மறைமலையடிகளின்

 

“”அறிவுரைக்கொத்து”

“”விடுதலை”யின்  அபிப்பிராயம்

சில  நாட்களாக  சுயநலக்  கூட்டத்தாரிற்  சிலர்,  மறைமலையடிகளின்  “”அறிவுரைக்கொத்து”  என்ற  நூல்  சென்னை  சர்வகலாசாலை  “இண்டர்மிடியேட்’  வகுப்பு  மாணவர்களுக்கு  பாடப்  புத்தகமாக  வைத்திருப்பது  கண்டு,  அழுக்காறு  கொண்டு,  அற்பத்தனமான  கிளர்ச்சி  செய்து  வருவதை  நமது  வாசகர்கள்  அறிவார்கள்.  அவர்களுடைய  முக்கியமான  வாதம்,  அடிகள்  தம்முடைய  “”தமிழ்நாட்டவரும்,  மேல்நாட்டவரும்”  என்ற  ஒரு  கட்டுரையில்  பிராமணர் களுடைய  குற்றங்  குறைகளைப்  பற்றிக்  கூறியிருக்கிறார்கள்  என்பதாகும்.  பிராமணர்,  பிராமணரல்லாதார்,  சைவர்,  வைணவர்,  மாத்துவர்  முதலிய  சாதி,  சமய  வகுப்பினர்கள்,  பெரும்பாலான  ஏழை  மக்களின்  வறுமையையும்  அறியாமையையும்  நீக்குவதற்கு  வேண்டியன  செய்யாமல்  வாளா  இருப்பது  கண்டு,  அடிகள்  மனம்  புழுங்கி,  அவர்களைக்  கண்டித்து  எழுதியிருக்கிறார்கள்.  சில  விஷயங்களில்  பிராமணர்களைவிட   பிராமணரல்லாதார்  மிகக்  கொடியரா யிருக்கிறார்கள்  என்றும்  அடிகள்  அடித்துரைத்துக்  கூறியிருக்கிறார்கள்.  இவ்வுண்மையை  நமது  வாசகர்கள்  அறியும்  பொருட்டும்,  சுயநலக்  கூட்டத்தாரின்  கிளர்ச்சியினால்  ஏமாறாமலிருக்கும்  பொருட்டும்,  கிளர்ச்சியின்  காரணமான  “”தமிழ்நாட்டவரும்,  மேல்நாட்டவரும்”  என்ற  கட்டுரையை  “”விடுதலை”யில்  பிரசுரிக்கிறோம்.  (அது  மற்றொரு  பக்கம்  பார்க்க)  அதைப்  படிக்கும்  ஒவ்வொருவருக்கும்  நம்  நாட்டினருடைய  முற்போக்குக்குத்  தடையான  குற்றங்களிவை  யென்பதும்,  மேல்நாட்டவரிடத்திலிருந்து  நம்மனோர்  அறியவேண்டிய  படிப்பினைகளிவை  யென்பதும்  புலனாகும்.  இப்படிப்பட்ட  உயரிய  நோக்கத்துடன்  எழுதப்பட்ட  கட்டுரையைச்  சிலர்  கடிந்தெழுதுவது  எவ்வளவு  அற்பத்தனமான  காரியம்!  தங்களுடைய  குற்றங்களைப்  பிறர்  சொல்லுதலும்  கூடாது  என்ற  இறுமாப்புடைய  கூட்டம்  எக்காலத்தில்தான்  திருந்தும்?  சென்னை  சர்வகலாசாலையைப்  பொருத்தமட்டில்,  மறைமலையடிகளின்  நூலைப்  பாடப்புத்தகமாக  வைத்தல்  கூடாதென்ற  கிளர்ச்சி  எங்ஙனம்  முடியப்போகிறது  என்ற  கேள்வி  நிகழுகின்றது.  “”சிண்டிகேட்”  என்ற  சர்வகலாசாலை  நிர்வாகக்  கழகத்தார்  அந்நூலைப்  பற்றிய  பிரச்சினையை  பாடப்புத்தகமாக  வைத்த  கழகத்தின்  யோசனைக்கு  அனுப்பியுள்ளார்கள்.  சமூக  சீர்திருத்தம்,  அறிவு  வளர்ச்சி,  மக்கள்  முன்னேற்றம்  முதலிய  உன்னத  எண்ணங்களைக்  கொண்டு  எழுதப்பட்ட  “”அறிவுரைக்  கொத்து”  என்ற  நூலை,  பாடப்  புத்தகமாக  வைத்த  பிறகு,  சுயநலக்  கூட்டத்தாரிற்  சிலரின்  கிளர்ச்சிக்குப்  பயந்து,  அதை  விலக்குவார்களானால்,  அக்கழகத் தின்மேல்  தமிழ் நாட்டார்  வைத்துள்ள  மதிப்பு  மிகவும்  குறையும்  என்பதில்  ஒரு  சிறிதும்  ஐயமில்லை.

குடி அரசு  கட்டுரை  18.08.1935

 

You may also like...