்த்தப்பட்டவர் களின்  உரிமைக்காக  சட்டம்  செய்யாதீர்கள்  என்று  காங்கிரஸ்  சர்வாதிகாரி  கட்டளை  இட்டுவிட்டால்  மற்றபடி  இந்தக்  காரியத்தை  வேறு  யார்  எப்போது  செய்வது  என்பது  நமக்கு  விளங்கவில்லை.  ஒரே  அடியாக  ஆதி  திராவிடர்களுக்குக்  கோவில்  பிரவேசம்  வேண்டியதில்லை  என்று  தோழர்  காந்தியாரோ  காங்கிரஸ்காரரோ  முடிவு  செய்திருந்தால்  இப்பொழுது  சட்டம்  செய்வது  என்பதைப்  பற்றி  யெவரும்  கவலைபட  மாட்டார்கள்.

ஆதி  திராவிடர்களுக்குக்  கோவில்  பிரவேசம்  வேண்டுமென்றும்  அதனால்  தீண்டாமை  ஒழியும்  என்றும்  சொல்லி  மற்றும்  அவர்களுக்குப் பல  காரியங்கள்  செய்வதற்கு  இப்போது  இந்த  அன்னிய  ஆட்சியில்  சவுகரியமில்லை  என்றும்,  சுயராஜ்ஜியம்  வந்தால்  செய்து  விடலாம்  என்றும்  சொல்லி  மக்களை  ஏமாற்றி  சுயராஜ்ய  முயற்சிக்காக  எவ்வளவோ  பண  நஷ்டமும்  சரீர  கஷ்டமும்  அடையும்படியாகவும்  செய்து  விட்டு  சட்டம்  செய்ய  அதிகாரமும்  செய்து  கொள்ளக்  கூடிய  சவுகரியமும்  அதற்கு  ஏற்ற  மெஜாரிட்டியும்  இருக்கும்போது  சட்டம்  செய்ய  வேண்டாம்  என்று  சொன்னால்  பிறகு  சுயராஜ்யம்  என்பது  எதற்காக  கேட்கப்படுகின்றது  என்பதை  யோசித்துப்  பார்க்கும்படி  வேண்டுகிறோம்.

மக்களுக்கு  நன்மை  செய்ய  அதிகாரமில்லை  என்பதும்  அதிகாரம்  இருந்தால்  பொது  ஜன  சம்மதம்  இல்லை  என்பதும்,  பொது  ஜன  சம்மதம்  பெற்ற  பிரதிநிதிகள்  இருந்தால்  சுயராஜ்ஜியம்  இல்லை  என்பதும்,  இது  சமயமல்ல  என்பதும்  ஆகிய  இப்படிப்பட்ட  சாக்குகளின்  மூலம்  மக்களை  இனியும்  எத்தனை  நாட்களுக்கு  ஏமாற்றக்கூடும்  என்பது  மிகவும்  கவனிக்க  வேண்டிய  காரியமாகும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்துக்கு ஜனப் பிரதிநிதித்துவ  சபையாகிய  காங்கிரசும்,  காங்கிரசு  சர்வாதிகாரியாகிய  காந்தியாரும்  இனி  இதற்கு  மேல்  எவ்வித  துரோகமும்  செய்ய  முடியாது  என்பது  நமது  கெட்டியான  அபிப்பிராயமாகும்.

இந்தச்  சம்பவத்தை  நினைக்கும்போது  லண்டன்  வட்டமேஜை  மகாநாட்டில்  தோழர்  காந்தியாரைப்  பார்த்து,  தோழர்  அம்பட்கார்  அவர்கள்  “”ஓ  காந்தியாரே,  நீங்கள்  எங்கள்  பிரதிநிதிகள்  அல்லவென்றும்  உங்களை  நாங்கள்  நம்புவதில்லை  என்றும்  அனேக  தடவைகளில்  நாங்கள்  வெட்ட வெளிச்சமாய்  சொல்லி  இருந்தும்  சிறிதும்  வெட்கமில்லாமல்  இனியும்  நீங்கள்  எங்களுடைய  பிரதிநிதி  என்று  சொல்லிக்  கொள்வது  மிகவும்  அவமானகரமான  காரியம்”  என்று  சொன்ன  வார்த்தை  நமது  ஞாபகத்துக்கு  வருவதோடு  அது  முற்றும்  சத்தியமான  வார்த்தை  என்றே  இப்போது  தோன்றுகின்றது.

