காங்கிரசின் துரோகம்
தோழர் சத்தியமூர்த்தி ஐயர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரானது முதற் கொண்டு தென்னிந்தியாவில் காங்கிரஸ் பிரசாரம் வெகு உற்சாகமாகவும் நடைபெறுகின்றது.
காங்கிரஸ் பிரசாரம் என்றால் என்ன என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. அது கதரைப் பற்றியோ, தீண்டாமை விலக்கைப் பற்றியோ, இந்து முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியோ, மது விலக்கைப் பற்றியோ, கல்வியைப் பற்றியோ அல்லது ஏழை எளிய மக்களின் துயரத்தைப் போக்குவதைப் பற்றியோ அல்ல. மற்றென்னவென்றால் “”ஜஸ்டிஸ் கட்சியார் தேசத் துரோகிகள்” “”அவர்கள் மந்திரிகளாய் இருக்கிறார்கள்” எப்படியாவது அவர்களை மந்திரி பதவியில் இருந்து இறக்கிவிட வேண்டும் என்பதேயாகும்.
இந்தப் பிரசாரம் இன்று தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார் முதற்கொண்டு எல்லாக் காங்கிரஸ்காரர்களும் செய்து வருகிறார்கள்.
இதுவே இன்று காங்கிரசின் கொள்கையாக ஆகிவிட்டது. இதற்கு ஆக மட்டில்லாத பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
அவர்களது பொய்களை எடுத்துக் காட்டி எவ்வளவு அறிவுறுத்தினாலும் அவர்களுக்கு ஆசை வெட்கமறியாது என்கின்ற பழமொழிபோல் சிறிதும் வெட்கமின்றி மறுபடியும் மறுபடியும் அதையே சொல்லி வருகிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் மாகாண சட்டசபையில் கந்தாயம் குறைப்பு தீர்மானத்துக்கு காங்கிரஸ்காரரோடு சேர்ந்து ஓட்டுச் செய்யவில்லை என்பதாக பிரமாதப்படுத்தி விஷமப் பிரசாரம் செய்கிறார்கள்.
உண்மையில் கிஸ்து வஜாவில் 100க்கு 12லீ வீதம் கிஸ்து தள்ளிக் கொடுக்கவும் மறு வருஷமும் குறைக்கபடவும் ஜஸ்டிஸ் கட்சியார் பொருப்பாளிகள் என்பதை யோக்கியர்கள் ஒவ்வொருவர்களும் ஒப்புக் கொண்டே தீருவார்கள்.
ஆனால் காங்கிரசுக்காரர்களின் துரோகத்தை அளவிட்டுச் சொல்ல வேண்டுமானால் புள்ளி விவரங்களோடு சொல்லலாம்.
குறிப்பாக தொழிலாளர் ஏழை மக்களுக்கு காங்கிரஸ்காரர்கள் செய்த மாபெருந் துரோகத்துக்கு ஒரு உதாரணம் சொல்லுகின்றோம். இதை எந்த காங்கிரஸ்வாதியாவது மறுக்கட்டும் பார்ப்போம்.
அதாவது காங்கிரசுக்காரர்கள் சுயராஜ்ஜியக் கட்சியார் என்னும் பெயரால் இந்திய சட்டசபையில் இருக்கும்போது 1928ல் இந்திய சட்டசபையில் தொழிலாளர்கள் வேலை நேர விஷயமாய் சுரங்கத் தொழிலாளர் தினம் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென்று கொண்டு வந்த தீர்மானத்துக்குத் திருத்தமாக 8 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்று தொழிலாளிகளின் சார்பாய் தோழர் ஜோஷி கொண்டு வந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ்காரர்கள் ஓட்டுக் கொடுக்காததால் அத் தீர்மானம் தோல்வியுற்று 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற தீர்மானமே நிறைவேறி விட்டது.
இதற்கு காங்கிரஸ்காரர்கள் என்ன சமாதானம் சொல்லுகிறார்கள் என்று கேழ்க்கின்றோம். ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் செல்வவான்களுக்கு விரோதம் செய்து வரியைக் குறைக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அதனால் நாம் கவலைப்படவில்லை. பூமி இருக்கிறவர்கள் வரி கொடுக்கட்டும். ஏதோ ஒரு இரண்டு வருஷம் விலை குறைவால் கட்டவில்லை என்றாலும் மறு வருஷங்களில் அது சரிப்பட்டுப் போகலாம்.
ஆனால் தொழிலாளி ஏழை மக்கள் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட உதவியாய் இருந்தார்களே இவர்கள் ஏழைகள் பிரதிநிதிகளா அல்லது முதலாளிகள் கூலிகளா என்று யோசித்துப் பார்க்கும்படி வாக்காளர்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 04.08.1935