ஜோசியம்

 

ஜோசியம் என்பது ஒரு மனிதனுடைய பிரந்த நேரத்தைக்கொண்டு அந்தச்சமயம் கிரகங்கள் இருந்த நிலைமைக்கேற்ப மனிதனுடைய பலா பலன்களைக் குறிப்பதென்பதாகும்,

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மனிதனின் வாழ்க்கை, அவனது பிரப்பு, இறப்பு, இன்பம், துன்பம், சுகம், அசௌக்கியம், செல்வம், தரித்திரம், தொழில், மேன்மை, கீழ்மை, புத்திர களத்திர தன்மை, எண்ணிக்கை, ஆயுள் முதலியவைகளைக் குறிப்பதாகும்.

இதைக் கூர்ந்து பார்ப்போமானால் மேல் கண்ட பலன்கள் ஜோசியத்தின் மூலம் உணரலாம் என்பது உண்மையாய் இருக்குமாயின் ஒரு மனிதனின் பிரந்த நேரத்தைக்கொண்டு அப்போதிருந்த கிரகங்களின் நிலையை அறிந்து பலன்களை கணிப்பது என்பதில் குறிப்பிட்ட ஜாதகனுடைய பலன் மாத்திர மல்லாமல் அவனது பலாபலனுக்குச் சம்பந்தப்பட்ட மற்ற அனேகருடைய பலன்களும் அதில் அத்துபடி ஆகிவிடவேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் ஒரு ஜாதகனுக்கு செல்வம் வரவேண்டுமானால், வியாதி வரவேண்டுமானால், உத்தியோகம் வரவேண்டுமானால், சாவு வரவேண்டுமானால் அவை வருவதற்கு ஹேதுவான மாற்றங்களும் இந்த ஜோசியத்தின் மூலம் அறிந்தாகவேண்டும்.  இவனால் மற்றவர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களும், இவனுக்கு மற்றவர்களால் ஏற்படும் லாப நஷ்டங்களும் கணிக்கப்படும்போது இவனது பலாபலன்களைப் போலவே மற்றவர்களது பலாபலன்களும் ஏற்கனவே அவனவன் ஜாதக பலனின் பயனாய் ஏற்பட்டதாகத் தான் இருக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு ஜாதகனுக்கு சொத்து திருட்டுப்போவதாய் வைத்துக் கொள்ளுவோம், அந்தச் சொத்தை திருடுகிறவனுடைய ஜாதகத்திலும் அவனுக்கு இன்னானுடைய சொத்து திருட்டுப்போகும் என்றும் அது இன்னவனுக்கு கிடைக்க வேண்டும் என்றும் ஏற்பட்டிருந் தாலொழிய – அதற்குத் தகுதியான மாதிரி கிரக அமைப்பும், அந்தப்படி கிரகம் அமைந்த நேரத்தில் அவரவர் பிரந்துமிருந்தாலொழிய இரண்டும் சாத்தியமான காரியமாக ஆகிவிடாது.

இதுபோலவே ஒரு ஜாதகன் மற்றொருவனை கொலை செய்வதாய் வைத்துக்கொள்ளுவோம்.  இதுவும் இந்த ஜாதகன் இன்னானைக் கொலை செய்து இன்ன பயன் அனுபவிப்பான் என்று பலன் இருப்பது போலவே இவனால் கொலை உண்ணப்பட்டவன் ஜாதகத்திலும் இன்னாறால் இவன் கொலை உண்ணப்பட்டு அதனால் இந்த ஜாதகனுக்கு இன்ன பலன் ஏற்படும் என்றும் இருந்துதானே ஆகவேண்டும்.

இதுபோலவே தான் எந்த ஒரு ஜாதகனுடைய பலனை கவனித்தாலும் அந்தப்பலனுக்கு சம்பந்தப்பட்ட எல்லா மனிதர்களுடையவும் ஜீவராசி களுடையவும் அந்தந்தப் பொருள்களுடையவும் ஜாதகமும் சம்மந்தப்படாமல் ஒரு காரியமும் நடக்காது. மனிதன் பிரக்கும்போது உள்ள நேரத்தைக் கொண்டு அந்த மனிதனின் வாழ்வின் பலாபலன் சொல்லப்படுவது போலவே வஸ்துக்கள், தாவரங்கள் முதலியவைகளுடைய பிரந்த நேரத்தைக்கொண்டும் பலாபலன்களைச் சொல்லலாம் அல்லவா?

