கொச்சி பிரஜைகளுக்கு ஜே!
சர். சண்முகம்
நமது இயக்கத் தலைவராகிய சர்.ஆர்.கே. சண்முகம் ஓ.இ.ஐ.உ. அவர்கள் பார்ப்பன விஷமத்தின் பயனாய் கொச்சி திவானாக நியமனம் பெற்றிருப்பது கேட்டு மகிழ்ச்சியடைகிறோம்.
தெளிந்த அரசியல் ஞானமும், நிர்வாகத் திறமையும், பேச்சு வன்மையும், பொருளாதார நிபுணத்துவமும், சமதர்ம உணர்ச்சியும் அமையப்பெற்றவர்களில் நமது சண்முகம் அவர்களுக்கு மேம்பட்டவர் இந்தியாவில் வேறு எவரும் இல்லை யென்பது நமது விரோதிகளாலும் மறுக்க முடியாததாகும்.
ஒரு மாகாணத்தின் கவர்னர் பதவியை வகிக்கக்கூடிய யோக்கியதையும் திறமையும் உடைய அவர் ஒரு சமஸ்தானமாகிய கொச்சிக்கு திவானாக ஆனது பற்றிக் கொச்சி சமஸ்தானம் சந்தோஷம் அடைய வேண்டுமே ஒழிய தோழர் சண்முகமோ நாமோ ஒரு பெரிய பாக்கியமாகக் கருதி சந்தோஷமடைவதற்கில்லை.
ஆயினும், வைதீகம் நிறைந்த சமஸ்தானமாகிய அதில் பாழும் வைதீகக் கொடுமையில் பரம்பரையாகக் கஷ்டப்பட்டு வரும் ஏழை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், தாராள மனப்பான்மையும், சமரச நோக்கமும் உடைய சர். சண்முகம் அவர்களின் ஆட்சி காலத்தில் விமோசனம் ஏற்படக்கூடும் என்று கருதியே கொச்சி சமஸ்தான மக்களைப் பாராட்டுகிறோம். இத்தகைய உயர்ந்த நோக்கத்துடனேயே தோழர் சண்முகம் அவர்கள் இப்பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் கூறுவோம்.
கொச்சி சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலையைப் பற்றியும் அங்குள்ள பார்ப்பன ஆதிக்கத்தைப் பற்றியும் உத்தியோகங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைப் பற்றியும் சமீபத்தில் நாம் ஒரு ஸ்டேட்மெண்ட்டும் வெளியிட்டிருக்கிறோம். நிற்க,
கொச்சி சமஸ்தானத்தில் புதிய அரசியல் திட்டம் ஒன்று தற்சமயம் அமுலுக்கு வருவதாக இருக்கிறது. அன்றியும் இனி இந்தியாவில் ஏற்படப்போகும் ஐக்கிய சர்க்காருக்கும் சுதேச மன்னர்களுக்கும் அரசியல் சம்பந்தங்கள் ஏற்படவும் போகின்றது. இப்படிப்பட்ட முக்கியமான சமயத்தில், சர். சண்முகம் அவர்கள் கொச்சியின் திவானாக அமைந்தது சமஸ்தான அரசியலுக்கும், குடிகளுக்கும் இனி ஏற்படப்போகும் முன்னேற்றத் திற்கும், நன்மைக்கும் ஒரு நல்ல அறிகுறியென்றே கூறுவோம்.
அந்தச் சமஸ்தானத்தில் இவர்தான் முதல் முதல் திவான் பதவி பெற்ற பிராமணரல்லாதார் ஆவார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இதுவரை யிலும் ஒன்றுக்கும் உதவாத சாதாரண வைதீகப் பிராமண திவான்களின் ஆட்சியினாலேயே சமூக விடுதலை பெறாமல் கட்டுண்டு கிடந்த அச்சமஸ்தானக் குடிமக்களுக்கு இது எவ்வளவு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கக்கூடியதென்பதை நாம் அளவிட்டுக் கூற முடியாது.
