வகுப்பு வாதம்
இந்திய மக்களின் முன்னேற்றமும், சீர்திருத்தமும் அதன் எதிரிகளுக்கு வகுப்புவாதமாய் விளங்குகிறது.
மற்றொரு புறத்தில் “”இந்தியாவின் முற்போக்குக்கும், சீர்திருத்தத் திற்கும் வகுப்புகளும், மதங்களும் முட்டுக்கட்டையாய் இருக்கின்றன” என்கிற விஷயம் இந்தியா மாத்திரமல்லாமல் உலக மக்கள் பெரும்பாலோரால் ஒப்புக் கொள்ளப்படுகிறது.
இந்திய சரித்திரம் ஏற்பட்ட காலம் முதல் இந்தியா வகுப்பு வாதங்களால் தொல்லைப்பட்டு வந்ததும் வகுப்புக் கலவரங்களால் மக்கள் உயிரிழந்தது முதல் அடிக்கடி ஏற்பட்ட அரசியல் மாறுதல் வரை அநேக கஷ்டங்கள் நடந்து வந்திருப்பதை எந்த சரித்திர ஆசிரியரினாலும் மறுக்க முடியாததாகும்.
வகுப்புவாதத்தால் பல தடவைகளில் மாறி மாறி வெற்றி தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கிறது என்று மாத்திரம் தான் சொல்லலாமே ஒழிய வகுப்பு வாதம் என்றாவது ஒழிந்திருந்ததாகக் கூறுவதற்கில்லை.
உதாரணமாக ராமாயணம், கந்தபுராணம், பெரிய புராணம் முதலிய வைணவ சைவ மத ஆதாரங்களின் சரித்திரம் முழுவதும் வகுப்புவாதமாகவே இருந்து வருகின்றதைப் பார்க்கலாம்.
ராமாயணத்தில் தேவர்கள், ராக்ஷதர்கள் என்கின்ற வகுப்புகளும், தேவர்கள், வானரங்கள் என்கின்ற வகுப்புகளும் இந்திய மனித சமூகத்தில் உள்ளவைகளேயாகும். இவை இரண்டு வகுப்புகளையே அதாவது ஆரியர், திராவிடர்கள் என்கின்ற வகுப்புகளையே குறிக்கின்றன என்பது ஆராய்ச்சி யாளர்களின் முடிவாக ஆகிவிட்டது.
நாமறிய சுமார் 50 வருஷகாலமாகவே இராமாயணக் கதை ஆரியர் திராவிடர் வகுப்புக் கலவரங்களை எடுத்துக் காட்டுவது என்பதாக அனேக அறிஞர்கள் பல ஆதாரங்களுடன் எழுதியும், வாதப் பிரதிவாதங்கள் செய்தும் வந்திருக்கிறார்கள் என்றாலும் 20வது நூற்றாண்டில் அது வெட்டவெளிச்சமாய் ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது.
அரசாங்கப் பள்ளிக்கூட புத்தகங்களில் தேச சரித்திர சம்பந்தமான புத்தகங்களில் எல்லாம் இராமாயணமானது ஆரியர்களுக்கும், தென்னாட்டு திராவிடர்களுக்கும் நிகழ்ந்த யுத்தங்கள் என்பதாக தெளிவாக எழுதப் பட்டிருக்கின்றதை இன்றும் பார்க்கலாம். இராமாயண ராமனை வருணிப்பதில் ராமன் ஆரியன் என்று தாராளமாய் பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது.
நிற்க தேவர்கள், ராட்சதர்கள், சுரர்கள், அசுரர்கள் என்கின்ற பெயரையுடையவர்கள் இந்தியாவில் இந்த லோகத்தில் இருந்து கொண்டுதான் வழக்காடியதாக சரித்திரங்கள் இருக்கின்றனவே ஒழிய வேறு லோகங்களில் இருந்து கொண்டு வழக்காடியதாக கருத ஆதாரமில்லை.
ஆதலால் ராம ராவண யுத்தம் மாத்திரமில்லாமல் பாரத யுத்தம், இரணிய யுத்தம் முதலிய அனேக யுத்தங்கள் வகுப்புவாதங் காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன.
மற்றும் உண்மைச் சரித்திரங்களிலும் இந்தியாவில் சுமார் 2, 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்னிட்டதாகக் கூறப்படும் சரித்திரங்களிலும் எல்லா யுத்தங்களும் பெரிதும் வகுப்புவாதங் காரணமாகவே நடந்து வந்திருக்கின்றன.
