குச்சிக்காரி புத்தி-II

 

சென்ற வார குடி அரசில் திலகர் நிதியை காங்கிரஸ் கையாண்ட யோக்கியதையைப் பற்றி நாம் எழுதி இருந்தோம்.

அதற்கு காங்கிரஸ் பத்திரிகைகள் எதுவும் திருப்திகரமான சமாதானம் எழுதவில்லை. வாலை ஒடுக்கிக் கொண்டன.

ஆனால், தோழர் ராஜகோபாலாச்சாரியார் பூசி மெழுகும் சமாதானம் எழுதியிருந்தார். அது சரியான சமாதானமா என்று பார்த்தால் எந்தத் தவறுதலை ஆதாரமாக வைத்து மராட்டா பத்திரிகை காங்கிரஸ்காரர்கள் திலகர் நிதியைக் கையாண்டதைப் பற்றி எழுதிற்றோ அத்தவறுதல்களைப் பெரிதும் ஒப்புக் கொள்ளப்பட்டு, பிறகு பூசி மெழுகப்பட்டிருக்கிறது.

தோழர் ராஜகோபாலாச்சாரியார் சொல்லும் சமாதானங்கள் சில அய்ட்டங்களுக்கு கணக்கிலேயே இருந்திருக்க வேண்டியவைகளே ஒழிய, இப்பொழுது சமாதானம் சொல்லி மெய்ப்பிப்பதற்குத் தகுதியானவை அல்ல. அப்படிச் சொல்வதாய் இருந்தாலும் அது சந்தேகத்திற்கு இடமில்லாதது என்று சொல்லிவிட முடியவில்லை. ஏனெனில் பணப் புழக்கத்தில் குற்றமோ குறையோ, ஒழுங்கு தவறுதல்களையோ கண்டு பிடித்தவர்களை திருப்பிக் கண்டிக்கும் யோக்கியதையில் இருப்பவர்கள் தாங்கள் சிறிதும் சந்தேகத்துக்கு இடமில்லாத நிலையில் இருக்க வேண்டும்.

தோழர் ராஜகோபாலாச்சாரியார் சமாதானம் அப்படிக்கில்லை என்பதை கோபப்படுகிறவர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஏனெனில் தீண்டாமை விலக்குக்காக மாகாண கிராண்டாக 20000 ரூ. கொடுக்கப்பட்டு அந்த இலாக்காவை ராஜகோபாலாச்சாரியாருக்கு ஒப்படைக்கப்பட்டு அவர் ஒரு வருஷத்திலேயே அந்த இலாக்காவை தோழர் ஈ.வெ. ராமசாமி பேருக்கு மாற்றப்பட்டிருந்து அது ஒரு வருஷத்திலேயே மாகாண கமிட்டிக்கோ, பொக்கிஷத்துக்கோ, போயிருக்கு மானால் “”3 வருஷ காலம் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் மீதே அட்வான்சாக இருக்க” காரணமில்லை.

ஆகவே அந்த ரூ.19000 என்கின்ற துகை இந்த தீண்டாமை விலக்கு கிராண்டான 20000 ரூபாயைப் பொருத்ததுதானா வேறு துகையா என்பதுவும் விளங்கவில்லை.

இது விஷயத்தில் நாம் தோழர் ராஜகோபாலாச்சாரியார் மீது குறை கூறுவதாக அல்ல. அவர் எடுத்துக் கொண்டதாகவும் அல்ல. ஆனாலும் திலகர் நிதி பணம் கையாண்ட முறை யோக்கியமான முறை அல்ல என்றும் பார்ப்பன சுயவகுப்பு நலத்துக்கு பயன்படுத்தப்பட்டது என்பதற்கு ஆகவே சொல்லுகிறோம். பல பார்ப்பனர்கள் சுயநலத்துக்கு ஒழுங்கு தவறாக கையாடினார்கள் என்பதையும் எப்பொழுதும் எங்கும் ருஜுவிட தயாராய் இருக்கிறோம். ஏனெனில் தங்களை அளவுக்கு மீறின பரிசுத்தர்களாகக் காட்டிக் கொள்வதோடு குற்றம் கண்டுபிடித்தவர்களை யோக்கியப் பொறுப்பின்றி தாக்குவதால் உண்மையான யோக்கியதையை வெளிப்படுத்த வேண்டி இருக்கிறது.

