பொப்பிலி ராஜா அறிக்கை
1930ல் உருப்பெற்ற, தற்காலச் சென்னைச் சட்டசபை, சட்டப்படி 1932ல் கலைக்கப்பட்டு 1933ல் புதுச் சட்டசபை ஏற்பட்டிருக்க வேண்டும். எனினும் மூன்று முறை சட்டசபையின் ஆயுள் கவர்னரின் விசேஷ அதிகாரத்தினால் நீட்டப்பட்டதனால் 1930ல் தோன்றிய சட்டசபை இப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இது சென்னை மாகாணத்தில் மட்டும் காணப்படும் புதுமையுமன்று. இந்தியாவிலுள்ள மாகாண சட்டசபைகள் எல்லாம் ஆயுள் நீடிக்கப்பட்டே இருக்கின்றன. இதற்கு மாகாண மந்திரிகளோ அவர்களை ஆதரிக்கும் கட்சியாரோ மாகாண கவர்னர்களோ, வைஸ்ராயோ ஜவாப்தாரிகளல்ல. புதுச் சீர்திருத்தம் அமலுக்கு வரும்வரை “”மன்னர் பெருமான்” சர்க்கார் எப்படியாவது இயங்கிக் கொண்டு இருந்து ஆக வேண்டும். பொதுத் தேர்தல் நடத்த அரசியல் சம்பந்தமான தடைகள் ஏற்பட்டால், சட்டசபைகளின் ஆயுளை நீட்ட சீர்திருத்த சட்டம், மாகாண கவர்னர்களுக்கு அதிகாரமளிக்கிறது. அந்த அதிகாரத்தை உபயோகித்தே மாகாண சட்டசபைகளின் ஆயுளை அதிகாரிகள் நீட்டியிருக்கிறார்கள்.
ஆயுள் நீட்டக் காரணம்
மந்திரிகள் மீதுள்ள கருணையினாலோ, மாகாணங்களில் மந்திரிமாரை ஆதரிக்கும் கட்சியார் மீதுள்ள பரிவினாலோ மாகாண கவர்னர்கள் சட்டசபைகளின் ஆயுளை நிட்டவில்லை. ஆயுளை நீட்டிய பாபத்துக்காக மந்திரிமாரையும், மந்திரி கட்சியாரையும் சென்னை மாகாணத்தைத் தவிர வேறு எந்த மாகாணத்திலும் காங்கிரஸ்காரரோ இதர அரசியல் கட்சியாரோ தூற்றவுமில்லை. கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றவுமில்லை. சென்னையிற்றான் காங்கிரஸ் பார்ப்பனர்கள் அவர்கள் பாட்டனார் வீட்டு முதல் கொள்ளை போவதுபோல் அட்டகாசம் செய்கிறார்கள்; அலறுகிறார்கள்; மாரடிக்கிறார்கள்.
பித்தலாட்டப் பேச்சு
பொப்பிலி மந்திரி சபை ராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் பார்ப்பனர்கள் ஒப்பாரி வைக்கத் தொடங்கி வருஷங்கள் இரண்டு மூன்று ஆகிவிட்டன. “”காலாவதியான சட்டசபைக்குப் பொதுஜன ஆதரவு கிடையாது; தற்கால சட்டசபை பிரதிநிதித்துவம் வாய்ந்த சபை அல்ல” எனக் கூச்சல் போடும் காங்கிரஸ்காரர் உபதேர்தல்கள் வரும்போது போட்டி போடத் தயங்குவதும் இல்லை. காங்கிரஸ்காரர் எவ்வளவேனும் யோக்கியப் பொறுப்பும், நாணயமும் அந்தரங்க சுத்தியும் உடையவர் களானால் உபதேர்தல்களில் போட்டி போடலாமா? வெற்றி பெற்று சட்டசபையில் குந்தியிருக்கலாமா?
உபதேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ்காரர்கள் தாமும் சட்டசபை மெம்பர்கள் என்று கூறும் ஏக காரணத்தினாலேயே, தற்காலச் சட்டசபை பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்லவென்று கூறுவது சுத்தப் பித்தலாட்டமென்பது தெளிவாகிவிட்டது.
