கடவுள் கருணை
சந்தேகவாதி
சென்ற வருஷம் பீகார் பூகம்பத்தால் ஏற்பட்ட சொத்து நஷ்டமும், உயிர் நஷ்டமும் ஒருபுறமிருக்க, இவ்வருஷம் குவெட்டா பூகம்பத்தால் அதைவிட பல மடங்கு அதிகமான ஐம்பது அறுபது ஆயிரம் மக்கள் உயிர் நஷ்டமும் பல கோடி ரூ. பொருள் நஷ்டமும் நடந்தது. மற்றொருபுறமிருக்க, இம்மாதத்தில் பெஷாவரில் தீ விபத்து ஏற்பட்டு 2500 வீடுகளும், கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறும்படியான பொருள்களும் சாம்ப லாயினவாம். உயிர்ச் சேதமும் தாராளமாய் இருக்கலாம். எனவே கடவுள் நன்மையையே குணமாய்க் கொண்டு அன்பையும் ஜீவகாருண்யத்தையும், கருணையையுமே ஆபரணமாய்க் கொண்டவர் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணத்தை ஆஸ்திகர்கள் காட்டுவார்களோ தெரியவில்லை.
குடி அரசு செய்தி விமர்சனம் 30.06.1935