திலகர் சுயராஜ்ஜிய நிதி, கதர் அட்வான்ஸ் என்னும் பேரால் எத்தனையோ பேர்களுக்கு பல ஆயிரக்கணக்கில் 1000, 2000, 3000, 4000, 5000 என்பதாகக்கூட கடனாக பாண்டு எழுதிக் கொண்டு கொடுக்கப்பட்டது நமக்குத் தெரியும். இவற்றுள் பல அதாவது முக்கால் பாகம் அதாவது பார்ப்பனர்கள் வாங்கிய கடன் பாக்கிகள் ஒரு வரியால் வஜா செய்யப் பட்டிருப்பது இன்றும் கணக்குகளில் பார்க்கலாம்.

ஆனால் பார்ப்பனரல்லாதார் வாங்கியவைகளில் பெரும்பாகம் அவரவர்களது வீடு வாசல்கள் விற்றுக் கொடுக்கும்படி வசூல் செய்யப் பட்டிருக்கிறது.

உதாரணமாக சேலத்தில் மாத்திரம் வக்கீல் பார்ப்பனர்கள் 4, 5 பேர்களுடைய பாக்கியை பணம் வாங்காமலே வரவு வைத்து பாண்டைக் கிழித்துக் கொடுக்கப்பட்டது.

ஆனால் சாத்தூர் தோழர் சுப்பிரமணிய நாயனார், தஞ்சாவூர் டாக்டர் ராமசந்திரம் செட்டியார் இவர்கள் போன்றவர்கள் பாக்கிகள் அவர்களது வீடுகள் விற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தோழர் சுப்பிரமணிய நாயனார் ஏராளமான பிள்ளை குட்டிக்காரர் எல்லோரும் உயர்ந்த படிப்புப் படித்துக் கொண்டிருந்தவர்கள் அதுசமயம் அவரும் சாத்தூர் சேர்மனாய் இருந்து வக்கீல் உத்தியோகத்திலும் N 400, 500 சம்பாதித்துக் கொண்டு உயர்ந்த வாழ்க்கை நடத்தியவர். அப்படிப்பட்டவர் குடும்பத்துடன் ஒத்துழையாமையில் ஈடுபட்டு பிள்ளைகள் படிப்பை நிறுத்தி சேர்மென் வேலையும், வக்கீல் வேலையும் விட்டு காங்கிரசில் உழைத்தவர். அவரிடம் கொடுக்கப்பட்ட பணத்துக்கு மற்றவர்களுக்கு காட்டிய சலுகை காட்டாமல் வசூலித்ததால் இவர் குடும்பமே இப்போது கஷ்டப்படுகிறது. பிள்ளைகுட்டிகள் திண்டாடுகின்றன. அதுபோலவே டாக்டர் ராமச்சந்திர செட்டியாரிடமும் நிர்தாட்சண்யம் காட்டப்பட்டது. ஆனால் இந்தப்படி எந்தப் பார்ப்பனரிடமும் காட்டப்படவில்லை என்று நெய்யில் கையை விடுவோம்.

மாகாண காங்கிரஸ் ஆபீசு திருச்சியில் டாக்டர் ராஜன் குடியிருந்த வீட்டு மேல்மாடி அறையில்இருந்த காலத்தில் N 15, 20 ரூ. வீதம் வாடகை வசூல் செய்து கொண்டார். ஆனால் அதே மாகாண காங்கிரஸ் ஆபிசு ஈரோடு ஈ.வெ.ராமசாமி அவர்கள் வீட்டில் வருஷக்கணக்காய் இருந்தது. ஆபீசு குமாஸ்தா, மேனேஜர், கூட்டுக் காரியதரிசி ஆகியவர்களுக்கு வீட்டிலேயே சாப்பாடு வருஷக்கணக்காய் இலவசமாய்ப் போட்டு வந்ததோடு ஆபீசு வாடகைக்கு என்று ஒரு தம்பிடி வாடகையும் கொடுக்கப்படவில்லை.

தோழர் ராமசாமி தன் தொழிலை, குடும்ப எஸ்டேட் நிர்வாகத்தை விட்டுவிட்டு அலைந்ததும் மற்றவர்கள் 2 வது வகுப்பில் பிரயாணம் செய்தால் தான் 3வது வகுப்பில் பிரயாணம் செய்வதுமாக அலைந்து திரிந்ததும் குடும்பத்திலும் தொழிலிலும் ரூ. 40000, 50000 நஷ்டப்பட்டதும் 20000, 30000 பொரும்படியான தஸ்தாவேஜுகளை எல்லாம் கோர்ட்டுக்குப் போகக் கூடாது என்கின்ற காரணத்துக்காக வசூல் செய்ய முடியாமல் விட்டுவிட்டதும் காங்கிரசில் வாசக்கூட்டியாய் இருந்தவர் களுக்கும் தெரியும். அப்படியிருக்க இதற்கு பதில் உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கும் தன்மையிலும் கொஞ்சமும் நன்றி விஸ்வாச மில்லாமலும் “”ஈ.வெ.ராமசாமி வாங்கிய பணத்துக்கு கணக்கு கொடுக்கவில்லை” என்று சொல்லுவதும், எழுதுவதும் எவ்வளவு கீழ் ஜாதிப் புத்தி என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.

