தஞ்சை ஜில்லா ஆதி திராவிட வாலிபர் மகாநாடு

 

தோழர்களே!

இன்று இம்மகாநாட்டைத் திறந்து வைப்பது என்னும் முறையில் இந்த மகாநாடு சம்பந்தமாய் நான் ஏதாவது சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயமாய் என்னுடைய அபிப்பிராயம் நீங்கள் தெரிந்ததேயாகும்.

தாழ்த்தப்பட்ட மக்களை, அவர்களுக்கு மற்றவர்கள் இழைத்து வரும் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை உண்மையான கருத்துடன் பார்த்தால் அது ஒரு புரட்சி வேலையே ஆகும். ஏனெனில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது.

எப்படி என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள், கீழ் ஜாதி மக்கள், தீண்டப் படாதவர்கள் என்பவர்கள் எல்லாம் பிறவியிலேயே கீழ்மைத் தன்மை அடைந்தவர்கள் என்றும், அவர்கள் கடவுள்களாலேயே அந்தப்படி பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும், அதற்கு மதங்களும் மத சாஸ்திரங்களுமே ஆதாரங்கள் என்றும், கடவுள் செயலையோ மத விதிகளையோ யாரும் மாற்றக் கூடாதென்றும், அவை மாற்றுதலுக்கு கட்டுப்பட்டதல்லவென்றும் சொல்லப்படக் கூடிய ஒரு பலமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டிருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் பெறுவதும், தீண்டாமைத் தத்துவம் மனித சமூகத்தில் இருந்து விலக்கப்படுவதும் வெரும் வாய் வார்த்தையாலோ, பிரசாரத்தினாலோ, மேல் ஜாதிக்காரர்களைக் கேட்டுக்  கொள்ளுவதினாலோ ஆகக்கூடிய காரியம் என்று யாராவது நினைத்தால் அவர்களது வாழ்வு வீண் வாழ்வு என்றுதான் சொல்வேன்.

தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் என்பவர்களில் சிலர் தாங்கள் ஏதோ குளித்து முழுகிவிட்டு, விபூதிப் பூச்சோ, பட்டை நாமமோ விதிப்படி அணிந்து வைதீகர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு, மது, மாம்சம் சாப்பிடுவதில்லை என்று சொல்லிக் கொண்டு சுவாமி என்று பெயர் வைத்துக் கொண்டு திரிந்தால், தங்கள் நிலை உயர்ந்து விடும் என்றும் தீண்டாமை ஒழிந்துவிடும் என்றும் கருதி இருக்கிறார்கள்.

இது மற்றவர்களை ஏமாற்ற நினைத்துத் தங்களையே ஏமாற்றிக் கொள்ளும் பைத்தியக்காரத்தனமேயாகும்.

இந்தப்படி வெகு பேர் தாழ்த்தப்பட்ட மக்களில் ஆதிதிராவிடர்களில் வெகுகாலமாகவே வேஷம் போட்டுப் பார்த்தாய்விட்டது. அதற்கு பல புராண சரித்திர ஆதாரங்கள் உண்டு.

ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு இருந்து நாளது வரை தீண்டாமை விலக்கு விஷயத்தில் ஒரு காரியமும் முடிந்ததில்லை என்று தைரியமாய்ச் சொல்லலாம். ஏதோ சில பாஷாண்டிகள் செய்த காரியங்களால் தங்கள் சுயநலத்துக்குப் பயன் ஏற்படுத்திக் கொள்ளத்தான் முடிந்திருக்குமே ஒழிய அப்படிப்பட்ட வேஷத்தாலும் பக்தியாலும் காரியத்தில் ஏதும் ஆகி இருக்காது. ஆவதற்கும் நியாயமில்லை.

ஏனெனில் அதின் அஸ்திவாரம் அப்பேர்ப்பட்டதாகும்.

தீண்டாமை விஷயம் ஒருபுறமிருக்கட்டும். எவ்வளவோ காலமாக போராடி வந்தும் எப்படிப்பட்டவர்கள் எல்லாம் பாடுபட்டும் சூத்திரப் பட்டம் அதுவும் 100க்கு 3 பேர்களால் 100க்கு 97 மக்கள் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் சூத்திரப் பட்டம் ஒழிக்கப்பட முடிந்ததா? “”சூத்திரர்” களில் சிலர் மகாத்மா  ரிஷி  முனிவர்  ஆழ்வார்கள், நாயன்மார்கள், தெய்வத் தன்மை வாய்ந்தவர்கள் என்றெல்லாம்கூட ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் மனித சமூகத்தில் ஒரு பெருங் கூட்டத்தைச் சூத்திரன் என்பதாகக் குறிக்க ஏற்படுத்தப்பட்ட கலம் இன்னும் அழிக்கப்படவே இல்லை. அது சுலபத்தில் அழிக்கப்படக் கூடியதாயும் இல்லை.