உதாரணமாக ஒரு விக்கிரகம் செய்யப்பட்டால் அது செய்யத் தொடங்கிய நேரத்தையோ செய்து முடிந்த நேரத்தையோ கொண்டு அதன் வைபவத்தைக் குறிக்கலாம் என்று ஜோசியர்கள் கூறுகிறார்கள்.

அது உண்மையானால் இந்த பலன் என்பது விக்கிரங்களுக்கு மாத்திரமல்லாமல் உலகத்தில் செய்யப்படும் எல்லாப் பொருள்களுக்கும் பொருத்தமானது என்றுதானே சொல்லவேண்டும்.

ஒரு கடியாரம், ஒரு லாந்தர், ஒரு பாத்திரம், ஒரு நாற்காலி முதலியவைகளில் ஏதோ ஒன்றை வைத்துக்கொள்ளுவோம்.  அது செய்யத் துடங்கிய நேரமோ அல்லது செய்து முடிந்த நேரமோ, அல்லது வாங்கிய நேரமோ குறித்துக்கொண்டால் அந்த நேரத்தில் இருந்த கிரக நிலைக்கேற்ப மற்றும் அதனுடைய சலனத்துக்கு ஏற்ப பலாபலன்கள் குறிப்பிடக்கூடிய தாகவே இருக்கவேண்டும்.

ஏனெனில் மனிதனுக்கும்,  விக்கிரகத்துக்கும் வாழ்க்கை எப்படி இருக்கின்றதோ அப்படித்தான் மற்ற ஜீவன் புல் பூண்டு சாதாரண வஸ்துக்கள் ஆகியவைகளுக்கும் இருந்து வருகின்றது.

ஒரு குதிரை பட்டத்துக் குதிரையாய் இருந்து பெருத்த சுகபோகமும் பெருமையும் அடைகின்றது.  அதோடு கூடப் பிரந்த மற்றொரு குதிரை ஜட்கா வண்டியில் தினமும் கட்டப்பட்டு முதுகுப்பட்டை வாங்கப்படுவதோடு றெய்ன்ஸ் கயிற்றால் விதரில் அடி வாங்கி விதர் வீங்கி கஷ்டப்படுகின்றது. இது அவற்றின் பிரந்த நேர கிரகாச்சாரப்பலன் என்றுதானே சொல்ல வேண்டும்.

இதுபோலவே ஒரே பாரையில் உடைத்த இரண்டு பாளக் கல்லுகளில் ஒன்று விக்கிரகமாகி பொன், வைர ஆபரணங்கள் அணிந்து தினம் 6 கால பூஜை, சதுர், பாட்டு, வைபவம், இரண்டு மூன்று பெண்ஜாதிகள், பல தாசிகள், வருஷா வருஷம் கல்யாணம், பெரிய ஆலயம், திருவிழா முதலிய வைபவங் களைப் பெருகின்றது. அதனோடு பிரந்த மற்றொரு கல் முனிசிபாலிட்டி கக்கூசுக்கு பாவப்பட்டு தினம் நூற்றுக்கணக்கான பேர் செருப்புக்காலால் மிதித்து அதன்மீது ஏறி மலபாதை கழிக்கவும் சதா விளக்குமாறு போட்டு அடித்து கழுவவும், போகின்ற வருகின்ற பேர் காரி உமிழவுமான பலனை அடைகின்றது.  இதுவும் அந்தக்கல் பிரந்த நேரத்தின் பயனும் அப்போதிருந்த கிரகநிலைக்கேற்ப ஏற்பட்ட பலன் என்றுதானே சொல்லவேண்டும்.

அதுபோலவே ஒரே தொழில்சாலையில் ஒரே நேரத்தில் செய்யப்பட்ட இரண்டு கடியாரங்களை எடுத்துக்கொண்டால் ஒன்று மகாராஜா கையில் கட்டப்பட்டு சிறிதும் ஆட்டம் அசைவு இல்லாமலும் சரியாய் மணி காட்டிக்கொண்டு மேன்மையாய் இருக்கின்றது.