தெரியாமல் எழுதி இருந்தால் அதைப் பற்றி குற்றம் சொல்ல முடியாது. விஷயம் தெரிந்து அவரை எழுதிக் கேட்டு அவரும் கணக்குடன் பதில் எழுதி அனுப்பி இருக்க அக்கணக்கு சரியா தப்பா என்பதாக இதில் சம்மந்தப்பட்ட நாயர்களுக்கு மற்ற யார் விஷயத்திலும் நடந்து கொள்ளாத மாதிரி எழுதிக் கேட்டுத் தெரிந்து கொண்டு மிருக்க இப்போது வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு  ஈ.வெ.ராமசாமி கணக்கு கொடுக்கவில்லை என்றால் இந்தக் கூட்டத்தார் தூங்குகிறபோது பக்கத்தில் படுத்திருந்தால் கழுத்தறுக்கப் பயப்படுவார்களா என்று கேட்கின்றோம்.

பொது நிதிக்கு திரட்டிய பணம் என்றாலும் அது செலவழிக்கப்பட்ட மாதிரியை பொது ஜனங்கள் அறியவும் அவர்கள் மேலும் ஏமாந்து போகாம லிருக்கும்படி செய்யவும் யாருக்கும் உரிமை உண்டு என்று சொல்லுவோம்.

தோழர் பிரகாசம் அவர்கள் சொந்தத்தில் பாண்டு எழுதிக் கொடுத்து  10000 ரூ.  பணம் கடனாக வாங்கி இருக்கிறார்.

அவர் பத்திரிக்கை நடத்துவதற்கும் தோழர்கள் கஸ்தூரி ரங்கயங்கார், ரங்கசாமி அய்யங்கார் முதலியவர்கள் பத்திரிகை நடத்துவதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கின்றோம்.

காங்கிரசின் எந்த தீர்மானப்படி தோழர் பிரகாசத்தின் பத்திரிக்கையை காங்கிரஸ் பத்திரிக்கை என்று சொல்லப்படுகிறது என்று கேட்கின்றோம். அப்பத்திரிகை தோழர்கள் சத்தியமூர்த்தியை வைது எழுதி யிருக்கிறது. ராஜகோபாலாச்சாரியாரை வைது எழுதி இருக்கிறது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியையும் வைது எழுதி இருக்கிறது. சில சமயங்களில் காங்கிரஸ் கொள்கைகளையும் வைது எழுதியிருக்கிறது. போதாக் குறைச்சலுக்கு பார்ப்பனரல்லாதார் கட்சியை வர்ஜா வர்ஜமில்லாமல் வைது எழுதியிருக்கிறது.

பிரகாசத்துக்கு பணம் கொடுத்துவிட்டு பிறகு சுயராஜ்ஜிய பத்திரிகைக்கு கொடுத்தது என்று சொல்லி கடசியாக தள்ளிக் கொடுக்கப்பட்டுவிட்டது என்று சொன்னால் இதனால் எப்படி பொதுப் பணத்தை யோக்கியமாய் கையாடி இருக்கிறது என்றும் சொல்ல முடியும் என்று கேட்கின்றோம்.

விடுதலை, குடிஅரசு, ஜஸ்டிஸ் ஆகிய பத்திரிகை எழுதினால் பார்ப்பனத் துவேசத்தின் மீது எழுதிற்று என்று சொல்லலாம்.

தோழர் எம்.ஆர். ஜயக்கர் பார்ப்பனத் துவேஷியுமல்ல, காங்கிரஸ் துரோகியுமல்ல, கட்காரும் மராட்ட பத்திரிகையும் பார்ப்பனத் துவேஷியுமல்ல, காங்கிரஸ் துரோகியுமல்ல.

