தஞ்சை  ஜில்லா  4வது  சுயமரியாதை  மகாநாடு

 

தோழர்களே!

ஒரு வருஷ  காலத்துக்குப்  பிறகு  இன்று  சுயமரியாதை  மகாநாடு  இங்கு  கூடுகின்றது.  மாதத்திற்கு  2,  3  மகாநாடுகள்  கூட்டிக்  கொண்டிருந்த  நாம்  அடக்குமுறையில்  அடக்கப்பட்டது  போல்  ஒரு  வருஷ  காலமாக  ஒன்றும்  இல்லாமல்  இருந்து  இன்று  இங்கு  கூடி  இருக்கிறோம்.  மகாநாடு  என்கின்ற  முறையில்  நாம்  இந்த  ஒரு  வருஷ  காலமாய்  கூட்டம்  கூட்டி  இருக்காவிட்டாலும்  பிரசாரம்  என்கின்ற  முறையில்  ஏறக்குறைய வாரம்  ஒரு  முறையாவது  ஒவ்வொரு  இடங்களில்  பலர்  தனித்தனியேயும்,  கூடியும்  பிரசாரம்  என்கின்ற  முறையிலும்  சுயமரியாதைத்  திருமணம்,  சங்கத்  திறப்பு  விழா,  ஆண்டு  விழா  முதலிய  பெயர்களிலும்  கூட்டம்  கூட்டி  நமது  தொண்டுகளை  ஆற்றி  வந்திருக்கிறோம்.  ஆகையால்  நாம்  சோர்ந்தோ,  அயர்ந்தோ,  அலட்சியமாயோ,  அடக்கு  முறையில்  பின்  வாங்கியோ  இருந்து  விட்டோம்  என்று  யாரும்  சொல்லிவிட  முடியாது.

வேலை  செய்ய  வேண்டும்  என்கின்றவர்களுக்கு  மகாநாடு  இருந்தாலும்,  இல்லாவிட்டாலும்  வேலை  செய்ய  இடமிருந்து  கொண்டுதான்  இருக்கும்.

ஆதலால்  மகாநாடுகள்  கூட்டப்படாததால்  இயக்க  காரியங்கள்  எதுவும்  கெட்டுப்  போய்  விடவில்லை.

பிரசார  நிலை

உண்மையாகவும்,  சுருக்கமாகவும்  சொல்ல  வேண்டுமானால்  சுயமரியாதைச்  சங்கத்தின்  நிலையானது  ஒரு பிரசாரப்  பிராயத்தில்  இருக்கின்றது  என்றும்  அந்தப்  பிரசாரத்துக்காகவே  மகாநாடு  முதலியவைகளும்  கூட்டப்பட்டு  வருகின்றன  என்றும்  சொல்ல  வேண்டும்.  இயக்கத்திலே  ஈடுபட்டுள்ள  தோழர்களுடைய  கடமையும்  முக்கியமாக  பிரசாரமேயாகும்.  ஆதலால்  இந்தக்  காரியம்  எந்தக்  காரணம்  கொண்டு  அடங்கி  இருக்கவும்  இல்லை. அடக்கப்பட்டுவிடவும் இல்லை.

திட்டம்

பிரசார  சம்மந்தமான  திட்டங்கள்  விஷயத்தில்  ஏதாவது  ஒருவருக் கொருவர் சிறிது  அபிப்பிராய  பேதம்  இருந்த  போதிலும்  அபிப்பிராய  பேதத்துக்கு இடமில்லாமல் செய்துகொண்டு இருக்கின்ற திட்டங்கள்  எவ்வளவோ  இருந்து கொண்டு  இருக்கின்றன.  ஆனதால்  அபிப்பிராய  பேதம்  காரணமாக  தொண்டாற்ற  இடமில்லாமல்  போய்  விட்டது  என்றும்  யாரும்  சொல்லிக்  கொள்ள  முடியாது.

கொள்கை

நிற்க,  நமது  இயக்கக்  கொள்கைகள்  விஷயமாயும்,  அபிப்பிராய  பேதங்கள்  சிறிது  இருந்து  வருவதாகச்  சொல்லப்படுகின்றது.

நமது  கொள்கைகள்  என்று  சொல்லப்படுவதும்,  ஈரோட்டு  வேலைத்  திட்டங்கள்  என்று  சொல்லப்படுவதும்  நாம்  இந்த  4  வருஷங்களாக  செய்து  கொண்டு  வந்த  பிரசார  சம்மந்தமான  திட்டங்கள்  தானே  தவிர  புதிதாக  ஏற்பட்டது  என்று  சொல்வதற்கில்லை.

