பதினோறாவது ஆண்டு

 

நமது குடி அரசுக்கு ஒன்பதாமாண்டு நிறைந்த பிறகு இப்போது இரண்டு வருஷம் கழித்து பதினோறாவது ஆண்டில், பதினோறாவது மாலையின் முதல் மலராக இவ்வார இதழ் ஆரம்பமாகின்றது.

இதுவும் இந்தப்படி மே மாத முதல் வாரத்திலேயே ஆரம்பமாகி இருக்க வேண்டியதானது பல காரணங்களால் தவறிவிட்டது. கூடிய சீக்கிரம் குடி அரசின் பத்தாமாண்டு விழா நடத்த உத்தேசித்துள்ளோம்.

பத்தாவது ஆண்டிற்கும் குடி அரசு மாலையாய் இல்லாமல் “”புரட்சி” மாலையாகவும், “”பகுத்தறிவு” மாலையாகவும் வெளியாக்க வேண்டி ஏற்பட்டுவிட்டதால் அவ்விரண்டின் பேரால் உள்ள மலர்களை 10 வது ஆண்டு மாலையாக வைத்துக் கொண்டு இப்போது குடி அரசு பதினோறாவது ஆண்டு மாலையாக இதைப் பிரசுரிக்கின்றோம்.

குடி அரசு தோன்றிய காலம் முதல் நாளது வரை அது எப்படிப்பட்ட கொள்கையுடன் நிலவி வந்திருக்கின்றது என்பதைப் பற்றியும், குடி அரசு இந்த பதினோறு வருஷ காலத்தில் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி வந்திருக்கின்றது என்பதைப் பற்றியும் வாசகர்களுக்கு ஞாபக மூட்ட வேண்டியதில்லை யென்று கருதுகிறோம்.

அது 1925 வருஷம் மே மாதம் 2ந் தேதியில் திருப்பாதிரிப் புலியூர் ஸ்ரீலஸ்ரீ சிவ ஷண்முக மெஞ்ஞான சிவாச்சாரியார் சுவாமிகள் என்பவர்களால் துவக்க விழா செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் முதல் மாலை முதல் மலரில்

“”தேசம், தேசம் எனக் கூக்குரல் இடுவது நமது நோக்கமன்று”

“”மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும்”

என்கின்ற இரு வாக்கியங்களையும் முக்கிய நோக்கமாகக் குறிப்பிட்டு அந்நோக்கம் நிறைவேற்றப்பட குடி அரசு தன்னாலியன்ற அளவு தன் முழு பலத்தையும் உபயோகித்து பாடுபட்டு வந்து இருக்கின்றது.

குடி அரசின் ஆசிரியர் தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் ஒரு தீவிர பிரபல காங்கிரஸ் வாதியாயும் ஒத்துழையாமைவாதியாயும் இருந்தவர்.

அதற்கு சாட்சியம் என்னவென்றால், அவர் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கும், மாகாண காங்கிரஸ் வேலைக் கமிட்டிக்கும் பல வருஷங்கள் காரியதரிசியாகவும், தலைவராகவும் இருந்தார்.

காங்கிரசின் பேரால் பல முறை அ.ஆ.இ. வகுப்புப் பிரிவுகள் இல்லாத காலத்தில் சிறை சென்றார்.

அதோடு மாத்திரமல்லாமல் அவர் பேரில் ஏற்பட்ட பல துவேஷ  வகுப்புத் துவேஷ கேஸ்களிலெல்லாம் எதிர் வியாஜ்ஜியமாடாமல் விட்டு விட்டதோடு சர்க்கார் நீதியில் நம்பிக்கை இல்லை என்றும் சொன்னவர்.

தமிழ்நாட்டில் பல சத்தியாக்கிரகத்தையும், சட்ட மறுப்பையும், மரியல் களையும் நடத்தி பல நூற்றுக்கணக்கான தொண்டர்களை சிறைக்கனுப்பினார்.

தமிழ்நாடு காங்கிரசின் சார்பாய் இந்தியா முழுவதற்குமே முதல் முதலாக கதர் ஸ்தாபனம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி அதற்கு பல வருஷம் தலைவராய் இருந்து தமிழ்நாட்டிலும், மலையாளத்திலும் பல கிளை ஸ்தாபனங்களையும் தன் கையால் திறந்து வைத்தார்.

