சீட்டாட்டத்தின் தீமைகள்

 

உண்மை விளம்பி

முன்பு ஒரு தடவை சீட்டாட்டத்தின் ஒரு பகுதியைப் பற்றி ஆடி  N 6ந் தேதி “குடி அரசில்’ வெளியாயிருப்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்! ஆனால் இப்பொழுது மேற்படி விளையாட்டினால் ஏற்படும் மிக முக்கியமான கெடுதல்களைப் பற்றிக் கூறுவோம். அக்கெடுதல்கள் என்னவென்றால் @

  1. பொருள் நஷ்டம் ஏற்படுகிறது.
  2. தேக ஆரோக்கியத்திற்குக் கெடுதலாயிருக்கிறது.
  3. தன் மரியாதையை இழக்க நேருகிறது.

ஆகையால் இம்மூன்று அதி முக்கியமான தீமைகளையும் தெளிவாய் உலகுக்கறிவிக்க வேண்டியது எனது கடமையாய் விட்டது.

சீட்டாடுவதால் பலவிதமான மார்க்கங்களில் பொருள் நஷ்டம் ஏற்படுகிறது. சீட்டாடும் செல்வச் சிகாமணிகள் பெட்டியில் பணமிருக்கிற வரையில் நோட்டு நோட்டாய் வெளியில் விடுவார்கள். பெட்டியிலுள்ள பணமும் எத்தனை நாட்களுக்குத்தான் வரும்! பணப் பெட்டியிலுள்ள கரன்ஸி நோட்டுகளும் ரொக்கம் சில்லரைகளும் சிறுகச் சிறுக வெளியே போய்க் கொண்டிருந்தால்  கொஞ்ச நாட்களுக்குள் பெட்டியும் காலியாய் விடுமென்பது திண்ணம். பிறகு பணத்திற்கு என்ன செய்வார்கள் என்றால் ஒன்று நான்காகப் பிராமிசரி நோட்டெழுதி ஸ்டாம்பில் கையொப்பமிட்டுக் கொடுத்துப் பணம் வாங்குவார்கள். ஒன்றுக்கு நான்காக எழுதிக் கொடுத்து வாங்குவது என்பது எப்படி என்றால், பணம் கொடுப்பவன் ரூபாய் 100 கொடுத்தால் 400 ரூபாய் பெற்றுக் கொண்டதாக எழுதிக் கொடுத்து பணம் வாங்கும் “மடச் சாம்பிராணிகள்’ இப்படி முட்டாள்தனமாய் எழுதிக் கொடுத்து பணம் வாங்குபவன் அதிக பணக்காரனாயிருந்தால்தான், இவ்வாறு எழுதி வாங்கிக் கொண்டு கொடுக்கும் “ஊர் முதலடிக்கிற ஆசாமி’கள் பணம் கொடுப்பார்கள். இந்தப்படியாக எழுதிக் கொடுத்து வாங்கும் சமாச்சாரம் தகப்பனாருக்குத் தெரிந்தவுடன் தனக்கும், மகனுக்கும் சம்பந்தமில்லை என்றும், தன்னுடைய சொத்தில் பாத்தியதை இல்லை என்றும், தன்னுடைய மகன் தற்சமயம் கடன் வாங்க வேண்டிய  நிலைமை ஏற்பட வேண்டியதில்லை என்றும் அப்படி யாராவது என்னுடைய மகனிடத்தில் நோட்டெழுதி வாங்கிக் கொண்டு கடன் கொடுத்திருந்தால் அவர்கள் என்னுடைய சொத்து முதலியவைகளின் மூலம் தொடரக் கூடாது என்றும் தினசரி, வாரப் பதிப்பு முதலிய பத்திரிகைகளில் விளம்பரம் செய்துவிட்டால் அநேகமாக யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். ஆகையால் இப்பொழுது அதிகப் பந்தயங்கள் வைத்துச் சீட்டாடுவதற்கு வீட்டிலும் பணம் கிடைப்ப தில்லை. கடன் வாங்கவும் முடியாது என்றால் பணத்திற்கு என்ன செய்வார்கள் என்று வாசகர்கள் கேட்கலாம். அப்படிப்பட்டவர்கள் என்ன செய்வார்கள் என்றால், தான் போட்டிருக்கும் நகைகளையும், அல்லது மனைவியினுடைய தங்க வைர நகைகள் முதலியவற்றையும் ஈடு வைத்தாவது, அல்லது விற்றாவது பணத்தைச் சேகரித்துக் கொண்டு தினமும் சீட்டு விளையாடுவார்கள். இதை விடப் பொருள் நஷ்டமும், கேவலமும் என்ன வேண்டுமென்று கேட்கிறேன்?