அது  எப்படி  இருந்த  போதிலும்  இப்போது  அரசாங்கமானது  நமது  இயக்க  விஷயத்தில்  சற்று  கடினமான  முறைகளை  கையாளத்  தொடங்கி  இருக்கிறார்கள்.  சுயமரியாதை  இயக்கம்  சட்ட  விரோதமான   இயக்கமென்றுகூட  அரசாங்கத்தார்  தீர்மானித்து  உத்திரவு  போட  உத்தேசித்தார்களாம்.  அந்த  முயற்சி  இன்னமும்  இருந்து  வருகின்றதாம்.

அந்தப்படி  அரசாங்கத்தார்  செய்தால்  அது  புத்திசாலித்தனமான  காரியமாகாது.

சட்ட  மறுப்பு  இல்லை

ஏனெனில்  நமது  இயக்கத்தில்  எப்படிப்பட்ட  கொள்கைகள்  இருந்தாலும்  நாம்  அவைகளை  யெல்லாம்  சட்ட  வரம்பிற்கு  உள்பட்டும்  சட்டங்களை  மீறாமலும்  பலாத்காரம்  இல்லாமலும்  செய்வது  என்றுதான்  ஆதி  முதல்  விதிகள்  வைத்துக்  கொண்டு  இருக்கிறோம்.  சட்டம்  மீறுவதானாலும்  வெளிப்படையாய் சொல்லிவிட்டுத்தான் செய்வோமே ஒழிய  இரகசியமாகவோ,  பித்தலாட்டமாகவோ  நாம்  எந்தக்  காரியமும்  செய்ய  மாட்டோம்.  இதை  பல  தடவை  தெரிவித்து  இருக்கிறோம்.  நமது  திட்ட  விதி  என்று  ஏதாவது  இருக்குமானால்  அவைகளிலெல்லாம்  இதை  விவரமாய்  குறிப்பிட்டு  மிருக்கிறோம்.

சட்ட  மறுப்பு  ஒடுக்கம்

சட்டம்  மீறுவது  தெய்வ  கட்டளையென்றும்  மனச்சாட்சியின்  தீர்ப்பு  என்றும்  சொல்லி  வந்த  காங்கிரசே  இன்று  “”நாங்கள்  சட்டப்படி  நடந்து  கொள்ளுகிறோம்.  சட்ட  மறுப்பு  என்பதை  1000  கஜ  ஆளத்தில்  புதைத்து  விட்டோம்”  என்று  சொல்லி  விட்ட  பிறகு  சட்டத்திற்கு  உட்பட்டு  நடப்பது  என்ற  விதியுள்ள  சு.ம.  இயக்கம்  சட்டத்திற்கு  விரோதம்  என்கின்ற  சாக்கை  வைத்து  அடக்கிவிட  கவர்மெண்டார்  நினைத்ததானது  காங்கிரசை  அடக்கி  ஒடுக்கி  பணியச்  செய்து  விட்டோம்  என்று  கருதி  கொண்டாடும்  வெற்றிக்  கொண்டாட்டத்தின்  வேலைத்  திட்டமென்று  தான்  சொல்ல  வேண்டும்.  எப்படியிருந்த  போதிலும்  நாம்  காங்கிரசைப்  போலவே  அரசாங்கத்திற்கு  எதிராக  இல்லாதபடி  நமது  வேலைத்  திட்டம்  இருக்கிறது  என்பதைக்  காட்டித்தான்  ஆக  வேண்டும்.  அவர்கள்  எதையாவது  ஆ÷க்ஷபித்தால்  நாம்  அதற்குத்  தகுந்தபடி  அமைத்துக்  கொள்ளத்தான்  வேண்டும்.

திருத்திக்  கொள்ளத்  தயார்

நாம்  உண்மையிலேயே  ஏழை  பாமர  மக்களுக்காகவும்,  தாழ்த்தப் பட்ட மக்களுக்காகவும்  பாடுபடுகின்ற  இயக்கமுடையவர்களாவோம்.

நமக்கு  எதிராக  சர்க்கார்  வரவேண்டிய  அவசியமே  இல்லை.  நமது  திட்டத்தில்  பிரிட்டிஷ்  அரசாங்கத்தை  ஓட்டுவதோ,  கவிழ்ப்பதோ  ஆகிய  கருத்தும் அவசியமுமில்லை.

நம்முடைய  இயக்கம்  ஒரு  குறிப்பிட்ட  முறையைக்  கொண்டதே யொழிய  ஒரு  தேசத்தாரையோ,  ஒரு  ஜாதியாரையோ  குறி  கொண்டதல்ல.

நம்முடைய  முறைக்கு  எதிரிகள்  நமது  நாட்டிலேயே  மலிந்து  கிடக்கின்றார்கள்.  அப்படி  இருக்கும்  போது  நமக்கு  அரசாங்க  விரோதம்  என்பது  தேவை  இல்லாதது.