தீண்டப்படாத  மக்கள்  என்பவர்களுக்கு  சர்க்காரார்  படிப்பு  சொல்லிக்  கொடுத்து  வருகிறார்கள்.  அவர்களுக்கு  உத்தியோகம்  கொடுப்பது  என்று  தீர்மானித்து  அதற்கு  ஏற்ற  ஏற்பாடுகள்  செய்கிறார்கள்.  எல்லாப்  பள்ளிக் கூடங்களிலும்  அவர்களைச்  சேர்த்துக்  கொள்ள  வேண்டும்  என்றும்,  எல்லாத்  தெருக்களிலும்  அவர்களை  நடக்க  விடவேண்டும்  என்றும்,  கிணறு  குளங்களிலும்  கூட  விடவேண்டும்  என்றும்,  தடுத்தால்  தண்டனை  என்றும்கூட  உத்திரவு  போட்டிருக்கிறார்கள்.  இவ்வளவும்  தவிர  சட்டசபை  முதல்  கிராமப்  பஞ்சாயத்து  போர்டு  வரை  ஒவ்வொரு  ஸ்தாபனத்திலும்  தீண்டப்படாதவர்களுக்கு  இடம்  ஒதுக்கி  வைத்து  இருக்கிறார்கள்.

இவ்வளவு  காரியமும்  காங்கிரசோ  காந்தியாரோ  வருணாச்சிரமக் காரர்களோ  அல்லது  ஏதாவது ஒரு  பார்ப்பனர்களோ  சர்க்காரை  கேட்டுக்  கொண்டதின்  மீது  சர்க்கார்  செய்த  காரியம்  அல்ல  என்பதோடு  மேல்கண்ட  இக்  கூட்டத்தார்  பெரிதும்  தடுத்தும்கூட  அதை  நிராகரித்து  விட்டு  செய்து  இருக்கிறார்கள்  என்றும்  சொல்லலாம்.

இவ்வளவு  மாத்திரம்  அல்லாமல்  இந்தியாவில்  இன்று  இருக்கும்  எல்லா  அய்ரோப்பியர்களும்  ஒவ்வொருவர்  வீட்டுக்கும்  தீண்டப்படாதவர் களையே  ஒன்று  முதல்  10  பேர்  வரையில்  வேலையாளாகச்  சேர்த்துக்  கொண்டு  அவர்களுக்குச்  சுத்தம்  சுகாதாரம்  மனிதத்  தன்மை  பிரஜா  உரிமை  ஆகியவைகளை  அளித்து  வருகிறார்கள்.  இப்படிப்பட்ட  இந்த  நிலையில்  காங்கிரஸ்காரர்களோ  மற்றவர்களோ  தீண்டப்படாதார்  என்பவர்களுக்குச்  செய்யக்கூடிய  காரியமோ  செய்ய  வேண்டிய  காரியமோ  வேறு  என்ன  இருக்கின்றது  என்று  கேட்கின்றோம்.

தீண்டப்படாதவர்களுக்கு  இந்திய  மக்கள்  ஏதாவது  செய்யக்  கூடியது  இருக்குமானால்  தன்னை  இந்து  என்று  மானமில்லாமல்  சொல்லிக்  கொள்ளும்  தாழ்த்தப்பட்ட  ஜாதியார்  விஷயத்தில்  அந்த  இந்துமத  சம்பந்தமாக  இருந்து  வரும்  இழிவுகள்  கொடுமைகள்  ஆகியவைகளைப்  பொருத்தவரை  ஏதாவது  செய்யலாம்.  அதுவும்  ஏன்  காங்கிரஸ்காரர்களோ  இந்துக்களோ  தான்  செய்ய  வேண்டும்?  என்று  கேட்கப்படுமானால்  “”மத  விஷயத்தில்  அரசாங்கத்தார்  பிரவேசிக்கிறதில்லை”  என்றும்  “”சமூக  விஷயத்தில்  பழய  பழக்கவழக்கங்களில்  எவ்வித  மாறுதலையும்  அரசாங்கத்தார்  செய்யக் கூடாது”  என்றும்  அரசாங்க  வாக்குத்  தத்தமும்  காங்கிரஸ்  திட்டமும்  இருப்பதாய்  சொல்லி  இவ்விஷயத்தில்  எதையும்  செய்ய  விடாமல்  அரசாங்கத்தைத்  தடுப்பதால்  இன்று  இந்துக்களோ,  காங்கிரசோ  இதை  மாத்திரம்  செய்தால்  போதும்  என்று  சொல்ல  வேண்டி  இருக்கிறது.