மாஜி மாகாண காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியும் மராட்ட பத்திரிகை ஆசிரியருமான மகாஜன் பார்ப்பனத் துவேஷியுமல்ல, காங்கிரஸ் துவேஷியுமல்ல. மேல்கண்ட இவர்கள் எடுத்துக்காட்டின குறைபாடுகளையும் ஒழுங்கீனங்களையும் இப்பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் மறைத்துவிட்டு பொதுஜனங்கள் கண்களில் மண்ணைப் போடுவதற்கு ஆக காங்கிரஸ் விரோதிகள் அயோக்கியர்கள் திருடர்கள் எழுதுகிறார்கள் என்று எழுதுவதும், இந்த மறைவில் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பதும் பார்ப்பனர் களின் அயோக்கியத்தனத்தையும் இழி தன்மையையும் புரட்டுகளையும் காட்டுவதற்கு போதுமான ஆதாரம் அல்லவா? என்று கேட்கின்றோம்.

பார்ப்பன அயோக்கியத்தனத்தையும், மோசத்தையும் எடுத்துக் காட்டுவதற்கு யார் முயற்சித்தாலும் அவர்களை இம்மாதிரி இழித்தன்மை யாகப் பேசுவதும் அவர்கள் மீது அயோக்கியத்தனமாய் குறை கூறுவதும் சிறிதும் மானம் வெட்கம் ஈனம் கவனிக்காமல் பழி சுமத்துவதுமான காரியம் செய்வதென்றால் யார் தான் சம்மதிப்பார்கள். யார் தான் இவர்களுக்கு  புத்தி கற்பிக்காமல் இருப்பார்கள் என்று கேட்கிறோம்.

இன்னமும் நாம் தைரியமாயும் ஆதாரத்துடனும் சொல்லுகிறோம். பொது ஜனங்களிடம் வசூலிக்கப்பட்ட பணங்கள் பார்ப்பன நலத்துக்காகவே செலவழிக்கப்பட்டு வருகின்றது என்பது மாத்திரமல்லாமல் 100க்கு 80 பாகம் பார்ப்பனர் வயிற்றிலேயே அருத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதோடு, பித்தலாட்டமாகவே செலவழிக்கப்பட்டு வருகின்றது என்றும் சொல்லுகிறோம்.

இப்படிப்பட்ட நிலைமையில் உள்ள யோக்கியர்கள் ராமசாமியை கணக்குக் கொடுக்கவில்லை என்றும் ஜஸ்டிஸ் கட்சியாரை பணம் மோசம் செய்தார்கள் என்றும், லஞ்சம் வாங்கினார்கள் என்றும் கூறி மற்றொரு குற்றச்சாட்டை வம்பில் கொண்டுவந்து புகுத்தி தப்பித்துக் கொள்ளப் பார்த்தால் இதற்கும் சமாதானம் சொல்லாமல் எப்படி வாயை மூடிக் கொண்டிருக்க முடியும்.

ஜஸ்டிஸ் கட்சியார் யாரிடம் எந்த உத்தியோகத்துக்கு லஞ்சம் வாங்கினார்கள்? தலைவர்கள் வாங்கினார்களா? மந்திரிகள் வாங்கினார்களா? மற்ற எடுபிடி ஆள் வாங்குகிறார்களா? அது இந்த 15 வருஷ ஆட்சியில் இப்போதுதான் தெரிந்ததா? என்பவைகளுக்கு மராட்டப் பத்திரிகை மாதிரி, மகாஜன் மாதிரி விபரம் எடுத்துக் காட்டினால் அது ஆண்மையாகும். அப்படி இல்லாமல் “”சூரியனைப் பார்த்து சுவானம் கரைவது போல்” கரைவதில் பயனென்ன? இதனால் என்ன வெற்றி அடைந்துவிட முடியும்? என்று கேட்கின்றோம்.

காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் எவ்வளவு கேவலமாய் நடந்து கொண்டார்கள் என்பது யாருக்காவது தெரியவேண்டுமானால் அடியில் கண்ட விடுகதையை விடுவித்துப் பாருங்கள்.

சட்டசபையில் தனிப்பட்ட நபர்களைப் பொருத்த விஷயங்களில் கேள்விகள் கேட்பதற்காக கேள்வி ஒன்றுக்கு 5 ரூ.  வாங்கும் தலைவர் 25 ரூ.  வாங்கும் தலைவர் 50 ரூபாய் வாங்கும் தலைவர் என்பதாக மூன்றுவித தலைவர்கள்  இருக்கிறார்களா இல்லையா?