எந்தக் காரணத்தை முன்னிட்டாவது எப்போதாவது இந்தியா வகுப்புவாதம் இல்லாமல் இருந்ததாகக் குறிப்பிடுவதற்கு ஆதாரமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அரசாட்சி என்பதுகூட பெரிதும் வகுப்பை ஆதாரமாய்க் கொண்டே நடந்திருக்கின்றன. ஏதாவது ஒரு மதம் அல்லது ஒரு ஜாதி அல்லது ஒரு தேசம் என்கின்ற காரணத்தால் மக்கள் பிரிக்கப்பட்டு விட்டபடியால் வகுப்புவாதத்திற்கு அப்பிரிவினைகளே காரணமாய் இருப்பதால் அப்பிரிவினைகள் மாற்றமடைந்தாலொழிய வகுப்புவாதம் மறைவுபடும் என்று சொல்லிவிட முடியவே முடியாது.
ஆனால் வகுப்புவாதத்தின் பயனாய் ஆதிக்கம் செலுத்துகிறவர்கள் வேண்டுமானால் மற்றவர்களைப் பார்த்து அதாவது வகுப்புவாதத்தின் பயனாய் அடக்கப்பட்டுக் கொடுமைக்குள்ளாக்கப்பட்டவர்களைப் பார்த்து அவர்களது விடுதலை முயற்சியை வகுப்புவாதம் என்று சொல்லி அடக்கி விடப் பார்க்கலாமே ஒழிய வகுப்புவாதம் உண்மையில் அடக்கப்பட முடியவே முடியாது.
பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார்கள் தீண்டப்படாதவர் தீண்டப்படக் கூடியவர் என்கின்ற வகுப்புப் பேதங்களும், வாதங்களும் தீர்ந்து விட்டதி னாலேயே வகுப்புவாதம் ஒழிந்து விடும் என்று நாம் கருதிவிட முடியாது.
எந்த உருவத்தைக் கொண்டாவது பேதங்கள் உள்ள வரை வாதங்கள் இருந்துதான் வரும். அதற்கு ஓய்வு கொடுக்க எவராலும் முடியவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றைய அரசியலில் வெளிப்படையாகவும் உள் எண்ணமாகவும் வகுப்பு வாதங்கள் தலை விரித்தாடுவதை யார்தான் மறுக்க முடியும்? வெளிப்படையாக இந்தியர் பிரிட்டிஷார் என்கின்ற (உள் எண்ண) வகுப்புவாத உணர்ச்சி சுயராஜ்யம் அன்னிய ராஜ்யம் என்ற பெயரால் வெளிப்படையா யிருந்து வருகிறது.
அதுபோலவே இந்துக்கள் ஆதிக்கமா முஸ்லீம்கள் ஆதிக்கமா என்கின்ற (உள் எண்ண) வகுப்புவாத உணர்ச்சி இந்து முஸ்லீம் உரிமை என்கின்ற பெயரால் வெளிப்படையாய் இருந்து வருகின்றது.
அதுபோலவே பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாதமும் பார்ப்பனர் தீண்டப்படாதார் வகுப்புவாத உணர்ச்சியும் வகுப்பு உரிமை என்னும் பேரால் இருந்து வருகின்றன.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வகுப்புக்கு வகுப்பு அவநம்பிக்கை, துவேஷம் ஆகியவைகளாலும் வகுப்பை வகுப்பு அடக்கி ஆள வேண்டும் என்கின்ற எண்ணத்தாலும் ஏதோ ஒரு காலத்தில் எந்தக் காரணத்தாலோ கிடைத்துவிட்ட ஆதிக்கத்தையும் அதிக உரிமையையும் எப்படி விட்டுக் கொடுப்பது என்கின்ற கெட்ட எண்ணத்தாலும் முட்டாள் பிடிவாதத்தாலும் வகுப்புவாதம் நாளுக்கு நாள் வளர்ந்து உரம் பெற்று வருகின்றதை சென்ற 30 வருஷ காலமாக நேரில் பார்த்து வருகின்றோம்.
வகுப்பு உணர்ச்சியைக் குறை கூறி அதை அடக்கப் பார்க்கின்றவர்கள் மக்களை பழி சுமத்தி பயப்படுத்தி ஏமாற்றி அடக்கப் பார்க்கின்றார்களே ஒழிய ஒருவராவது அதன் உள் தத்துவத்தை உணர்ந்து அதை அடியோடு தலை எடுக்க வொட்டாமல் செய்வதற்கு யாரும் முயற்சிப்பதில்லை.
