மடச் சட்டமும்

மதிப்பற்ற உத்தியோகமும்

நமது நாட்டு சுயராஜ்ஜிய முறையைப் பற்றி பல தடவை எழுதி வந்திருக்கிறோம். சிறப்பாக இன்று ஜனநாயக முறை என்று சொல்லப் படுவதைக் கொண்ட எந்த அரசியலும் பாமர மக்கள் நன்மைக்குப் பயன்படாது என்று எடுத்துக்காட்டி வந்திருப்பதோடு குறிப்பாக நம் நாட்டுக்கு அவை அடியோடு பொருந்தாது என்றும் சொல்லி வந்திருக்கிறோம்.

பல மத, சாதி பேதங் கொண்ட சமூகமும், பலவித வாழ்க்கை லட்சியம், தொழில் முறை லட்சியம் முதலியவை கொண்ட சமூகமுமாகிய நம் நாட்டுக்குக் கண்டிப்பாக அப்படிப்பட்ட எந்தவித ஜனநாயக முறையும் பொருந்தாது என்பதே நமது அபிப்பிராயம்.

ஜனநாயகம் என்பது பொது ஜனங்களுக்காக, பொது ஜனங்களால் பொது ஜனங்களுடைய ஆட்சியால் நடத்தத் தகுதி உள்ள நாட்டுக்குத்தான் பொருத்தமுடையது என்று சொல்லப்படும். அப்படிப்பட்ட ஆட்சி அதன் உண்மைத் தத்துவத்தில் நம் நாட்டில் நடைபெற முதலாவது இன்னமும் அரசாங்கத்தார் ஒப்புக் கொள்ளுவது என்பது சுலபத்தில் எதிர்பார்க்கக் கூடியதல்ல என்பதோடு, நம் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய தலைவர்களோ, பிரதிநிதி ஸ்தாபனமோ ஒப்புக் கொள்ளக் கூடும் என்று ஒரு நாளும் எதிர்பார்க்க முடியாது.

பொது ஜனங்கள் என்பவர்களும், இந்நாட்டின் எல்லா மக்களுக்கும், எல்லாத் தொழில் முறைக்கும் ஒரே மாதிரியான சட்ட அமுல் இருப்பதை ஒப்புக் கொள்ளுவார்கள் என்றும் இன்று எதிர்பார்க்க முடியாது.

இவ்விஷயம் சரியா, தப்பா என்பதை தனித்தனியாக ஒவ்வொரு மதவாதியையும், ஒவ்வொரு ஜாதி வாதியையும், தொழில் முறையில் ஒவ்வொரு வகுப்புவாதியையும் கேட்டுப் பார்த்தால் நாம் சொல்லுவது மிகவும் சரியானது என்கின்ற அபிப்பிராயம் விளங்கும்.

ஆதலால், நாம் இன்று நம் நாட்டில் ஜனநாயகம் என்னும் பேரால் நடந்து வரும் அக்கிரமங்களையும், பாதகங்களையும் எடுத்துக் சொல்ல வேண்டியதும், ஜனநாயக ஆட்சி என்பதானது முடிநாயக ஆட்சியால் ஏற்படும் பயனைவிட அனுபவத்தில் எவ்வளவு மோசமாகவும், பாதகமாகவும் நடைபெறுகின்றது என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

இந்தியாவில் ஜனநாயக ஆட்சி முயற்சி என்பது ஏற்பட்டு இன்றைக்கு 50 வருஷம் ஆகப் போகின்றது.

