தோழர்களே! உஷார்!

 

பாமர ஜனங்களை மயக்குவதில் மதத்தின் பெயரால், கடவுள் பெயரால், சுவர்க்கத்தின் பெயரால் பட்டப்பகலில் கொள்ளையடிப்பதில்  புதுப்புது மோசடி முறைகளை சிருஷ்டிப்பதில் பார்ப்பனர்களுக்கு இணையானவர்கள் இல்லவே இல்லை. அனாதிகாலமாக ஏமாற்று வித்தையினாலேயே அவர்கள் வயிறு வளர்த்து வருகிறார்கள். வேதங்கள், வேதாகமங்கள், கலைகள் முதலிய யாவும் பார்ப்பனப் புரட்டுப் பிழைப்புக்கு அழியா ஞாபகச் சின்னங்களாகும். மேனாட்டுக் கல்வி மூலம் மக்களின் பொது ஞானம் விருத்தியாகி, சீர்திருத்தக்காரர் முயற்சியினால் பகுத்தறிவு உணர்ச்சி வளர்ந்து அனாசாரங்களும் குருட்டு நம்பிக்கைகளும் ஒழியத் தொடங்கிவிட்டன. புராணக் குப்பைகளையும் தர்ப்பைப் புல்லையும் காட்டி மக்களை ஏமாற்ற முடியாதென்ற நிலைமையும் ஏற்பட்டுவிட்டது. பன்னூற்றாண்டு காலமாய் குறுக்கு வளைந்து வேலை செய்யாமல் மோசடி வித்தையினால் வயிறு வளர்த்து வந்த பார்ப்பனர்களுக்கு பிழைப்புக்கு வேறு வழி வேண்டாமா? ஆகவே காங்கிரசைப் பற்றுக் கோடாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸே பார்ப்பனர்களின் உடலும் பொருளும் ஆவியும்; காங்கிரஸே பார்ப்பனர்; பார்ப்பனரே காங்கிரஸ். காங்கிரஸ் இன்றேல் பார்ப்பனர் இல்லை. பார்ப்பனர் இன்றேல் காங்கிரஸ் இல்லை. எனவே பார்ப்பனர் உயிர் வாழ வேண்டுமானால்  செல்வாக்குப் பெற வேண்டுமானால்  தலைநிமிர்ந்து நடக்க வேண்டுமனாõல் காங்கிரஸ் வலுப் பெற்று விளங்க வேண்டியதுதான்  முன்னம் ஆத்ம விடுதலைக்காக  மோட்சத்துக்காக, கடவுளை வணங்க தட்சணை கொடு என்று மக்களை ஏமாற்றிப் பணம் பறித்தார்கள். இப்பொழுதோ தேச விடுதலைக்காக, காங்கிரசைப் போற்று, காணிக்கை போடு என்று ஏமாற்றி வருகிறார்கள்.

வெளிநாடுகளில் நடைபெறும் சுதந்திரப் போர்களையறிந்த நம்மவர்கள் காங்கிரஸ்காரரும், சுதந்திரப் போர் தொடுப்பதாகவே தப்பர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