உதாரணமாக “”இந்திய அரசியல் சீர்திருத்தத்திற்கு அல்லது இந்திய சுயராஜ்யத்திற்கு, இந்தியாவில் உள்ள இந்து முஸ்லீம் ஒற்றுமையையும் கீழ் ஜாதி மேல் ஜாதிக் கொடுமையும் (தீண்டாமையும்) தடை கல்லாய் இருக்கிறது”. அதாவது மத பேதம், ஜாதி பேதம் தடையாய் இருக்கிறது என்பது 1920ம் வருஷத்தில் தோழர் காந்தியாரால் எடுத்துக் காட்டப்பட்டு இவ்விரண்டும் நீங்கினால் ஒழிய “”சுயராஜ்யம்” கிடைக்காதென்று அரசியல் ஸ்தாபனங்களில் தீர்மானிக்கப்பட்டு அதையே கொள்கையாகவும் திட்டமாகவும் வைத்து 16 வருஷ காலம் இந்தியாவில் “”சுயராஜ்யப் போர்” செய்தாகிவிட்டது.
ஆனால் ஆரம்ப முதல் இன்று வரை அவை மேலும் மேலும் பெருகி வளம் பெற்று வலிவடைந்து வருகின்றது என்பதல்லாமல் சிறிதாவது மறைந்ததாகவோ குறைந்ததாகவோ காணப்படவில்லை.
1931ல் தோழர் காந்தியார் வட்ட மேஜை மகாநாட்டுக்குச் சென்ற காலத்தில் வட்ட மேஜையில் இந்து முஸ்லீம் ஒற்றுமையின்மையாலும், கீழ்ஜாதி மேல்ஜாதி ஒற்றுமை யின்மையாலும், பார்ப்பனர், பார்ப்பன ரல்லாதார் ஒற்றுமையின்மையாலும் வட்ட மேஜை முறிந்து அஷ்டகோணல் மேஜையாகி தமது இந்தியப் பிரதிநிதித்துவம் தோல்வி அடைந்து வெறுங்கையுடன் திரும்பி வந்தது யாவரும் உணர்ந்ததேயாகும்.
முஸ்லீம் பிரதிநிதியாக தோழர் ஜின்னாவும், தீண்டாதவர்கள் பிரதிநிதியாகத் தோழர் அம்பெட்காரும், பார்ப்பனரல்லாதார் பிரதிநிதியாகத் தோழர் பாத்ரோவும் வட்டமேஜையில் இருந்து கொண்டு முறையே ஒருவர் காங்கிரஸ் இந்துக்கள் ஸ்தாபனமென்றும், மற்றவர், காங்கிரஸ் மேல் ஜாதிக்காரர் ஸ்தாபனமென்றும், அடுத்தவர் காங்கிரஸ் பார்ப்பனர்கள் ஸ்தாபனமென்றும் இம் மூன்று சமூகத்தாருக்கும் காந்தியாரின் காங்கிரசு பிரதிநிதித்துவ ஸ்தாபனம் ஆகாதென்றும் வலியுறுத்தியதோடு மாத்திர மல்லாமல் தங்கள் தங்கள் சமூகத்தைப் பிரிட்டிஷாரே காப்பாற்ற வேண்டுமென்றும் தங்கள் தங்கள் சமூகத்திற்கு உரிமை அளிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள்.
காங்கிரஸ் பிரதிநிதியான காந்தியாரும் காந்தியார் பின் சென்ற தோழர்கள் மாளவியா, ரங்கசாமி ஐயங்கார் ஆகிய பார்ப்பனர்களும் வெட்கப்பட்டு வெறுங்கையுடன் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு திரும்பி வந்தார்கள் என்பது ஒரு அளவுகூட இரகசியமான காரியமல்ல.
இது மாத்திரமல்லாமல் தீண்டப்படாதவர்களையும், பார்ப்பனரல்லா தாரையும் வஞ்சிக்க தோழர் காந்தியார் முஸ்லீம்களுடன் இரகசிய ஒப்பந்தம் பேசி சூழ்ச்சி செய்தார் என்கின்ற கெட்ட பெயருடனும் திரும்பி வந்தார் என்றுகூட சொல்லலாம்.