நேற்று இவ்விடம் உங்கள் ஆதி திராவிட மகாநாட்டைத் திறந்தவரும் அதற்குத் தலைமை வகித்தவரும் இருவரும் மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்கள் தான். அதாவது மந்திரியார் கனம் பி.டி.ராஜன் அவர்களும், உங்கள் ஜில்லா போர்ட் பிரசிடெண்டு தோழர் சாமியப்ப முதலியார் அவர்களும் சைவ வேளாளர்  அதுவும் தொண்ட மண்டல சைவ வேளாளர் ஆவார்கள்.

பார்ப்பனர்களுக்கு அடுத்த ஜாதியார் என்பதோடு, அவ் வகுப்பில் சிலர் பார்ப்பனர் வீட்டில்கூட சாப்பிட மாட்டோம் என்பார்கள். அப்படி இருந்தும் அப்படிப்பட்டவர்களைப் பார்த்து “”உயர உயரப் பரந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா” என்றுதான் பார்ப்பனர்கள் கேட்பார்கள்.

அது மாத்திரமல்லாமல் அவர்கள் எல்லோரையுமே சூத்திரன் என்கின்ற கலத்தில்தான் பார்ப்பனர்கள் பதிவார்களே ஒழிய 4 வருணம் என்பதில், தொண்ட மண்டலம் வேளாளர் என்பதற்கு வேறு கலம் இல்லவே இல்லை. எத்தனையோ தொண்ட மண்டல வேளாளர் தாங்கள் சூத்திரர்கள் அல்லவென்றும், தங்களுக்கும் வருணாச்சிரமத்திற்கும் சம்மந்தமில்லை என்றும் வெகு காலமாகவே கூப்பாடு போட்டிருக்கிறார்கள்.

மற்றும் பலர் தங்களை சாதாரண சூத்திரர்கள் அல்லவென்றும், சற் சூத்திரர்கள் என்றும் “”பட்டுக் குஞ்சம் கட்டிக் கொள்வது” போல் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். என்ன செய்தும் அதை மாற்ற முடியாமலே போய் விட்டது. அப்படி இருக்க ஐயோ பாவம் உலக வாழ்க்கையில் எவ்வளவோ கீழான நிலையில் வைக்கப்பட்டு எவ்வித ஆதரவும் சவுகரியமும் இல்லாத நீங்கள் பரத்தன்மையை ஒழித்துவிடுவதோ மறைத்து விடுவதோ என்றால் அதுவும் மத சம்மந்தமான வைதீக வேஷத்தைப் போட்டுக் கொண்டு ஒழித்து விடுவது என்றால் அது சமுத்திரத்தை சிட்டுக் குருவி வற்றடிக்க முயற்சித்தது போல்தான் ஆகுமே ஒழிய வேறில்லை.

வர்ணங்கள் என்பது “கடவுளால்’ சிருஷ்டிக்கப்பட்டதாகும். எப்படி எனில் “”கீதையில் பகவான்” கிருஷ்ணன் “”நான்கு வர்ணத்தையும் நான்தான் சிருஷ்டித்தேன்” என்று சொல்லி இருக்கிறார்.

ஜாதிகள் என்பது மதத்தினால் ஏற்பட்டதாகும். எப்படி எனில் மனுதர்ம சாஸ்திரத்தில் சண்டாள ஜாதி உற்பத்திக் கிரமம் மற்ற ஜாதிப் பிரிவு உற்பத்திக் கிரமம் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகவே கடவுளும் மதமும் அதற்கு ஆதாரமான கீதையும் மனுதர்ம சாஸ்திரமும் காப்பாற்றப்படுவதாய் இருந்தால் சூத்திரப்பட்டமும் கீழ்ஜாதித் தன்மையும் எப்படி மாற்றப்பட முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.