அம்முயற்சி, ஆரம்பத்தில் சில பதவிகளும், பல உத்தியோகங்களும், இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும் என்கின்ற தேசீய லட்சியத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து சுயராஜ்ஜியம் என்னும் தேசீய அரசியல் லட்சியத்துக்கு வந்து, அந்த முறையில் உள்நாட்டுத் தகறார்களுக்கு ஏற்ப ஏதேதோ புரியாததும், பொருத்தமற்றதும், முன்னுக்குப் பின் முரணானதுமான காரியத்தில் இறங்கி, பொதுநல ஆர்வத்தால் பொதுமக்களால் நடைபெறுகின்றது என்று சொல்வதற்கு இல்லாமல், மதம், ஜாதி, வகுப்பு என்கின்றதான தனிப்பட்ட சுயநல லட்சியத்தால், தனிப்பட்ட சுயநல மக்களால் நடைபெறுகின்றது என்று சொல்லும்படியான நிலைமை ஏற்பட்டு, அந்தந்த மதம், ஜாதி, வகுப்பு, தொழில் முறை ஆகியவற்றிற்கு பந்தோபஸ்த்தளித்து நம்பச் செய்யும் முயற்சியே முக்கியமானதாகவும், இவ்விஷயங்களில் தெளிவான அபிப்பிராயங்கள் மக்களுக்கு ஏற்படாமல் குழப்பமான நிலையில் இருக்கும்படி செய்து, தங்கள் தங்கள் மத ஜாதி வகுப்பு தொழில் முறை லட்சியம் ஈடேறும் படியாகவும், முயற்சிகளும், கிளர்ச்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாகவே இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தேசீய அரசியல் கிளர்ச்சி என்பது பெரிதும் மதப் பூசலாகவும், ஜாதிப் பூசலாகவும் இருந்து வருகிறது.

இதற்கு மார்க்கங்கள் என்பவை பாமர மக்களை ஏமாற்றுவது, விஷமப் பிரசாரம் செய்வது, காலித்தனத்தால் வெல்லப் பார்ப்பது முதலிய பல அற்ப காரியங்களாகவே இருந்து வருகின்றன.

இதற்கு மகாத்மாக்கள், தியாகிகள் என்கின்றவர்கள் எல்லோரும் மூளையாகவும், மோகனாஸ்திரங்களாகவும், இருந்து கொண்டு மேற்கண்ட அற்ப காரியங்கள் நடைபெற தளகர்த்தர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

இதன் பயனாகவே தேசீய, அரசியல், ஜனநாயகம் என்னும் போர்வை களைப் போர்த்துக் கொண்டு தனிப்பட்ட ஜாதி, மத, வகுப்பு நாயகங்களைப் பலப்படுத்தி, அவற்றின் ஆதிக்கத்துக்கு கொண்டு வர முயற்சிக்கும் காரியத்தை விட கஷ்டப்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு, மனித சமூகத்தின் பின் தள்ளப்பட்டு, ஏமாற்றப்பட்டு, கீழ் நிலையில் இருந்து துன்பமும் கேவலமும் அவமானமும் அடைந்து வரும் மக்கள், முதலில் விடுதலை பெற வேண்டும் என்கின்ற லட்சியத்தில் ஜாதிவாதி, வகுப்புவாதி என்கின்ற நிலையிலேயே யாதொரு போர்வையும் இல்லாமல் வெளிப் படையாய் வெள்ளையாய் நின்று போராடி வருகின்றோம்.

இப் போராட்டமானது, எந்த தனிப்பட்ட ஜாதி வகுப்பு என்றில்லாமல் பொதுவாக கீழ்மைப்படுத்தப்பட்ட, ஏழ்மைப்படுத்தப்பட்ட மக்கள் என்கின்றவர் களுக்காகவென்றே நடத்தி வருகின்றோம்.

ஆதலாலேயே அனேக விஷயங்களில் நாம் பச்சையாகவும், வெள்ளையாகவும் பேச வேண்டிய நிலையில் இருந்து வருகின்றோம். அதோடு மாத்திரமல்லாமல், போலித்தனமானதும் வஞ்சகத்தனமானதுமான தேசிய, அரசியல், ஜனநாயக முயற்சி, கிளர்ச்சி என்பவைகளை எல்லா வற்றையும் வெளியாக்கித் தீரவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

இப்படிச் செய்வதில் இனி ஏற்படப்போகும் தேசிய அரசியல் ஜனநாயகம் என்பதைப் பற்றி இந்தத் தலையங்கத்தில் பேசாமல், இப்போது ஏதோ ஒரு அளவுக்காவது ஏற்பட்டு ஜனநாயகம் என்னும் பேரால் ஸ்தல சுயாட்சி என்னும் தலைப்பின் கீழ் நடந்துவரும் காரியங்களைப் பற்றியும் அவற்றின் பலன்களைப் பற்றியுமே குறிப்பிட விரும்புகின்றோம். அதாவது இன்றைய ஸ்தல ஸ்தாபன நிர்வாகமென்று சொல்லப்படும், முனிசிபாலிட்டி, ஜில்லா போர்டு முதலியவைகளைப் பற்றியே குறிப்பிட ஆசைப்படுகிறோம்.