ஆதலால்  இன்றைய  திட்டங்களில்  எதையாவது  அரசாங்கத்தார்  குற்றமானது  கூடாது  என்று  சொல்லுவார்களானால்  திருத்தி  அமைத்துக்  கொள்ள  தயாராக  இருக்கிறோம்.

விட்டுக்  கொடுக்க  மாட்டோம்

நமது  கொள்கைகளை  நாம்  விட்டுக்  கொடுக்க  முடியாது.  மனித  சமூக  சமத்துவமும்,  சாந்தியும்,  நமது  லக்ஷியமும்  கொள்கையுமாகும்.  அக்  கொள்கைகளை  காலதேச  வர்த்தமானத்துக்கு  ஏற்பட்ட  அரசாங்கம்  அனுமதிக்கிற  அளவுக்கு  நாம்  பிரசாரம்  செய்ய  வேண்டியதை  நாம்  கடமையாய்க்  கொண்டிருக்கிறோம்.

கொள்கைகளே  தப்பு  என்கின்ற  நிலை  வரும்போது  நாம்  ஒன்று  கூடி  யோசித்து,  ஒரு முடிவுக்கு  வர  வேண்டியது  அவசியமாகும்.  ஆதலால்  இப்போது  அதற்கான  நமது  வேலைத்  திட்டத்தை  நடத்தக்  கூடிய  முறையில்  அமைத்துக்  கொண்டு  நாம்  இன்னும்  ஊக்கமாகவும்,  வேகமாகவும்  வேலை  செய்ய  வேண்டியது  அவசியமாகும்.

எல்லோரும்  இருக்கலாம்

நமது  இயக்கத்தில்  எல்லோரும்  இருக்கும்படி  செய்ய  வேண்டும்  என்று  சிலர்  சொல்லுகிறார்கள்.

ஆட்சேபணை  இருப்பதாய்  எனக்குத்  தெரியவில்லை.  ஆஸ்திகர்கள்,  நாஸ்திகர்கள்  யாரும்  இருக்கலாம்.  “”மேல்  ஜாதி”,  “”கீழ்  ஜாதி”  என்பவர்கள்  யாரும்  இருக்கலாம். ஏழை  பணக்காரர்களும்  இருக்கலாம். அரசாங்க  உத்தியோகஸ்தர்களும்,  காங்கிரஸ்காரர்களும்  இருக்கலாம்.  நாம்  புரோகிதக்  கூட்டம்  தவிர  வேறு  யாரையும்  வேண்டாமென்று  சொல்ல  வரவில்லை.

யாருக்காவது  அசௌகரியம்  உண்மையில்  இருக்குமானால்  அதை  நேர்  செய்ய  வேண்டியது  அவசியமேயாகும்.  ஆனால்,  வீண்  சாக்கு  போக்கு களுக்கு  பதில்  சொல்ல  நம்மால்  முடியாது.  அதற்காக  ஏதும்  செய்ய  வேண்டியதும்  இல்லை.  எத்தனையோ  செல்வவான்களும்,  “”மேல்  ஜாதி”க்காரர்களும்  அரசாங்க  உத்தியோகஸ்தர்களும்,  இந்து,  கிறிஸ்து,  முகமதியர்களும்  நம்முடன்  இன்றும்  இருக்கிறார்கள்.

ஆதலால்  திட்டம்  காரணம்  என்று  யாரும்  விலகிப்போகும்படி  நம்மிடம்  ஒன்றும்  இல்லை.  ஆனால்  பலருக்கு  பல  அசௌகரியங்கள்  இருக்கலாம்.  உண்மையைச்  சொல்ல  தைரியமில்லாமல்  திட்டத்தின்  மீது  குறை  கூறலாம்.  அதற்கு  நாம்  என்ன  செய்யக்  கூடும்.

இன்றும்  நாம்  தயாராய்  இருக்கின்றோம்.  யாரையும்  ஒத்துழைக்கக்  கேட்டுக்  கொள்ளுகிறோம்.  யாருடனும்  ஒத்துப்போக  ஆசைப்படுகின்றோம்.

குறிப்பாக  இந்த  ஜில்லாவாசிகளைப்  பொருத்தவரை  எவ்வித  அசௌகரியமும்  இருப்பதாக  நான்  கருதவில்லை.  ஆகையால்  நமது  இயக்கப்  பிரசாரத்தை  இந்த  ஜில்லாவில்  தாராளமாய்  நடத்தி  வழி  காட்ட  ஆசைப்படுகிறேன்.

குறிப்பு:            தஞ்சை  கிருஷ்ணலீலா  கொட்டகையில்  ஜனவரி  19,  20  ஆகிய  நாட்களில்  நடைபெற்ற  தஞ்சை  மாவட்ட  4 ஆவது  சுயமரியாதை  மாநாட்டில்  மாநாட்டைத்  திறந்து  வைத்து  ஆற்றிய  உரை.

குடி அரசு  சொற்பொழிவு  27.01.1935

You may also like...