ஆச்சாரியார் ஓய்வு

 

தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் அரசியல் வாழ்விலிருந்து தற்காலிகமாகவோ அல்லது வேறு எப்படியோ விலகிக் கொண்டதாக சடங்குகள் நடைபெற்று அவர் ஸ்தானத்துக்குத் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் நியமிக்கப்பட்டு விட்டார்.

ராஜகோபாலாச்சாரியார் விஷயத்தில் நமக்குள்ள மரியாதையும் பக்தியும் குறையவில்லை. குறையுமென்று நம்பவுமில்லை. அவர் தன் சுயநலமில்லாதவர்; தனக்கும் தன் குடும்பத்திற்கும் என்று ஏதும் செய்து கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் காங்கிரசின் பேரால் தியாகம் செய்த பார்ப்பனர்களில் இவரே முதன்மையானவர். இரண்டாவதானவராக யாரைச் சொல்லுவது என்பது நமக்குத் தெரியவில்லை.

அவர் இதுவரை வக்கீலாய் இருந்திருந்தால் தோழர்கள் அல்லாடியையும் எஸ். சீனிவாசயங்காரையும் சுண்டு விரலில் கட்டி ஆட்டி இருப்பார். பணமும் ஏராளமாய்ச் சம்பாதித்திருப்பார். ஹைகோர்ட் ஜட்ஜி பதவி அடைவது அவருக்கு கேவலம் என்றுகூட சொல்லத்தக்க நிலைக்கு வந்திருப்பார்.

இவ்வளவு சக்தியும் புத்தியும் தியாகமும் எல்லாம் சேர்ந்து பார்ப்பனர் வாழ்வுக்கு மனித சமூக உண்மை விடுதலையையும் சுயமரியாதையையும் அடமானம் வைக்கப் பயன்பட்டதுடன் மநுதர்ம சாஸ்திரத்துக்கு வக்காலத்துப் பேசும்படியும் ஆய்விட்டது என்பது நமது மனதில் பதிந்து போன எண்ணமாகும்.

தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கு பார்ப்பனரல்லாதார்களில் எவரிடமும் நம்பிக்கை கிடையாது. நம்பிக்கையில்லாத காரணம் மாத்திர மல்லாமல் எல்லாரிடமும் பயம் கொண்டே இருந்தார்.

அவருக்கு ஏற்பட்ட பார்ப்பன அபிமானமே பார்ப்பனரல்லாதாரில் பலருக்கு பார்ப்பனரல்லாதார் அபிமானத்தை வளர்த்து உறுதியாக்கி விட்ட துடன் ஒருவருக்கொருவர் நீங்காச் சந்தேகிகளாய் இருக்கவும் செய்து விட்டது.

அவரால் பார்ப்பன சமூகத்திற்கு நெருக்கடியான சமயத்தில் அளவிட முடியாத “”நன்மை” ஏற்பட்டது. சங்கராச்சாரி, ராமானுஜாச்சாரி ஆகியவர் களால் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட நன்மையைவிட இந்த சமயத்தில் ராஜகோபாலாச்சாரியாரால் பார்ப்பனர்களுக்கு அதிக நன்மை ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் இவை எல்லாம் தற்கால நன்மையே ஒழிய நிரந்தரமானதல்ல.

இந்திய காங்கிரசை பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக எப்படியெல்லாம் ஆட்ட வேண்டுமோ அப்படியெல்லாம் ஆட்டுவித்தார்.

பைத்தியக்காரர் கூட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய காந்தியாரை மகாத்மாவாக ஆக்கிய பெருமை ராஜகோபாலாச்சாரியாருக்கே உண்டு. மற்ற பார்ப்பனர்கள் கூடவே கோவிந்தா போட்டு அது விஷயத்தில் ஆச்சாரியாரை ஆதரித்தார்களானாலும் இந்த எண்ணம் ஆரம்பத்தில் கொண்டவர் ஆச்சாரியாராகும்.

இந்து, மித்திரன் கூட்டம் திலகரையும், திலகருக்குப் பின் எஸ். சீனிவாசய்யங்காரையும் மகான் ஆக்க முயற்சித்தார்கள். ஆச்சாரியார் அது பயன்படாது எனக் கருதி காந்தியாரை களி மண்ணில் பொம்மை செய்வதுபோல் செய்து பெரிய மகாத்மா ஆக்கி அதனால் பார்ப்பனருக்காக அனேக பலனை உண்டாக்கினார்.

ஆனால் ஆச்சாரியார் தனது கூர்மையான புத்தி யுக்தி காரணமாகவே இந்தியாவெங்கும் அரசியல்வாதிகள் அனேகருக்குப் பிடித்தமில்லாத வரானார். என்றாலும் நமக்கு எப்படியோ அவரிடத்தில் விஸ்வாசமும், பக்தியும் பரிதாபமும்தான் இருந்து வருகிறது.