இரவும் பகலுமாய் வீட்டிலும் பிரயாணத்திலும் இராட்டினமும் கையுமாகவே இருந்து சுற்றிச் சுற்றி அதனால் கையில் வினை ஏற்பட்டு அதற்காக தோழர் காந்தியாரிடமிருந்து கொஞ்ச காலத்துக்கு ராட்டினம் சுற்ற வேண்டியதில்லை என்று தனி விதிவிலக்குப் பெற்றார்.

மாகாண காங்கிரஸ் மகாநாடுகளிலும், நூற்றுக்கணக்கான ஜில்லா, தாலூகா, கிராம காங்கிரஸ் மகாநாடுகளிலும் தலைமை வகித்திருக்கிறார்.

சர்க்காரால் சுமார் 40, 50க்கு மேற்பட்ட 144 தடை உத்திரவுகள் பெற்றிருக்கிறார்.

காங்கிரஸ் ஸ்தாபனங்களாலும், ஸ்தல ஸ்தாபனங்களாகிய முனிசிபாலிட்டி, யூனியன், பஞ்சாயத்து ஆகியவைகளாலும் சுமார் 500க்கு மேற்பட்ட வரவேற்புகளும் பத்திரங்களும் பெற்றார்.

இம்மாதிரியான காங்கிரஸ் தொண்டில் தான் மாத்திரம் அல்லாமல், தனது மனைவியார், சகோதரியார், சகோதரர் முதலாகிய குடும்ப அங்கத்தினர்களும் காங்கிரசில் ஈடுபட்டு மறியல் முதலியவைகள் செய்து தோழர் காந்தியார் முதலியவர்களால் தனிப்பட்ட நற்சாக்ஷிப் பத்திரங்களும் பெற்றிருக்கிறார்.

இவ்வளவு மாத்திரமல்லாமல் தோழர் ராமசாமி அவர்கள் இன்றுள்ள தேச பக்தர்களில் 100க்கு 90 பேர்களைப் போல தங்கள் பிழைப்புக்கு வேறு மார்க்கம் இல்லாமல் தேச பக்தியை வயிற்றுப் பிழைப்பு வியாபாரமாகக் கொண்டோ அல்லது பல வக்கீல்கள் டாக்டர் ஆகியவர்களைப் போல் தங்கள் தொழில் செல்வாக்கு பெறுவதற்காக தேச பக்தியை ஒரு முதற்படியாய்க் கொண்டோ அல்லது தங்கள் தொழில்களில் முன்னேற்றமடைய முடியாது என்று கருதி அதை விட்டுவிட்டு தேசபக்தியின் பேரால் விளம்பரமும் வாழ்வும் பெறலாம் என்றோ மற்றும் பலவித தனிப்பட்ட சுயநலத்தைக் கருதியோ காங்கிரசில் சேர்ந்தவர் அல்ல என்பதையும் பொது மக்கள் அறியத்தக்க இரண்டொரு உதாரணங்களையும் காட்டிவிட்டு மேல் செல்லுவோம்.

அதாவது தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் சேலம் முனிசிபல் சேர்மெனாய் இருக்கும்போது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் ஈரோடு முனிசிபல் சேர்மெனாயும், கோவை ஜில்லா போர்ட் மெம்பராயும் தாலூக்கா  போர்ட்  மெம்பராயும் அரசாங்கத்திற்கு மிகமிக நல்ல பிள்ளையாய் பட்டம், நற்சாட்சிப் பத்திரம் ஆகியவைகளுக்கு சிபார்சு செய்யப்பட்டவராயும் இருந்தவர்.

தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் சேலம் சேர்மென் பதவியை ராஜீனாமா செய்த உடன், தோழர் ஈ.வெ. ராமசாமி தனது முனிசிபல் சேர்மென் பதவி, ஜில்லா தாலூக்கா போர்ட் மெம்பர்கள் பதவி முதலாகியவைகளை ஒருங்கே ஒரே நாளில் ராஜினாமா கொடுத்து விட்டவர்.