தோழர் காந்தியார் தீண்டாமையை ஒழித்துவிட வேண்டும் என்று வரக் கத்து கத்திப்பார்த்துவிட்டார். பல லக்ஷ ரூபாயும் வசூலித்து மேல்ஜாதிக்காரர் மேல் வருணக்காரர் என்பவர் கையில் ஒப்படைத்து விட்டாரே தவிர, மற்றபடி தீண்டாமையின் ஒரு சிறு தூசைக்கூட அசைக்க முடியவில்லை.

ஏன் என்றால் அவர் மற்றொரு பக்கம் கீதையையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் வருணத்தையும் ஜாதிக் கிரமத்தையும் ஆதரித்து வருகிறார்.

இன்று தீண்டாமை விலக்கு வேலையிலும், ஜாதி வித்தியாசம் ஒழிப்பு வேலையிலும் ஈடுபட்டிருப்பவர்களில் 100க்கு 100 பேரும் கீதை மனுதர்ம சாஸ்திரம் ஆகியவற்றை நம்பும்  ஆதரிக்கும் சோணகிரிகளேயாவார்கள்.

இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும் அடியற்ற ஓட்டைக் குடத்தில் தண்ணீர் இறைக்கும் மூடர்களுக்கு ஒப்பானவர்களேயாவார்கள்.

ஆகவே தீண்டாமை ஒழிப்புக்கோ, ஜாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள் மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க உங்களால் முடியவில்லையானால் மதத்தை விட்டு நீங்களாவது விலகி ஆக வேண்டும். உங்கள் மதம் போகாமல் ஒரு நாளும் உங்களது தீண்டாமைத் தன்மையோ, பரத் தன்மையோ ஒழியவே ஒழியாது என்பது கல்லுப் போன்ற உருதி.

உதாரணம் வேண்டுமானால் இதுவரையில் தீண்டப்படாதவர்களா யிருந்து மனித சமூகத்தில் தீண்டக் கூடியவர்களாக ஆன எவரும் தீண்டப் படாதவர்களாய் இருந்த போது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த மதத்தை உதரித் தள்ளிவிட்ட பின்புதான் தீண்டத்தக்கவர்கள் ஆகி இருக்கிறார்கள். இதற்கு கோடிக்கணக்கான மக்களை ஊர் பெயருடன் புள்ளி விபரத்தோடு காட்டலாம்.

ஆதலால் மதத்தை காப்பாற்றிக் கொண்டு தீண்டாமையை விலக்கி விடலாம் என்று நினைத்து ஏமாற்றமடையாதீர்கள்.

தோழர் காந்தியார் ஒரு மத வாதியே ஒழிய மனித ஜீவ அபிமானவாதி அல்லவே அல்ல. அவர் தனது இந்து மதம் காப்பாற்றப்படுவதற்காகத்தான் தீண்டாமை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி வந்திருக்கிறாரே ஒழிய தீண்டப்படாத மக்களின் கொடுமைகள் தீர வேண்டுமென்பதை முக்கியமாய்க் கொள்ளவில்லை.

காங்கிரசுக்காரர்களுக்கும் தீண்டாமையைப் பற்றிய கவலை கிடையாது. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள். அனுபவத்தில் தீண்டாமை ஒழிப்பை அவர்கள் கையாடுவதானால் முடிவில் அவர்களே தீண்டத்தகாதவர்களாக ஆகிவிட நேரிடும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் தீண்டாமை ஒழியும் போது பார்ப்பனர்களின் மேல்ஜாதித் தன்மையும் ஒழிந்துவிடும். மேல் ஜாதித் தன்மை ஒழிந்துவிட்டால் பிறகு பார்ப்பனர்களை யார் சட்டை செய்வார்கள்.

ஆகவே தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு ஏதாவது விடுதலை வேண்டுமானால் அரசாங்கத்தைக் கொண்டுதான் செய்து கொள்ள முடியும்.

அரசாங்கம் மனித சமூகத்தில் உள்ள கொடுமைகளையும், ஒருவரை ஒருவர் கொடுமையாய் நடத்தும் கொடுமையையும் ஒழிப்பதற்கு ஆகவே இருந்து வர வேண்டியதாகும். அதோடு மாத்திரமல்லாமல் இன்று இருந்து வரும் அரசாங்கம் தீண்டாமையை அனுசரிக்கும் அரசாங்கம் அல்ல. தீண்டப்படாதவரைப் பொருத்தவரை நல்ல காலத்தின் அறிகுறியாக இந்தியாவின் ஏக சக்ராதிபத்தியமானது இந்திய அரசர்கள் கையில் இல்லாமல் ஒரு அன்னிய கண்ட அரசரிடத்தில் இருக்கிறது. இதை இந்தியர்கள் ஆட்சிக்குக் கொண்டு வரத்தான் காங்கிரஸ் முயற்சிக்கிறதாம். முயற்சியும் நடக்கின்றது.

