“”விதண்டா வாதம்”

 

இந்துக்களின் வேதம் கடவுளால் சொல்லப்பட்டது என்றால் கிருஸ்தவர்கள் வேதம், முகம்மதியர்கள் வேதம் முதலிய வேதங்கள் யாரால் சொல்லப்பட்டன?

பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியவர்களைத்தான் கடவுள் பிரம்மாவின் தலை, தோள், இடுப்பு ஆகியவைகளில் இருந்து உற்பத்தி செய்தார் என்றால், கிருஸ்தவர், மகம்மதியர், ஜப்பானியர், (பௌத்தர்) நீக்கிரோவர் முதலாகியவர்களை யார் எதில் எதில் இருந்து உண்டாக்கினார்கள்?

ஏசுகிருஸ்து, மகம்மது, சங்கரர், ராமனுஜர் முதலியவர்களை ஜனங்கள் நன்மைக்காக கடவுள் உலகத்துக்கு அனுப்பினார் என்றால், இவர்களை மறுக்கும் ராமசாமி, ராகவன், சிங்காரவேலு, சிதம்பரனார், ஜீவாநந்தம் முதலியவர்களை எதற்காக யார் அனுப்பினார்கள்?

பூமியை ஆதிசேஷன் தாங்குகிறான் என்றால் ஆதிசேஷனை யார் தாங்குகிறார்கள்?

சுப்பரமணியக்  கடவுளுக்கு ஆறு தலைகள் என்றால் அவன் படுத்துத் தூங்கும்போது தன் தலைகளை எந்தப்பக்கம் எப்படி வைத்து தூங்குவான்?

மகாவிஷ்ணுவினுடைய வாகனமாகிய கருட பக்ஷியைக் கண்ட மாத்திரத்தில் கும்பிட்டு வணக்கம் செலுத்தும் மக்கள் மகா கணபதி வாகனமாகிய பெருக்கானைக் (பெருச்சாளி) கண்டால் ஏன் உடனே தடியெடுத்துக்கொண்டு அடித்துக் கொல்லுவதற்காக ஓடுகிறார்கள்?

அவதார புருஷர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், நபிமார்கள், ஆண்டவனால் அனுப்பப்பட்டார்கள் என்றால் அயோக்கியர்கள், திருடர்கள், கொலைகாரர்கள், விசுவாசத்  துரோகிகள் முதலியவர்கள் யாரால் அனுப்பப் பட்டவர்கள்?

உலகமும் உலகத்திலுள்ள ஒவ்வொரு தனிப்பொருளும் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது என்கிறார்கள். மதவாதிகள் இதை ஒப்புக்கொள்ளா தவர்களை நாஸ்திகர்கள் என்கிறார்கள். அப்படியே வைத்துக் கொள்ளுவோம்!  கடவுளால் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது?

மனுதர்ம சாஸ்திரத்தில் மனுதேவர் சொல்லியிருக்கின்றபடியா?

கிருஸ்துநாதர் பைபிளில் சொல்லி இருக்கின்றபடியா?

முகம்மதுநபி கொரானில் சொல்லி இருக்கின்றபடியா?

எந்த முறைப்படி?

பகுத்தறிவு (மா.இ.)  வினா விடை  ஜுன் 1935

 

எல்லாம்  சுயமரியாதையால்  தான்

அர்ச்சகர், ஜோசியர் சம்பாஷணை

சித்திரபுத்திரன்

காலம்:  மாலை நேரம்.

இடம்:  தெப்பக்குளத்து ஓரம் கல்லுக்கட்டு மண்டபம்.

பாத்திரங்கள்:  அர்ச்சகருக்கும், ஜோசியருக்கும் சம்பாஷணை.

விஷயம்:  “”பிழைப்புக்கு ஆபத்து வந்துவிட்டதேஎல்லாம் இந்த சுயமரியாதையால் தான்” என்பது.

ஜோர்:  ஆ! ஆ! வாருங்கள், வாருங்கள்! அர்ச்சகர்வாள்! ஏளணும்! ஏளணும்!! எங்கே உமை ரொம்ப காலமாக சந்திக்கவே முடியவில்லை? கோவில்களில் ரொம்ப ஜோலியாக்கும்.