இதன் பயனாகவெல்லாம் இந்திய அரசியல் ஸ்தாபனத்துக்குத் தான்தான் இந்தியப் பிரதிநிதித்துவ ஸ்தாபனம் என்று சொல்லுவதற்குச் சிறிதுகூட யோக்கியதை இல்லாமல் போனதோடு அது 1920ம் வருடம் முதல் 1934 ம் வருஷம் வரை செய்து வந்த வேலைகளையும் முயற்சி களையும் தப்பிதமான காரியம் என்றும், முட்டாள்தனமான காரியம் என்றும் கருதி (காங்கிரஸ் ஆனது) 1919ம் வருஷத்திற்கு முன் இருந்த நிலைமைக்கு திரும்பிப் போக வேண்டியதாகி விட்டது.
இந்த 15 வருஷ காலமாய் காங்கிரசின் முன்னணியில் இருந்தவர்கள் ஒவ்வொருவராய் காங்கிரசின் கெட்ட பெயரை சமாளிக்க முடியாமல் காங்கிரசை விட்டு விலகி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.
வகுப்புவாதம் என்னும் “”கொடிய விஷப்பாம்பால்” காங்கிரஸ் தலைவர்கள் கடிபட்டு மூர்ச்சையாகிக் கிடக்க நேரிட்டுவிட்டது.
இந்தியா இன்று இந்த நிலைமைக்கு வந்தும் யாரோ சில 4வது 5வது வகுப்பு ஆளுகளும் அனாமதேயங்களும் வகுப்பு வாதத்தை ஒழித்துவிடப் போவதாக வீரம் பேசி பழய பாட்டைப் படிப்பதால் என்ன பயன் அடைந்து விட முடியும்? காந்தியார், ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்களின் சூட்சிகளை விட சத்தியமூர்த்தியார், சோமாசியார் போன்ற விபீஷணர்களின் சூழ்ச்சி களால் என்ன காரியம் சாதித்துவிட முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.
வகுப்புவாதம் காரணமாக காங்கிரசுக்காரர் இவ்வளவு பெரிய தோல்வியும் நஷ்டமும் ஏமாற்றமும் அடைந்து வந்ததோடு உலகம் சிரிக்கத் தகுந்த அவமானம் ஏற்பட்டும் கூட வகுப்புவாதத்தை ஏதாவது ஒரு வழியில் அடக்கவோ, குறைக்கவோ சிறிதாவது பாடுபட்டார்கள் என்று சொல்லுவதற்கு இடமில்லாமலே இருந்து வருகிறார்கள்.
வகுப்புவாதத்துக்கு பதில் சொல்லும் முறையில் ஒவ்வொரு வகுப்பாரும் மனந் துணிந்து தைரியமாய் வெளிப்படையாய் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு நற்சாக்ஷிப் பத்திரமளித்து அதை அபயம் கொள்ளுவதையே கொள்கையாய்க் கொள்ள வேண்டியவர்களாகிவிட்டார்கள். வகுப்புவாதத்துக்கு ஆக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்ய தகுந்த தியாகமூர்த்திகளாகி விட்டார்கள் என்பதைத் தவிர வகுப்புவாதத்தை ஒழிப்பதற்கு எவ்வித முயற்சியும் கவலையும் கொண்டார்கள் என்று சொல்லுவதற்கில்லை.
உதாரணமாக முஸ்லீம் சமூகமானது தங்களுடைய உரிமைகளை நிர்த்தாரணம் செய்து தங்களுடைய தேவைகளை ஒப்புக் கொள்ளாதபட்சம் (இந்துக்கள் ஆட்சியை விட சுயராஜ்யத்தைவிட) பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்று கூறி விட்டார்கள். தீண்டப்படாத மக்கள் என்பவர்களும் தங்கள் உரிமைகளை சட்டபூர்வமாய் ஏற்றுக் கொண்டு தங்கள் குறைகளை பூர்த்தி செய்யாதவரை (மேல் ஜாதிக்காரர்கள் ஆட்சியைவிட) “”சுயராஜியத்தை” விட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானதென்றும் அது கடவுளால் அனுப்பப் பட்டதென்றும் சொல்லி விட்டார்கள். பார்ப்பனரல்லாதார்களும் சகல வகுப்புகளுக்கும் நீதி வழங்கும் முறையை சட்டப்பூர்வமாய் ஒப்புக் கொண்டு தங்கள் இழிவுகளை நீக்க இடம் தராத வரை (பார்ப்பனர் சூழ்ச்சியைவிட) “”சுயராஜ்யத்தை”விட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்று கூறி விட்டார்கள்.