தீண்டப்படாதார்  விஷயத்தில்  அரசாங்கத்தைக்  குற்றம்  சொல்லி  சகல  குற்றங்களையும்  அரசாங்கத்தின்  மீது  சுமத்தி  தீண்டப்படாதார்களை  அரசாங்கத்தின்  மீது  உசுப்படுத்திவிட்டு  ஏமாற்றி  விடலாம்  என்று  காங்கிரசோ,  காந்தியோ,  பார்ப்பனர்களோ  நினைப்பார்களானால்  அந்தப்  பித்தலாட்டமும்,  ஏமாற்றமும்,  மோசமும்  இனி  நடக்காது  என்பதை  எச்சரிக்கை  செய்வதோடு  இனி  நடக்காமல்  பார்த்துக்  கொள்ள  வேண்டியதும்  நமது  கடமையாகும்.

காங்கிரஸ்  ஏற்பட்டு  50  வருஷ  காலமாயிற்று.  மகாத்மா  பட்டம்  பெற்ற  காந்தியார்  காங்கிரசுக்கு  சர்வாதிகாரப்  பட்டம்  பெற்று  15  வருஷம்  ஆயிற்று.  இதுவரை  இந்தத்  தீண்டப்படாதாருக்காக  காங்கிரசும்  காந்தியும்  செய்த  காரியம்  என்ன  என்பதை  ஒரு  விரலாவது  விடும்படியாக  எடுத்துக்  காட்டட்டும்  என்று  அறைகூவி  அழைக்கின்றோம்.

இந்த  நாட்டில்  தீண்டத்தகாதவர்கள்  என்கின்ற  நிபந்தனையுடன்  உயிர்  வாழும்  ஜனங்கள்  7  கோடி  என்று  கணக்கிடப்பட்டிருக்கிறது.

இது  இந்துக்களில்  3ல்  ஒரு பாகமும்  மொத்த  ஜனத்தொகையில்  5  இல்  ஒரு  பாகமும்  ஆகின்றது.  சிறிது  கணக்குப்  பிசகு  இருந்தாலும்  இருக்கலாம்.  ஆனால்,  தீண்டப்படாதார்  என்பவர்கள்  எண்ணிக்கை  பெருத்த  எண்ணிக்கை  என்பதில்  ஆ÷க்ஷபணை  இருக்க  முடியாது.  இப்படிப்பட்ட  ஜன  சமூகத்துக்கு  50  வருஷ  காலமாக  காங்கிரசும்,  இந்து  தலைவர்கள்  என்பவர்களும்  ஒரு  காரியமும்  செய்யவில்லை என்பதோடு  செய்யக்  கூடியதையெல்லாம்  தடுத்தும்  வந்திருக்கிறார்கள்  என்றால்  இந்த  நாட்டின்  அரசியல்  கிளர்ச்சியுடையவும்  சமூகக்  கிளர்ச்சியுடையவும்,  போலித்  தனத்துக்கும்  நாணையமும்  நேர்மையும்  அற்ற  தனத்துக்கும்  வேறு  என்ன  உதாரணம்  வேண்டுமென்று  கேட்கின்றோம்.