அர்: நாசமாய்ப் போச்சுது, கோவிலாவது ஜோலியாவது, சுடுகாடாவது.

ஜோர்: ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?  என்ன?  கோவிலில் வேலை இல்லை என்கிறீர்களா?

அர்:  எங்கே ஜோசியர்வாள்! முன்போல ஆளுகள் கோவிலுக்கு வருகிறார்களா? பகுதிப்பேராவது வருகிறார்களா? குடும்பம் பெருத்து விட்டது; வரும்படி சுத்தமாய் பூஜ்யமாய்விட்டது. வேளா வேளைக்குத் திறக்கவும் பூட்டவும் தான் வேலை இருக்கிறதே ஒழிய யாத்திரை வாசிகளோ, உள்ளூர்க்காரர்களோ யாரும் வருவதில்லை.

ஜோர்: என்ன காரணம்?

அர்:  எல்லாம் இந்த எழவெடுத்த சுயமரியாதை தான் காரணம்.

ஜோர்:  அப்படியென்றால் என்ன? சுயமரியாதைக்காரர்கள் சாமி இல்லை, பூதமில்லை, பேய் இல்லை, கோவிலுக்குப் போவதில் பயனில்லை என்று ஊர் ஊராய் பிரசாரம் செய்கின்றார்களே அதனாலா?

அர்:  இல்லை, இல்லை அதனாலெல்லாம் நாம் பயப்பட வேண்டியதில்லை.  அவர்கள்  இன்னமும் ஆயிரந்தடவை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், சாமியையே புரட்டிக் கீழே வேண்டுமானாலும் தள்ளட்டும், கோயிலைக்கூட இடிக்கவேண்டுமென்று சொல்லட்டும்,  இதனால் எல்லாம் நமக்கு ஒன்றும் முழுகிப்போய் விடாது.

ஜோர்:  பின்னை ஏன் சுயமரியாதைக்காரர்கள் மீது குற்றம் சொல்கிறீர்கள்?

அர்:  கோவிலுக்கு வழக்கமாக வரும் தேவடியாள்களை நிறுத்தி விட்டார்களல்லவா? அவர்களது கைங்கரியத்தைப்பற்றி கண்டபடி பேசி அதற்கொரு சட்டமும் செய்யச் செய்துவிட்டார்கள்.  அதுமாத்திரமல்லாமல் கோவில் கைங்கரியத்துக்குத் தாசிகள் இல்லாமல் செய்ததோடு, தாசித் தொழிலைக்கூட செய்யக்கூடாது என்று சட்டம் செய்து தினப்படி கோவிலுக்கு வந்துகொண்டிருந்த விபசாரிகளையும் ஊரை விட்டு விரட்டி அடித்து விட்டார்கள்.  இந்த இரண்டு கூட்டமும் கோவிலுக்கு வரவில்லை யானால் அப்புறம் எந்தக் கழுதை கோவிலுக்கு வரும்?  தாங்கள்தான் சொல்லுங்களேன்?

ஜோர்:  என்ன அர்ச்சகர்வாள்!  தாசிகளும், விபச்சாரிகளும் கோவிலுக்கு வருவதற்கும் பக்தர்கள், யாத்திரைக்காரர்கள் கோவிலுக்கு வருவதற்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் வராவிட்டால் இவர்கள் ஏன் வரக்கூடாது?

அர்:  ஜோசியர்வாள்!  தாங்கள் என்ன ஒன்றும் தெரியாதவர்கள் போல் பேசுகிறீர்கள்! நம்முடைய பெரியவாள் எல்லாம் என்ன முட்டாள்கள் என்று நினைக்கிறீர்களா?  ஒவ்வொரு முக்கியமான கோவில்களையும், ஸ்தலங்களையும் பாருங்கள்! கோவில் கட்டும்போதே அர்ச்சகர்களுக்கும், தாசிகளுக்கும் வீடுகள், மான்யங்கள் எல்லாம் ஏற்பாடு செய்திருப்பதுடன் அர்ச்சகர் ஒருவர் இருவர் என்றால் தாசிகள் 8 பேர் 10 பேர் வீதம் நியமனம் செய்திருக்கிறார்களே,  ஏன் தங்களுக்குத் தெரியாதா?