மற்றொன்றோ ஒரு கூலிக்காரன் கையில் சிக்கி கண்டபடி அடிபட்டு சாமான்கள் முரிந்து கடியாரமே கெட்டு மூன்றாம் நாளே குப்பைத் தொட்டியில் எரியும்படியாக ஆகிவிடுகின்றது.

இதுவும் அந்த  கடியாரம் பிரந்த நேரத்திலோ அல்லது வாங்கப்பட்ட நேரத்திலோ கிரகங்கள் அமைந்திருந்தமையைக் கொண்டும் அதன் சஞ்சாரங்களைக் கொண்டும் ஏற்பட்ட பலன் என்றுதானே சொல்லவேண்டும்.

இதுபோலவே யாவரும் வெருக்கும் மலம் முதல்கொண்டு ஒவ்வொரு வஸ்த்துக்கும் அதனதன் பிரந்த நேரத்தின் பயனாய் பலாபலன் இருந்து வந்தால் தான் ஜாதகம் என்பதாக ஒன்று இருக்க முடியுமே ஒழிய மனிதனுக்கு மாத்திரம்தான் ஜாதகம் சொல்ல முடியம் என்றால் அதை யார் ஒப்புக் கொள்வார்கள்.

சிலர் குதிரைக்கும், யானைக்கும் ஜாதகம் வைத்திருப்பதும் பார்ப்பதும் நாம் பார்த்திருக்கிறோம்.

மனிதனுக்கு ஜாதக பலன் சொல்ல முடிகின்றபோது குதிரைக்கும், யானைக்கும், நாயுக்கும், கழுதைக்கும் சொல்ல முடியாது என்று சொன்னால் அது நியாயமாகுமா?

அதுபோலவே குதிரைக்கும், யானைக்கும், நாயுக்கும் ஜாதகம் பலன் சொல்லுவதாய் இருந்தால் கோழிக்கும், குருவிக்கும், பாம்புக்கும், தேளுக்கும், ஓணானுக்கும், பல்லிக்கும், ஈயுக்கும், எறும்புக்கும், பூச்சிக்கும், புழுவுக்கும், கிருமிக்கும் ஜாதக பலன் சொல்ல முடியாது என்று யாராவது சொல்ல முடியுமா?

கோழிக்கும், குருவிக்கும், பூச்சிக்கும், புழுவுக்கும், அதன் பிரந்த நேரத்தைக்கொண்டு பலன் சொல்லலாம் என்றால் மரத்துக்கும், செடிக்கும், புல்லுக்கும், பூண்டுக்கும் அது முளைத்த நேரத்தைக்கொண்டு ஏன் பலன் சொல்ல முடியாது?

ஆகவே வஸ்து என்று ஒன்று ஏற்பட்டு அது பிரப்பதற்கோ தோன்று வதற்கோ ஒரு நேரமும் இருந்து அந்த நேரத்தைக்கொண்டு அப்போதிருந்த கிரக நிலையை அறியக்கூடிய எல்லாவற்றிற்கும் ஜோசியம் சொல்லலாம் என்பதுதான் ஜோசியத்தின் தன்மையாக இருக்கவேண்டும்.

இந்த முடிவு எப்படியோ ஆகட்டும். முதலாவதாக ஒரு மனிதனுடை யவோ, ஜீவனுடையவோ பிறந்த நேரத்தை எப்படி கணிக்கமுடியும். பிரசவகாலத்தில் வயிற்றுவலி ஏற்பட்ட நேரம் முதல் சிசுவானது கொஞ்சம் கொஞ்சமாய் வெளியாகிறது. உருவம் வெளிப்பட்டு தலையோ காலோ தெரிந்து வெகு நேரம் சென்றும் சில சிசுக்கள் மணிக்கணக்கில் கீழே விழாமல் சிக்கிக்கொண்டும் இருக்கின்றன. கீழே விழுந்த நேரத்தையே எடுத்துக் கொள்வதாய் இருந்தாலும் பெரும்பான்மையான சிசுக்கள் விஷயத்தில் எப்படி சரியான நேரத்தைக் கண்டுபிடிக்க முடியும்.

ஒரு நாளைக்கு 16 முகூர்த்தங்கள் ஒரு முகூர்த்தத்திற்கு 3லு   நாளிகை தான் இருக்கின்றன. ஒவ்வொரு லக்கினத்துக்கும் 4லி முதல் 5லீ நாளிகையும் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கு சுமார் 60 நாளிகையும் உண்டு.