மேலும், புதுச் சீர்திருத்தச் சட்டம் பார்லிமெண்டில் நிறைவேறி விட்டதினால் மாண்டு போர்டு சீர்திருத்தச் சட்டம் ரத்ததாகிவிட்டது. புதுச் சட்டப்படிதான் தேர்தல் நடத்த முடியும். அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை பூர்த்தியாகும்போது தற்காலச் சட்டசபை கலைக்கப்படும். பொதுத் தேர்தலும் வரும். காங்கிரஸ்காரர் உட்பட எல்லாக் கட்சியாரும் தாராளமாகப் போட்டி போடலாம். பொப்பிலி ராஜாவோ ஜஸ்டிஸ் கட்சியாரோ குறுக்கே நிற்கப்போவதில்லை. காங்கிரஸ்காரர் மெஜாரட்டி பலம் பெற்றால் மந்திரிமாரும் ஆகலாம். ஒருவரும் அவர்களைத் தடுக்க மாட்டார்கள்; தடுக்கவும் முடியாது.
பொப்பிலி விளக்கம்
எனவே “”சட்டசபையைக் கலைக்க வேண்டும்; பொப்பிலி ராஜா ராஜிநாமாச் செய்ய வேண்டும்” என்று கூச்சல் போடுவதற்குப் பொருளே இல்லை. மந்திரி பதவியில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்று பொப்பிலி ராஜா ஆசைப்படவுமில்லை.
தோழர் சத்தியமூர்த்தி பிதற்றலுக்கு பதிலாக பொப்பிலிராஜா மிகவும் கண்ணியமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “”சட்டசபையின் ஆயுளை நீட்ட வேண்டுமென்று லார்டு எர்ஸ்கையினையோ அவருக்கு முன்னிருந்தவர்களையோ நாங்கள் கேட்டுக் கொண்டதுமில்லை. எங்களுடன் கலந்து சட்டசபைகளின் ஆயுள் நீட்டப்படவுமில்லை. சட்ட சபையைக் கலைத்து மாற்றப்பட்ட இலாக்காக்களின் நிருவாகத்தைக் கவர்னர் ஏற்றுக் கொண்டாலும் நான் தடுக்கப் போவதில்லை” என பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இந்நிலையில் சட்டசபை ஆயுள் நீட்டப்பட்டதற்கு மந்திரிமாரைக் குறை கூறுவது அக்கிரமமல்லவா?
பிரிட்டிஷ் ஆட்சி முறை, சில சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டது. தடுக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டாலன்றி சட்டதிட்டங்களை மீறி பிரிட்டிஷ் அதிகாரிகள் காரியங்கள் நடத்த மாட்டார்கள். காங்கிரஸ் பார்ப்பனக் கூட்டம் என்ன கூச்சல் போட்டாலும் சரி, சட்டசபையைக் கலைக்கும் வண்ணம் நெருக்கடி ஏற்படவில்லையென்று மாகாண கவர்னர் கருதுகிறார்.
எனவே காங்கிரஸ்காரர் மந்திரி பதவி மோகத்தினால் மாதாமாதம் 4000 ரூபாய் பார்ப்பனரல்லாத மந்திரிகள் பைக்குள் விழுகிறதே என்ற வயிற்றெரிச்சலினால் லபோ, லபோ என்று வயிற்றில் அடித்துக் கொள்வது மானக்கேடேயாகும்.
காங்கிரசும் காந்தியுமே காரணம்
உண்மையில் சட்டசபைகளின் ஆயுள் நீட்டப்பட்டதற்கும் புதிய அரசியல் அமலில் வரத் தயக்கம் ஏற்பட்டிருப்பதற்கும், அரசியல் ஞானம் என்பது துளிகூட இல்லாத காங்கிரஸ் வாலாக்களே காரணமாகும். முதல் லண்டன் மகாநாட்டில், ஏனைய அரசியல்வாதிகளுடன் கலந்து, ஒத்துழைத்திருந்தால் இரண்டு வருஷங்களுக்கு முன்னமேயே புதிய சீர்திருத்தச் சட்டம் பார்லிமெண்டில் நிறைவேறி அமலிலும் வந்திருக்கக் கூடும். “”என் சேவல் கூவாவிட்டால் பொழுது விடியாதென்று எண்ணிக் கொண்டிருந்த கிழவியைப் போல்” நாம் செல்லாவிட்டால் வட்டமேஜை மகாநாடே நடைபெறாதென்று காங்கிரஸ்காரர் மனப்பால் குடித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்ததுபோல் மகாநாட்டு வேலை ஒன்றும் தடைபடவில்லை.