ஜனங்களைக் கோவிலுக்கு வரும்படியாகத் தூண்டவும் கோவில் பைத்தியம் உண்டாகவும் தானே தாசிகளை கோவில்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கோவிலுக்கு வருகின்றவர்கள் எல்லாம் பக்திக்காகவா வருகின்றார்கள்?

ஜோர்:  அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்?  பக்தி இல்லாமல் கோவிலில் வேலை என்ன?

அர்:  பக்தி கோவிலுக்கு வந்துதான் காட்டவேண்டும்!

முதலில் தாசியைப் பார்க்க என்று 4பயல்கள் ஜோராய் பக்தி வேஷம் போட்டுக்கொண்டு கோவிலுக்கு வருவார்கள்.  பிறகு இந்த ஷோக் ஆசாமிகளைப் பார்க்க என்று நான்கு குடும்ப ஸ்திரீகள் என்பவர்கள் அலங்கரித்து ஷோக் நடை நடந்து கொண்டு கோவிலுக்கு வருவார்கள்.  அப்புறம் இவர்களைப் பார்க்க என்று பல பேர்வழிகள் வருவார்கள்.  இப்படியே ஒன்றுக்கு ஆக ஒன்று என்றும் ஒன்றை ஒன்று ஆதரிக்கும் கூட்டம் சரியாய் இருக்கும்.  இதன் பயனாய் நமக்கும் வேலை இரண்டுவிதத்திலும் சரியாய் இருக்கும்.  வரும்படிக்கும் குறைவு இருக்காது. நமக்கும் தாசி, நம்ம பையனுக்கும் தாசி வீட்டிலுள்ளவர்களுக்கும் அப்படி, இப்படி………………………. அப்புறம் சொல்லவேண்டுமா?

ஜோர்:  இதனாலா இப்போது கோவிலுக்கு ஆள்கள் வருவதில்லை என்கிறீர்?  எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது.  அது சரி, இரண்டுவிதத்தில் வரும்படி என்றீர்களே மற்றொரு விதம் என்ன?

அர்:  அதுவா?  தங்களிடம் சொல்வதற்கு என்ன வெட்கம்! “”தாசியை ஒளித்த சூலா”

தாசிகளைப் பார்க்க ஆண்கள் வருவார்கள் என்று சொன்னேன்.  ஆண்களைப்பார்க்க மற்ற குடும்பப் பெண்களிலும் சிலர் வருவார்கள் என்று சொன்னேன்.  இவர்கள் எல்லாம் பூஜை அர்ச்சனை என்கின்ற வகைகளில் காணிக்கை,  கட்டளைப் பணம் ஆகியவைகளுக்கு கொடுப்பதில் லாபம் ஒன்று,  மற்றொன்று இவர்களைச் சேர்த்து வைத்ததில் இணைப்புத் தரகு என்கின்ற வகையில் ஏராளமாய்க்  கிடைக்கும்.  பிரபுக்களும் பிரபுக்கள் வீட்டுச்  சில பெண்களும் இதற்குத்தான் ஏராளமாய்க் கொடுப்பார்கள்.  அநேக விஷயங்களில் அவர்கள் வீடு நம்ம வீடு என்கின்ற வித்தியாசமே கிடையாது.  இதனால் தான் வீடு வாசல் எல்லாம் கட்டமுடிந்தது.  தாராளமாய்ப் பிழைக்கவும் முடிந்தது. மற்றபடி கோவில் சம்பளமாகிய N 1120 ரூ  சம்பளத்தாலா நம்ம குடும்ப மக்கள் வாழ முடிகின்றது?

ஜோர்:  அப்படியா சங்கதி?  சுயமரியாதைக்காரன்கள் இதில் எல்லாமா மண்ணைப்போட்டு விட்டான்கள்?  அப்படியானால் நாம் வேறு வழியில் கோவில்களுக்குப் பழய நிலையை உண்டாக்கி விடமுடியாதா?

அர்:  என்ன செய்வது?  தாங்களாவது ஒரு வழி சொல்லுங்களேன்.