இதைப் பற்றி முன்னாலேயே பல தடவை குறிப்பிட்டிருந்தாலும், அக்குறிப்புகள் அத்துறைகளில் ஏதோ இரண்டொரு சீர்திருத்தங்கள் செய்வதற்கு தூண்டுகோலாய் இருந்தது என்றாலும் இன்று நாட்டில் உள்ள உள் கலகங்களும், மோசமான நடவடிக்கைகளும், பிரஜா உரிமை என்பதை உணர முடியாமல் செய்து, பாமர மக்களை பொது ஜனங்களை ஏமாற்றி வஞ்சித்து கொடுமைப்படுத்தி, பொது மக்கள் வரிப் பணத்தால் சிலர் பயன் பெறவும், பொது மக்கள் வரிப்பணம் பாழாகவும் அனுகூலமாய்  பலம் பொருந்திய ஆயுதமாய் இருப்பதாக நாம் அனுபவத்திலும், ஆராய்ச்சியிலும் உணர்வதாலும், இம் மாதிரியான காரியங்களை குறைப்பதற்காக என்று கருதிச் செய்த சில சீர்திருத்தங்கள் என்பவை, இன்னும் மோசமான காரியங்களைச் செய்ய இடமளித்து விட்டதாலும் இதைப் பற்றி எழுதித் தீர வேண்டிய நிலைமைக்கு இன்று வந்து விட்டோம்.

கமிஷனர்கள்

இன்று முனிசிபாலிட்டிகளுக்கு நிர்வாக அதிகாரியாக ஒவ்வொரு உத்தியோகஸ்தரை சர்க்கார் உத்தியோக வர்க்கத்தில் இருந்தும், சர்க்கார் உத்தியோகஸ்தராகவும் நியமனம் செய்ய சமீபத்தில் ஒரு சட்டம் செய்யப்பட்டு, அந்தப்படி சற்று ஏறக்குறைய எல்லா முனிசிபாலிட்டி களுக்கும் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் கமிஷனர் என்னும் பெயருடன் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதன் அனுபவத்தைப் பார்த்த அளவில், அதனால் ஏற்பட்ட பயனை அறிந்த அளவில் இம் மாதிரியான கமிஷனர்களை ஏற்படுத்துவதற்காக செய்யப் பட்ட சட்டம் பெரிதும் முட்டாள்தனமானதாக இருக்கின்றது என்பதையும், அந்தக் கமிஷனர் என்னும் உத்தியோகம் பெரிதும் மானக் கேடான உத்தியோகமாய் இருந்து வருகின்றது என்பதையும், அரசாங்கத்துக்கும் பொது மக்களுக்கும் எடுத்துக்காட்ட ஆசைப்படுகின்றோம்.

ஏனெனில், கூடிய சீக்கிரத்தில் ஜில்லா போர்டுகளுக்கும் இம்மாதிரி நிர்வாக உத்தியோகஸ்தர்களை நியமிக்கச் சட்டம் செய்ய காரியங்கள் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிய வருவதால், முனிசிபாலிட்டியின் கமிஷனர்கள் சம்மந்தமான சட்டம் போலவே மற்றொரு சட்டம் செய்து, முனிசிபல் கமிஷனர்களுக்குள்ள அதிகாரங்களைப் போன்ற போலி அதிகாரமுள்ள உத்தியோகஸ்தர்களையும் நியமிப்பதானால் அதை வேண்டாம் என்று சொல்லவே மிகுதியும் இதை எடுத்துக் காட்டுகிறோம்.

ஏனெனில், இன்று முனிசிபல் கமிஷனர் வேலைக்கு, எந்த சுயமரியாதை உள்ள அதிகாரியும் வர முடியாத நிலைமையில் அவ்வதிகாரத் தன்மை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து வருகின்றது.