தேச விடுதலைக்காக காங்கிரஸ்காரர் செய்த முயற்சிகள் எல்லாம் பாழாகி, எந்த சர்க்காரோடு போராடினார்களோ அந்த சர்க்காரே தமக்கு சரணாகதியென்று பட்டவர்த்தனமாகக் கூறி சாத்தான் சர்க்காரின் கீழ் மந்திரி பதவி பெறப் பெரு முயற்சி செய்யப்படுவது கண்டும் நம்மவர்களில் ஒருசாராருக்கு காங்கிரஸ் மயக்கம் தெளியவில்லை. காங்கிரஸ் மீது ஒரு குருட்டுப் பற்று  மாயப் பாசம்  ஆதாரமற்ற அபிமானம்  ஒரு சாராருக்கு இருந்தே வருகிறது. அந்தக் குருட்டு பக்தியை புதுப்புரட்டுக்களால் வளர்த்து காங்கிரசுக்கு பலம் தேட பார்ப்பன அரசியல்வாதிகள் அல்லும் பகலும் உழைத்து வருகிறார்கள். பொன் விழாக் கொண்டாடும் புதிய முறைகளையும் பார்ப்பனத் தலைவர்கள் வகுக்கிறார்கள். அவர்கள் கையாளப் போகும் முறைகள் எல்லாம் பாமர மக்களின் கண்ணில் மண்ணைப் போட்டு ஏமாற்றும் முறைகளாகவே இருக்கின்றன. கார்த்திகைக்குப் போட்ட தீபங்களையெல்லாம் அப்படியே எடுத்து வைத்திருந்து டிசம்பர் 28ந் தேதி மீண்டும் தீபம் போட்டு பொன்விழாவைக் கொண்டாடுங்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் சத்தியமூர்த்தித் தென்னாட்டு மக்களுக்கு ஆர்டர் கொடுக்கிறார். கார்த்திகை தீபத்துக்கும் தேச விடுதலைக்கும் சம்பந்தமென்ன? கார்த்திகை தீபம் மதத்தின் பெயரால் நடைபெறும் ஒரு ஏமாற்று வித்தை. காங்கிரஸ் பொன் விழாவும் அரசியலின் பெயரால் நடைபெறப் போகும் ஒரு ஏமாற்று வித்தை தானோ! காங்கிரஸ் லக்ஷியம் கைகூடாதிருக்கையில் பொன் விழாக் கொண்டாடுவது மூடத்தனமல்லவா? என்று ஒரு வங்க காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பாபுவிடம் கடித மூலம் கேட்டார். ராஜேந்திர பாபு அதற்கு என்ன பதிலளித்தார் தெரியுமா? “”பொன் விழாக் கொண்டாடவில்லை; 50 வருஷம் பூர்த்தி அடையும் இந்த சந்தர்ப்பத்தில் பிரசாரம் செய்து காங்கிரஸ் பலத்தை விருத்தி செய்யவே முயல்கிறோம்” என்று பதிலளித்திருக்கிறார். பொன் விழாக் கொண்டாட்டத்தைப் பற்றி தலைவர்களுக்குள்ளேயே அபிப்பிராய பேதம் இருந்து வருகையில் குட்டித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதின் மர்மம் என்ன? பொன் விழாவின் பெயரால் பொது மக்கள் பணத்தைப் பாழக்க அநேக ஸ்தல ஸ்தாபனங்கள் தீர்மானித் திருப்பது நியாயமாகுமா? நகரசபை, ஜில்லா போர்டு மண்டபங்களிலும் மற்றும் பொது ஸ்தலங்களிலும் ஒரு நாளைக்கு தேசீயக் கொடியைப் பறக்க விட்டுவிட்டால் பூரண சுயராஜ்யம் வந்து விடுமா? ஒன்றரை அணாவாக இருக்கும் இந்தியர்களின் தின வருமானம் உயர்ந்து விடுமா? இந்திய மரணம் விகிதம் குறைந்துவிடுமா? 100க்கு 94 பேர் நிரக்ஷர குக்ஷிகளாக விருக்கும் அநியாயம் அழிந்து விடுமா? காங்கிரஸ்காரர் புத்தியில்லாமல் காளை கன்று போடப் போகிறதென்றால், கயிற்றை எடு, கன்றைக் கட்டு, பாலைக் கற என நாமும் கூறுவதா? “”காளையாவது ஏது? கன்று போடுவது ஏது? பக்கா முட்டாள் தனம்” என்று கூற அறிவுள்ள இந்தியன் ஒருவனாவது இந்தியாவில் இல்லையா? இந்தியாவின் சுயமரியாதையைக் காப்பாற்ற ஒருவனாவது இருக்க வேண்டாமா? தோழர்களே அன்புகூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

பொன்விழாக் கொண்டாட்டம் எவ்வளவு மோசடியானது, முட்டாள்தனமானது, கேலிக் கூத்து என்பதை உணருங்கள். விவேகிகள் என்ன சொன்னாலும், டிசம்பர் 28ந் தேதி சுயநலக்காரர்கள் பொன்விழாக் கொண்டாடத்தான் போகிறார்கள். அர்த்தமற்ற மதச்சடங்குகள் நடைபெறும் இந்தியாவிலே காங்கிரஸ் பொன் விழா நடைபெறுவது ஒரு அதிசயமல்ல. சுயநலக் கூட்டத்தார் கொண்டாடப் போகும் போலிக் கூத்தினால் காங்கிரசின் மதிப்பும் உயர்ந்து விடாது. ஆனால் முட்டாள்தனமென நாம் உணரும் விஷயத்தை நாம் பகிரங்கமாகக் கூறிவிட வேண்டியது நமது கடமையல்லவா? ஆகவே பொன் விழாவை நீங்கள் பகிஷ்கரிப்பதாக உங்களுக்குப் பிரியமான முறைகளால் உலக மக்களுக்கு விளக்கி காட்டி விடுங்கள். தமிழ்நாட்டுத் தோழர்களே! உஷார்! உஷார்!!

குடி அரசு  துணைத் தலையங்கம்  15.12.1935

You may also like...