சமீப  காலத்தில்  சென்னை  சட்டசபையில்  கேட்கப்பட்ட  ஒரு  கேள்விக்கு  சர்க்கார்  பதில்  அளிக்கையில்  சென்னை  மாகாணத்தில்  உள்ள  சுமார்  300400  போலீஸ்  சர்க்கிள்  இன்ஸ்பெக்டர்களில்  ஒரு  இன்ஸ்பெக்டர்கூட  தாழ்த்தப்பட்ட  வகுப்பினரில்  இல்லாமலும்,  சுமார்  700800  சப்  இன்ஸ்பெக்டர்களில் 1 ஒரே  ஒரு  சப்  இன்ஸ்பெக்டர்  மாத்திரம்  நியமிக்கப் பட்டிருக்கிறார்  என்றால்,  அதுவும்  இந்த  15  வருஷகாலமாக  போலீஸ்  இலாகா  இந்தியப்  பிரதிநிதியாகிய  இந்தியனிடம்  இருந்து  வந்தும்  இந்த  கெதி ஆயிருக்கின்றது என்றால் மற்ற போலீஸ் மேல் இலாகா  உத்தியோகங்களைப்  பற்றியும்  இதர  உத்தியோகங்களில்  அவர்கள்  எப்படி  நடத்தப்பட்டிருப்பார்கள்  என்பதைப்  பற்றி  நாம்  அதிகம்  எடுத்துக்காட்ட  வேண்டியதில்லை.

மத  சம்மந்தமான  நமது  அபிப்பிராயம்  ஒரு விதமாக  இருந்தாலும்கூட  தாழ்த்தப்பட்ட  மக்களைப்  பொருத்த  வரை  அவர்கள்  மனிதத்  தன்மை  பெறவும்,  அரசியலில்  விகிதாச்சார  உரிமை  பெறவும்,  வாழ்க்கையில்  சம  உரிமை  பெறவும்  இந்து  மதத்தை  விட்டு  விட்டு  கிறிஸ்தவர்களாகவோ  முக்கியமாய்  இஸ்லாமியர்களாகவோ  ஆகிவிடுங்கள்  என்று  பல  தடவை  வற்புறுத்தி  வந்ததை  அச்சமூகம்  லட்சியம்  செய்யவே  இல்லை.

இதற்குக்  காரணம்  நம்  சென்னை  மாகாணத்தைப்  பொருத்தவரை  தாழ்த்தப்பட்ட  மக்கள்  என்பவர்களுடைய  மதப்  பற்றேதான்  காரணம்  என்பதாக  நாம்  சிறிதும்  நினைக்கவில்லை.  மற்றென்னவென்றால்  சென்னை  மாகாணத்தில்  உள்ள  வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவ  முறையின்  பயனாய்  சில  பெரிய  பதவிகளும்  உத்தியோகங்களும்  தாழ்த்தப்பட்ட  சமூகத்  தலைவர்கள்  என்பவர்களுக்குக்  கிடைக்கக்  கூடுமாதலால்  அதில்  அவர்களுக்கு  ஏற்பட்டுள்ள  ஆசையானது  இந்துக்கள்  என்பவர்கள்  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு  சமூக  துறையிலும்,  அரசியல்  துறையிலும்  செய்து  வரும்  எவ்வளவோ  இழிவுகளையும்  இன்னல்களையும்  சகித்துக்  கொண்டு சிறிதும்  சுயமரியாதை  இல்லாதவர்களாகி  தங்களை  இந்துக்கள்  என்று  சொல்லிக்  கொண்டு  உயிர்  வாழ  வேண்டி  இருக்கின்றதே  தவிர  வேறு  காரணம்  இருக்க  நியாயமில்லை  என்றே  படுகின்றது.

என்றாலும்  தேதி  29.1.35  சென்னை  சட்டசபைக்  கூட்டத்தில்  கூட்டுக்  கமிட்டி  அறிக்கையைப்  பற்றிய  விவகாரத்தின்போது  தோழர்  என். சிவராஜ்  அவர்கள்  தெரிவித்த அபிப்பிராயத்தில்  பெரும்  பாகத்தை  நாம் மனப்பூர்வமாய் ஆதரிக்கின்றோம். அதாவது,

“”பூனா  ஒப்பந்த  காலத்தில்  காந்தியார்  தம்  உயிரைக்  கொடுத்தாவது  தீண்டாமையை  ஒழித்து  விடுவதாக  உறுதி  கூறினார்.  ஆனால்  நேற்று  பத்திரிக்கைகளில்  ஆலயப்  பிரவேச  மசோதாவை  சட்டசபைக்குக்  கொண்டு  போகாதீர்கள்  என்று  உத்திரவு  போட்டு  இருக்கிறார்.  இது  எந்த  விதத்தில்  நாணையமான  காரியமாகும்?