முதல் மகாநாடு செவ்வையாகவே நடைபெற்றது. காங்கிரஸ்காரரின் ஒத்துழைப்பில்லாமலே வட்டமேஜை மகாநாடு வெற்றிகரமாக முடிவு பெற்றுவிடும் என்ற நிலைமை ஏற்பட்டவுடன் இரண்டாவது மகாநாட்டுக்கு காந்தியார் காங்கிரசின் ஏகப் பிரதிநிதியாகச் சென்றார். அனுபவ சாத்திய மல்லாத பல காரியங்களை வற்புறுத்தினார். சமரசமாக முடியவிருந்த வகுப்புப் பிரச்சினைக்கு ஹிமாலய முட்டுக்கட்டையையும் போட்டார். முஸ்லீம்களுக்குச் சலுகை காட்டி ஒடுக்கப்பட்டவர்கள் கழுத்தில் கத்தி வைக்கவும் சூழ்ச்சி செய்தார். அதையுணர்ந்த ஒடுக்கப்பட்டவர்கள் பிரதிநிதிகளான ராவ்பகதூர் ஸ்ரீநிவாசனும், டாக்டர் அம்பேத்காரும் காந்தியார் சூழ்ச்சிகளை லண்டன் பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்தவே இரண்டாவது மகாநாட்டு வேலை தடைபட்டது. இரண்டாவது மகாநாட்டில் காந்தியார் முட்டுக்கட்டை போடாது இருந்திருந்தால் மூன்றாவது மகாநாடு கூட்டாமலே ஒரு கால் காரியங்கள் முடிந்திருக்கவும் கூடும். எனவே புதுச் சீர்திருத்தம் அமலில் வரத் தவக்கம் ஏற்பட்டதற்கும், சட்டசபைகளின் ஆயுள் நீட்டப்பட்டதற்கும், காங்கிரஸ்காரர்களே காரணம். ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளையோ, ஜஸ்டிஸ் கட்சியாரையோ குறைகூறுவதில் பயனில்லை.
கீரை விற்கும் கிழவியும் ஒப்ப மாட்டாள்
சட்டசபையைக் கலைக்க வேண்டும், மந்திரிகள் ராஜிநாமாச் செய்ய வேண்டும் என்பதற்குத் தோழர் சத்தியமூர்த்தி கூறும் காரணங்களைத் தெருவில் கீரை விற்கும் கிழவிகளும்கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கோக்கலே மண்டபத்தில் கூடிய பார்ப்பன கும்பல்களுக்கு தோழர் சத்தியமூர்த்தி கூறிய காரணங்கள் உடன்பாடாக இருக்கலாம். ஆனால் விவேகிகள் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். தோழர் சத்தியமூர்த்தியின் குற்றச்சாட்டுக்கு பொப்பிலி ராஜா தமது அறிக்கையில் தக்க ஆதாரங் களுடன் பதிலளித்திருக்கிறார். அவ்வறிக்கை மற்றோரிடத்து வெளிவருகிறது. அவ்வறிக்கையைப் பாரபட்சம் இன்றி படிப்பவர்களுக்குத் தோழர் மூர்த்தியின் பிதற்றல்களுக்கு ஆதாரமே இல்லை என்பது நன்கு புலனாகும். கட்சி நலத்துக்காக ஜில்லா போர்டுகளைப் பிரிப்பதாக தோழர் மூர்த்தி கூறுகிறார். ஸ்தல ஸ்தாபனத் திருத்தச் சட்டப்படி தாலூகா போர்டுகள் கலைக்கப்பட்டபோது, பெரிய ஜில்லா போர்டுகளை பிரிக்கத் தேவை யுண்டாயிற்று. சட்டமும் அதற்கு இடமளிக்கிறது. சட்டப்படியே பொப்பிலி ராஜா நடந்தும் இருக்கிறார். அவரது அறிக்கையைப் படிக்கும் பள்ளிப் பையன்களும்கூட இதை ஒப்புக் கொள்வர். ஜில்லா போர்டுகளைக் கலைத்துவிட்டு தாலூக்கா போர்டுகளை ஏற்படுத்த வேண்டுமென்று தோழர் மூர்த்தி கூறுவது அனுபவ சாத்தியமில்லை யென்றும் பொப்பிலி ராஜா தக்க ஆதாரங்களுடன் விளக்கிக் காட்டி இருக்கிறார். 1933ல் நிருவாகச் செலவுக்கும் பணமில்லாமல் 90 தாலூக்கா போர்டுகள் ஸ்தம்பித்தன. சிப்பந்திகளுக்குப் பல மாதச் சம்பளம் கொடுக்கப்படவில்லை. 203 தாலூகா போர்டுகளில் 129 போர்டுகள் வரவு செலவுகளைச் சரிக்கட்ட சக்தியற்றிருந்தன. அதனாலேயே அவைகள் மூடப்பட்டன. தோழர் சத்தியமூர்த்தி உபதேசப்படி ஜில்லா போர்டுகளைக் கலைத்து மீண்டும் தாலூகா போர்டுகள் ஏற்படுத்தப்பட்டால் 1933வது வருஷத்திய நிலைமை தானே மீண்டும் ஏற்படும்.
