சங்கராச்சாரியின் சங்கடம் கொள்ளையடித்த பணம் கொள்ளை போயிற்று  யோசிப்போன்

 

தற்சமயம் காசியில் தங்கியிருக்கும் ஸ்மார்த்த பிராமணக் கூட்டத்தின் தலைவரான “”லோக குரு” சங்கராச்சாரியாரிடம் இருந்த ஏராளமான சொத்துக்கள் திருட்டு போய்விட்டன.

அவருடைய பூஜையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 விக்கிரகங் களும், 2லீ தோலா தங்கம் வைத்துக் கட்டப்பட்டிருந்த பெரிய சங்கு ஒன்றும் திருட்டுப் போய்விட்டனவாம். இவற்றின் விலை பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ளதென்று கூறுகிறார்கள்.

பூஜையில் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களுக்கோ அல்லது “”லோக குரு” என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றித் திரிகின்ற சங்கராச்சாரியாருக்கோ ஏதாவது “”சக்தி” யென்பது இருந்தால், திருடர்கள் அவைகளை எடுத்துக் கொண்டு போயிருக்க முடியுமா? என்று இப்பொழுது தான் மூடஜனங்கள் யோசித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒன்றுந் தெரியாத பாமர மக்களையும், பார்ப்பனர்களின் தயவு பெற அவர்கள் காலை வருடிக் கொண்டு கிடக்கும் பார்ப்பனரல்லாத பணக்காரர் களையும் ஏமாற்றிப் பாத காணிக்கையென்னும் பேரால் பகிரங்கப் பகற் கொள்ளை போல் சம்பாதித்துச் சேர்த்து வைத்த பொருள் நிஜமாகவே கொள்ளை போனதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்ன இருக்கிறது? என்று உண்மை தெரிந்தவர்கள் பேசிக் கொள்ளுகிறார்கள்.

திருடர்களைக் கண்டுபிடிக்க போலீசாரும் அதி தீவிர முயற்சி செய்து வருகிறார்களாம்!

ஐயோ! பரிதாபம்! சங்கராச்சாரியார் அவர்களே! சங்கடப்பட வேண்டாம்! தேசத்தில் இன்னும் எவ்வளவோ முட்டாள்களிருக்கிறார்கள். மற்றொரு சுற்றுப் பிரயாணத்தை தடபுடலாக விளம்பரத்துடன் நடத்தினால் இழந்த பொருளையும், அதற்கு மேலான பொருளையும் சம்பாதித்துக் கொள்ளலாம். முட்டாள்கள் இருக்கும் வரையில் தங்களுக்கு ஏன் கவலை? ஆகையால் கவலைப்படாதீர்கள் என்று ஆருதல் சொல்லுகிறோம்.

குடி அரசு  கட்டுரை  09.06.1935

You may also like...