அக்காலத்தில் வருஷம் 1000 ரூபாய் இன்கம்டாக்ஸ் (வருமான) வரியாக சர்க்காருக்கு செலுத்தக்கூடிய லாபமுள்ள வியாபாரம் நடத்தி வந்தவர் என்பது மாத்திரமல்லாமல் அவரது வர்த்தகப் புகழையும், திறமையையும் அரசாங்கத்தார் மதித்ததற்கு அறிகுறியாய் முன் கூறப்பட்ட சேர்மென் முதலிய பதவிகளை ராஜீனாமா செய்த பிறகும்கூட அவருக்கு இந்த மாகாண இன்கம்டாக்ஸ் (வருமான வரி) ஆபீஸ் உத்தியோகஸ்த ரல்லாத விசாரணை கமிட்டியில் ஒருவராக இந்தியா கவர்ன்மெண்டாரால் நியமிக்கப்பட்டு அதற்கு தினம் 100 ரூ. படியும், இரட்டை முதல் வகுப்பு பிரயாணச் செலவும் பெற அனுமதிக்கப்பட்டவர்.

ஆகவே இப்படிப்பட்ட நிலையில் இருந்த குடி அரசு ஆசிரியர் இந்த 10 வருஷ காலமாய் காங்கிரசையும், தேசபக்த கூட்டத்தையும் விட்டு விலகி தேசாபிமானப் பட்டத்தையும், தியாகமூர்த்திப் பட்டத்தையும் வெறுத்து இன்று அவற்றைத் தாக்கிப் பாமர மக்களிடையிலும், அரசாங்கத்தாரிடையிலும், அதிருப்தி பெற்று எதிர் நீச்சம் போன்ற கஷ்டமான தொண்டில் ஏன் ஈடுபட்டு இருக்கிறார்? என்பதை முதலில் வாசகர்கள் உணர வேண்டுமாய் ஆசைப்படுகின்றோம்.

என்னவெனில் முதலாவது@ இன்றும் நேற்றும் மாபெரும் தியாகி யென்றும் பாரதமாதாவின் அருந்தவப் புதல்வரென்றும் மகா தீவிரவாதி யென்றும் விளம்பரப்படுத்தப்பட்ட தோழர் வ.வே.சு. அய்யர் அவர்களால் காங்கிரஸ் நிதியைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட “தேச பக்தி புகட்டும்’ ஆச்சிரமமாகிய சேரமாதேவி குருகுலத்தில் கற்பிக்கப்பட்ட ஜாதி வித்தியாசப் பிரிவுகளை ஆச்சிரமத்தைப் பொருத்தவரை கூட ஒழிக்க சம்மதப்படாமலும், ஒழிக்கப்படவேண்டும் என்று காரியக் கமிட்டியில் பார்ப்பனரல்லாதார் ஓட்டு பலத்தைக்கொண்டு தீர்மானித்தவுடன் தோழர்கள் சி. ராஜகோபாலாச்சாரியார் டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், டாக்டர் டி.வி. சாஸ்திரியார், கே. சந்தானம், என்.எஸ். வரதாச்சாரியார் முதலிய “சீர்திருத்தப்’ பார்ப்பன “தேச பக்தர்கள்’ ராஜினாமா கொடுத்து கமிட்டியில் இருந்து விலகியதும், குருகுல ஆச்சிரமத்துக்கு ஆக தீவிர பிரசாரம் செய்த தோழர் வரதராஜுலு அவர்கள் மீது சில பார்ப்பனர்கள் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்ததும் (அது நிறை வேறவில்லை) அதுபோலவே தோழர் ஈ.வெ. ராமசாமி பேரிலும் (அதற்கும் சிறிது நாள்களுக்கு முந்தியே தோழர் ஈ.வெ.ரா. மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவரானவுடன்) தோழர் வ.வே.சு. அய்யர் அவர்களால் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டதுமான காரியங்கள் (அதுவும் நிறைவேறவில்லை) ஒருபுறம் காங்கிரசு பார்ப்பனரிடம் அதிருப்தி ஏற்படச் செய்ததோடு இரண்டாவதாக காஞ்சீபுரம் மாகாண (கான்பரன்ஸ்) மகாநாட்டில் தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்களால் கொண்டு வரப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானத்தை விஷயாலோசனைக் கமிட்டியிலும் மகாநாட்டிலும் பிரேரேபிக்கவே அனுமதி தராமல் தலைவரின் தனி அதிகாரத்தின் கீழ் எதேச்சாதிகாரமாய் நிராகரிக்கப்பட்டதுமே முக்கிய காரணமாகி அப்பொழுதே தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் அந்த மகாநாடு கூட்டத்திலிருந்து எழுந்து,

“”காங்கிரசினால் பொது மக்களுக்கு யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பதை உணர்ந்து விட்டேன்” என்றும்,