தினசரியும் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டு சீட்டுப் போடுவதால் அனேக வியாதிகள் உண்டாகுமென்பது நிச்சயம். காரணம் என்னவென்றால் சீட்டாடும் பொழுது கூட்டமாயிருப்பதால் சுத்தமான காற்று முதலியவைகளைச் சுவாசிக்க முடியாது. விளையாடும் பொழுது சுருட்டு, சிகரெட் முதலியவைகளை அதிகமாய் உபயோகிப்பதால் ஹிருதயத்தில் கேட்டை விளைவிக்கிறது. வெகுநேரம் உட்கார்ந்து கொண்டே விளையாடுவதால் கை, கால், இடுப்பு முதலியவைகளில் மேல் வலி போன்ற வலிகள் நிச்சயமாய் ஏற்படுகின்றன. சரியான நேரங்களில் சாப்பிடாமல் சீட்டு விளையாடிக் கொண்டே இருந்துவிட்டு நேரங்கெட்டுச் சாப்பிடுவதாலும், விளையாடும் பொழுது கண்ட உணவுப் பொருள் களை எல்லாம் சாப்பிடுவதாலும் ஜீரணக் கருவி முதலியவைகளில் கோளாறுகள் ஏற்படுகிறது. ஜீரணமடையாமல் பல வியாதிகள் ஏற்பட ஏதுவாகிறது.

சீட்டாடும் மகான்கள் விளையாடும் பொழுது ஒருவருக்கொருவர் மரியாதை முதலியவைகள் இல்லாமலே பேசிக் கொள்வார்கள். சீட்டு விளையாடும் பொழுது தகரார் வந்துவிட்டால் ஒவ்வொருவரும் அவரவர்கள் இஷ்டப்படியே ஒரே சமயத்தில் பத்து வீடுகளுக்கு அப்பால் கேட்கும்படி இரைந்து பேசுவார்கள். இப்படிச் சீட்டாடும் சீமான்கள் போலீஸின் மூலம் கிரிமினல் குற்றத்திற்கு உட்பட்டு விட்டார்கள் ஆனால் தப்பித்துக் கொள்வதற்குப் பணத்தைப் பணமென்று பார்க்காமல் செலவழிப்பார்கள். மேலும் ஒவ்வொரு வாய்தாவிற்கும் தவறாமல் மாஜிஸ்டிரேட் கோர்ட்டிற்கு ஆஜராக வேண்டும். மாஜிஸ்டிரேட் எங்கெங்கு “காம்’ப் போடுகிறாரோ அங்கங்கு …….. போல் அலைய வேண்டும். இப்படி அவமரியாதையுடனும், கஷ்டங்களுடன் ஏன் அப்படிச் சீட்டு விளையாட வேண்டுமென்று கேட்கிறேன்?

ஆகையால் இனிமேலாவது சீட்டாடாமலும் அப்படி விளையாடும் பொழுதைப் பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பதின் மூலமாகவும், வீட்டுக் காரியங்களைக் கவனிப்பதின் மூலமாகவும், உலக முன்னேற்றத்திற்கும், மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதற்கும் பாடுபடுமாறும் சீட்டாடும் இளைஞர்களையும் பெரியோர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

குடி அரசு  கட்டுரை  29.09.1935

You may also like...