தோட்டத்தில்  பகுதி  கிணறா?

 

பிரஞ்சு  தேசத்தில்  கத்தோலிக்க  குருமார்கள்  மாத்திரம்  47015  பேர்கள்  இருப்பதாக  ஒரு  பிரஞ்சு  அறிக்கை  கூறுகிறது.  அன்னாட்டு  ஜனத்தொகை  4  கோடி  இதை  வீகித்துப்  பார்த்தால்  குழந்தை,  குஞ்சு,  கிழடு, கிண்டு,  மொண்டி,  முடம்  உள்பட  850  உருப்படிக்கு  ஒரு  கத்தோலிக்க  குரு  இருக்கிறார்  என்று  தெரிகின்றது.

கத்தோலிக்க  பிரிவு  போலவே  பிரஞ்சு  தேசத்தில்  இன்னம்  பல  பிரிவுகளும்  உண்டு.  அந்தப்  பிரிவுகளுக்கும்  இது  போன்ற  அளவுள்ள  குருமார்கள்  இருப்பார்களேயானால்  கிட்டத்தட்ட  2  கோடி  குருமார்களுக்கு குறையாமல்  ஆய்விடக்கூடும்.

அப்படியானால்  “”தோட்டத்தில்  பகுதி  பாகம்  கிணறு”  என்பது  போல  ஜனத்தொகையில் பகுதி  குருமார்களாகத்தான்  காணப்படும்.

பெண்களையும், குழந்தைகளையும் குறைத்துவிட்டால் “”ஒரு  கூடை  கல்லும்  பிடாரி  ஆனது”  போல  எல்லா  மக்களும்  குருமாராய்த்தான்  இருக்க  வேண்டும்.

இந்து  மதத்தில்  22  கோடி  மக்களில்  33 கோடி  தெய்வங்கள்  உண்டு.  இது  ஆள்  ஒன்றுக்கு  1லீக்  கடவுள்  ஆகிறது.  ஆனால்  இந்த  குருமார்கள்  என்ன  விகிதாச்சாரம்  ஆகிறார்கள்  என்று  கணக்குக்கு  தெரியவில்லை.

இவ்வளவு  குருமார்களை  காப்பாற்ற  வேண்டிய  பொருப்பு  இவர்களுக்கு  சாப்பாடு,  துணிமணி,  வீடு  வாசல்,  போக்கு  வரவு  செலவு  ஆகியவைகளுக்கு யார்  பாடுபட்டுக்  கொடுப்பது என்பது ஒரு  பெரிய  பிரச்சினை  அல்லவா?

இப்படி  தேசந்தோறும்  மதங்கள்தோறும்  குருமார்கள்,  ஆச்சாரிமார்கள்,  மடாதிபதிகள்,  உபதேசியார்கள்,  குருக்கள்,  அர்ச்சகர்,  தேவ  அடியார்கள்  முதலாகிய  மக்கள்  பல  கோடிக்  கணக்கில்  ஏற்பட்டு  தெய்வப்  பிரார்த்தனை,  பாவ  மண்ணிப்பு,  புத்திமதி  கூறுதல்  ஆகிய  காரியங்கள்  ஆயிரக்கணக்கான  வருஷங்களாக  பல  கோடிக்கணக்கான  ரூபாய்  செலவில்  நடத்தப்பட்டுவந்தும்  உலகில்  கொலை,  களவு,  விபசாரம்,  வஞ்சனை,  சூது,  பொறாமை,  ஏமாற்றுதல்  முதலாகிய  காரியங்கள்  என்பவைகள்  விகிதாச்சாரம்  எல்லா  மதத்திலும்  எல்லா  தேசத்திலும்  எல்லா  ஜாதியிலும்  நடைபெற்றுக்கொண்டே  வருவதோடு,  நீதி  நிர்வாக  ஸ்தாபனங்கள்  இல்லாமல்  மனித  சமூகத்தில்  சட்டப்படிகான  சமாதானம்  ஒழுங்கு  கூட  நடைபெருவதற்கில்லாமல்  இருந்து  வருகின்றன.

இவ்வளவோடு  மாத்திரமல்லாமல்  பசி,பசி,  நோய்,நோய்  சம்சாரத்  தொல்லை  சகிக்க  முடியவில்லை,  பிள்ளை  குட்டிகள்  உபத்திரவம்  பொருக்க  முடியவில்லை,  என்கின்ற  கூப்பாடு  இருந்துகொண்டே  வருகின்றன.

எனவே,  மதங்கள்,  கடவுள்கள்  மாத்திரம்  அல்லாமல்,  குருமார்கள்  மதப் பிரசாரகர்கள்  கடவுள்  பக்தர்கள்  கடவுள்  பூஜைக்காரர்கள்  கடவுள்  பிரசாரக்காரர்கள்  ஆகியவர்கள்  ஏன்?  எதற்கு  ஆக?  இருக்கிறார்கள்  என்பது  விளங்கவில்லை.

குடி அரசு  கட்டுரை  01.09.1935

You may also like...