இதற்குள் பிரக்கும் குழந்தைகள் எல்லாவற்றிற்கும் கிரகம் நக்ஷத்திரம் என்பவை ஒன்றாகவேதான் இருக்க முடியும்.  உலகில் ஏற்படும் பிரப்பு இறப்புகள் எல்லாம் இந்த லக்கினத்துக்குள்ளும் இந்த நக்ஷத்திரங்களுக் குள்ளும் தான் வந்தாக வேண்டும்.

அந்தப்படியே வந்து அதைக்கொண்டே பலன் சொல்லக்கூடும் என்றே வைத்துக்கொண்டாலும் மனிதனுடைய நித்திய வாழ்க்கை அனுபவத்துக்கும், பிரந்தபோது கிரகங்கள் இருந்து வந்த நிலைக்கும் எப்படி சம்பந்தம் இருந்துவர முடியும்? எப்படி இருக்கக்கூடும் என்பதை எந்த வான சாஸ்திரியாவது நக்ஷத்திர சாஸ்திரியாவது, ஜீவ தத்துவ சாஸ்திரியாவது, உடல் தத்துவ சாஸ்திரியாவது, பொது விஞ்ஞான சாஸ்திரியாவது ஒத்துக்கொள்ளுகின்றார்களா?

ஜோசியம் என்பது பிரந்த காலத்தைக் கொண்டு, அப்போதிருந்த கிரக நிலையை அறிந்து சொல்வது என்பதோடு மாத்திரம் இல்லாமல் மற்றும் எதை எதையோ கொண்டு சொல்லக்கூடியதாய் இருந்து வருவனதாயும் பார்க்கிறோம்,

ஒரு ஜாதகனுக்கு பலன் சொல்ல அவன் ஜோசியம் கேழ்க்கும்படியான நேரத்தை குறித்து அப்போது இருக்கும் கிரக நிலையை அறிந்துகூட சொல்லப்படுகிறது.  மற்றும் ஜாதகனின் பேர் நாமத்தைக் கொண்டும், அவன் சொல்லும் எண்ணைக் கொண்டும், அவர் சரீரத்தில் தொடும் அங்கத்தைக் கொண்டும் இன்னும் என்ன என்னமோ ஆதாரங்களைக் கொண்டும் சொல்லப்படுகின்றன.

இவைகளுக்கு எல்லாம் விஞ்ஞான சாஸ்திரம் இடம் கொடுக்கிறதா?  விஞ்ஞானத்துக்கு அதாவது பஞ்சேந்திரியங்களால் அறியக்கூடிய தன்மைக்கு விரோதமாய் ஒரு காரியத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் சொல்லப்படு மானால் பிறகு உலகில் விஷயங்களை எப்படித்தான் நிர்தாரணம் செய்ய முடியும்.

ஒரு வஸ்து நிர்ணயத்துக்கோ ஒரு விஷய நிர்ணயத்துக்கோ ஏதாவது ஒரு முறை அல்லது விதி இல்லாவிட்டால் பிறகு எப்படித்தான் விஷயங்களை நிர்தாரணம் செய்ய முடியும்.

இந்த விஷயங்கள் ஒரு புறம் இருக்க; இந்த ஜாதக பலன்கள் மனிதனுக்கு இந்தப்படி யெல்லாம் அமைவதற்கு ஒரு காரணமும் வேண்டி இருக்கிறது.  ஏனெனில் மனித வாழ்க்கையின் தன்மையும் பலன்களும் அனுபவமும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாய் இருப்பதை இயற்கை என்று ஒப்புக்கொள்ளாமல் இருப்பதால் அவற்றிற்கு காரணம் கண்டு பிடிக்கவேண்டி இருக்கிறது.  அதற்கு ஜோசியர்களும் மற்றும் கிரக பலன்களில் நம்பிக்கை உள்ளவர்களும் “”கிரகங்கள் அந்தப்படியெல்லாம் அமைவதற்கே”  காரணம் சொல்லுகிறார்கள்.  அதாவது ஒவ்வொருவருடைய கிரகாச்சார பலனும் ஜாதகன் பிரப்பதற்கு முன்னமே அமைக்கப்பட்டதற்கு அந்தந்த ஜாதகர்களின் முன் ஜன்ம கர்மத்தின் பலன் என்றும் அல்லது அவனுடைய முன் ஜன்ம நடத்தைக்கு தக்கபடி கடவுளால் விதிக்கப்பட்ட விதி என்றும் சொல்லப்படுகிறது.