“”இன்று முதல் ஜாதி ஒழிப்புக்கும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் துக்கும் நான் தனியே நின்று உழைக்கும் வேலையைக் கைக் கொள்ளப் போகிறேன்” என்றும்,

“”காங்கிரசின் யோக்கியதையையும், அதைக் கைப்பற்றி தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் பார்ப்பனர்களுடையவும், அவர்களது அடிமைகளுடையவும், கூலிகளுடையவும் யோக்கியதையையும் பாமர மக்கள் உணரும்படி செய்வதையே எனது முக்கிய தொண்டாகக் கொள்ளப் போகிறேன்”

என்றும் சொல்லிவிட்டு சில தோழர்களுடனும் பெருத்த கரகோஷத் துடனும் மகாநாட்டை விட்டு வெளியேறினார்.

அன்று முதல் இன்று வரை அதுபோலவே ஜாதி ஒழிப்புக்கு ஆகவும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்காகவும், குடி அரசும் அதன் ஆசிரியரும் பாடுபட்டு வருவதோடு மற்றும் ஜாதிப் பாகுபாடுகளுக்கு ஆதாரமாய் பயன்படுத்தப்படும் ஜாதி, மதம், கடவுள் தன்மை, எளியோர் வலியோர் தன்மை ஆகியவைகளும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்றும் முனைந்து பாடுபட்டு வந்திருக்கின்றது.

இதை நமது வாசகர்கள் அதாவது ஆதியில் இருந்து கவனித்து வருகின்றவர்கள் நன்கு அறிவார்கள்.

இம் முயற்சியின் பயனாக பத்திரிகை பல தடவை சர்க்காரால் ஜாமீன் கேட்கப்பட்டதும், ஜாமீன் தொகையும் ஆயிரக்கணக்கில் கட்டப்பட்டதும், அதன் ஆசிரியர் தோழர் ஈ.வெ. ராமசாமியும், அவரது சகோதரி தோழர் கண்ணம்மாளும், அவரது சகோதரர்  தோழர் கிருஷ்ணசாமியும் சிறை சென்றதும் பெருந்துகை அபராதமாகவும், செலவாகவும் நஷ்டப்பட்டதும், பத்திரிகையின் பெயர்களையும் புரட்சி என்றும், பகுத்தறிவு என்றும் அடிக்கடி பெயர் மாற்றப்பட்டதும் ஆன காரியங்கள் நடந்ததும் வாசகர்கள் அறிந்ததேயாகும்.

இவ்வளவும் தவிர இதன் ஆசிரியர் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் ஐரோப்பா, ஆப்பிரிகா முதலிய நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து விட்டு வந்த பிறகு ரஷ்ய அரசாங்கத்தின் சம்மந்தம் ஈ.வெ.ராவுக்கு இருந்து வருவதாக சந்தேகப்பட்டு அரசாங்க சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டேபிள்கள் ஆகியவர்கள் இன்னமும் எப்போதும் பின் தொடரவும் அவரது நடவடிக்கைகளை எல்லாம் துப்பறிவோர்களைக் கொண்டு கவனிக்கவும், அவரது கடிதப் போக்குவரத்துக்களை எல்லாம் உடைத்துப் பார்க்கவும் அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் அவரது நண்பர்களான சர். ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் போன்றார்களினது கடிதங்களும் கூட உடைத்துப் பார்க்கப்படவும் அவ்வளவோடு நிற்காமல் எப்படியாவது சுயமரியாதை இயக்கத்தை ஒழித்துவிட வேண்டும் என்று முயற்சித்து ஆட்டுக்குட்டி புலி கதை  போல் பழய குப்பைகளைக் கிளறி குற்றம் கண்டுபிடிப்பதும் ஆன காரியங்கள் செய்யப்பட்டிருப்பதோடு சுயமரியாதை இயக்கமே சட்டவிரோதமான இயக்கம் என்று உத்திரவு பிறப்பிக்கவும் சர்க்கார் தீர்மானித்திருக்கிறார்கள்.