குறும்புத்தனமான கூச்சல்
கவர்னரைக் கலவாமலே பொப்பிலி ராஜா ஜில்லா போர்டுகளைப் பிரிவினை செய்யத் தொடங்கி யிருப்பதாக எத்தகைய ஆதாரமுமின்றி தோழர் மூர்த்தி ஒரு குற்றம் சாட்டுகிறார். அவரை ஆதரிக்கப் புறப்பட்ட சென்னை மெயிலும் பொப்பிலி ராஜா அறிக்கையைக் கருத்தூன்றிப் படிக்காமல் தோழர் மூர்த்தி குற்றச்சாட்டை ஆமோதிக்கிறது. வேறொரு அரையணா காங்கிரஸ் தினசரியும் அவ்வாறே புலம்புகிறது. ஆனால் உன்மை நிலை என்ன? பொப்பிலி ராஜா தான்றோன்றித்தனமாக எதுவும் செய்துவிட வில்லை. ஜில்லா போர்டு பிரிவினை விஷயம் லோக்கல் போர்டு இன்ஸ்பெக்டரால் பரிசீலனை செய்யப்பட்டு, பொக்கிஷ மந்திரி, கவர்னர் முதலியவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிறகே பொப்பிலி ராஜா அவர்களால் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்விஷயத்தை பொப்பிலி ராஜா தமது அறிக்கையில் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே தோழர் மூர்த்தியும் அவரை ஆதரிக்கும் தேசீய, ஆங்கலோ இந்தியப் பத்திரிகைகளும் வீண் கூச்சல் போடுவது குறும்புத்தனமாகும். பொது ஜனங்கள் மனத்தில் தப்பெண்ண முண்டாகும்படி செய்யப்படும் இந்த சூழ்ச்சியைப் பார்த்து எவரும் ஏமாந்து போக மாட்டார்கள் என்பது நிச்சயம்.
காங்கிரஸ் வெற்றி மர்மம்
ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ்காரர்களுக்கு ஏற்பட்டிருப்ப தாகக் கூறப்படும் வெற்றியின் இரகசியத்தையும் பொப்பிலி ராஜா தமது அறிக்கையில் பகிரங்கப்படுத்தியிருக்கிறார். மேற்கு கோதாவரி தென்னாற்காடு ஜில்லாக்களில் காங்கிரஸ்காரருக்கு மெஜாரட்டி கிடைத்திருப்பதாகத் தோன்றினாலும் மற்ற ஜில்லாக்களில் மெஜாரட்டி இல்லவே இல்லை. திருச்சி, திருநெல்வேலி, சிற்×ர் ஜில்லாக்களில் காங்கிரசும் ஜஸ்டிசும் சமநிலையிலேயே இருக்கின்றன. கடப்பை ஜில்லாவின் ஜஸ்டிஸ் கட்சிக்கே மெஜாரட்டி கிடைக்குமென்று தோன்றுகிறது. ஜஸ்டிஸ் கட்சியார் ஆதிக்கம் பெற்ற ஜில்லாக்களில் காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு சொந்தப் பகையை முன்னிட்டு ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்கள் காங்கிரசை ஆதரித்ததே காரணம். மேலும் அவ்வாறு தலைவர்களாக வந்தவர்களும் நேற்று வரை ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித் தவர்களே. எனவே காங்கிரஸ்காரர் மெஜாரட்டி பெற்றுவிட்டதாக ஆர்ப்பாட்டம் செய்வது வெறும் பகட்டேயாகும்.