ஜோர்:  அர்ச்சகர்கள் எல்லோரும் ஒன்று சேருவது.  ஒரு மகாநாடு கூட்டுவது.  எல்லோரும் உண்மையான சம்சாரம் என்பதற்கு ஆக ஒவ்வொரு பெண்களைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் அல்லவா?  அது தவிர இந்த கோவில் கைங்கரியத்துக்கு என்பதாக மறுபடியும் ஆளுக்கு ஒன்று இரண்டு கல்யாணம் பொய்க் கல்யாணம் செய்து கொள்ளுவது.  வெளியாருக்கு மாத்திரம் கல்யாணம் என்று தெரியட்டும். நாம் செய்யும்போதே இந்தக் காரியத்துக்கு என்று செய்து கொள்ளுவது. பிறகு சவுகரியப்படி செய்து கொள்ளுவது.  நம்ம சொந்த சங்கதியை வேண்டுமானால் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுவது. இப்படியெல்லாம் செய்தால் தான் சுயமரியாதையை வெல்ல முடியும்.

அர்:  யோசனை நல்ல யோசனைதான்.  காரியத்தில் அது சாத்தியமாக வேண்டாமா?  ஒருவன் இரண்டு மூன்று பெண்களைக் கட்டுவதென்றால் அதற்குச் செலவு, நகை, துணி மணி, அதற்கேற்ற வீடு வாசல், தட்டு முட்டு இவையெல்லாம் லேசான காரியமா?  பணத்திற்கு எங்குபோவது?

ஜோர்:  என்னமோ கஷ்டகாலம்தான்;  இது அர்ச்சகர்களை மாத்திரமா பிடித்திருக்கிறது?  தாங்கள் சொல்லுவதைச் சொல்லட்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.  நம்ம சங்கதியும் அப்படித்தான் இருக்கிறது.

அர்: தங்களுக்கு என்ன சுவாமிகளே குறைவு! கோவில்களுக்குத்தான் தாசிகள் விபச்சாரிகள் இல்லாததால் கெட்டுவிட்டது.  ஜோசியம், வாழ்க்கைச் சடங்குகள், கல்யாணபொருத்தம், புரோகிதம் ஆகியவைகளுக்குக் கெடுதிவர ஒரு காரியமும் ஏற்பட்டுவிடவில்லையே?

ஜோர்: அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்கள்? இந்த சுயமரியாதைக்காரப் பயல்களால் ஜோசியம் கேட்பது என்பதே கேலியாய்ப் போய்விட்டது.  ஒருவன் இருவனுக்கு நாம் வலியப்போய்ச் சொல்வதா யிருந்தாலும், இரகசியமாய் இருட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டு கேட்கிறான். கொடுக்கிறதோ பூஜ்ஜியமாய்விட்டது.  அவன் கொடுத்தாலும் சரி கொடுக்காவிட்டாலும் சரி அந்தப் பிழைப்புக்கு அடியோடு ஆபத்து வரக்கூடாதே என்று ஏதோ வேஷம் போட்டுக்கொண்டு திரிகிறேன்.  வீதியில் நடந்தால் சுயமரியாதை வெடி குட்டிகள், கொள்ளையில் போனதுகள் நம்மைப் பார்த்து பரிகாசம் பண்ணுகின்றதுகள்.