ஆலயப்  பிரவேசத்துக்கு  பட்டினி  கிடந்து  உயிர்விடுவதாக  வாக்களித்ததெல்லாம்  இப்போது  என்னவாயிற்று?  அவரும்  அவரது  சகாக்களும்  எவ்வளவு  உண்மையானவர்கள்  என்பது  இப்போது  தெரிந்துவிட  வில்லையா?

இந்தியாவிலுள்ள  தாழ்த்தப்பட்ட  சமூகம்  அவ்வளவு  பேரும்  ஒரே  மனதாக  தனித்  தொகுதி  கேட்டார்கள்.  ஆனால்  காந்தியார்  பட்டினி  கிடந்து  சாவதாக  பயமுறுத்தி  ஏமாற்றி  இந்த  பூனா  ஒப்பந்தத்தை  நிறைவேற்றிக்  கொண்டார்  என்றாலும்,  ஆலயப்  பிரவேசமும்,  அரிஜன  இயக்கமும்  இப்பூனா  ஒப்பந்தத்தின்  அம்சங்களாகும்.

ஜாதி  இந்துக்கள்  இதற்கு  இணங்காவிடில்  மறுபடியும்  பட்டினி  கிடப்பதாக  வாக்குறுதி  கூறினார்.

இப்போது  மிக  சாதாரணமான  மக்கள்  கூறுவதுபோல்  “”ஜனங்கள்  தயாராய்  யில்லை”  என்கிற  சாக்கைச்  சொல்லி  அந்தக்  காரியம்  செய்யாதீர்கள்  என்று  உத்திரவிட்டார்.

இது  நம்பிக்கை  மோசமும்  பெரியதொரு துரோகமுமாகும்.

பூனா ஒப்பந்தத்தில்  உள்ள  தொல்லைகள்

“”தேர்தலில்  வேறு  எந்தத்  தொகுதியாருக்கும்  இல்லாத  இரட்டைத்  தேர்தல் கஷ்டம்  எங்களுக்கு மாத்திரம்  இருக்கிறது.

பூர்வாங்கத்  தேர்தல்  முறை  மிகவும்  அநீதியானது.

இரண்டாவது  தேர்தலோ  தாழ்த்தப்பட்டவர்களின்  உண்மையான  பிரதிநிதி  தேர்ந்தெடுக்கப்படுவதை  மிகவும்  அருமையாக்குகிறது.  இதனால்  தாழ்த்தப்பட்டவர்களுக்கு  பாதுகாப்பு  எங்கே? என்பது  ஒருபுறமிருக்க,

இதனால்  சர்க்காரார்  தயவும்  இல்லாமல்  போய்விட்டது.

முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களுமாவது  தயவு  செய்து  தங்களுக்கு  இருப்பது  போலவே  தனித்  தொகுதி  கிடைக்க  எங்களுக்கு  உதவி  புரிய  வேண்டும்.  வெள்ளை  மெம்பர்களும்  எங்கள்  விஷயத்தில்  தங்களுடைய  வழக்கமான  அனுதாபத்தைக்  காட்ட  வேண்டும்.

இனி காந்தியாரை  நாங்கள்  நம்புவதில்லை.  அவருக்கு  ஸ்திரபுத்தி  கிடையாது. அவரது  சகாக்களுக்கு  நாணயம்  கிடையாது.

பூனா  ஒப்பந்தம்  இதர  இடங்களில்  எப்படிப்  போனாலும்  சென்னை  மாகாணத்தைப்  பொருத்த  வரையாவது  ரத்து  செய்யப்பட  வேண்டும்.

வெள்ளையர்களும்  பிரிட்டிஷ்  சர்க்காரும்  தாழ்த்தப்பட்டவர் களைக்  காப்பாற்றியாக  வேண்டும்”

என்பதாகப்  பேசி  இருக்கிறார்.  மற்றும்  தாழ்த்தப்பட்ட  சமூக  பிரதிநிதியான  தோழர்  எச்.எம். ஜகநாதம்  அவர்கள்  பேசுகையிலும்,

“”காங்கிரசோ  காந்தியாரோ  தாழ்த்தப்பட்டவர்களுக்கு உண்மையிலேயே  ஏதும்  செய்யவில்லை.  இரட்டைத்  தேர்தல் முறையைவிட  சமூக  அபிப்பிராயம்  கேட்டு  சர்க்கார்  நியமிக்கும்  நியமனமே  மேல்”  என்று  பேசி  இருக்கிறார்.