இவ்வளவு மாத்திரம் தானா என்று பார்த்தால் இவர்களது உரிமை களையும் தேவைகளையும் மறுத்து குறைகளை நீக்க ஒப்புக் கொள்ளாத காங்கிரசுக்காரர்கள் (பார்ப்பனர்கள்) இதுபோலவே “”பார்ப்பனரல்லாதார் குறைகளை தேவைகளை ஒப்புக் கொள்ளுவதைவிட முஸ்லீம்கள் குறைகளை தேவைகளை ஒப்புக் கொள்ளுவதைவிட தீண்டப்படாதார் குறைகளை தேவைகளை ஒப்புக் கொள்ளுவதைவிட பிரிட்டிஷ் ஆட்சியே நிலைத்திருக் கட்டும். அதைப் பற்றிக் கவலை இல்லை” என்று தாராளமாய் சொல்லி விட்டதோடு உயிரை விட்டாலும் விடலாமே தவிர அவர்களுடைய குறைகளையும் தேவைகளையும் ஒப்புக் கொள்ளவே முடியாது என்று சொல்லி விட்டார்கள். காங்கிரஸ் தலைவர் சர்வாதிகாரியான காந்தியார் அவர்களது தேவைகளை ஒப்புக் கொள்ளுவதைவிட உயிர்விடுவதே மேல் என்று பட்டினி கிடந்து தற்கொலை புரிந்துக் கொள்ளும் வேலையில் இறங்கி விட்டார்.
இவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் தென்னாட்டு காங்கிரஸ் தலைவர்கள், தோழர்கள் பிரகாசம் அய்யர், சத்தியமூர்த்தி அய்யர், ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்கள் தைரியமாயும், பச்சையாயும் பார்ப்பனரல்லாதார் (ஜஸ்டிஸ்) கக்ஷியார் ஆக்ஷியைவிட பிரிட்டிஷார் ஆக்ஷியே மேலானதென்று கூறி விட்டார்கள்.
ஆகவே காங்கிரசுக்காரர்கள் உள்பட எல்லாக் கட்சியாரும் வகுப்புவாதத்துக்குச் சமாதானம் சொல்லுவதைவிட வகுப்புவாதம் இல்லாமல் இருக்கும்படி செய்வதைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்று கருதுவதாய் இருக்கின்றதே தவிர தோழர் காந்தியார் முதல் சத்தியமூர்த்தியார் ஈறாகவுள்ள அரசியல்வாதிகளுக்கு வகுப்புக்காரர்களுடன் சமரசம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லாமல் போய்விட்டது.
தோழர் காந்தியார் பல தடவை லார்ட் வில்லிங்டன் துரையை காண விண்ணப்பம் போட்டார்களே ஒழிய “”வகுப்புவாதிகளை”க் கலந்து பேசவோ சமாதானம் செய்யவோ கடுகளவாவது முயற்சித்தவர்கள் அல்ல.
தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் சென்னை கவர்னர் பிரபு வீட்டுக்குப் பல தடவை யாத்திரை போனாரே ஒழிய வகுப்புவாதத்துக்கு சிறிதாவது பரிகாரம் செய்ய வந்தவர் அல்ல.
ஆகவே இந்திய அரசியல் இன்றைய நிலையில் பிரிட்டிஷ் ஆக்ஷியாகிய “அன்னிய ஆக்ஷி என்பதே மேலானது என்று தாராளமாக ஒப்புக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் செய்துவிட்டது.
ஆகவே இன்னிலையில் இன்று ஒவ்வொரு வகுப்பாரும் அவரவர்கள் தங்கள் தங்கள் வகுப்பு நலனுக்கு ஏற்ற காரியங்களை இந்த பிரிட்டிஷ் ஆக்ஷியில் அடைய முயற்சிப்பதைக் குற்றம் என்றோ, இழிவு என்றோ யாராலாவது சொல்லப்படுமானால் அப்படிப்பட்டவர்கள் நிர்மூடர்கள் என்றோ, மடையர்கள் என்றோ அல்லது மற்ற வகுப்பாரை ஏமாற்றி தங்கள் வகுப்பாரே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கின்ற வஞ்சக அயோக்கியச் சூழ்ச்சிக்காரர்கள் என்றோதான் சொல்லித் தீர வேண்டியதாய் இருக்கின்றது.
வகுப்புவாதம் என்கின்ற வார்த்தையைக் கண்டு மிரளுவதோ பழிப்பதோ ஆன காரியம்கூட கோழைத்தனமும் முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் ஆன காரியம் ஆகுமே தவிர மற்றபடி உண்மையாக பயப்படவும் வெறுக்கவும் அதில் ஒன்றும் இல்லை என்றே சொல்லுவோம்.
குடி அரசு தலையங்கம் 26.05.1935