நாம் முனிசிபாலிட்டிக்கும் ஜில்லா போர்டுக்கும் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அரசாங்க சார்பாகவே அந்த நிர்வாகங்கள் நடைபெற வேண்டும் என்று எழுதின காலத்தில் முனிசிபாலிட்டிகளுக்கு டிப்டி கலக்டர்கள் அதிகாரத்துக்கும், பதவிக்கும் குறையாதவர்களாகவும், ஜில்லா போர்டு நிர்வாகத்துக்கு சப்கலக்டர்கள் அதிகாரத்துக்கும், பதவிக்கும் குறைந்தில்லாதவர்களாகவும் இருந்து வரவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தோம். அதோடு மாத்திரம் அல்லாமல், அவர்கள் அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருக்க வேண்டுமே ஒழிய மெம்பர்கள், கவுன்சிலர்கள் ஆகியவர்களுடைய தயவுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால், அரசாங்கத்தார் அந்தப்படி செய்யாமல் சிறிய உத்தியோகஸ்தர் களை நியமித்ததோடு அவ்வுத்தியோகஸ்தர்கள் தலையெழுத்தை முனிசிபல் கவுன்சிலர்களின் உதட்டு முனையில் தொங்கிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டதால் அச்சட்டம் புத்திசாலித்தனமானது என்றோ, அப்பதவிக்கு வருகிறவர்கள் சுதந்திர உணர்வும், மானமும் உடையவர்களாக இருக்கக் கூடும் என்றோ, அவ்வதிகாரிகளின் அதிகாரம் யோக்கியமாயும், நடுநிலையாயும், பொது ஜனங்களுக்குப் பயன்படக் கூடியதாயும், இருக்க முடியும் என்றோ, யாராவது எதிர்பார்க்க முடியுமா என்று கேள்க்கின்றோம்.

சாதாரணமாக ஒரு ஜில்லா கோர்ட்டுக்கும் செஷன் கோர்ட்டுக்கும் ஒரு ஜட்ஜியை நியமித்து அந்த ஜட்ஜியின் மேல் ஜில்லா போர்டு பிரசிடெண்டுக்கும் மெம்பர்களுக்கும் ஆதிக்கம் வைத்து அந்த ஜட்ஜியின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் கொடுத்து அக்கோர்ட்டு காரியங்கள் நடைபெற செய்தோமானால், அந்த கோர்ட் நடவடிக்கை எப்படி நடைபெறும்? அந்த ஜட்ஜின் நீதி எப்படி இருக்கும்? அதனால் பாமர மக்களுக்கு எப்படிப்பட்ட பலன் ஏற்படும்? ஆங்காங்குள்ள இன்றய ஜில்லா போர்டு மெம்பர்கள், பிரசிடெண்டுகள் அவர்களுக்கு வேண்டியவர்கள் ஆகியவர்களால் எப்படிப்பட்ட காரியங்கள் நடைபெறும்? என்பது போன்றவைகளையெல்லாம் மனதில் சித்திரித்துப் பார்ப்போமானால் இன்றைய கமிஷனர்களால் என்ன பயன் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை ஒருவாறு உணரலாம் என்றே கருதுகின்றோம்.

இன்றைய தேர்தல்களில், எவ்வளவு தான் சாதாரண கூலிக்கும், ஏழைக்கும் கூட ஓட்டு இருக்கின்றது என்று சொல்லப்பட்டாலும், பெருத்த பணக்காரனும், போக்கிரியும், ஜம்புலிங்கமும் தான் தேர்தலில் வெற்றி பெற முடிகின்றதே தவிர, மற்றபடி பொது ஜனப் பிரதிநிதி என்று சொல்லத் தகுதி உள்ளவர்கள் முனிசிபாலிட்டி, ஜில்லாப் போர்டு முதலியவைகளில் மெஜார்ட்டியாக இல்லாவிட்டாலும் கவனிக்கத் தகுந்த அளவாவது வர முடிவதில்லை.

இந்த நிலை சென்னை மாகாணம் மாத்திரமல்லாமல் இந்தியா முழுவதுமே இருந்து வருகிறது என்று சொல்லலாம்.

பொதுவாக ஒரு அரசியல் நிர்வாகம்  இருக்க வேண்டும் என்றும், மக்களுடைய நலங்களை அந்நிருவாகம் ஏற்று நடத்த வேண்டும் என்றும் ஆசைப்படுவதின் காரணமெல்லாம், மேல் கண்ட மாதிரி எளியோரை செல்வவான்கள் கொடுமைப்படுத்தாமலும், நல்லவர்கள் என்னும் சாதுக்களை போக்கிரிகள் தொல்லைப்படுத்தாமலும், பாமர மக்களைக் காட்டுராஜாக்கள் கொள்ளை கொள்ளாமலும் இருக்க வேண்டும் என்கின்ற காரணங் களுக்காகவே அரசியல் நிர்வாகம் வேண்டும் என்பதாக இருந்து வருகிறது.

