இனி என்ன குறை?

 

ஆச்சாரியார் ஓய்வானது தோழர் சத்தியமூர்த்தியை தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவராக ஆக்கிவிட்டது.

ஆச்சாரியாருக்கு மற்றவர்களிடமிருந்து சந்தேகமும் காங்கிரஸ் பார்ப்பனர் கையிலேயே இருக்க வேண்டும் என்கின்ற எண்ணமும் சத்தியமூர்த்தியையே பிடித்துத் தலைவராகச் செய்து விட்டது.

ஆச்சாரியார் எப்பொழுதும் எதிலிருந்து விலகினாலும் அந்த ஸ்தானத்தில் பார்ப்பனரைத் தான் வைத்து விட்டு விலகுவது வழக்கம்.

அந்த வழக்கப்படி சத்தியமூர்த்தி தலைவரானார் என்று சென்ற வாரத்தில் “”முடிவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா” என்று ஒரு குறிப்பு* எழுதி இருந்தோம். அதுபோலவே எல்லாரும் எதிர்பார்த்தபடியே ஆகிவிட்டது. சத்தியமூர்த்திக்கு திட்டம் போட்டுக் கொண்டு சூக்ஷி செய்யத் தெரியாது. மக்களை ஏமாற்றவும் சக்தி போதாது.

ஆகவே ஒரு அளவுக்கு காங்கிரசின் தொல்லை ஒழிந்ததென்று நினைக்கலாம்.

நிற்க காங்கிரஸ் என்பதை இந்திய மக்களின் பிரதிநிதித்துவ சபை என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட பிரதிநிதித்துவ சபைக்கு 2லீ கோடி மக்களுக்கு, தமிழ்நாட்டுக்குத் தோழர் சத்தியமூர்த்தி பிரதிநிதித்துவ தலைவராகிவிட்டார் என்றால் அவர் புத்தியையும் குணத்தையும் தியாகத்தையும் உத்தேசித்துப் பார்க்கும் போது சத்தியமூர்த்தி பெரும் பதவிக்கு வந்து விட்டாரே என்று பொறாமைப்படுவதா? அல்லது காங்கிரசுக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டு விட்டதே என்று பரிதாபப்படுவதா? என்பது நமக்கு விளங்கவில்லை.

இது எப்படி இருந்தாலும் இந்த நிலைமையானது மக்களின் விழிப்பை நன்றாகக் காட்டுவதுடன் மக்கள் காங்கிரசை நன்றாய் உணர்ந்து கொண்டார்கள் என்பதும் விளங்கிவிட்டது.

இதோடு மாத்திரமல்லாமல் தோழர் சத்தியமூர்த்தி இதை எதிர்பார்த்தே கும்பகோணத்தில் தான் முதல் மந்திரி ஆகப் போவதாய் கூறிக் கொண்டார் போலும். காங்கிரசின் நிலைமை போலவே  அரசாங்கத்தின் நிலைமையும் பரிதபிக்கதக்க நிலைமைக்கு வருவதானால் சத்தியமூர்த்தி முதல்மந்திரி ஆவதில் ஆச்சரியம் எதுவும் இருக்க நியாயமில்லை.

இன்றைய தினம் மதம் சம்பந்தமான ஸ்தாபனங்களில் இருக்கும் சங்கராச்சாரிகள், மடாதிபதிகள், பாதிரிகள் என்னப்பட்டவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்பதைப் பார்ப்போமானால் அவர்களது சிஷ்யர் களாகிய அதே மக்களுக்கு அரசியலில் சத்தியமூர்த்தி போன்றவர் ஏன் கவர்னராகவோ, மந்திரியாகவோ வர முடியாது? என்று கேட்கின்றோம். ஆகவே தமிழ்நாட்டுக்கு மாத்திரமல்லாமல் சென்னை மாகாணத்துக்கே “”இனி என்ன குறை” என்பது நமக்கு விளங்கவில்லை.

குடி அரசு  துணைத் தலையங்கம்  19.05.1935

You may also like...