இளம் விதவையின் காட்சி

 

திண்டிவனம் பகுத்தறிவுக் கழகத்தின் சார்பில் 19.5.35 மாலை 5 மணிக்கு இவ்வூர் ராஜாங்குளம் வடகரைத் திடலில் பாண்டிச்சேரி தோழர் லகாஸ் அவர்கள் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. முதல் நாள் ஆண்டுவிழாவிற்கு வந்த ஜனங்களைவிட அதிகமான ஜனங்கள் ஆண்களும்   பெண்களுமாக வந்து கூடிவிட்டார்கள்.

தலைவர் முன்னுரைக்குப் பிறகு தோழர்கள் மஞ்சுளாபாய், ராஜவேல், நம்பிக்கைமரி, அ. பொன்னம்பலம், ப. ஜீவானந்தம் ஆகியவர்கள் கீதங்கள் பாடினார்கள்.

தோழர்கள் ப. ஜீவானந்தம், அ. பொன்னம்பலம், நம்பிக்கைமரி, மஞ்சளாபாய், ஈ.வெ. ராமசாமி ஆகியவர்கள் “”சமூக முன்னேற்றம்  மதமும் மக்களும்  பெண்கள் உரிமை  விதவையின் துயரம்  சமூகச் சடங்கு” என்பது பற்றிப் பேசினார்கள்.

தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் இறுதியாகப் பேசி, முடிக்கப் போகும் சமயத்தில் இக்கூட்டத்திற்கு வந்திருந்த மிகவும் அழகுள்ள 14 வயதுள்ள சரோஜினி என்ற பெயருள்ள ரெட்டியார் ஜாதியைச் சேர்ந்த ஒரு விதவைப் பெண் சமீபத்தில் 8 மாதத்திற்கு முன் புருடனை இழந்த காரணத்திற்காக சமூகம் அப் பெண்ணை விதவைக் கோலம் பூண்டு மறு மண உரிமையைத் தடை செய்து உயிருடன் வதைக்கும் கொடுமையை எடுத்துக் கூறி அப்பெண்ணை தம் பக்கத்தில் அழைத்து பொது ஜனங்கட்கு அறிமுகப்படுத்தி வைத்து அப்பெண்ணின் மண உரிமையைத் தடுக்கும் மதக் கொடுமையையும், சாதிக் கொடுமையையும், சமூகக் கட்டுப்பாடையும், கேட்போர் மனம் பதைக்கும்படி மிகவும் ஆவேசத்துடன் கூறினார். இப்பெண்ணின் பெற்றோர்கள் யாருக்கும் பயப்படாமல் துணிவுடன் இப் பெண்ணை மறுமணம் செய்து கொடுக்க வேண்டுமென்றும்  பெற்றோர்கள் தயங்கினால் அவ்விதவைப் பெண்ணே துணிவுடன் முன் வந்து ஒரு புருடனைக் கல்யாணம் செய்து கொண்டு பகிரங்கமாக வாழ்க்கை நடத்த வேண்டுமென்றும் கூறினார். அப் பெண்ணின் பெற்றோர்களும் விரைவில் மறுமணம் செய்து கொள்ளத்தக்க ஏற்பாடுகளைச் செய்வதாகவும் தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்களை அதற்கு வேண்டிய சகல உதவிகளையும் செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்கள். அவ்விதவைப் பெண்ணை அழைத்து கூட்டத்தில் காட்டியபோது கூட்டத்திலிருந்த ஆண்களும் பெண்களும் பலர் கண்கலங்கி அழுதார்கள். அக்காட்சி எழுதும் தரமன்று!

குடி அரசு  செய்தி விமர்சனம்  26.05.1935

You may also like...