பொப்பிலி ராஜாவும் வைசிராய் பேட்டியும்!
இ.ஐ.ஈ. எழுதுவது
பொப்பிலி ராஜா அவர்கள் கல்கத்தாவுக்குச் சென்றபோது வைசிராய் பிரபு பேட்டி அளிக்க மறுத்து விட்டதாகச் சில பத்திரிகைகள் எழுதுகின்றன.
இதை ஒரு பொருப்பும் நாணையமுள்ள பத்திரிகையின் நடவடிக்கை என்று சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன்.
பொப்பிலி ராஜா கல்கத்தாவுக்கு ஜனவரியை உத்தேசித்தும், சில நண்பர்களைக் காணவும் சென்றாரே ஒழிய வைசிறாயைப் பார்க்க செல்லவில்லை.
வைசிராயைப் பேட்டி கேழ்க்கவும் இல்லை.
பொப்பிலி ராஜா வைசிறாய் பிரபுவைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினால் வைசிராய் பிரபு பார்க்க முடியாது என்று சொல்லி விடுவாரா?
அவ்வளவு பெரிய துரோகம் அவரை நம்பினவர்களுக்கோ, சர்க்காருக்கோ அல்லது வைசிறாய் வருத்தப்படும்படியோ என்ன செய்து விட்டார் என்று அறிவுள்ளவர்கள் நினைக்க மாட்டார்களா?
பொப்பிலி என்பதற்காக இல்லாவிட்டாலும் ஒரு மாகாண முதல் மந்திரியை வைசிராய் பார்க்க மறுத்துவிட்டார் என்பது எந்த பைத்தியக் காரனாவது நம்பக்கூடிய சேதியா? அல்லது எந்தப் பைத்தியக்காரனாவது சொல்லக்கூடிய சேதியா? செட்டி நாட்டு ராஜாவின் பணமானது சில மக்களை அடியோடு அறிவிழக்கச் செய்து விட்டது என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம்.
இது நிற்க மற்றொரு விஷயம் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அதாவது வேறு ஒரு கனவானை வைசிராய் பிரபு பார்க்க சவுகரிய மில்லை என்று சொல்லி விட்டது உண்மை. அதற்காக பதினாயிரக் கணக்கான ரூ. செலவு செய்து வேண்டா விருந்தாய் பேட்டி கண்டதும் உண்மை. அந்த பேட்டியிலும் உத்தேசித்துச் சென்ற காரியங்கள் எல்லாம் பொக்கணமாய் போய் விட்டதும் உண்மை. இந்த இரகசியங்களைத் தெரிய ஆசைப்பட்டால் புள்ளி விவரங்களோடு தெரிவிக்கத் தயாராய் இருக்கிறேன்.
ஆகவே செட்டிநாட்டு ராஜாவை ஆதரிக்கின்ற பத்திரிகையென்றோ அவரது பணத்தில் நடைபெறுகின்ற பத்திரிகை என்றோ ஒன்று இருக்கு மானால் அதனால் பொப்பிலியையும், மற்றவர்களையும் இப்படிப்பட்ட முட்டாள்தனமான பொய்களாலும், கேவலமான வார்த்தைகளாலும் வைவதன் மூலம் செட்டி நாட்டு ராஜாவுக்கு நன்மை செய்வதாக ஏற்பட்டு விடாது. அதற்கு நேர்மாறான பலனே ஏற்படும். திருப்பிச் சொல்ல எவ்வளவோ உண்மையான சங்கதிகள் அடக்க முடியாமல் பிதுங்கிக் கொண்டிருக்கின்றன.
செட்டிநாட்டு ராஜா கண்ணாடி வீட்டில் குடி இருக்கிறார். பொப்பிலியும், ஷண்முகமும் கருங்கல் வீட்டில் குடி இருக்கிறார்கள் என்பதைச் செட்டிநாடு அறிய வேண்டும். இதை அவரிடம் பணம் வாங்குகின்றவர்கள் அறிய வேண்டிய அவசியமில்லை, ஏன் என்றால் நாளைக்குச் செட்டிநாடு இளைத்தால் பணம் கொடுக்க பொப்பிலி இருக்கிறார், ஷண்முகம் இருக்கிறார் என்கின்ற தைரியம் அவர்களுக்கு உண்டு. இதை ஒரு செட்டிப் பிள்ளை அறியாமல் போனதுதான் ஆச்சரியம்.
குடி அரசு கட்டுரை 20.01.1935