எதையும் லட்சியம் செய்யாமல் தான் பிடித்த காரியத்தையெல்லாம் பலவித உபாயத்தால் சாதித்தே வந்தார். எல்லாம் சேர்ந்து ஏதோ பார்ப்பன ஆதிக்கத்தை இன்னும் கொஞ்ச காலத்துக்கு நிலைநிறுத்தினார் என்பதைத் தவிர பயன்படத்தக்க காரியமோ, நிலையான காரியமோ எதுவும் செய்யப்பட்டதாக கூறுவதற்கில்லை.

இதை நினைத்தால் அதாவது அவ்வளவு பெரிய தியாகமும், அறிவும் விஷய ஞானமும் ஒன்றுக்கும் பயன்படாமல் போயிற்றே என்று நினைக்கும்போது நமது மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை. நாம் ஏதாவது முட்டுக்கட்டையாக இருந்தோமா என்கின்ற சந்தேகம்கூட நம்மைச் சில வேளைகளில் வருத்துவது உண்டு.

நம்பிக்கையும், விஸ்வாசமும் நன்றியும் இல்லாத மக்களுடன் கூடி பல காலம் உழைத்ததின் பதிலாக ஆச்சாரியாருடன் ஒத்துழைக்க ஏற்பட்ட சந்தர்ப்பம் விலகாமல் இருந்து இருக்குமானால் அது நமது மனதுக்கு எவ்வளவோ இன்பத்தையும் சாந்தியையும் கொடுத்திருக்கும். ஆனாலும் எப்படிப்பட்டவருடன் நாம் ஒத்துழைத்திருந்தாலும்கூட ஒன்றும் பயன் ஏற்படவில்லை என்று சொல்லத்தக்க மாதிரியில் நாம் ஏமாற்றமடைய வில்லை. ஆச்சாரியாரைப் போல் மனம் உடைந்து போகாமல் ஒரு அளவுக்கு உற்சாகத்தோடவேதான் இருந்து வருகின்றோம்.

ஆச்சாரியாருக்கு ஒன்று விண்ணப்பித்துக் கொள்ள ஆசைப்படு கின்றோம். அதாவது@

வகுப்பு நீதியை  வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை மனப்பூர்வமாய் ஒப்புக் கொள்ளுங்கள்

என்பதுதான். மற்றபடி அரசியல் சமூக இயல் திட்டத்தை எவ்வளவுக்கு நீட்டினாலும் சரி; குறுக்கினாலும் சரி அதைப் பற்றி கவலையில்லாமல் ஒத்துழைக்க இடமேற்பட்டுவிடும். ஏனெனில் தகுதி உள்ள அளவுக்குத் தானே வந்து விடும் என்கின்ற தைரியம் நமக்கு உண்டு. நம்மிடம் அவர் இனியும் 5 வருஷங்களுக்குக் குறையாமல் வேலை வாங்கிக் கொள்ளலாம்.

அன்றியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை தடுத்துவிட இனி எவராலும் முடியவே முடியாது. தடுக்கத் தடுக்கப் பலப்பட்டுக் கொண்டுதான் வரும்; துவேஷம் வளர்ந்து கொண்டுதான் வரும். இதை தடுத்துக் கொண்டிருப்பதால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் யார் யாருக்காக கேட்கின்றோமோ அவர்களிலும் யார் யாருக்காக ஆச்சாரியார் தடுக்கின்றாரோ அவர்களிலும் தகுதி அற்ற ஆட்களே பெரிதும் பயனடைகிறார்கள்.

இந்தக் கலகத்தால் மனித சமூகத்துக்கு நன்மை செய்ய வேண்டிய ஆட்கள் பதவியில் இருந்து வேலை செய்ய வேண்டியது போக, சுயநலமே உருக்கொண்ட நன்றியும் விசுவாசமும் அற்ற ஆட்களே சுயநலம் அடைந்து வருகிறார்கள். இதனாலேயே இந்தச் சண்டை போடுகிறவர்கள் மக்கள் நன்மைக்கு இடையூறு செய்தவர்களாகவில்லையா என்று கேட்கின்றோம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சென்னை மாகாணச் சங்கத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதாகும். தேசீயவாதிகள் சங்கத்திலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தாகும். ஆதலால் இப்போது ஆச்சாரியார் போன்றவர்கள் ஒப்புக் கொள்ளுவதால் குற்றம் ஏற்பட்டுவிடாது. மற்றபடி ஆச்சாரியார் ஓய்வு வெற்றியடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  19.05.1935

You may also like...