அப்படியானால் அதற்குள்ளாகவே உங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள நீங்கள் முயற்சி செய்யுங்கள். உங்களால் கூடுமானவரை இன்றைய ஆட்சியைப் பார்ப்பன ஆட்சி செய்யப்படுவதற்காக செய்யப்படும் முயற்சியை எதிர்த்து நில்லுங்கள். சுயராஜியம் சுய ஆட்சி என்பது ராமராஜ்ஜிய ஆட்சி, கீதை ஆட்சி, மனுமுறை ஆட்சி என்றெல்லாம் சொல்லப்படுவது நீங்கள் அறிந்ததேயாகும். மனு ஆட்சிக்கோ, ராமராஜ்ஜிய ஆட்சிக்கோ இந்தியா போய் விடுவதானால் இந்தியா பூகம்பத்தினாலோ, சண்டமாருதத்தாலோ, காட்டு வெள்ளத்தாலோ அழிந்து போவதே மேலானதாகும். ஆதலால் நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியிலேயே உங்கள் விடுதலைக்கு முயற்சி செய்யுங்கள்.

பழைய ஆட்சிகள் எதுவும் தீண்டாமையை ஒழிக்க முடியவே இல்லை.

இந்த ஆட்சியால் நீங்கள் கலெக்டர்களானீர்கள், ஜட்ஜுகளானீர்கள், வக்கீல்களானீர்கள், டாக்டர்களானீர்கள், உபாத்தியாயர்களானீர்கள், சட்ட சபை மெம்பர்களானீர்கள், ராவ் பகதூர், திவான் பகதூர்களானீர்கள், மந்திரி களுமாகப் போகிறீர்கள். ஆகவே உங்களுடைய குறைகள் கவனிக்கப்படவும் உங்கள் சமூகம் முற்போக்கடைந்து மற்ற மக்கள் போல் பாவிக்கப்படவும், பிரிட்டிஷ் ஆட்சியில்தான் இடம் உண்டே ஒழிய இந்து மதத்தில், இந்து ஆட்சியில், ராமராஜ்ஜியத்தில், மனு நீதி ஆட்சியில், கீதையில், சுதேச மன்னர்கள் ஆட்சியில் இடமில்லை என்பதை உங்களுக்கு வலியுறுத்துகிறேன்.

மற்ற வகுப்பாருடைய அரசியல் கிளர்ச்சிகளில் நீங்கள் பட்டுக் கொள்ளாதீர்கள். அதெல்லாம் பணக்காரனும், மேல் ஜாதிக்காரனும், படித்த கூட்டமும் இன்னமும் அதிகமாய் ஆதிக்கம் செலுத்தவே பாடுபடும் கிளர்ச்சியாகும். உங்களுக்கு அந்த மூன்றும் இல்லை. அவற்றைப் பெற நீங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தையே எதிர்பாருங்கள். மற்றவர்கள் எல்லாம், பிரிட்டிஷ் அரசாங்க பக்தராய் ராஜவிசுவாசிகளாய் இருந்துதான் இன்றைய மேல் பதவி அடைந்து இன்னும் மேல் பதவிக்கு கிளர்ச்சி செய்கிறார்கள். நீங்களும் அதுபோலவே இருந்து சம பதவியாவது அடைந்து பின்னால் வேண்டுமானால் கிளர்ச்சி செய்து மேல் பதவிக்கு வர முயலுங்கள்.

தோழர்களே! உங்கள் விஷயங்களைப் பொருத்த மட்டில் என்னுடைய அபிப்பிராயம் இதுவேயாகும். பிறகு நீங்கள் யோசித்துப் பார்த்து உங்களுக்குத் தோன்றியபடி நடவுங்கள்.

குறிப்பு:            10.07.1935 இல் சீர்காழியில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட ஆதித் திராவிட வாலிபர் மகாநாட்டைத் திறந்து ஆற்றிய  உரை.

குடி அரசு  சொற்பொழிவு  28.07.1935

You may also like...