இவை  ஒருபுறமிருக்கக்  கூட்டுக்  கமிட்டி  அறிக்கையைப்  பற்றி  விவாதித்த  எல்லாக்  கட்சி  அங்கத்தினர்களும்  தங்கள்  அதிகாரம்  என்ன?  சர்க்கார்  அதிகாரம்  என்ன?  என்பதைப்  பற்றி  அர்த்தமற்ற  முறையில்  கூப்பாடு  போட்டார்களே  தவிர  ஒருவராவது  தாழ்த்தப்பட்ட  சமூக  நிலையைப்  பற்றி  ஒரு வார்த்தை  கூட  பேசவில்லை.

கிறிஸ்தவர்கள்  தங்கள்  பிரதிநிதித்துவத்தைப்  பற்றியும்  மகமதியர் தங்கள்  பிரதிநிதித்துவத்தைப்  பற்றியும்,  இந்துக்கள்  மற்றவர்களுக்கு  சர்க்கார்  தனி  பிரதிநிதித்துவம்  வழங்கப்  போகின்றார்களே  என்கின்ற  ஆத்திரத்தை  மனதில்  வைத்துக்  கொண்டும்  போகாத  ஊருக்கு  வழி  கேட்பது  போல்  வீண்  இடக்கு  முடக்கும் பேசினார்களே  ஒழிய  உண்மையாய்  யாரும்  நடந்து  கொள்ளவே  இல்லை.

இவைகள்  எல்லாம்  ஒருபுறமிருக்க  சென்னை  சட்டசபைக்கு  ஒரு  ஆதி  திராவிடரைக்கூட  காங்கிரஸ்  நிறுத்தவே  இல்லை  என்பதையும்  தானாக  எந்தக்  கட்சியையும்  சேராமல்  நின்றவர்களையும்  ஆதரிக்காமல்  எதிர்த்து  தோற்கடித்தார்கள்  என்பதையும்  முன்னமே  எழுதி  இருக்கிறோம்.

ஆகவே  காங்கிரசுக்காரர்களை  ஒன்று  கேட்கிறோம்.  அதாவது  சட்ட சபைக்கு  நின்ற  ஆதி  திராவிடரை காங்கிரஸ்  திட்டத்தில்  கையொப்பமிடும் படியாக  யாராவது  கேட்டு  அவர்  மறுத்தாரா?

அல்லது  அவர்  மறுத்திருந்தாலும்  வேறு  ஆதி  திராவிடர்  கிடைக்க வில்லையா?

அப்படியானால்  காங்கிரசில்  ஒரு  ஆதி  திராவிடர்கூட  இல்லை  என்று  தானே  அருத்தம்.  ஒரு மெம்பர்கூட  இல்லாத  சமூகத்துக்கு  தாங்கள்தான்  பிரதிநிதி  என்று  சொல்லிக்  கொள்ளுவது  நேர்மையாகுமா?

இந்த  ஒரு  காரணமே  தாழ்த்தப்பட்டவர்கள்  தங்கள்  நலனுக்கு  சர்க்காரையும்  காங்கிரசுக்காரர்கள்  அல்லாதவர்களையும்  எதிர்பார்ப்பது  நியாயம்  என்பதற்கு  போதுமானதல்லவா?  என்பதாகும்.

ஆகவே  காந்தியார்  காங்கிரசை  விட்டு  விலகிய  யோக்கியதையையும்  பூனா  ஒப்பந்தத்தை  காந்தியாரும்,  காங்கிரஸ்காரரும்  நிறைவேற்றி  வைத்த  நாணயத்தையும்,  காங்கிரசே  இந்திய  மக்கள்  எல்லோருக்கும்  பிரதிநிதித்துவ  சபை  என்கின்ற  புரட்டையும்  யோசித்துப்  பார்க்கும்படி  வேண்டுவதோடு  காங்கிரசுக்கு  உழைத்த  பார்ப்பனரல்லாத  தேசபக்தர்களை  இப்பொழுது  என்ன  சொல்லுகிறார்கள்  என்று  கேட்கின்றோம்.

குடி அரசு  தலையங்கம்  03.02.1935

You may also like...