“”ஸ்ரீராம” நவமி
ஸ்ரீராம நவமி உர்ச்சவத்தில் தமிழ்நாட்டு மக்கள் கலந்து கொள்வதைப் போன்ற சுயமரியாதை அற்ற தன்மை வேறு ஒன்று இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.
ஸ்ரீராம நவமி என்பது ராமன் பிறந்ததை கொண்டாடுவதாலும், ராமன் பிரவியைப் பற்றி நாம் இப்போது ஏதும் பேச வரவில்லை.
ராமன் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் கதையின் யோக்கியதை என்ன? அவன் எப்படிப்பட்டவன்? அவனுக்கும் தமிழ் மக்களாகிய திராவிட மக்களுக்கும் இருந்து வந்த சம்பந்தம் என்ன? என்பவைகளைப் பற்றி தமிழ்மக்கள் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.
இவ்வாரம் 22ந் தேதி தமிழ்நாடு பத்திரிகைகளில் காணப்படும் சேதிகளில் ஒன்று தோழர் ஜவார்லால் நேருவும் ராமாயணத்தைப் பற்றி எழுதிய ஒரு குறிப்பாகும். அதில் ராமன் ஆரியன் என்றும், ராமாயணத்தில் வானரர் என்று சொல்லப்படுபவர்கள் திராவிட மக்கள் என்றும் எழுதி இருக்கிறார்.
ராமன் திராவிடப் பெண்ணாகிய தாடகையை பெண் என்று கூட பாராமல் கொன்றவன். ராவணன் தங்கையாகிய ராஜ குடும்பத்தைச் சேர்ந்த சூர்ப்பநகையை மூக்கையும், காதையும் அறுக்கச் செய்த யோக்கியன்.
ராவணனைக் கொல்ல சதி செய்ததில் ராவணன் தம்பியையும், வாலி தம்பியையும் சுவாதினம் செய்து அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, உளவரிந்து ராவணனைக் கொன்றவன். இதனால் ராவணன், ராக்ஷசனானான். அவன் தம்பி விபூஷணன் ஆழ்வாரானான்.
அது போலவே வாலி வானரமானான்; தம்பி சுக்ரீவன் சுக்ரீவ ஆழ்வாரானான்.
“”குரங்காகிய” அனுமார் சிரஞ்சீவியாகவும், ஆரியர் வணங்கும் தெய்வமாகவும் ஆனான். ராமன் ஆரியன் என்றும், ராவணன் திராவிட மன்னன் என்றும், திராவிட மக்களைத்தான் வானரர்கள், குரங்குகள் என்றும் பெயர் வைத்து ஆரியர்கள் ராமாயண கதை எழுதி இருக்கிறார்கள் என்றும் நூத்துக்கணக்கான பாடப் புத்தகங்கள் (இந்து தேச சரித்திர முதல்) பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்டவைகள் இன்னும் பள்ளிக்கூடங்களில் பாடமாக இருக்கின்றன.
இந்த நிலையில் ஸ்ரீராம நவமி பண்டிகையை திராவிட மக்கள் ஆரியரல்லாதவர்கள் கொண்டாடுவது என்பது சுயமரியாதையற்ற மானங் கெட்டத்தனமா அல்லவா என்று கேட்கின்றோம்.
இந்துக்களுடைய ஒவ்வொரு பண்டிகை என்பதும் பார்ப்பனப் பிரசாரமேயாகும்.
இம்மாதிரி பிரசாரங்களே தான் இம்மாதிரி பண்டிகைகளைக் கொண்டாடுவதே தான் இன்று பார்ப்பன ஆதிக்கத்துக்கு முக்கிய காரணங்களாய் இருந்து வருகின்றன.
இந்தக் காரணங்களே தான் பார்ப்பனர்களுக்கு ஓட்டு கிடைக்கவும் சாதகமாய் இருக்கின்றன.
எலக்ஷனுக்காக வெளியிட்ட சுவரொட்டி விளம்பரத்தில்கூட அனுமாரைப் போட்டதும், எலக்ஷன் கூட்டங்களில் உதாரணங்கள் மூலம் புராணப் பிரசாரங்கள் நடத்தினதும் இன்றும் நாளையும் பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பன கூலிப் பத்திரிகைகளும் புராணப் பிரசாரங்கள் செய்வதும் எல்லாம் தமிழ் மக்கள் ஸ்தாபனங்கள் சுயமரியாதை இழந்து பார்ப்பனர்களுக்கும், விபூஷணர், சுக்ரீவன், அனுமான் போன்ற பார்ப்பனரடிமைகளுக்கும், ஓட்டுப் போடவுமே தானே ஒழிய வேறில்லை. ஆகையால் தமிழ் மக்களே ஸ்ரீராம நவமி கொண்டாடுகிறீர்களே வெட்கமில்லையா?
குடி அரசு கட்டுரை 28.04.1935