ஜோசியத்தை ஒப்புக்கொள்ளுகின்றவர்களோ நம்புகின்றவர்களோ முன் ஜன்மம், முன் ஜன்ம கர்மம், அதை அனுசரித்து கடவுளால் ஏற்படுத்தப் பட்ட விதி முதலியவைகளை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.  அப்படி இல்லாவிட்டால் யாதொரு பழிபாவமும் அறியாத ஒரு ஜீவன் தான் பிரக்கும் போது நிஷ்காரணமாய் யதேச்சையாயும் இயற்கையாயும் அமைந்திருந்த கிரகங்களின் பயனாய் பலன்களை அடைவதென்றால் அதையும் இயற்கை என்று சொல்லித்தானே ஆக வேண்டும்.

ஆகவே அந்தக்காரணம் தான் முன் ஜன்ம கர்மத்தின் பலனாகவும்,  தலைவிதியாகவும் சொல்லப்படுவதாகின்றது. இதை ஒப்புக்கொள்ளுவ தனால் இதில் மற்றொரு பெரிய பிரச்சனை வந்து புகுந்து கொள்கின்றது.

அதாவது இம்மாதிரி அமையப்பட்ட கிரகங்களின் பலனாகவோ அல்லது முன் ஜன்மத்தின் கர்மத்தின் பலனாகவோ தலைவிதியின் பயனாகவோ கடவுள் சித்தத்தின் பலனாகவோ ஏற்பட்ட அல்லது ஒரு ஜாதகனால் செய்யப்பட்ட காரியங்களுக்கு மறுபடியும் பலன்கள் உண்டா என்பதும் அதற்கு அந்த ஜாதகன் பொருப்பா என்பதும் அது அந்த ஜாதகனை எப்படி கட்டுப்படுத்தும் என்பதுமேயாகும்.

உதாரணமாக ஒரு ஜாதகன் ஒரு மனிதனைக் கொலைசெய்வதாக வைத்துக்கொள்ளுவோம்,  இந்தக் கொலையானது “”இந்த ஜாதகன் இன்ன வருஷம், இன்ன மாதம், இன்ன தேதி, இன்ன கிழமை, இன்ன மணிக்கு, இன்ன ஊர், இன்னானை, இவ்விதமாய், கொலை செய்வான்” என்று கொலை செய்தவனுடைய ஜாதகத்திலும் “”இன்ன வருஷம், இன்ன மாதம், இன்ன தேதி, இன்ன கிழமை, இத்தனை மணிக்கு, இன்ன மனிதனால் கொலை செய்யப்படுவான் என்று கொலை உண்டவன் ஜாதகத்திலும் கர்மத்தின் பயனாலோ, அல்லது கடவுள் சித்தத்தாலோ ஏற்பட்டில்லாமல் இக்கொலை எப்படி ஏற்பட்டிருக்கமுடியுமா?

அந்தப்படி விதி ஏற்பட்டிருக்கும் போது கொலை செய்பவன் இந்தக்கொலையை செய்யக்கூடாது என்று எவ்வளவு தான் கருதினாலும் அவனால் கொலை செய்யாமல் இருக்கமுடியுமா? அதுபோலவே கொலை உண்டவனும் தான் எவ்வளவு தான் ஜாக்கிரதையாய் இருந்தாலும் ஒரு தண்டவாளப் பெட்டியில் வைத்து பூட்டப்பட்டிருந்தாலும் கொலையிலிருந்து தப்பித்து இருக்க முடியுமா?