இவைகள் எல்லாம் சர்க்காரார் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் தோழர் ஈ.வெ.ரா.வைப் பற்றியும் தப்பபிப்பிராயம் கொண்டும், சுயமரியாதை இயக்கம் மக்களை பலாத்காரத்தில் கொண்டு போய்விடும் என்றும், அது சட்ட விரோதமாய் நடக்க மக்களைத் தூண்டுகின்றது என்றும் கருதியதால் தான் இப்படிச் செய்கிறார்கள் என்று நாம் கருதி சுயமரியாதை இயக்கத்தில் பலாத்காரமோ சட்டவிரோதமாய் நடக்க மக்களைத் தூண்டுவதோ ஆகிய காரியம் இல்லை என்றும், அதன் கொள்கைகள் இன்னது இன்னதுதான் என்றும் விளக்கி ஒரு அறிக்கை வெளியிட்டும் சர்க்கார் அதையும் நம்பாமல் மறுபடியும் முன் போலவே தொந்திரவுகள் கொடுத்து வருகிறார்கள் என்பதை இச்சமயத்தில் வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டி இருக்கிறது.

சு.ம. இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இது வரையிலும் எந்த சமயத்திலும் சர்க்காருக்கு விரோதமாக சட்ட மறுப்போ அல்லது சட்ட விரோதமான காரியமோ செய்வது என்று ஒரு நாளும் தீர்மானித்ததில்லை, யெவரும் பேசியதுமில்லை என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

அதில் தீவிர உணர்ச்சி உள்ள வாலிபர்கள் பலர் இருக்கிறார்கள் என்றாலும் பொருப்புள்ளவர்கள் என்று சர்க்காரால் கருதக் கூடியவர்களாகவே பல பெரியோர்களும் இருக்கிறார்கள் என்பதோடு அப்படிப்பட்டவர்கள் இன்னமும் சு.ம. சங்க ஸ்தாபனத்துக்குத் தலைவர்களாகவும், நிர்வாகிகளாகவும் இருந்து வருகிறார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே.

நிற்க சு.ம. இயக்கமோ, குடி அரசோ சட்ட விரோதமான பொதுவுடமைப் பிரசாரம் செய்து வந்தன என்று சொல்லப்படுமானால் பொதுவுடமைப் பிரசாரம் சட்ட விரோதமானது என்று எப்பொழுது சர்க்கார் உத்திரவு பிறப்பித்தார்களோ அப்பொழுது முதலே அவ்வித பிரசாரமானது எங்கு இருந்தாலும் யார் செய்தாலும் நிறுத்தப்பட வேண்டும் என்பது ஆக அங்கத் தினர்களுக்கும் தெரிவிக்கும் முறையில் குடி அரசிலேயே அறிக்கைகள் வெளியிடப்பட்டாய் விட்டன.

ஏனெனில் பொதுவுடமைக் கொள்கை கூடாது என்பதாக அல்லா விட்டாலும் சர்க்கார் உத்திரவுக்கு விரோதமாக செய்யக் கூடாது என்கின்ற காரணத்தையே முக்கியமாய்க் கொண்டு இம்மாதிரி செய்யப்பட்டதாகும்.

ஏனெனில் சுயமரியாதை இயக்கம் பலவித அபிப்பிராயமுடையவர்களது கூட்டுறவையும் அனுதாபத்தையும் ஆதரவையும் கொண்டிருப்பதாலும் அது அனேக விஷயங்களில் பெரியதொரு மாறுதல் செய்ய வேண்டிய அவசியத்துக்கு உட்பட்டு இருப்பதாலும் அதை சர்க்காருக்கு விரோதமான இயக்கம் என்பதாக ஆக்கக் கூடாதென்று கருதியே சட்டவரம்பிற்கு உட்பட்டதாக ஆதி முதல் கொண்டே நடத்தப்பட்டு வருகின்றது.

பல தோழர்களுக்கு சட்ட வரம்பிற்கு உட்பட்டு நடப்பது என்பது அவமானமாகவோ, பயங்காளித்தனமாகவோ தோன்றலாம். என்றாலும் அப்படிப்பட்டவர்களுக்கு நாம் எவ்வித நிபந்தனையையோ, நிர்பந்தத்தையோ சுமத்த ஆசைப்படவில்லை.

ஆனால் அப்படிப்பட்டவர்களை ஒன்று மாத்திரம் கேட்டுக் கொண்டிருக் கின்றோம். அதாவது சுயமரியாதை இயக்கத்தின் பேரால் சட்டமீறுவதோ, சட்டத்தை மறுப்பதோ, சர்க்கார் உத்திரவை மீறுவதோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதேயாகும்.