அப்படி இருக்க அப்படிப்பட்ட ஒரு நிர்வாகமே அதாவது, சிறு மீனை, பெருமீன் விழுங்கும்படியாகவும், இளைத்தவனை வலுத்தவன் விழுங்கும்படியாகவும் பொது மக்கள் வரிப்பணங்களை மனம் போனபடி அனுபவிக்கும்படியாகவும் சிலருக்கு அரசாங்க மூலம் லைசென்சு கொடுப்பதுபோல், ஸ்தல ஸ்தாபன நிருவாகங்கள் அமைந்துவிடுமானால் மக்களுக்கு இதைவிட கொடுமையான காரியம் என்ன? என்று கேட்கின்றோம்.

இன்றைய கமிஷனர்கள் நிலையானது, முன்பு ஸ்தல ஸ்தாபனங்களில் மெம்பர்களுக்கும், தலைவர்களுக்கும் இருந்து வந்த சிறிது பொருப்பு களையும் பாழாக்கிவிட்டு, தங்கள் தங்கள் சுயநலத்துக்கு எதையும் செய்து கொள்வதற்கு தைரியத்தையும், சௌகரியத்தையும் கொடுத்து பொருப்பற்ற நிலைமையை அளித்து வருகிறது என்று சொல்லித் தீர வேண்டி இருக்கிறது.

கமிஷனர்கள் இல்லாமல் சேர்மென் ஆதிக்கம் உள்ள கவுன்சிலில், கவுன்சிலர்களுக்கு சிறிது பயமும் சேர்மென்களுக்கு சிறிது யோசித்துப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது.

இப்போது, கமிஷனர்களுக்கு முக்கியமான பொறுப்பெல்லாம் தங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியதாகவே இருந்து வருகின்றது. அதற்கு கவுன்சிலர்களும், சேர்மென்களுமே யஜமானர்கள். இந்நிலையில் கமிஷனர்களிடம் நடுக்கண்ட நீதியும், பொறுப்புள்ளதும் முனிசிபாலிட்டியின் நன்மைக்கு ஏற்றதுமான நிர்வாகமும் எப்படி எதிர்பார்க்க முடியும் என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.

“”ரஷ்யாவில்கூட நம்பிக்கையில்லாத் தீர்மான முறை இருக்கிறது” என்று சொல்லப்படுமானாலும், அந்தப் பொருப்பு ஓட்டுச் செய்ய பிரதிநிதித்துவம் பெற்ற டிப்டிகளிடம் இருந்து வருகின்றன.

அவர்களுக்கு தனிப்பட்ட சொத்துரிமை இல்லாததால், சொத்து சம்பந்தமான சுயநல காரியங்கள் யாருக்கும் கிடையவே கிடையாது. ஆதலால், சுயநலத்துக்கு ஆக நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் வருவதற்கு இடமே இல்லை.

அன்றியும் நிர்வாக பதவியால் அனுபவிக்கும் சம்பளமோ, அதிகாரமோ,  வாழ்க்கையோ எதுவும் ஒரு சாதாரண குடிமக்களுக்கு உள்ளது போலவேதான் இருந்து வருகிறது. ஆதலால் நிர்வாக உத்யோகஸ்தன் யாராவது ஒருவரையாவது நியாய விரோதமாய் திருப்தி செய்து பதவி வகிக்க வேண்டுமே என்கின்ற அவசியம் ஏற்படுவதற்கே இடமில்லை.

இங்குள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானமானது லட்சம் பிரஜைகள் உள்ள ஸ்தாபனத்துக்கு 30 பேர்கள் வசம் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும் அதிகாரமும், அதில் பகுதியோ, அரையே அரைக்கால் வாசிப்பேரோ சம்மதித்தால் போதும் என்கின்ற நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் சுயமரியாதையும் நீதி வழங்குவதில் கண்டிப்பான உணர்ச்சியும் உள்ளவர்கள் எப்படி கிடைப்பார்கள்? அல்லது எப்படி முனிசிபாலிட்டிகளில் இருந்து நியாயம் செலுத்துவார்கள்? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

கவுன்சிலர்களுடன் கமிஷனரும் ஒரு கவுன்சிலராகி அவர்கள் சுயநலங்களில் விகிதாச்சாரம் பங்குக்கு அருகாராகிவிட்டால் அம் முனிசிபாலிட்டியின் யோக்கியதை எப்படி இருக்கும் என்பது பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை.

