மற்றொரு  பண்டு  வசூல் ஜாக்கிரதை  ஜாக்கிரதை

 

சுயராஜ்ஜிய  பண்டு

தோழர்  காந்தியார்  அவர்கள்  பார்ப்பன  ஆதிக்கத்துக்கு  ஆக  1920,  21ல்  காங்கிரசின்  பேரால்  அதாவது  சுயராஜ்ஜிய  நிதி  என்று  ஒரு  கோடி  ரூபாய்  வசூல்  செய்ததும்,  அது  பெரும்பான்மை  பார்ப்பனர்  கையிலேயே  கொடுக்கப்பட்டுச்  செலவானதும்  யாவரும்  அறிந்ததேயாகும்.

கதர்ப்பண்டு

அதன்  பிறகு  1926,  27ல்  கதரின்  பேரால்  கதர்பண்டு  என்று  சுமார்  30  லட்ச  ரூபாய்  வரை  வசூல்  செய்தார்.  அதுவும்  பெரிதும்  பார்ப்பன  ஆதிக்கத்துக்காகவே  பார்ப்பனர்கள்  கையாலேயே  செலவு  செய்யப்பட்டது.

ஹரிஜன  பண்டு

மறுபடி  1934ல்  ஹரிஜன  பண்டு  என்ற  பேரால்,  தீண்டப்படாதவர் களுக்கு  ஆக  என்று  20,  30  லட்ச  ரூபாய்  வரை  வசூல்  செய்து,  அதுவும்  பார்ப்பன  ஆதிக்கத்துக்கு  ஆகவே  பார்ப்பனர்  வசம்  கொடுக்கப்பட்டு  அவர்களாலேயே  செலவழிக்கப்பட்டும்  வந்து,  அதன்  பயனால்  இந்திய  சட்டசபைத்  தேர்தலும்  நடத்தப்பட்டாய்  விட்டது.

முடிவாக  சுயராஜ்ஜியம்  என்ன  ஆயிற்று  என்பதைப்பற்றி  நாம்  யாரையும்  கேட்க  வேண்டியதில்லை.  எப்படியாவது  தோழர்  சத்தியமூர்த்தி  ஐயர்  ஒரு  நாளைக்காவது  முதல்  மந்திரி  உத்தியோகம்  பார்த்துவிட்டுப்  போய்விட  வேண்டியது  என்பதிலும்,  ஜஸ்டிஸ்  கட்சிக்காரர்களை  விட  பிரிட்டிஷ்  ஆட்சியே  மேல்  என்பதிலும்  வந்து  முடிந்து  விட்டதுடன்,  அரசியல்  திட்டத்தில்  ஏற்பட்ட  பாதுகாப்புகளுக்கெல்லாம்  “”நாங்களும்,  எங்கள்  கொள்கைகளுமேதான்  காரணம்”  என்று  காங்கிரஸ்காரர்கள்  பெருமை  பேசிக்  கொள்ளுவதிலும்  வந்து  நிற்கிறது.

இனி,  சமீபத்தில்  புதிய  அரசியல்  திட்டத்தின்படி  ஏற்படப்போகும்  சட்டசபைத்  தேர்தலுக்குச்  சில  புதிய  கொள்கைளின்  பேரால்  10,  20  லட்ச  ரூபாயாவது  புதிய  பணமாக  வேண்டி  இருக்கிறது.

அதை அரசியல் சம்பந்தமில்லாதது என்று சொல்லிக்கொண்டு,  அதன் பேரால் வசூல் செய்யவேண்டியுமிருக்கிறது.

கூடிய  சீக்கிரம்  அந்த  ரகசியமும்,  முயற்சியும்  வெளியாகப்  போகிறது.

அது  என்னவென்றால்,  அதுதான்  கிராமப்புனருத்தாரணமாம்.  அதற்கு  ஆக  வேறு  பண்டு  வசூலிக்க  வேண்டும்  என்பதாகும்.

அதற்கு  ஆக  காந்தியார்  அடுத்த  மாதத்தில்  இருந்தே  சுற்றுப்பிரயாணம்  புறப்படப்  போகிறாராம்.

தேர்தலில்  ஓட்டு  வாங்கிக்கொடுக்கிறோம்  என்று  காங்கிரஸ்  பக்தர்கள்  இப்பொழுதிருந்தே  தேர்தல்  ஆசை  பிடித்தவர்களிடமும்,  ஏமாந்த  சோணகிரி களிடமும்  பணம்  வசூல்செய்ய  அஸ்திவாரம்  போட்டு  வருகிறார்கள்.

கிராமப்புனருத்தாரணப்  பண்டுக்கு  வசூலாகும்  தொகை  சுயராஜ்ய  பண்டு,  கதர்  பண்டு,  தீண்டாமைப்பண்டு  ஆகிய  பண்டுகள்  அடைந்த  கதிதான்  அடையப்  போகும்  என்பதில்  யாருக்கும்  சந்தேகம்  வேண்டியதில்லை.

கதர்  இன்று  என்ன  நிலையில்  இருக்கின்றது?

இத்தனை  நாள்  பொருத்து  இப்போதுதான்  காந்தியார்,  தான்  யந்திரத்துக்கு  விரோதி  இல்லை  யென்றும்,  ராட்டினமும்  ஒரு  யந்திரம்  தான்  என்றும்,  மனித  வாழ்க்கைக்கு  உபயோகமான  எல்லா  யந்திரத்தையும்  ஆதரிப்பேன்  என்றும்  சொல்லி  விட்டார்.

எனவே  கை  ராட்டினம்,  கை  நெசவு  எல்லாம்  இனி  பறக்க  வேண்டியது  தான்.  இதுவே  இன்றையக்  கதரின்  நிலையாகும்.

தீண்டாதார்களுக்கு  ஆக  இதுவரை  என்ன  காரியம்  நடந்தது?  என்று  பார்த்தால்,  தீண்டாமை  விலக்குக்கு  இப்போது  சட்டம்  கொண்டுவரக்  கூடாது  என்பதோடு  முடிந்தது.

ஆகவே  கிராமப்புனருத்தாரணம்,  கைக்குத்து  அரிசியும்,  கையாலை  வெல்லமும்  சாப்பிட  வேண்டும்  என்ற  பிரசாரத்தோடு  முடியப்போகிறது.

இந்நிலையில்  இதற்காக  ஒரு  பண்டு  தேவையா  என்று  கேட்கின்றோம்.

போனது போகட்டும்  என்றாலும்  4வது  பண்டு  வசூல்  விஷயத்திலாவது  உஷாராய்  இருங்கள்  என்று  எச்சரிக்கை  செய்கிறோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  30.06.1935

You may also like...