ஈணூ. சுப்பராயன் மந்திரியாக இருக்கும் வரை அவரிடம் போய் சிபார்சு செய்ய சிபார்சு ஒன்றுக்கு 250 முதல் 1000 ரூபாய் வரையில் வாங்கி வந்தவர் காங்கிரசில் தலைவராக இருக்கிறாரா இல்லையா?

டாக்டர் சுப்பராயன் மந்திரியாய் இருக்கும் வரை அவரைத் தொந்திரவு கொடுக்காமல் இருப்பதற்காக மாதம் 250 ரூ. வீதம் மாதமானம் வாங்கியவர்கள் காங்கிரசில் தலைவராக இருக்கிறாரா இல்லையா?

அண்ணாமலை யூனிவர்சிட்டியில் பாசாக்கி வைப்பதற்கு குறுக்கே கலகம் விளைவிக்காமல் இருப்பதற்கும் சீக்கிரம் முடியும்படி செய்வதற்கும் 5 கலம் கொண்ட தொகை வாங்கியவர்கள் காங்கிரசில் தலைவராக இருக்கிறாரா இல்லையா?

குமாரராஜா மேயர் காலம் முழுவதும் அவருக்குத் தொல்லை விளைவிக்காமல் இருப்பதற்கு மாதமானம் மோட்டார் கார் முதலியவைகள் வாங்கிக் கொண்டவர் காங்கிரசில் தலைவராக இருக்கிறாரா இல்லையா?

மற்றும் இன்னமும் சில பெரிய ஆட்கள் என்பவர்களிடம் அவர்கள் ஊழல்களை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக தினமானம், வருஷமானம் நிவேதனத் தொகை வாங்கி வருபவர்கள் காங்கிரஸ் தலைவர்களாக இல்லையா?

இவர்கள் எல்லோரும் காங்கிரசில் தலைவர்களாக இருக்கிறார்களா இல்லையா? என்கின்ற விடுகதைகளை விடுவித்துப் பார்த்தால் உண்மையாகவே பதவிக்கு ஆசைப்பட்டும் பதவியை துர்வினியோகம் செய்தும் பணம் சம்பாதிப்பவர்கள் காங்கிரஸ் தலைவர்களா? ஜஸ்டிஸ் தலைவர்களா? என்பது விளங்காமல் போகாது.

கண்ணாடி வீட்டில் குடி இருந்து கொண்டு மச்சு வீட்டின் மீது கல் எறிவது முட்டாள் தனமாக முடியும் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டுமா?

அன்றியும் ஸ்தல ஸ்தாபனங்களில் தங்கள் பதவி பெறுவதன் மூலம் கண்றாக்ட் பெற்று லாபம் பெறுவது காங்கிரஸ்காரர்களா, ஜஸ்டிஸ்காரர்களா என்பதற்கும் தோழர் கூரத்தாழ்வார் ரசீது பார்த்தாலே விளங்கி விடும்.

மற்றும்  ஸ்தல ஸ்தாபனங்களில் உள்ள ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ்காரர்கள் குறைத்து வந்ததின் யோக்கியதைகளை பார்க்க வேண்டுமானால் ஸ்தல ஸ்தாபனங்களில் ஜஸ்டிஸ் கக்ஷியின் பேரால் இருந்து வந்த தலைவர்கள் காலில் விழுந்து அவர்களது கால் தூசி மூக்கில் ஒட்டும்படி கும்பிட்டு தங்கள் கக்ஷிக்கு வரும்படி கெஞ்சினதையும், கெஞ்சி சேர்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தாலே வாஸ்தவத்திலே ஜஸ்டிஸ் கக்ஷித் தலைவர்கள் அயோக்கியர்களா அல்லது இனிமேல் அயோக்கியத்தனம் செய்வதற்கு ஆக கூப்பிடப்படு கிறார்களா என்பது விளங்கும்.

போர்

முடிவாக நாம் ஒன்று கூறுகிறோம். இன்று தென் இந்தியாவில் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் போர் நடக்கின்றது. அது அரசியல் போர் அல்ல, உத்தியோக போர் அல்ல  எலக்ஷன் போரும் அல்ல. மற்றென்னவென்றால் பல்லாயிர வருடமாக இருந்து வந்த பார்ப்பன ஆதிக்கத்துக்கும் திடீரென்று விழித்தெழுந்த பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கும் நடக்கும் போராட்டமாகும். இதில் ஆதிக்கத்தில் இருந்து வந்த பார்ப்பனருக்கு சகல பலமும், சகல சவுகரியமும், சகலவித தந்திரம், யுக்த்தி, ஜாலவித்தை ஆகியவைகள் யாவும் இருந்து வருகின்றன.