கொஞ்ச நாளைக்கு முன்பு, கோயமுத்தூர் முனிசிபல் கவுன்சிலர்கள், கோயமுத்தூர் கவுன்சில் கமிஷனர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். இதை அரசாங்கத்தார் சிறிதுகூட யோசித்து நியாயம் கண்டுபிடிக்க முயற்சிக்காமல், உடனே அவரை மாற்றிவிட்டார்கள். சட்டத்தின் பேரால் சட்டத்தின் நிர்பந்தத்திற்கு என்று செய்யும் முட்டாள்தனமான காரியங்களில் இது தலைசிறந்த காரியம் என்று சொல்லித் தீர வேண்டி இருப்பதற்கு வருந்தினாலும், பொது நன்மையை உத்தேசித்து சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

“”காளை மாடு கண்ணுப் போட்டு இருக்கிறது” என்று சொன்னால் மாட்டுக்கு சொந்தக்காரன் “”பிடித்துக் கட்டி பால் கற” என்று சொல்வது போன்ற காரியம் ஒரு அரசியலில் அதுவும் ஸ்தல ஸ்தாபன சுய ஆட்சி முறையில் இருந்தால் இது அரசாங்கத்தாரால் வழங்கப்பட்ட யோக்கியமான சுய ஆட்சி முறை ஆகுமா? என்று கேட்டுத்தீர வேண்டி இருக்கிறது.

கோயமுத்தூர் முனிசிபல் கவுன்சிலர்களுக்கு நம்பிக்கை அற்றுப் போகும்படி நடந்து கொண்ட ஒரு அதிகாரியை, திருச்சி கவுன்சிலுக்கு அனுப்புவதென்றால் “”கோயமுத்தூர் கவுன்சிலர்கள் யோக்கியமானவர்கள் அல்ல, திருச்சி கவுன்சிலர்கள் யோக்கியமானவர்கள் ஆதலால் அந்தக் கமிஷனரை திருச்சிக்கனுப்பினால், அவரது நம்பிக்கையில் ஆட்சேபம் இருக்காது” என்று கருதித் தானே திருச்சிக்கு மாற்றி இருக்க வேண்டும். அல்லது “”அங்கு கவுன்சிலர்களே இல்லாததால் கோயமுத்தூர் கவுன்சிலர்கள் நம்பிக்கை பெறாத அதிகாரி திருச்சிக்குப் போய் எப்படியோ ஏதேச்சாதிகாரமாய் நடந்து கொள்ளட்டும். அதனால் ஜனங்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும்” என்று கருதித் தானே திருச்சிக்கு அனுப்பி இருக்க  வேண்டும்?

அல்லது, அந்தக் கமிஷனரை கவர்மெண்டு உத்தியோகத்துக்கே எடுத்துக் கொள்ளுவதாய் இருந்தால் ஜனப்பிரதிநிதிகளால் நம்பிக்கை இல்லை என்று ஒரு தடவை கருதப்பட்ட ஒரு உத்தியோகஸ்தரை அதைவிடப் பெரிய நிர்வாகத்தைப் பார்ப்பதற்கு அதைவிடப் பெரிய பொறுப்பைக் கொடுத்து அனுப்புவதென்றால் இந்தக் கோவை ஜனப்பிரதிநிதிகளான கவுன்சிலர்களை எவ்வளவோ கேவலமாக மதித்ததாகவாவது ஆகவில்லையா என்று கேட்கின்றோம்?

நம்பிக்கை இல்லை என்கின்ற காரியமான ஒரு ஆயுதத்தை இவ்வளவு கேவலமான முறையில் பிரயோகிக்க மக்களுக்கு அதுவும் இந்திய மக்களுக்கு அதாவது, 100க்கு 8 பேரே கையெழுத்துப் போடத் தெரிந்த சமூக மக்களுக்கு கையாள இடங்கொடுக்கப்படுமானால், அரசாங்கத்தார் தங்கள் பொறுப்பை சரியாகப் பயன்படுத்துகிறோம் என்று எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்?

ஒரு கமிஷனர் அதிகாரியை நல்லவர் என்று அரசாங்கம் கருதி இருக்குமானால், அந்த கவுன்சில் இனி அப்படிச் செய்யாதபடியான பாடம் கற்றுக் கொள்ளத்தக்க பொறுப்பை அரசாங்கம் ஏற்று அதற்கேற்ற காரியத்தைச் செய்திருக்க வேண்டும்.