காங்கிரசை விட  அதன் ஒரே தலைவரான காந்தியாரை விட சட்ட மீறுதலில்  சர்க்கார் உத்திரவுகளை அலட்சியம் செய்வதில் விளம்பரம் பெற்றவர்கள் யாருமில்லை.

அந்தப்படி யாராவது இருப்பதாகச் சொல்லப்படுமானால் அவர்களும் காங்கிரசையும், காந்தியாரையும் பின்பற்றினவர்களாகவே தான் இருக்கக் கூடும்.

அப்படிப்பட்ட “வீர’ ஸ்தாபனமும் “வீரர்’களும்  “”சட்ட  மறுப்பை விட்டு விட்டோம் சட்டங்களை மீறாமல் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்து எங்களது கிளர்ச்சிகளைச் செய்து கொள்ளுகிறோம்” என்று உலகமறிய தீர்மானங்கள் செய்து சட்டசபைக்குள் புகுந்து ராஜ விஸ்வாசப் பிரமாணமும் செய்து சட்டம் செய்கின்ற வேலையிலும் முனைந்து இருக்கிறார்கள்.

அவ்வளவோடு மாத்திரமா? அதைவிட வீரதீரர்களான சமதர்மவாதிகள் என்பவர்கள்  மேல்நாடெல்லாம் சுற்றுப் பிரயாணம் செய்து விட்டு வந்து ரஷியாவின் திக்கு நோக்கித் தெண்டனிட்டு கொண்டு லெனினை உள்ளக் கோவிலில் வைத்து மார்க்சின் உபதேசங்களை மந்திரமாய் ஜபித்துக் கொண்டிருப்பவர்கள் ராமராஜ்ஜியத்தை விரும்பும்  வருணாச்சிரமத்தை ஆதரிக்கும்  பழயதைக் காப்பாற்றும் காங்கிரசுக்கு பக்தர்களாய்  கதர் வேஷதாரிகளாய் இருந்து வருவது யாவரும் அறியாததல்ல.

மேலும் அவர்கள் சட்ட மறுப்பைக் கைவிட்டதாகவும், சட்டத்துக்கு அடங்கி நடப்பதாகவும், அரசாங்கத்துக்கு வாக்குறுதி கொடுத்தும் ராஜ விஸ்வாசப் பிரமாணம் செய்தும் இந்த சட்டசபையில் வீற்றிருப்பதையும் யாரும் அறியாததல்ல.

இதனால் எல்லாம் அந்த ரஷியவாதிகள்  சமதர்மவாதிகள் என்பவர்கள் இன்று அவமானமடைந்தவர்களாகவோ கோழைகளாக ஆகிவிட்டவர் களாகவோ யாராலாவது மதிக்கப்படுவதாய் நாம் காண முடியவில்லை.

ஆகவே சுயமரியாதை இயக்கம் சட்டத்திற்கு மீறியதல்லவென்றும், சட்டத்தை மறுப்பதல்லவென்றும் சொல்லிக் கொள்ளுவதால் எந்த சுயமரியாதைக்காரரும் அவமானப்பட வேண்டியதில்லை என்பதற்காகவே இதை எடுத்துக் காட்டுகின்றோம்.

இந்தியாவிற்கு சிறப்பாகத் தென் இந்தியாவிற்கு ஜாதி வித்தியாசங்கள் ஒழிக்கப்படுவதும் சட்டபூர்வமாக இது வெற்றி பெறும் வரை சமூக எதிர்ப்பையும் இழிவையும் சமாளிக்க அரசாங்கத்தின் மூலம் அரசியல் உரிமை ஸ்தாபனங்களில் பேதப்படுத்தப்பட்ட வகுப்புகள் விகிதாசார உரிமைகள் பெற பாடுபடுவதும் ஒரு பெரும் சமதர்மப் புரட்சியாகவே நாம் கருதுகின்றோம்.

இந்த கருத்தினாலேயே குடி அரசு ஆசிரியர் காங்கிரஸ் கூட்டத்தை விட்டு வெளி வந்தது முதல் நாளது வரை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் திற்காகவும் ஜாதி, மத வித்தியாசத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அசௌகரியங் களை போக்குவதற்கு ஆகவும் ஏற்படுத்தப்பட்ட தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்னும் ஜஸ்டிஸ் கட்சியாரின் ஒத்துழைப்பை ஏற்றும் அவர்களுக்கு அதன் கொள்கை விரோதிகளால் கஷ்டமும், தொல்லையும் ஏற்படுத்தப்பட்ட காலங்களில் எல்லாம் கூடுமான அளவு ஒத்துழைத்து உதவி புரிந்தும் வந்திருப்பதுடன் குடி அரசும் சுயமரியாதை இயக்கமும் அந்தப்படியே செய்து வந்திருக்கிறது  இன்றும் செய்து வருகின்றது என்பதையும் வாசகர் களுக்கு ஞாபகமூட்டுகிறோம்.