ஒரு நாள் ஒரு தகப்பன் அவன் தகப்பனுக்கு திதி கொடுத்தான். நான் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டேன். அவன் மகன் 7வயதுப் பையன்;  நன்றாய்ப் பேசக்கூட தெரியவில்லை.  ஒரு காகிதத்தில் என்னமோ எழுதிப் படித்து என்னிடம் கொண்டுவந்து மூட்டையைக் கையால் பிடித்துக் கொண்டு இந்த சாமான்களை எங்கள் தாத்தாவுக்குத்தானே கொண்டு போகிறீர்கள்?  இந்தக் காகிதத்தை முதலில் எங்கள் தாத்தாவிடம் நான் கொடுத்ததாகச் சொல்லிக் கொடுத்து பதில் வாங்கிக்கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் பிறகு இந்த மூட்டையையும், இன்னும் அவருக்கு என்னென்ன வேண்டுமோ அந்த சாமான்களையும் வாங்கிக்கொண்டு போங்கள் என்று பிடிவாதம் பேசி ஏளனம் செய்தான். எல்லோரும் சிரித்தார்கள்.  இனி இந்தப் பிழைப்பு பிழைப்பதைவிட எச்சில் இலை பொறுக்கிச் சாப்பிடலாம் என்று கூடத் தோன்றிவிட்டது. கழுதைக்கும் மனிதனுக்கும் பொருத்தம் கேட்கின்றார்கள். ஆணுக்கும் ஆணுக்கும் பொருத்தம் கேட்கின்றார்கள். செத்துப்போனவர்களுக்கும், இருக்கிறவர் களுக்கும் பொருத்தம் கேட்கிறார்கள்.  தாய்க்கும், மகனுக்கும் பொருத்தம் கேட்கிறார்கள்.  எல்லாம் சரியான ஜாதகங்களை அதாவது பிறந்த கால நேரங்களைக் கொடுத்தே பொருத்தம் கேட்கிறார்கள்.  இதையெல்லாம் நாம் எப்படிக் கண்டுபிடித்துக்கொள்ள முடியும்?  பொருத்தம் இருக்கிறது என்று சொன்னால் சிரிக்கிறார்கள். தலையைத் தட்டுகிறார்கள். ஜோசிய விஷயமோ செத்துப்போனவர்கள் ஜாதகத்துக்கு ஆயுள் எவ்வளவு என்று கேட்கிறார்கள்.  அப்பப்பா! இந்தச் சுயமரியாதைப் பையன்களிடம் சிக்கிக்கொண்டு வெகு தொல்லையாய் இருக்கிறது.  என்ன செய்வது?

அர்:  ஏன் பொருத்தங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் கூட பார்ப்பதில்லையா?

ஜோர்:  ஜோசியம் பொருத்தம் இவைகளில் நம்பிக்கை உள்ள வீடுகளில் பெரியவர்கள் பொருத்தம் கிருத்தம் பார்க்கிறார்களா என்றால் அந்தந்த வீட்டுப்பெண்ணும் மாப்பிள்ளையுமே பார்த்துக்கொள்ளுகின்றன.  தகப்பனார் தாயாருக்குக்கூட அந்த வேலை இல்லாமல் போய்விட்டது.  அப்புறம் நம்மை யார் பொருத்தம் கேட்பார்கள்?

அர்:  இதுகள் தான் இந்தக் கதியானால் கிரகதோஷம், சாந்தி முதலியவைகளில் உள்ள கிறாக்கிகள் தங்களுக்கு இருக்குமே.

ஜோர்:  அது நாசமாய்ப் போய் வெகுகாலமாச்சுது. காயலா, தலைவலி, கால் வலி என்றால் வருவதற்கு முன்னமேயே டாக்டர்களிடம் ஓடுகின்றார்களே ஒழிய நம்மிடம் எவன் வந்து கிரகதோஷம் பார்க்கிறான்? எவன் சாந்தி செய்யச்  சொல்லுகிறான்?

நான் ஒரு பெரியவர் காயலாவுக்குப்போய் பார்த்து கிரக தோஷம் சொல்லி சாந்திசெய்ய லிஸ்ட்டு போட்டுக்கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தேன்.  காயலாக்காரர் வைத்தியமும் பார்த்தால் தேவலாம் என்று நினைத்து வழக்கம்போல் டாக்டருக்குச் சொல்லி அனுப்பினார்.  டாக்டரும் வந்துவிட்டார்.  அவர் பேரன் ஒரு 12வயது பய்யன் வாசல்படியில் நின்றுகொண்டு “”டாக்டருக்கு இந்த வீட்டில் வேலை இல்லை; காயலாவுக்குக் காரணம் கிரக தோஷம் என்று இதோ இந்த சாஸ்திரியால் கண்டுபிடிக்கப்பட்டு அதற்காகச் சாந்தி செய்ய லிஸ்ட்டு போட்டாய் விட்டது. ஆதலால் அனாவசியமாக இரட்டைச்செலவு வேண்டாம்.  ஒன்று ஜோசியரை நம்ப வேண்டும், இல்லா விட்டால் டாக்டரை நம்பவேண்டும்.  இந்த இரண்டுங்கெட்ட புத்தி கூடாது” என்று சொல்லி, கடைசியாக ஜோசியர் வெளியில் போனால் தான் டாக்டரை உள்ளே விடுவேன் என்று வழிமறித்துவிட்டான்.