இரண்டும் இல்லாமல் இம்மாதிரியான காரியங்கள் செய்வது ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களை மேலும் மேலும் ஊழல்படுத்த, அரசாங்கத்தாரும், துணையாய் இருக்கிறார்கள் என்று சொல்லும்படியாக நடந்து கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

கோவை, பழனி முதலிய கவுன்சில்களில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு திருநெல்வேலி, தூத்துக்குடி, கும்பகோணம் முதலிய பல முனிசிபாலிட்டிகளில் கவுன்சிலர்களுக்கும் கமிஷனர்களுக்கும் தகராராகவும் இருப்பதோடு, சில முனிசிபாலிட்டிகளில் கமிஷனர்கள் சிறிதுகூட சுயமரியாதை இல்லாமல், சேர்மென்களையும், கவுன்சிலர்களையும் பேப்பர்கள் மீது உத்திரவு போடும்படி செய்து, உத்திரவை படித்துக்கூடப் பார்க்காமல் தங்கள் கையெழுத்தை போட்டுத் தீர வேண்டியதான  அவ்வளவு மானமற்ற தன்மையில் இருந்து வருவதாகவும் உணருகிறோம்.

இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கும்படியான தன்மையில் முனிசிபல் நிர்வாகத்துக்குப் பாதுகாப்பளிக்கப் பட்டிருக்கிறது என்பது ஒரு வேஷமான பாதுகாப்பே அல்லாமல் உண்மையான யோக்கியமான பாதுகாப்பு அல்ல என்றுதான் சொல்லுவோம்.

கமிஷனர் மீது தவறுதல்கள் இருக்கும் பட்சம், முனிசிபல் கவுன்சிலர் களும், சேர்மெனும் சேர்ந்து குற்றப் பத்திரிகை தயாரித்து தங்கள் கவுன்சிலில் தீர்மானித்து, கமிஷனரின் சமாதானம் கேட்டு, அது திருப்தி இல்லாவிட்டால், அதை சர்க்காருக்கு சேர்மென் அனுப்பிவிட வேண்டும் என்பதாகவும்,  சர்க்காரார் ஒரு நியாய உத்தியோகஸ்தரை அனுப்பி விசாரிக்கச் செய்து உண்மையை கண்டுபிடித்து ரிப்போர்ட் செய்யும்படி செய்து பிறகு தங்களுடைய நீதியை வழங்க வேண்டும் என்றும், சட்டம் இருக்குமானால் கமிஷனர்களிடமும், கவுன்சிலர்களிடமும் நியாயத்தையும் யோக்கியமான நிர்வாகத்தையும் எதிர்பார்க்க முடியும். அப்படிக்கில்லாமல் இவ்விஷயத்தில் முனிசிபல் கவுன்சிலர்கள் முடிவையே ஆதாரமாய்க் கொண்டு காரியங்கள் நடப்பது என்பது நீதியான காரியமாகாது என்பதோடு சிறிதுகூட பொறுப்பை உணர்ந்த காரியமாகவும் ஆக மாட்டாது.

முனிசிபல் கவுன்சிலிடம் சர்க்காருக்கு உண்மையிலேயே அவ்வளவு நம்பிக்கை இருந்திருக்குமானால், கமிஷனரே தேவையில்லை என்பதோடு மற்றும் கவுன்சிலுக்கு இருந்த அனேக அதிகாரங்களைப் படிப்படியாகப் பிடுங்கி இந்தப்படி தங்கள் சுயநலத்துக்கு மாத்திரம் பயன்படுத்திக் கொள்வதன்றி பொதுநலத்தில் ஒரு பொறுப்புமில்லாமல் நிர்வாகம் நடக்கும்படியான காரியத்தைச் செய்திருக்க வேண்டியதில்லை.

ஆகையால், அரசாங்கத்தார் கவனித்து கமிஷனர் சம்பந்தமான சட்டத்தை அறிவுடைய சட்டமாகவும், கமிஷனர் உத்தியோகத்தை சுயமரியாதை உடைய உத்தியோகமாகவும் செய்யும் படியாக கோருகிறோம்.

குடி அரசு  தலையங்கம்  08.09.1935

You may also like...