பொறாமையும் வகுப்புத் துவேஷமும் தவிர வேறில்லை
தோழர் சத்தியமூர்த்தி பேச்சையும், பொப்பிலிராஜா அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தோழர் மூர்த்தி பேச்சில் பொறாமை, பகை, வகுப்புத் துவேஷம் முதலியனவும் பொப்பிலி ராஜா அறிக்கையில் நேர்மை சாந்தம் மரியாதை முதலியனவும் அடங்கி யிருப்பதைக் காணலாம். தோழர் மூர்த்தி நினைத்துக் கொண்டிருப்பது போல் தேச மக்கள் முச்சூடும் மூடர்களல்ல. அறிவாளிகள் கொஞ்சப் பேராவது இருக்கக் கூடும். அவர்கள் தோழர் மூர்த்தி பேச்சை ஆதரிக்கவே மாட்டார்கள். மேலும் ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் நிறைவேற்றும் நலந்தரும் சட்டங்களை எல்லாம் பொதுஜன ÷க்ஷமத்துக்காகவே அவர்கள் செய்யும் காரியங்களையெல்லாம் தென்னாட்டுப் பார்ப்பனர்களும், அவர்களது வால்களும், அவர்களை ஆதரிக்கும் பத்திரிகை களும் கட்டுப்பாடாக எதிர்த்து வருவது ஒரு வாடிக்கையாக இருந்து வருகிறது. அறநிலையப் பாதுகாப்பு மசோதாவைக் கவிழ்க்கத் தென்னாட்டுப் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகளை யாரே அறியார்கள். கடைசியில் தோழர் சித்தரஞ்சன் தாஸே அதை ஆதரித்தார். அதைப் போன்ற ஒரு மசோதா வங்காளத்துக்குத் தேவை யென்று பகிரங்கமாகக் கூறினார்.
இனாம் பில்
பொப்பிலி ராஜா நிறைவேற்றி இருக்கும் இனாம் குடிகள் மசோதாவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆசிரியர் ரெங்காவும், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் தோழர் சந்தானமும் மற்றும் காங்கிரஸ் சமதர்மிகளும் ஆதரிக் கிறார்கள். சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் பார்ப்பனர்களும், வெங்கட்டராம சாஸ்திரியார் போன்ற மிதவாத பார்ப்பனர்களும் அந்த மசோதாவைக் கவிழ்க்க இப்பொழுதும் சூழ்ச்சி செய்து கொண்டே இருக்கின்றனர். அம்மட்டோ! தேசீயப் பத்திரிகைகள் என்று கூறிக் கொள்ளும் ஹிந்து, சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளும் அவர்களுக்கு பக்கபல மாகவே இருக்கின்றன. பழைய ஏற்பாட்டை மாற்றி புதிய ஏற்பாடு ஒன்றை அமலுக்குக் கொண்டு வரும்போது அதை அமலுக்குக் கொண்டு வருபவர்களிடம் ஒரு சாராருக்கு துவேஷம் ஏற்படுவது சகஜமே. ஆனால் அந்த துவேஷத்துக்கு அஞ்சி நியாயமாக செய்ய வேண்டியவைகளைச் செய்ய அஞ்சுகிறவர்கள் உண்மையான தேச நிர்வாகிகள் ஆகவே மாட்டார்கள். பொப்பிலி ராஜா காலத்து நிறைவேற்றப்பட்ட பல சட்டங்களை ஒரு சாரார் கட்டுப்பாடாக எதிர்த்து வந்தும், தேச நலத்தை முன்நிறுத்தி, தமது செயலால் தமக்கோ தமது கட்சிக்கோ ஏற்படக் கூடிய பலாபலன் களையும் மதியாமல் தம் கடமையைச் செய்து வரும் பொப்பிலி ராஜாவை நேர்மையும் யோக்கியப் பொறுப்பும் உடையவர்கள் போற்றுவார்கள் என்பது திண்ணம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 29.12.1935