கடைசியாக  சாந்திக்குப்  போட்ட லிஸ்ட்டு கிழித்தெரியப்பட்ட பிறகு டாக்டர் உள்ளே வந்தார். நான் “”ஆடு திருடின குறவன்” போல் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு மரியாதையாய் வெளியேறிவிட்டேன்.  இப்படி இருக்கிறது என் பிழைப்பு; என்ன செய்வது?

அர்:  எப்படியாவது சுயமரியாதைக்காரன்களை ஒழித்தாக வேண்டும்.  இல்லாவிட்டால் உங்களுக்கும் நமக்கும் மாத்திரமல்ல நம்ம சமூகத்தின் சுகவாழ்வுக்கே ஆபத்து வந்துவிடும். ஆகவே இதற்கு ஒருவழி சொல்லுங்கள்.

ஜோர்:  என்ன வழி ஐ.இ.கு.  நம்மிடவாள்,  இ.ஐ.ஈ. நம்மிடவாள்,   ஜட்ஜிகள் முனிசீபுகள் நம்மிடவாள்,  போலீசுகளில் நம்மிடவாள், மேஜிஸ்ட் ரேட் டிப்டி மேஜிஸ்ட்ரேட் சப் மேஜிஸ்ட்ரேட் நம்மிடவாள், வக்கீல்கள் நம்மிடவாள், வெள்ளைக்காரர்களையும் ஏறக்குறைய நம்மிடவாளாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்தக் காலத்தில் இந்தச் சுயமரியாதை அழிக்கப்படவில்லையானால் இனி எப்போது அழிக்கப்படப்போகிறது? ராவணன் இரணியன் காலத்தில் தப்பிக்கொண்டோம்.  புத்தர் காலத்தில் தப்பிக்கொண்டோம்.  மகமது காலத்தில் தப்பிக்கொண்டோம்.  இந்தக்காலம் தானே கொஞ்சம் தொல்லையாய் இருக்கிறது? உத்தியோகத்திலும் தொல்லைப்படுத்துவான்கள், வைதீகத்திலும் தொல்லைப் படுத்துவான்கள்.  இவன்களை எப்படித்தான் தொலைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.

அர்:  இப்பொழுது ஆங்காங்கு சத்துரு சங்கார யாகம், வாஜ்பேய யாகம் முதலிய யாகங்கள் நடக்கின்றனவே. அதுகள் மூலம் இவன்கள் ஒழிக்கப்படமாட்டார்களா!

ஜோர்:  யாகமாவது மோகமாவது? அப்படி யாகத்தில் காரியங்கள் ஆகிவிடுமானால் ஐரோப்பா, அமெரிக்கா, ரஷ்யாக்காரன்கள் எல்லாம் இங்கு இருக்கும் பிராமணர்களை எல்லாம் விலை கொடுத்து வாங்கிக் கொண்டு போய் யாகம் செய்யச் செய்து ஒருவனை ஒருவன் ஜெயித்துவிட மாட்டான்களா?  துப்பாக்கி என்னத்துக்கு?  பீரங்கி என்னத்துக்கு?  ஆகாயக்கப்பல், வெடிகுண்டுகள், விஷப்புகை இவைகளெல்லாம் என்னத்திற்கு? யாகத்தில் சத்து இருந்தால் சயன்ஸ்காரன்கள் விட்டு விடுவான்களா?  சும்மா முட்டாள் பயல்களை ஏமாற்றவும் அவன்களுக்கு மூட நம்பிக்கையில் மோகம் வரவும் செய்யப்படுகின்ற ஒரு சூழ்ச்சிப் பிரசாரமே ஒழிய வேறென்ன?  அதை நம்பினால் ஆபத்துதான்.  வேறு ஏதாவது செய்ய வேண்டும்.

யாரோ சுயமரியாதைக்காரன்கள் வருகிறான்கள் போல் இருக்கிறது.  பின்னால் மற்றொரு சமயம் பேசிக்கொள்ளுவோம். மூக்கைப் பிடித்து ஜபம் பண்ணுகின்றவர்கள்போல் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொள்வோம்.

அர்:  சரி அப்படியே செய்வோம்.

பகுத்தறிவு (மா.இ.)  உரையாடல்  ஜுன் 1935

You may also like...