“”அன்றெழுதினவன் அழித்தெழுதுவானா”

“”விதியை யாரால் வெல்லமுடியும்”

“”அவனவனின் முன் ஜன்ம கர்மத்தின் பயனை அவனவன் அனுபவித்தே தீரவேண்டும்”

என்றபடி விதியில் உள்ளது போல் நடந்து தானே தீரும்.  இந்தப்படி விதியினாலோ முன் ஜன்மக் கருமத்தின் பலனாலோ ஜாதக ரீதியாய் செய்யப்பட்ட இந்தக் கொலைக்கும் கொலை உண்ணப்பட்டதற்கும் இந்த ஜாதகன் எப்படி ஜவாப்தாரியாக ஆகமுடியும்? ஜாதகனை எப்படி குற்றம் சொல்லமுடியும்? இதற்காக ஜாதகனுக்கு பாவமோ நரகமோ கர்மத்தின் பயனோ எப்படி ஏற்படும்? இந்த ஜாதகனுக்கு பாவமோ நரகமோ எப்படி ஏற்படும் என்பது மாத்திரமல்லாமல் மக்கள் விதியின்படியோ முன் ஜன்ம கர்மத்தின் விளைவின்படியோ செய்யப்பட்ட காரியங்களுக்கு பாவம் என்றோ புண்ணியம் என்றோ எப்படி சொல்லலாம் அதற்காக நரகமோ மோக்ஷமோ அடுத்த ஜன்மத்தில் அடையவேண்டிய பயனோ எப்படி சித்திக்கும்.

ஆகவே மனிதன் அவன் செய்யுங் காரியங்கள் எல்லாம் ஜாதகப் பலன்படியும், ஜாதகப்பலன்கள் எல்லாம் விதிப்படியும், விதி எல்லாம் முன்ஜன்ம கர்மத்தின் பலன்படியும் நடப்பதாய் இருக்கையில் பாவபுண்ணியம் என்ற பாகுபாடும், நற்செய்கை துர்செய்கை என்கின்ற பெயரும், எப்படி பொருந்தும்? மோக்ஷத்திற்கும், நரகத்திற்கும் அவசியம் தான் ஏது? அது எதற்காக இருக்கவேண்டும்?

கடவுள்தானாகட்டும் இந்த செய்கைகளுக்கு தீர்ப்புகளோ, விசாரனையோ, சன்மானமோ, தண்டனையோ எப்படி செய்ய முடியும்?  என்பவைகளை யோசித்தால் ஜோசியம் என்பதாக ஒன்று இருக்க முடியுமா? அது பிரந்த நேரத்தைக்கொண்டு மனித வாழ்க்கையில் ஒவ்வொரு பயனும் சொல்லமுடியுமா?

அப்படி ஒரு சாஸ்திரம் இருக்க பகுத்தறிவின்படி சையன்ஸ்படி இடம் இருக்கிறதா? என்பவைகளை யோசித்து பார்க்கவேண்டும்.

ஜோசியம் என்பதைப்பற்றி இந்துக்கள், மகம்மதியர்கள், கிறிஸ்தவர்கள் முதல் எல்லா ஆஸ்திகக்காரர்களுக்கும், நம்பிக்கை இருந்து வருகின்றது.

சிற்சில மனிதர்கள் ஆஸ்திகர்களாய் இல்லாதவர்களும் ஜோசியத்தை நம்புகிறார்கள்.  ஏனெனில் அது ஒரு சாஸ்திரமென்றும் அதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை யென்றும் ஜோசியம் விஞ்ஞான பரீøக்ஷயால் நிர்ணயிக்கக் கூடியதென்றும், ஆதலால் அது பிரந்த நேரத்தையும், நக்ஷத்திரங்களையும், கிரகங்களையும் பொருத்ததென்றும், நக்ஷத்திரங்களும், கிரகங்களும் உண்மை ஆனதினாலும் பிரத்தியக்ஷ பிரமாணமானதினாலும்  அதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், அனுபவத்திற்கு ஒத்து இருக்கிறதென்றும்,  இப்படி பலவாராகப் பேசி அதை ஒப்புக்கொள்ளுகிறவர்களும், நம்புகிறவர்களும் சமாதானம் சொல்லுகின்றார்கள்.

இந்த சமாதானங்களைப்பற்றி பின் ஒரு சமயம் ஆலோசிப்போம்.  இப்போது இந்தப்படி ஒரு சாஸ்திரமோ பலனோ இருக்க நியாயம் உண்டா என்பதைப்பற்றி மாத்திரமே இவற்றைக்கொண்டு ஆராய்ந்தோம்.

பகுத்தறிவு (மா.இ.)  கட்டுரை  ஆகஸ்ட்டு 1935

You may also like...