சமூக வாழ்க்கையில் சமதர்மம் முறை ஏற்படாமல் பொருளாதாரத் துரையிலும் அரசியல் ஆதிக்கத்திலும் சமதர்ம முறை ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது முறையான காரியமென்றோ முடியக் கூடிய காரியம் என்றோ நம்மால் கருத முடியவில்லை.

குறுகலான வழியில் விரிசலான வண்டியை நடத்துவது வண்டிக்குத் தான் பெரிய நாசத்தை விளைவிக்கும். ஆகவே சமுதாயமாகிய வழி விரிவடைந்து செப்பனிடப்பட்டாலல்லாமல் பொருளாதார சமத்துவமாகிய வண்டியை சிறிதும் நடத்த முடியாது என்பதை தெரிவித்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

அபிப்பிராய பேதம் என்பது இயற்கையேயாகும். ஆதலால் இதற்கு மாறுபட்ட அபிப்பிராயம் யாருக்கும் ஏற்படாது என்றோ, ஏற்படக்கூடாது என்றோ நாம் சொல்ல வரவில்லை.

ஆனால் நமது அபிப்பிராயம் இதுவென்றும் இந்த அபிப்பிராயத்தையே இதுவரை சுயமரியாதை இயக்கம் செயலில் கொண்டு வந்திருக்கின்றது என்றும் இந்த வரையரைக்குள்ளாக இருந்துதான் மற்றும் பல அபிப்பிராயங்களையும் தெரிவித்து வந்திருக்கின்றது என்றும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மற்றும் ஆஸ்திக நாஸ்திக விஷயங்களில் இரு அபிப்பிராயக்காரர் களுக்கும் இயக்கத்தில் இடமிருந்து வந்தாலும் இயக்கம் பெரிதும் ஆஸ்திகத்தை பிரசாரம் செய்யாமலும் செய்வதை ஆதரிக்காமலும் அனுமதிக்காமலும் இருந்து வந்திருக்கின்றது.

மற்றும் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஆஸ்திகர்கள் பலர் நடந்து கொண்டு வந்த காரியங்களும் பெரிதும் நாஸ்திகமாகவே அதன் எதிரிகளாலும், பல பாமர மக்களாலும் கருதப்பட்டு வந்திருக்கின்றன.

நாஸ்திகம் சட்ட விரோதமானது என்று சர்க்காரால் தீர்மானிக்கப்படும் வரை இந்த நிலையிலிருந்து இயக்கம் மாறுபடவேண்டிய அவசியமில்லை என்பதே நமது அபிப்பிராயம் என்பதோடு இயக்கத்தில் அங்கத்தினர் களாகவும், அனுதாபிகளாகவும், ஆதரவாளர்களாகவும் இருக்க ஆஸ்த்திகர் களுக்கும் உரிமை உண்டு என்பதும் நமதபிப்பிராயமாகும்.

எப்படி இருந்தாலும் மதவாதிகள், கடவுள்வாதிகள், செல்வவான்கள், மேல் ஜாதிக்காரர்கள் ஆகியவர்களுடைய புன்சிரிப்பையும், ஆதரவையும் நாம் எப்படி பெற முடியாதோ அதுபோலவேதான் அரசாங்கத்தாருடைய ஆதரவையும் பெற முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது என்றாலும் அதற்காக நாம் தாழ்ந்தோ நமது கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு பின் செல்லுவதோ ஆகிய காரியங்களில் ஈடுபட வேண்டிய அவசியம் எதுவும் நமக்கு ஏற்பட்டுவிடவில்லை என்பதே நமது உறுதியான அபிப்பிராயம். இந்த நோக்கத்துடனேயே குடி அரசு இப் பத்து வருஷ காலமாக வேலை செய்து வந்து பதினோறாவது ஆண்டில் புகுந்திருக்கிறது என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு  தலையங்கம்  18.08.1935

You may also like...