பார்ப்பனரல்லாதாரிலே சுயமரியாதை என்றால் என்ன என்றுகூட தெரியாத மக்கள் பல்லாயிரக்கணக்காய் இன்னும் இருக்கிறார்கள். ஒருவேளை சோற்றுக்கு மானத்தை விற்றுப் பழகிவந்த மக்கள் தாராளமாய் இருக்கிறார்கள்.

உதாரணம் வேண்டுமானால் குறிப்பிடுகின்றோம். பார்ப்பனரல்லாத சுயமரியாதைப் போர் தொடங்கிய சிறிது காலத்துக்குள் அதாவது இந்த 15, 20 வருஷத்துக்குள் ஒரு பார்ப்பனராவது நமதுபோருக்கு உதவி செய்யவோ அல்லது தங்கள் சமூகத்தை காட்டிக் கொடுக்கவோ தங்கள் சமூக ஆதிக்கத்தையும் அயோக்கியத்தனத்தையும் விட்டுக் கொடுக்கவோ நம்முடன் கலந்து கொள்ளவோ இதுவரை ஒரு உருப்படியாவது வந்து சேர்ந்திருக்கிறதா, ஒரு பார்ப்பன குச்சிக்காரியாவது வந்து சேர்ந்திருக்கிறதா என்பதையும் பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் இருந்து ஆரம்ப முதல் இதுவரை எத்தனை பேர் 100க்கணக்காகவும் ஆயிரக்கணக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்கும் கூலிக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு விபூஷணன் போல் அவர்களிடம் சரணாகதி அடைகின்றார்கள் என்பதும் ஆராய்ந்து பார்த்தால் விளங்கும்.

நேற்று வரை பார்ப்பனர்களை மாத்திரம் அல்லாமல் காங்கிரசையும் குறை கூறிக் கொண்டு இருந்து, அதற்காக ஜஸ்டிஸ் கட்சியில் பல யோக்கியதைகள் பெற்று விட்டு இன்று அதுவும் காங்கிரசின் யோக்கியதை விவகாரத்துக்கு இடமில்லாமல் வெட்ட வெளிச்சமான பின்பு அதனோடு அளவளாவுவதென்றால் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை பெற இன்னமும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது பயப்படத்தகுந்த மாதிரியில் விளங்குகிறது.

இது ஒருபுறமிருக்க இந்தப் போரில் தைரியமாய் நெஞ்சுத் துணிவாய் எந்தவிதமான அயோக்கியத்தனத்தையும் செய்வதென்றும், எப்படிப்பட்ட மானத்தையும் விட்டுக் கொடுப்பதென்றும், எதையும் தியாகம் செய்வதென்றும் துணிந்து பார்ப்பனர்கள் எதிர்த்து நிற்கிறார்கள். இதை சமாளிக்க முடியாமல் அனேக பார்ப்பனரல்லாதார் புறமுதுகு காட்டி ஓடுவதென்றும், எதிரிகளிடம் சரணாகதி அடைவதென்றும் துணிந்து விட்டார்களானாலும் சுயமரியாதையில் லக்ஷியமுள்ள சிலராவது துணிந்து நிற்போமானால் அவசியம் வெற்றி ஏற்படும் என்பதே நமது துணிவு.

இப்பொழுது பார்ப்பனரல்லாதாருக்கு வேண்டியதெல்லாம் தைரியத்தோடு கூடிய சுயமரியாதை உணர்ச்சிதான். மற்றப்படி மற்ற பல சவுகரியங்கள் நமக்கும் அனுகூலமாய் இருக்கின்றன.

இது சமயம் தேர்தல் வெற்றியே நமது லக்ஷியமல்ல. அதில் ஏற்படும் பலன் எதுவானாலும் நமக்கு அனுகூலமானதேயாகும்.

ஆதலால் போரை நடத்தி சீக்கிரத்தில் பலனை கண்டுவிட வேண்டியதுதான். ஏனெனில் புராணக்காரர்கள் ஜெயித்தால் வெற்றி, போரில் மாண்டால் வீர சொர்க்கம் என்பதுபோல் நாம் தேர்தல் போரில் ஜெயித்தால் பதவி, தோற்றால் சுயமரியாதை உணர்ச்சி பன்மடங்கு வீறு கொண்டு எழும். ஆதலால் துணிவோடு எழுங்கள்.

குடி அரசு  தலையங்கம்  01.12.1935

 

You may also like...