இந்த நியமனத்தைக் கண்டு சில பார்ப்பனப் பத்திரிகைகள், சர். ஷண்முகம் எல்லா வகையிலும் நிபுணராயிருந்தாலும் கூட அவர் இது வரையில் நேராக அரசியல் நிர்வாகத்தை வகித்திராததால் அவ்வேலைக்கு லாயக்கற்றவர் என்று அர்த்தப்படும் படியும், கொச்சி வாசிகளிலேயே ஒருவரை நியமிக்காமல் வெளியார் ஒருவரை நியமித்ததற்காக சமஸ்தான வாசிகள் அதிருப்தியடைவார்கள் என்றும் விஷமத்தனமாக எழுதியிருக் கின்றன. இவ்வாறு எழுதியது பார்ப்பனீய விஷமத்தனமா அல்லவா என்பதைக் கீழே கூறும் விஷயங்களைக் கொண்டு முடிவு செய்யும்படி விட்டுவிடுகிறோம்.
தோழர் ஷண்முகம் அவர்கள் இரண்டு வருஷங்களாகச் சட்டசபைத் தலைவராக இருந்து, உலகம் புகழுமாறு சபையை நிர்வகித்து வந்திருக்கிறார். மற்றும், பல முக்கிய அரசாங்கக் கமிட்டிகளில் சம்பந்தமுடையவராக இருந்திருக்கிறார். ஆஸ்ரேலியா சென்றதும், ஆட்டவா மகாநாட்டில் கலந்து கொண்டதும் உலகம் அறியாததல்ல. அன்றியும் கொச்சி சமஸ்தானத்திற்கு குறையாத அளவுள்ளதானது என்று சொல்லக்கூடிய தனது சொந்த எஸ்டேட்டு சம்பந்தமான விஷயங்களை கவனித்து வரும் அனுபவம் ஒன்றே அவருடைய நிர்வாகப் பழக்கத்திற்குப் போதிய அனுபவ மாகும் என்பதை அவரைப் பற்றியும், அவருடைய வேலைகளைப் பற்றியும் நேரே அறிந்தவர்கள் நன்றாய் அறிவார்கள்.
ஆதலால் அவருக்கு நிர்வாகத் திறமை போதாது என்பது பார்ப்பனரல்லாதாருக்கு இப்பதவி கிடைத்து விட்டதே என்ற பொறாமையைத் தவிர வேறொன்று மில்லையென்பது உண்மையாகும்.
மற்றும் தோழர்கள் சர். டி. மாதவராவ், வி.டி. மாதவராவ், சுப்பிரமணிய அய்யர், ஆர். ரகுநாதராவ், ரங்கய்யங்கார், வி.டி. கிருஷ்ணமாச்சாரி போன்ற உஞ்சிவிருத்திப் பார்ப்பனர்கள் ஆட்சியைவிட 3, 4 தலைமுறையாகவே சீமானாயும், தக்க அந்தஸ்துடையவராகவும் சிறு வயது முதலே கீர்த்தியும், பெருமையும், ஞானமும் பெற்றவராகவும் விளங்கும் சர். ஷண்முகம் அவர்களின் ஆட்சி எந்த விதத்தில் குறைந்து விடக்கூடியதாகுமென்று கேட்கின்றோம்.
தோழர்கள் வி.டி. கிருஷ்ணமாச்சாரியார் பரோடா திவானாகச் சென்ற போதும், திருவாங்கூரில் சர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் பெயரில்லாத உத்தியோகத்தின் மூலம் ஆயிரக்கணக்கான சம்பளம் வாங்கிக்கொண்டிருப்பதையும் இன்னும் கொச்சி, திருவாங்கூர், மைசூர் முதலிய சமஸ்தானங்களில் சென்னை மாகாணப் பார்ப்பனர்கள் திவான் பதவிகள் வகித்து வந்த காலத்திலும் எந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளாவது, அந்தச் சமஸ்தான வாசிகளின் உரிமைகளை அலட்சியம் செய்து விட்டு வெளியாரைத் திவான்களாக நியமித்ததனால் சமஸ்தான வாசிகள் அதிருப்தி அடைகிறார் என்று பிரசாரம் பண்ணியதுண்டா என்று கேட்கிறோம்.
ஒரு பார்ப்பனரல்லாதார் திவானாக நியமிக்கப்பட்ட பிறகுதான் இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளுக்கு அந்தச் சமஸ்தான வாசிகளின் அதிருப்தி தெரிந்தது போலும், இதைவிட பார்ப்பனர்களின் பொய்ப் பிரசாரத்திற்கும், விஷமப் பிரசாரத்திற்கும், துவேஷப்பிரசாரத்துக்கும் வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கிறோம்.
குடி அரசு கட்டுரை 17.03.1935